Monday 12 July 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 22

கதிரேசன் சங்கரன்கோவிலில் சில தினங்களே தங்கி இருந்தான். ஈஸ்வரி மிகவும் திறமை வாய்ந்தவளாக இருந்தது கதிரேசனுக்கு மனமகிழ்ச்சியை தந்தது. இந்த வருடத்துடன் படிப்பு முடிந்து விட்டதாகவும் இனிமேல் வேலை தேட வேண்டும் என சொன்னான் கதிரேசன். மேற்கொண்டு படிக்கலையா எனக் கேட்ட ஈஸ்வரியிடம், குடும்ப சூழல், நான் வேலைக்கு செல்வதுதான் இப்போதைக்கு நல்லது என்றான் கதிரேசன்.

 ஈஸ்வரி தனது தந்தையிடம் கதிரேசன் வேலை விசயம் பற்றி கூறியதும் அவர் சங்கரன்கோவிலில் ஒரு நல்ல வேலை வாங்கி தருவதாக சொன்னார். இந்த விசயம் பார்வதிக்கு தெரிய வந்தது. அவர் அமைதியாகவே இருந்தது ஈஸ்வரிக்கு கூட ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நல்ல நிறுவனத்தில் பயிற்சி வேலையாளராக கதிரேசனுக்கு இடம் வாங்கித் தந்தார் சிவசங்கரன். கதிரேசன் ஊருக்குச் சென்றுவிட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்பியபோது,  ஈஸ்வரி கதிரேசனிடம் ஒரு தனி அறை பார்த்து தங்கிக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொண்டாள். கதிரேசனுக்கு அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. சரி என சொல்லி அவளின் தந்தையின் மூலமாகவே ஒரு அறை வாடகைக்குப் பார்த்து வைத்தான். சிவசங்கரன், கதிரேசன் மீது அளவு கடந்த மரியாதை வைத்து இருந்தார்.

புளியம்பட்டிக்குச் சென்ற கதிரேசன் தனக்கு வேலை கிடைத்த விசயத்தைச் சொன்னதும் மிகவும் சந்தோசம் கொண்டார் செல்லாயி. இரண்டு தினங்களில் திரும்ப வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராவிதமாக கதிரேசனுக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் குறையவில்லை. 'எப்படிப்பா காய்ச்சலோட போவ, எதுக்கும் அவருக்கு ஃபோன் போட்டு சொல்லிரு'  என்றார் செல்லாயி. காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே போனது. மருத்துவரிடம் சென்று ஊசி போட்டும், மாத்திரை எடுத்தும் குறையவில்லை. அந்த நிலையில் கதிரேசன் சங்கரன்கோவிலுக்கு தகவல் சொன்னான். சிவசங்கரன் உடல் நலம் சரியானபின்னர் வா என சொல்லியது கதிரேசனுக்கு மனதிற்கு தெம்பை கொடுத்தது.

இரத்தம் பரிசோதனை செய்ததில்  ஒரு குறையும் தெரியவில்லை. ஆனால் காய்ச்சல் இருந்து கொண்டே இருந்தது. வீட்டின் மூலையில் முடங்கிப் போனான் கதிரேசன். ஒரு வாரம் மேல் ஆகியது. உடல் மெலியத் தொடங்கியது. கதிரேசன் பேசுவதையே நிறுத்தி இருந்தான். செல்லாயி பதறினார். ஊரில் இருந்த பூசாரியும் தனது பங்கிற்கு வைத்தியம் செய்யத் தொடங்கியவர் பையன் உடம்புல என்னவோ இருக்கு என சொல்லி ஓட்டம் பிடித்தார். கதிரேசன் உணவு உண்ண மறுத்தான். வெறும் நீர் மட்டுமே குடித்தான். காய்ச்சல் உடலில் ஏற்படும் சில மாற்றத்திற்கான அறிகுறிதான்.  பக்கத்து ஊர் சிவன் கோவிலுக்குப் போவோம் என கதிரேசனை அழைத்துச் சென்றார் செல்லாயி.

நடக்க சிரமப்பட்டான் கதிரேசன். கோவிலின் உள்ளே சென்றதும் சிவனை நோக்கி ''இந்தா உன் பிள்ளை'' என சொன்னார் செல்லாயி. சிறிது நிமிடத்தில் கோவிலில் கதிரேசன் மயங்கி விழுந்தான். உடல் அனலாக கொதித்தது. மயக்கம் தெளிவித்தார்கள். பேச முடியாமல் தவித்தான் கதிரேசன். கோவில் குருக்கள் திருநீரு பூசிவிட்டார். இந்தா சாப்பிடு என பச்சிலை சாறு கொண்டு வந்து வாயைத் திறக்க வைத்து ஊற்றினார்கள். உடல் நலம் சரியில்லாமல் போவோர்க்கு இந்த பச்சிலை சாறுதனை கோவிலில் தருவது வழக்கம்.  பின்னர் சிவன் கோவிலில் ஓரிடத்தில் கதிரேசனைப் படுக்க வைத்தார்கள். செல்லாயி அழுது கொண்டே இருந்தார். குருக்கள் கவலைப்படாதேம்மா என ஆறுதல் சொன்னார்.

சிலமணி நேரங்கள் ஆனபின்னர் கதிரேசன் தனது கைகளை கால்களை அசைத்தான். விழிகளை திறந்தான். ''பசிக்கிறது'' என்றான். உடல் வியர்த்துக் கொட்டி சில்லென ஆகி இருந்தது. கோவில் பிரசாதம் கொண்டு வந்து தந்தார்கள். சாப்பிட்டான். செல்லாயிக்கு உயிர் வந்தது. சாப்பிட்டவன் பாடத் தொடங்கினான்.

''தவமதை புரியாது தனித்தே இருந்த என்னுள்
சிவமது புகுந்ததோ மெய்யும் மறந்தேன்
என்னை உன்பிள்ளை என்றே இவர் ஒப்புவிக்க
முன்னை விதிசெய்தனையோ சொல்சிவனே''

வீட்டுக்கு கதிரேசன் செல்லாயியுடன் நடந்தான். ''நீ என் பிள்ளை தான்'' என்றார் செல்லாயி. கதிரேசன் சிரித்தான். ''தீர்க்க முடியாத பிரச்சினைனா மட்டும் சிவனாம்மா பொறுப்பு'' என்றான். ''இல்லப்பா, நாமதான் பொறுப்பு'' என கண்கள் கலங்கினார். ''நாம மட்டுமாம்மா பொறுப்பு'' என்றான் கதிரேசன். ''கதிரேசா'' என அவனது கைகளைப் பிடித்து விக்கித்து அழுதார் செல்லாயி.

(தொடரும்)

No comments: