Sunday 11 July 2010

நுனிப்புல் (பாகம் 2) 11



சுதந்திரமான கிருத்திகா

சுந்தரன் தனது வீட்டினுள் சென்றதும், திருவேற்காடு கோவிலில் வாங்கி வந்த பிரசாதங்களையெல்லாம் மேசையின் மேல் எடுத்து வைத்தான். வாசனின் கவிதைப் புத்தகம் எடுத்தான், கையில் இருந்து தவறி விழுந்தது, மனதுக்குள் சிரித்துக் கொண்டான். தான் வாங்கிய துணிகள், பொருட்கள் எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்தான். அறையை சுத்தம் பண்ணினான். மின் விசிறியை சுழலவிட்டான். குளித்தான். சாமி படம் முன்னால் விளக்கேற்றி வணங்கினான். தெய்வீகப் பாடலை இசைக்க விட்டான்.
 

திருவேற்காடு கோவிலில் தான் கண்ட காட்சிகள் ஒவ்வொன்றையும் நினைவுப் படுத்திக் கொண்டே வந்தான். ஒன்று மட்டும் அவனது மனதில் அகலாமல் நின்றது. ஏழு வயதுக்குட்பட்ட இருபது குழந்தைகள் வரிசையாய் அம்மனிடம் உலகம் செழித்தோங்கிட வேண்டிய காட்சிதான் அது. அந்த குழந்தைகள் ஆஸ்ரமத்தில் இருந்து வந்து இருப்பதாக கூறினார்கள். அதனை நினைத்துக்கொண்டிருக்கும்போதே வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

சுந்தரன் வீட்டை விட்டு வெளியே வந்தான். யாரும் காணவில்லை. வீட்டின் பக்கவாட்டில் பார்த்தான், அங்கும் யாரும் இல்லை, ஆனால் மல்லிகை வாசம் மட்டும் அடித்தது. வீட்டுக்குள் செல்லலாம் என திரும்பியவன் மலர்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த கிருத்திகாவைப் பார்த்தான்.
 

''நீங்கதானா பெல் அடிச்சது''

''ஆமா''

''என்ன திடீருனு இந்த நேரத்தில''

''வீட்டுக்குள்ள போகலாமா''

''எதுனாலும் இங்கேயே பேசலாம்''

சுந்தரனையே அமைதியாக பார்த்துக் கொண்டு புன்னகைத்தாள் கிருத்திகா.

''சரி வாங்க வீட்டுக்குள்ள உட்கார்ந்து பேசலாம்''

கிருத்திகா சிரித்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள். வீடெல்லாம் சுத்தமாக இருந்தது கிருத்திகாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. பக்திமயமான பாடல் மனதிற்கு இதமாக இருந்தது. நாற்காலியை எடுத்துப் போட்டான் சுந்தரன்.

''உட்காருங்க''

''ம், எனக்கு காபி வேணும்''

''காபியா?, சேகர் ஐயா வீட்டுல போய் வாங்கிட்டு வரேன், இங்க குடிக்க தண்ணி மட்டும்தான் இருக்கு''

''அப்படின்னா தண்ணி மட்டும் போதும்''

தண்ணியைக் குடித்தாள் கிருத்திகா.
 

''எங்க போயிருந்தீங்க இன்னைக்கு''

''திருவேற்காடு கோவிலுக்கு, உங்களுக்கு என்ன வேணும், பாரதி அனுப்பினாளா? பாரதியை எனக்கு சின்ன வயசுல பிடிக்கும், இப்போ இங்க வந்து பழகினதும் சின்ன வயசு ஞாபகம் வந்துருச்சு''

''ம் பாரதி அனுப்பலை நீங்க வந்துட்டா சொல்லச் சொல்லி இருந்தேன், உங்ககிட்ட நானாதான் பேசனும்னு வந்தேன்''

''என்ன பேசப் போறீங்க''

''நீங்க தப்பா எந்த முடிவும் எடுக்கக் கூடாது''

''அவ மாதிரியே பேசறீங்க, ம் ஊர்லேயே இருந்திருந்தா நினைவு திரும்பியிருக்காது, பரவாயில்லை உடனே தெளிவுப்படுத்திட்டா இல்லைன்னா தேவையில்லாத கற்பனையை வளர்த்துட்டு மறக்க முடியலைனு புலம்பிட்டுத் திரிஞ்சிருப்பேன், வாசன் சொன்னா கேட்பா ஆனா இனி வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்''

''நான் சொன்னாலும் கேட்பா, வாசன்கிட்ட என்ன சொன்னீங்க''

''காதல் பண்றதாகவும், உதவனும்னு சொன்னேன்''

''பாரதிகிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருந்து இருக்கலாமே''

''இது சிக்கலான விசயம், ஆனா இப்போ மறந்துட்டேன், அம்மன் கோவிலுக்குப் போய்ட்டு வந்துட்டேன் மனசெல்லாம் ரொம்ப லேசா இருக்கு''

''வருத்தம் எதுவும் இல்லையே''

''வருத்தம் இருக்கறமாதிரி எனக்குத் தோணலை''

''அம்மன் அருளா''

''ஆமாம்''

''எங்ககிட்ட நீங்க எப்பவும் நல்லா தாராளமா பேசலாம் எங்களோட நண்பனா இருங்க''

''எனக்கு உங்களோட நட்பு கிடைச்சது எனக்கு சந்தோசம்''

சுந்தரனுக்கு கிருத்திகாவிடம் பேசிக் கொண்டிருந்தது மன நிம்மதியை தந்தது. வெறும் புன்னகை மட்டுமே செய்து செல்பவள் தனது மேல் அக்கறை கொண்டு தான் நன்றாக இருக்க வேண்டும் என தனது தோழியின் மேல் வைத்திருக்கும் பாசத்தில் வந்து இருப்பதை கண்டு சுந்தரனுக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. கிருத்திகாவிற்கும் சுந்தரன் மேல் மரியாதை வந்தது. திருமால் பற்றிய விசயங்கள் சொன்னாள்.
 

''என்ன பேர் சொன்னீங்க''

''திருமால் சிரிப்பாற்றனூர்''

''அந்த ஆஸ்ரமத்தில இருந்துதான் இன்னைக்கு கோவிலுக்கு குழந்தைங்க வந்திருந்தாங்க''

''வாசன் எதுவும் உங்ககிட்ட சொல்லலையா?''

''நான் இதெல்லாம் கேலி பண்ணுவேன், அதான் என்கிட்ட இதுபத்தி சொல்லலை''

''இனிமே கேலி பண்ண வேண்டாம், எனக்கு உதவி தேவைப்பட்டா கேட்கிறேன்''

கிருத்திகா சுந்தரனிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினாள். சுந்தரன் பிரசாதங்களை எடுத்துக் கொடுத்தான். சந்தோசமாக வாங்கிக் கொண்டாள். சுந்தரன் மனம் நிம்மதியானது. பாரதியிடம் விபரங்களை தனது வீட்டிற்கு வந்ததும் அலைபேசியில் சொன்னாள். பாரதி மிகவும் சந்தோசப்பட்டாள். மரபியலைப் பற்றி ஒருநாள் தனக்குச் சொல்லித்தர வேண்டும் என மீண்டும் கேட்டாள் கிருத்திகா. பாரதி பார்ப்போம் என்றாள். மரபணுக்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்படி என்ன சம்பந்தம் இருப்பதாய் கிருத்திகா கண்டாள்?
 

(தொடரும்)

No comments: