Monday 19 July 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 24

கதிரேசன் சங்கரன்கோவில் சென்று அடைந்தான். சிவசங்கரன் கதிரேசனை வேலையில் சென்று சேர்த்தார். ஒவ்வொரு தினமும் கதிரேசன் மிகவும் சிறப்பாக வேலை செய்து முன்னேற்றம் கண்டு வந்தான். அவனது தேர்வு முடிவுகள் அனைத்தும் வெற்றிகரமாகவே வந்தமைந்திருந்தது. கல்லூரிக்குச் சென்று மதிப்பெண்கள் பட்டியல் வாங்கியும் வந்தான். மதுசூதனனையும் வைஷ்ணவியும் சந்தித்தான்.

வைஷ்ணவி கதிரேசனை தனது ஊருக்கு அழைத்தாள். விடுமுறை கிடைக்கும்போது தகவல் சொல்லும்படியும், தான் வருவதாகவும் சிவசங்கரனின் முகவரி தந்து விடைபெற்றான் கதிரேசன். நாட்கள் பல நகர்ந்தது. இரண்டு விடுமுறையிலும் கதிரேசனால்  செல்ல இயலவில்லை. கோடை விடுமுறையில் செல்லலாம் என நினைத்து இருந்தான்.

ஈஸ்வரியை கதிரேசன் வாரத்திற்கு ஒருநாள் அல்லது மாதத்திற்கு ஒருநாள் என்றே சந்தித்து வந்தான். ஈஸ்வரியும் கதிரேசன் இருக்குமிடம் தேடி வருவதில்லை. சிவனின் மேல் தனது மனம் லயித்திருப்பதை ஈஸ்வரியை சந்திக்கும்போதெல்லாம் பேசினான் கதிரேசன். அதற்கு ஈஸ்வரி திருமணம் ஆனால் எல்லாம் சரியாகப் போய்விடும் எனவும் சிவன் பற்றிய சிந்தனை விலகும் என்றே கூறினாள். கதிரேசன் சிவன் சிந்தனையை அகற்றி வாழ்தல் என்பது இயலாது என்றே பதில் அளித்து இருந்தான்.

தனது வேலைத் திறமையால் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றான் கதிரேசன். கதிரேசனின் வேலை நிரந்தரமாக்கப்பட்டது.  புளியம்பட்டிக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் ஒருமுறை என சென்று வந்து கொண்டிருந்தான். புளியம்பட்டியில் அதிக சொத்துக்கள் ஏதும் இல்லாததால் செல்லாயி அவனுடனே சென்று தங்க முடிவு செய்தார். கதிரேசனும் தன்னுடன் செல்லாயியை அழைத்துக்கொண்டு சென்றான். அதனால் இம்முறை ஒரு சிறிய தனிவீட்டினை ஏற்பாடு செய்ய வேண்டியதானது.

செல்லாயி வந்த பின்னர், ஈஸ்வரி கதிரேசனின் வீட்டிற்கு ஒவ்வொரு தினமும் வந்து செல்லத் தொடங்கினாள். சிறிது நேரம் செல்லாயியிடம் பேசிவிட்டுத்தான் செல்வதை வழக்கமாக வைத்திருந்தாள். ஈஸ்வரியை செல்லாயிக்கு மிகவும் பிடித்துப் போனது. ஈஸ்வரியும் தனது கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில்தான் இருந்தாள்.
கல்லூரியில் கோடை விடுமுறை விட்டார்கள். கதிரேசனுக்கு ஈஸ்வரியைப் பெண் கேட்டுவிட நினைத்தார் செல்லாயி. பார்வதியிடம் ஒருநாள் இதுகுறித்துப் பேசியவர், பார்வதி ஈஸ்வரியின் படிப்பு முடியட்டும் என்றே பதில் அளித்து இருந்தார். பார்வதிக்கு இத்திருமணத்தில் முழு சம்மதமில்லையோ என சந்தேகம் எழுந்தது செல்லாயிக்கு. அதைப்பற்றி அன்றே அவர் கேட்டுவைத்தார். அதற்கு பார்வதி அப்படியெல்லாம் எதுவும் இல்லை, சின்னப் பொண்ணாக இருக்கிறாள், ஒரு வருடம் போகட்டும் என்றார்.

திருமணம் குறித்து கதிரேசனுக்குத் தெரிய வந்தது. கதிரேசன் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான். ''ஏன் கவலையா இருக்கேப்பா'' என்றார் செல்லாயி. ''இந்த கல்யாணம் இப்போ அவசியமா?'' என்றான் கதிரேசன். ''ஒரு வருசம் போகட்டும்தான் சொல்லியிருக்காங்கப்பா'' என்றார் செல்லாயி. இத்திருமண விசயம் கேள்விப்பட்டு ஈஸ்வரி அளவில்லா மகிழ்ச்சி கொண்டாள். கதிரேசன் சிவன் கோவிலில் சென்று அன்று இரவு அமர்ந்தான். பாடல் மனதில் எழுந்தது. அவன் அருகில் ஒரு பெரியவர் அமர்ந்து இருந்தார். கதிரேசன் மெல்லிய குரலில் பாடினான்.

''சிவனே காதல் கொண்ட மனதில் மங்கையும்
பவனியது வந்தபோது கொண்ட மகிழ்வு
உள்ளம் சேர்த்து உடலும் தந்திடும் நிலை
கள்ளம் ஆகுமோ சொல்சிவனே''

அந்த பாடலைக் கேட்ட அங்கிருந்த அந்த பெரியவர் கலகலவென சிரித்தார். ''கல்யாணம் கட்டிக்கிட்டு சந்நியாசமாலே யாசகம் பண்ணுதே, பொண்ணு வாழ்க்கையக் கெடுத்துப்பூடாதலே'' எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறி மறைந்தார் அவர். கதிரேசன் திடுக்கிட்டான்.

கதிரேசனுக்கு அந்தப் பெரியவர் ஏன் அப்படிச் சொல்லிவிட்டுச் சென்றார் என்ற யோசனை வட்டமிட்டது. மனதில் திட்டமிட்டபடி அதிகாலையில் வைஷ்ணவியின் ஊருக்குக் கிளம்பினான். அன்று இரவுக்குள் திரும்பிவிடுவதாக செல்லாயியிடம் சொல்லிவிட்டு அவர் தயார் செய்து இருந்த பலகாரங்களையும், தனக்குத் தேவையான மாற்று உடைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.


ஈஸ்வரியைப் பற்றிய எண்ணம் மனதில் ஈசல்கூட்டம் போல் மொய்த்தது. 'பொண்ணு வாழக்கையை கெடுத்துப் பூடாதலே' எனும் வாசகம் மனதில் வண்டுகளின் சப்தம் போல் ரீங்காரமிட்டது. பேருந்தில் ஏறி அமர்ந்தான். வைஷ்ணவியின் ஊரான பெருமாள்பட்டியை அடைந்தபோது மாலை நேரம் நெருங்கிவிட்டது. வைஷ்ணவியின் வீட்டினை எவரிடமும் விசாரிக்காமல் தேடிச் சென்றான். அழகிய மாடவீட்டிற்கு முன்னால் நின்றவன் கதவு எண்ணை சரிபார்த்துக் கொண்டு வாசற் கதவை தட்டினான் கதிரேசன்.

வைஷ்ணவி கதவைத் திறந்தாள். வாசலில் நின்ற கதிரேசனைப் பார்த்து அவளது கண்கள் ஆச்சரியத்தில் நிலைத்தது. ஆ என பெருமூச்சு விட்டுக்கொண்டவள் ''உள்ளே வா'' என அழைத்து நடு அறையில் நாற்காலியை எடுத்துப் போட்டு ''உட்கார்'' என சொன்னவள் ''என்ன குடிக்கிற'' எனக் கேட்டாள்.

கதிரேசன் தனது தாய் கொடுத்தனுப்பிய பலகாரங்களைத் தந்து ''அம்மா செஞ்சாங்க'' என கொடுத்தான். ''ரொம்ப நன்றி, மோர் கொண்டு வரவா'' என்றாள். ''ம்'' என்றான் கதிரேசன். மோருடன் தனது அம்மாவுடன் வந்தாள் வைஷ்ணவி. கதிரேசன் எழுந்து நின்று வணங்கினான். சிறிது நேரம் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

''ஆச்சரியம் கொடுக்கனும்னு சொல்லாம வந்தியா'' என்றாள் வைஷ்ணவி. ''இந்த வாரம் போகனும்னு நினைச்சிருந்தேன், உடனே கிளம்பி வந்துட்டேன்'' என்றான் கதிரேசன். அப்பொழுது வைஷ்ணவியின் தாய் கடைக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றார்.

''சமணர் கோவில் போகனும், பக்கம் தான'' என்றான் கதிரேசன். ''அடுத்த ஊர் தான், கொஞ்ச பேரு சமணர்கள் இருக்காங்க அங்க, காலையில போவோம்'' என்றாள் வைஷ்ணவி. ''நீ எதுக்கும் மதுசூதனனை வரச் சொல்றியா, அவன் வர இரண்டு மணி நேரம் ஆகுமா?'' எனக் கேட்டான் கதிரேசன். ''அவன் வரமாட்டான், என்னோட மூணு மாசமா அவன் சரியா பேசறதில்லை'' என்றதும் கதிரேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் வைஷ்ணவி மிகவும் சாதாரணமாகவே சொன்னாள்.

இதைக் கேட்டு அமைதியாக இருந்த கதிரேசனிடம் ''அவன் ரொம்ப அளவுக்கு அதிகமாப் போறான், மூணு மாசம் முன்னாடி நம்ம கல்லூரி கோவிலுல ஒரு பிரச்சினை பண்ணிட்டான். சிவலிங்கத்துக்கு நாமம் போட்டா திருமால் மாதிரியே இருக்கும்னு அங்க இருக்க குருக்கள்கிட்ட அவன் சொல்ல அவர் அவனை ஓங்கி அறைஞ்சிட்டார். அன்னைக்கு என்கிட்ட முறைச்சவந்தான், என்னை காதலிக்க முடியாதுனு சொல்லிட்டு என்னைய வைணவம் இல்லைன்னு சொல்லிட்டான், நீயே சொல்லு, நான் வைணவம் தான்னு எப்படியெப்படி நிரூபிக்க முடியும். அடிப்படையில ஒரு பொண்ணு நான், என் காதல் இல்லாமப் போயிருச்சு இப்போ'' என்றாள் வைஷ்ணவி.

அப்பொழுது வைஷ்ணவியின் தாய் கடையில் இருந்து காய்கறிகளுடன் உள்ளே வந்தார். ''அம்மா சமைக்கப் போறீங்களா, நான் செய்றேன்'' என்றாள். ''நீ பேசிட்டு இரும்மா, நான் தயார் பண்றேன், வெந்நீர் வைக்கிறேன், தம்பி குளிக்கட்டும்'' எனச் சொல்லி சென்றார். ''அப்பா எங்கே'' எனக் கேட்ட கதிரேசனுக்கு ''வியாபாரம் விசயமா வெளியில போய் இருக்கார், செவ்வாய்கிழமைதான் வருவார், நான் வெந்நீர் வைக்கிறேன், நீ குளி'' எனச் சென்றாள் வைஷ்ணவி.

நன்றாக குளித்துவிட்டு வந்தவனிடம் ''இந்தா திருநீரு, அம்மா கடையில வாங்கி வந்திருக்காங்க, எங்க வீட்டுல நாமக் கட்டிதான் இருக்கு'' எனச் சிரித்தாள். ''மதுசூதனன் பத்தி கவலையில்லையா'' என்றான் கதிரேசன். ''அவன் ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டான், இனி தேவையில்லாம மனசை ஏன் வருத்துவானேன்'' என்றாள்.

''திரும்பவும் காதல் பண்றேனு சொல்லி வந்தான்னு வைச்சிக்குவோம் என்ன பண்ணுவ'' என்ற கதிரேசனுக்கு ''இனி அவன் இந்த உடம்பைத்தான் காதல் பண்ண முடியும், ஆனா என்னால அவன் உடம்புக்காக காதல் பண்ண முடியாது'' என சொல்லி நிறுத்தியவள் ''அதிகமா பேசிட்டேனோ'' என்றாள். சிரித்தான் கதிரேசன். ''அளவாத்தான் பேசின'' என்றான்.

''பேச்சுப் போட்டியில கலந்துக்கிட்டியா'' என்றான் கதிரேசன். வைஷ்ணவியின் முகம் மிகவும் பிரகாசமானது. ''இந்த வருசம் கலந்துகிட்டு பேசிட்டேன், சிவநாதன் ஆடிப்போய்ட்டார். அன்புதான் அடிப்படைனு பேசிட்டே வந்துட்டு கோவில் என்பதில் என்ன பிரிவினை வேண்டியிருக்கிறது, ஒன்றே கடவுள் என உயரிய தத்துவம் வைத்திருந்தால் கோவில் என்றோ ஆலயம் என்றோ மட்டும் சொல்லுங்கள். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என சொன்னது இப்படி மாரியம்மன் கோவில், செயின்ட் பீட்டர் தேவாலயம், சிவன் கோவில், விஷ்ணு கோவில், அக்பர் மசூதி என வைத்துக் கொள்ள அல்லனு பேசிட்டு நமது கல்லூரி முதல்வர் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என முடிச்சேன். இப்போ சிவன் கோவில்னு பேரு இல்லை, கோவில்னு மாத்திட்டார் ஆனா நாம மாறமாட்டோம்'' என சிரித்தாள் வைஷ்ணவி.

சிறிது நேரத்தில் சமையல் தயார் ஆகிவிட்டதாகவும் சாமிக்கு அன்னம் வைக்கச் சொல்லி வைஷ்ணவியின் தாய் தாயாரம்மாள் சொன்னார். ''நீ வைக்கிறியா'' என்றாள் வைஷ்ணவி. தாயாரம்மாள் ''இந்தாங்க தம்பி'' என்றார். கதிரேசன் அன்னம் வாங்கிக் கொண்டு வைத்து தீபம் ஏற்றிட மூவரும் வழிபட்டார்கள். பாடலும் உதித்தது.

''பெருமானே எம்மனதில் கொண்டது சுமையென கருதி
தருமாறு கேட்டிட அன்னம் படைத்திட்டேன்
மனதில் தூயவடிவம் கொண்டு வளர்த்திடும் நிலையது
கனவென நிலைகொள்ளுமோ சொல்பெருமானே''

''நல்ல குரல் வளம், நல்ல பாட்டு'' என தாயாரம்மாள் பாராட்டினார். ''எதுவும் சுமையில்லை, நீ சிவனையே மனசில நினைச்சிக்கோப்பா. அன்னம் கடவுளுக்கு படைக்கிறதாய் உலக உயிர்களுக்குத் தரச் சொல்றதுதான் ஐதீகம்'' என சொல்லிவிட்டு சாப்பிட வரச் சொன்னார்.

''சொல்சிவனேனு பாடுறதில்லையா'' என்றாள் வைஷ்ணவி. ம்ம் பாடினேன் என நேற்றைய பாடலைச் சொன்னான் கதிரேசன். ''என்னைப் போலவே நினைக்கிற, சார்லஸ் டார்வினோட இயற்கைத் தேர்வு பத்தித் தெரியுமா'' என நிறுத்தினாள். ''தெரியாது'' என்றான் கதிரேசன்.

''உடல்கள் இணையாம இனப்பெருக்கம் அடைஞ்ச உயிரில இருந்துதான் நாம இப்படி வந்திருக்கோம், அதே மாதிரி மாற்றத்துக்கு திருப்பிப் போறதுங்கிறது இயற்கைத் தேர்வுல புறக்கணிக்கப்படுற விசயமாத்தான் இருக்கும்னு இயற்கை அறிவியலாளர்கள் சொல்றாங்க'' என வைஷ்ணவி சொன்னதும் ''எப்படித் தெரியும் உனக்கு'' என்றான் கதிரேசன். ''உலக விசயங்களைப் படிக்கனும்'' என சொல்லிவிட்டு ''வா சாப்பிடலாம், நிறைய பேசனும் உன்னோட'' என அழைத்துச் சென்றாள்.

(தொடரும்)

No comments: