Friday 23 July 2010

உன்னதமான நட்பு

எரிச்சலூட்டம் நகரம், ஆனாலும் விலகிப் போய்விடமுடியாதபடி வாழ்க்கை. அந்த வாழ்க்கையில்தான் இருந்தான் அஸ்வின். அஸ்வின் ஒரு துடிதுடிப்பான இளைஞன் ஆனால் மனதில் நிறைய வலிகளை சுமந்து கொண்டு கணினித் துறையில் வேலைபார்ப்பவ‌ன். ஒவ்வொரு முறையும் தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை செம்மையாக செய்தபோதும் அதற்கேற்ற அங்கீகாரமும், உதவித் தொகையும் கிடைக்காமல் போவது கண்டு மனம் வெந்து மனதில் உள்ள இந்த துன்பச் சூழலை ஒதுக்கிட பேருந்தில் ஏறி கடற்கரை பக்கம் அவன் செல்வதுண்டு. அந்த கடற்கரையில் இருந்து வேறொரு பேருந்தில் ஏறினால் அவனது வீடு பத்து நிமிடங்களில் வந்துவிடும். போகும்போதும் வரும்போதும் அந்த கடலைப் பார்க்கும்போது தன்னையும் உள்ளிழுத்துக் கொள்ளாதோ இந்த கடல் எனும் எண்ணம் வந்து கொல்வதுண்டு.


இன்று அதே கடற்கரை. ஒவ்வொரு முறை வரும்போதெல்லாம் கடலின் அலைகளைப் பார்த்ததோடு சரி. மனதில் ஏற்படும் அலைகள் வேலை பற்றிய ஒன்றாகவே இருக்கும், அதுவும் பிரச்சினைகள் பற்றியதே. இப்படிப்பட்ட வேலையை விட்டுவிட்டு கிராமத்திற்குச் செல்லும் எண்ணம் அவனுள் ஓட ஆரம்பித்தது. சுற்றுமுற்றம் பார்த்தான்.


தனது பள்ளிக்கால நினைவுகளும் அவனுடன் பழகிய நண்பர்கள் அவனது மனதில் வட்டமிடுகிறார்கள். பெயரை மணலில் எழுதுகிறான். அசோக். அழிக்கிறான். மற்றொரு பெயரை எழுதுகிறான். சுதாகர், அழிக்கிறான். மீண்டும் ஒரு பெயரை எழுதுகிறான் முகமது, பின்னர் அதையும் அழிக்கிறான். தனது பெயரையும் எழுதி அதை அழிக்கிறான். கண்களில் நீர் கோர்த்துக் கொள்கிறது.


அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த நான்கைந்து சிறுவர்கள் அஸ்வின் நோக்கி ஓடிவருகிறார்கள். அஸ்வினின் கவனம் சிதறுகிறது. கத்தலுடனும், கும்மாளத்துடனும் அவர்கள் அவனைத் தாண்டிச் செல்கிறார்கள். அஸ்வின் மீண்டும் தனது பள்ளிக்கால நினைவுகளில் மூழ்குகிறான். அதே நான்கு பெயர்களை மணலில் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்காமல் எழுதுகிறான். இது அழியாமல் காக்கப்பட வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டிருக்கையில் மழை தூறல் போடத் தொடங்குகிறது. மழை கொஞ்சம் வேகமாகவே கொட்டுகிறது. அந்த பெயர்கள் மெதுவாக அழியத் தொடங்குகிறது. ஆனால் அவனுள் அவனது நண்பர்கள் பற்றிய எண்ணம் நிலைகொள்ளத் தொடங்குகிறது.

அசோக்? சுதாகர்? முகமது? காலத்தின் வேகத்தில் வெவ்வேறு திசையில் சென்றுவிட்ட அந்த நண்பர்களை நினைக்கும்போதே மனதில் ஒரு அழுத்தம் வந்து சேர்கிறது. மழையில் தொப்பலாய் நனைந்து கொண்டே பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில், நிழற்கூடை அது இப்போது மழைகூடை, ஒதுங்குகிறான். அங்கிருப்பவர்களில் ஒருவர் 'நனைஞ்சதுதான் நனைஞ்சிட்டே அப்படியே போக வேண்டியதுதானே' என சிரிக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான், தொலைத்த நட்புகளை அப்படியே தொலைத்துவிட்டே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. எத்தனை வருடங்கள்? எண்ணிப் பார்த்தால் கை விரல்களுக்குள் மட்டுமே அடக்கம்.

வெவ்வேறு திசையில் இருந்தே நால்வரும் பள்ளிக்கு வந்ததை நினைத்துப் பார்க்கும்போது அஸ்வின் மனதில் ஒரு சின்ன வலிதான். மழையின் வேகம் குறைகிறது. 'தடுமம் பிடிக்கப்போகுது, துவட்டிக்கோ ராசா' என அங்கிருந்தவர்களில் ஒருவர் தன்னிடமிருந்த துணியை எடுத்து அஸ்வினுக்குத் தருகிறார். 'இல்லை வேணாம்ங்க, மழை விட்டுரும், நான் வீட்டுக்குப் போயிக்கிறேன்' பேருந்து வருகிறது. அவனது நினைவுகள் கலைகிறது?!

4 comments:

Chitra said...

////வாழ்க்கையும் அப்படித்தான், தொலைத்த நட்புகளை அப்படியே தொலைத்துவிட்டே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.////


...... சில இழந்த நட்புக்கள் - internet மூலமாக (like Facebook) கிடைக்க வழி செய்யலாம்..... ஆனால், அதையும் தாண்டி உள்ளதை? ம்ம்ம்ம்.....

vasu balaji said...

பெரும்பாலும் அப்படித்தான். :(. நல்ல கதை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கதை..

Radhakrishnan said...

நன்றி சித்ரா, உண்மைதான். பலர் இணையம் மூலம் கண்டு கொள்கிறார்கள். நன்றி ஐயா, நன்றி நண்பரே.