Tuesday 13 July 2010

நுனிப்புல் (பாகம் 2) 12

12. திட்டத்தில் தொய்வில்லை


வீட்டிற்கு வந்ததும் தாயிடமும் தந்தையிடமும் எதுவும் பேசாமல் இருந்தான் வாசன். தந்தை இராமமூர்த்தி வாசனிடம் ஜாதக நோட்டுகளை தந்து பத்திரப்படுத்தச் சொன்னார். வாசன் மறுபேச்சு எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டான். தாய் இராமம்மாள் வாசனிடம் பேசினார்.

''என்னப்பா கோவமா இருக்கியா?''

''இல்லம்மா''

''பின்ன ஏன் ஒருமாதிரி அமைதியா உட்கார்ந்து இருக்க, வாப்பா சாப்பிடு''

''இல்லம்மா பசிக்கல, நீங்களும் அப்பாவும் சாப்பிடுங்க, சாத்திரம்பட்டி எங்கம்மா இருக்கு''

''தெரியாதுப்பா, உங்கப்பாகிட்ட கேளு''

தந்தை குறுக்கிட்டார்.

''சாத்திரம்பட்டியா? சத்திரம்பட்டியா?''

''சாத்திரம்பட்டி''

''சத்திரம்பட்டிதான் தெரியும், சாத்திரம்பட்டி தெரியாது, பெருமாள் தாத்தாவோட முற்பாட்டனார் எல்லாம் அந்த ஊரில தான் இருந்தாங்கனு அவர் சொன்னதா நீதான சொன்ன''

''ம் சொன்னேன்பா ஆனா அந்த ஊரைப் பத்தித் தெரிஞ்சிக்கிறனும்னு அக்கறை அப்போ இல்ல, இப்போ வந்திருக்குப்பா''

''அப்படி என்ன அக்கறை? பொண்ணு எதுவும் அங்க இருக்கா''

''பொண்ணு இருந்தா மாதவியை என்ன செய்றது''

தாய் சிரித்துக்கொண்டே சொன்னார்.

''உனக்குனு மாதவி இருக்கறப்ப, அப்படி அந்த ஊரில பொண்ணு இருந்தா அந்த பொண்ணைத்தான் வேண்டாம்னு சொல்லனும்''

''இப்போ எதுக்கு வீண் பேச்சு, நான் காலையில வியாபாரம் பண்ண போகனும், நீ சாப்பிட வரியா இல்லையா வாசா''

''எனக்கு பசிக்கலைப்பா, நீங்க சாப்பிடுங்க''

வாசன் மாடிக்குச் சென்றான். ஜாதக நோட்டுகளை பத்திரப்படுத்தினான். மாதவி எழுதிய 'உருகும் உயிர்' கதையை எடுத்துப் பார்த்தான். ஒரு சில பக்கங்கள் புரட்டினான். அவள் எழுதியிருந்த கதையில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு ஒரே ஜாதகம் எனக் குறிப்பிட்டிருந்ததைத் தேடினான். பக்கம் சரியாக ஞாபகத்துக்கு இல்லாமல் போனதால் கதையை மூடினான். மாடியிலிருந்து கீழிறங்கி வந்தவன் தான் சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டு கேசவன் வீட்டிற்குச் செல்ல விருப்பமில்லாமல் நேராக பெரியவர் வீட்டினை நோக்கி நடந்தான்.

பெருமாள் கோவிலில் இருந்து வந்த விஷ்ணுப்பிரியன் மந்தையில் வாசன் முன்னால் எதிர்பட்டார்.

''என்ன வாசன் பதட்டமா இருக்கிறீங்க, கேசவன்கிட்ட விபரம் சொல்லிட்டேன், ரொம்ப சந்தோசப்பட்டார், பூங்கோதைக்கும் உண்மையை சொல்லிட்டேன், ஆமா உங்களை கொஞ்ச நேரமா ஆளையே காணோமே''

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க நீங்க''

''நல்ல காரியம்தான் பண்ணி இருக்கேன் வாசன், அவங்களுக்குனு ஒரு குழந்தை பிறக்கும் அதுதானே சந்தோசம்''

''தயவுசெய்து இதைப்பத்தி கேசவனோட அம்மா அப்பாகிட்ட எதுவும் சொல்லிராதீங்க டாக்டர்''

''நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க, பெரியவங்ககிட்ட கட்டாயமா சொல்லனுமே, அவங்களை ஏமாத்தி நடத்துன கல்யாணம்தானே, அவங்களை ஏமாத்தலைன்னு கட்டாயம் சொல்லனும்''

''பெரிய பிரச்சினை பண்ணனும்னு முடிவோடதான் இருக்கீங்களா டாக்டர்''

''பிரச்சினையா, எது பிரச்சினை? உண்மையை சொன்னது பிரச்சினையா''

''ஏதாவது பண்ணுங்க, என்னை விடுங்க''

''நீங்கதானே எல்லாத்துக்கும் காரணம், நீங்க கேசவன்கிட்ட சொல்லாம இருந்து இருந்தா கல்யாணம் நடந்துருக்குமா''

''இப்ப என்ன பண்ணனும் சொல்லுங்க டாக்டர்''

''என்னோட வாங்க''

இருவரும் கேசவன் வீட்டினை அடைந்தார்கள். கேசவனின் வீட்டின் ஒரு அறையில் பார்த்தசாரதியும் சுபாவும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். விஷ்ணுப்பிரியன் அவர்களைப் பார்த்தார்.

''இப்ப எதுக்கு நீங்க இரண்டு பேரும் சண்டை போடுறீங்க, இரவில அமைதியா இருக்கப் பழகுங்க''

''எல்லாம் உங்களால வந்ததுங்க, யாருக்குத்தான் தூக்கம் வரும்''

சுபாவின் பதிலைக் கேட்டவுடன் விஷ்ணுப்பிரியன் சிரித்தார். ஜோதி அமைதியாய் அமர்ந்து இருந்தார். குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் பக்கத்து அறையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். மணமக்கள் மாடி அறையில் மகிழ்வுடன் இருந்தார்கள். விஷ்ணுப்பிரியன் சொன்னார்.

''இப்போ என்ன நடந்து போச்சு, நீங்க பேசுறது மாப்பிள்ளையோட அம்மா அப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா''

''இப்போதான் ஒன்னுமில்லைனு ஆயிருச்சே, தெரியட்டும் விஷ்ணு இப்பவே போய் நீயே சொல்லு அதோ அந்த ரூமிலதான் இருக்காங்க''

பார்த்தசாரதி சற்று கோபமாகவே சொன்னார். ஜோதி பார்த்தசாரதியை அமைதிபடுத்தினாள். பார்த்தசாரதி தொடர்ந்தார். வாசன் அமைதியாய் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். மாதவி இப்பொழுது இங்கே இருக்கக்கூடாதா என வேண்டினான்.

''விஷ்ணு, நீயும் சுபாவும் சேர்ந்து போட்ட திட்டம்தான் இது''

''என்னை இதுல சேர்க்காதீங்க, இதுக்கு நான் பொறுப்பில்லை, இவர் எல்லாம் சரியாத்தான் பண்ணினார், இப்போ பண்ணலைனு சொல்றார், நான் கரு உருவானதை எல்லாம் பார்த்தேன், எல்லாம் நல்லபடியாத்தான் இருந்தது, பூங்கோதைக்குத் தெரியும். நாம நம்ம ஊருக்குப் போனதுமே டெஸ்ட் எடுத்துப் பார்த்துருவோம், இந்த மனுசன் இப்படி பண்ணுவாருனு நான் எதிர்பார்க்கவே இல்லை''

சுபா ஆத்திரமாக பேசினாள். பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை கோபமாக பார்த்தார். வாசன் பார்த்தசாரதியை வெளியில் அழைத்தான். பார்த்தசாரதி வர மறுத்து சொன்னார்.

''வாசன் நீங்க இனிமே தலையிட வேண்டாம், என்னால உங்களுக்குத்தான் தேவையில்லாத பிரச்சினை, உங்க வார்த்தையை நம்பித்தான் கேசவன் சரினு சொன்னார், இப்போ இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில கொண்டு வந்து உங்களை நிறுத்திட்டேன்''

வாசன் தலைகுனிந்தவாறே நின்றான். விஷ்ணுப்பிரியன் அந்த அறையை விட்டு வெளியேறினார். விஷ்ணுப்பிரியன் வெளியேறினதும் வாசன் மூவரிடமும் மாதவி வரைந்து சொன்ன படம் பற்றி கூறினான். சுபா அதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்தாள். மாதவியை உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என கூறினாள், ஆனால் வாசன் வேண்டாம் என மறுத்தான். சுபா ஜோதியிடம் விபரம் கூறினாள். ஜோதி பார்த்தசாரதியிடம் விளக்கினாள். பார்த்தசாரதி அரண்டு போனார். தன் தங்கையின் நிலைகுறித்து வேதனை அடைந்தார். மிகப்பெரும் தவறிழைத்துவிட்டதைப் போல் உணர்ந்தார். கண்கள் கலங்கியது. வாசன் சமாதானம் சொன்னான். இனி எந்த ஒரு டெஸ்ட்டும் தேவையில்லை என சுபா முடிவுக்கு வந்தவளாய் காணப்பட்டாள்.

விஷ்ணுப்பிரியன் கேசவனின் தாய் தந்தையர் இருக்கும் அறைக்குச் சென்று விபரங்களை கூறினார். அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ளாமல் விஷ்ணுப்பிரியனிடம் இதில் என்ன இருக்கிறது என்பதுபோல் பேசியது விஷ்ணுப்பிரியனுக்கு சற்று மகிழ்ச்சியாக இருந்தது. விஷ்ணுப்பிரியன் விடைபெற்றுக்கொண்டு சென்றதும் கேசவனின் தாய் தந்தையர்கள் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்தனர். கேசவனிடமும் பூங்கோதையிடமும் இதுகுறித்து எதுவும் கேட்கவேண்டாம் என முடிவு செய்தனர்.

மீண்டும் சுபா இருக்கும் அறைக்குத் திரும்பிய விஷ்ணுப்பிரியன் அனைவரும் அமைதியாய் இருப்பதைப் பார்த்தார். வாசன் அங்கே காணவில்லை.

''எங்கே வாசன்?''

''பெரியவர் விநாயகம் வீட்டுக்குப் போறேனு போயிட்டார்''

''நானும் அங்க போறேன், அங்கேயே தூங்கிக்கிறேன்''

வாசன் பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தான். விஷ்ணுப்பிரியன் பெரியவரின் வீட்டின் உள்ளே நுழைந்தபோது வாசற்படியில் காலை இடறிக் கொண்டவர், ஆண்டாளே என காலைப் பிடித்தார். வாசன் விஷ்ணுப்பிரியனை வேதனையுடன் பார்த்தான்.


(தொடரும்)

No comments: