Tuesday 20 July 2010

சபலத்தில் அல்லாடும் மனம்


எனது மனைவியின் மனமாற்றம் எனக்குள் பெரும் மகிழ்வை தந்தது. மனைவியின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என கேட்க எனக்குத் தோணவே இல்லை. இந்த மனமாற்ற விசயத்தை எனது மாமா மகளிடமும், என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணிடமும் சொன்னேன். எனது மாமா மகள் மிகவும் சந்தோசபட்டாள், ஆனால் என்னுடம் வேலை பார்க்கும் பெண் முகம் வாடிப்போனது கண்டேன். எப்பொழுது அப்பாவாக போகிறாய், எப்பொழுது விருந்து என நச்சரிக்கத் தொட‌ங்கினாள் என‌து மாமா ம‌க‌ள்.


சில மாதங்கள் மெல்ல கடந்தது. நான் அப்பாவாக போகிறேன் எனும் இனிய செய்தியை எனது மனைவியின் மூலமே அறிந்தேன். எனக்குள் உற்சாகம் பீறிட்டது. அலுவலகத்தில் இதுகுறித்து நான் எதுவும் சொல்லவில்லை. அன்றுதான் அலுவலகத்தில் நானும் என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணும் இரண்டு மாதம் ஹாங்காங் செல்ல வேண்டும் என சொல்லி இருந்தார்கள். 


வீட்டில் எனது மனைவியிடம் குழந்தை விசயத்தை அனைவரிடம் சொல்ல வேண்டும் என சொன்னபோது சில மாதங்கள் கழித்து சொல்லலாம் என சொன்னார். அவரது கண்கள் பயத்தில் இருந்ததை அறிந்தேன். எனக்கும், குழந்தைக்கும் எதுவும் ஆகாதுலங்க என அவர் சொன்னபோது எனது இதயத்தை எவரோ குத்துவது போன்று வலி உணர்ந்தேன். 


தாய்மை நிலை அடைய முடியாமல் தவிக்கும் பலர் நினைவில் வந்தார்கள். கருவுற்ற பின்னர் கரு கலைந்த நிலையில் இருந்த சிலர் நினைவுகளில் மோதினார்கள். எதற்காக இப்படி எதிர்மறை எண்ணம் எல்லாம் வந்து சேர்கிறது என எனக்கு மீது சற்று வெறுப்பு வந்து சேர்ந்தது. 


அப்ப‌டியெல்லாம் எதுவும் ஆகாது, க‌வ‌லை வேண்டாம் என‌ தைரிய‌ம் சொன்னேன். க‌ருவுற்று இருக்கும் கால‌ங்க‌ளில் தைரிய‌மாக‌வும் ந‌ன்றாக‌வும் இருந்தால் மட்டுமே குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சொன்னேன். சரி என கேட்டுக் கொண்டார். 


அந்த நேரத்தில்தான் மனமாற்றத்திற்கான காரணம் கேட்டு வைத்தேன். அப்பொழுது அவர் சொன்ன விசயம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. எனது பாட்டி எனது மனைவியிடம் ''கால காலத்துல குழந்தையை பெத்துக்கலன்னா உன் புருசன் உன்னை விட்டு வேறு ஒருத்தியோட தொடர்பு வைச்சிக்கிற போறான், அவன் வேற கல்யாணம் பண்ணினாதானே, நீ இந்த குடும்பத்தை உண்டு இல்லைனு பண்ணுவ, அவன் வேற ஒருத்தியோட உனக்குத் தெரியாம தொடர்பு வைச்சிட்டா என்ன பண்ணுவ' என சொன்னதும் மனதில் எனது மனைவிக்கு பயம் அப்பிக்கொண்டதாம். இதை என்னிடம் சொன்னபோது எனக்கு பயம் அப்பிக்கொண்டது. 


அந்த அளவுக்கு மனநிலையில் மிகவும் தரம் தாழ்ந்தவனா நான் என என்னுள் நினைத்துக்கொண்டேன். இருப்பினும், இதுதான் உண்மையான காரணமா என கேட்டு வைத்தேன். ஆம் இதுதான் உண்மையான காரணம், பல குடும்பங்களில் குழந்தைக்காக மட்டுமே சேர்ந்து வாழும் பெற்றோர்கள் பார்த்து இருக்கிறேன், அதுவும் இப்பொழுதெல்லாம் எளிதாக சின்ன சின்ன காரணம் காட்டி அறுத்தெரிந்து கொண்டு போய்விடுகிறார்கள் என்றார். உங்களை இழக்க நான் தயாராக இல்லை, சில மாதங்களாக மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவே நான் மாறினேன், மேலும் உங்கள் மாமா மகளின் காதல் முறிவும், உங்களுடன் வேலை பார்க்கும் அழகிய பெண்ணின் நிலையும் என்னை தடுமாற செய்தது. எனக்கு என்னவோ நீங்களும், உங்களுடன் வேலை பார்க்கும் பெண்ணும் தவறு செய்து விடுவீர்களோ என அஞ்சினேன் என்றார். அவர் சொன்னது என்னை நிலை குலைய வைத்தது. 


இப்படி சொன்ன அவரிடம் எப்படி நானும் என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணும் பணி விசயமாக ஹாங்காங் இரண்டு மாதம் செல்ல இருக்கிறோம் என சொல்வது என தள்ளாடினேன். சொல்லித்தான் ஆகவேண்டும் என சொன்னேன். அந்த செய்தியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. குழந்தை உருவாகி இருக்கிறது என காரணம் சொல்லுங்கள் என்றார். ஆனால் நான் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட்டேன் என்றேன். அவரது மனம் சபலத்தில் அல்லாடியது. அவரிடம் நான் குழந்தை மீது சத்தியம் செய்து கொடுத்தேன், இருப்பினும் அவரால் என்னை முழுவதும் நம்ப இயலவில்லை. பெண்கள் பொல்லாதவர்கள், எதையும் சாதிக்கும் வல்லமை பெண்களுக்கு உண்டு என்றார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என அழுது கொண்டே இருந்தார். நான் தைரியம் சொன்னேன். இரண்டு வாரங்கள் வெகுவேகமாக ஓடியது. தினமும் என்னை ஏமாத்தீராதீங்க, குழந்தை வயித்துல இருக்கு என்றார். 


பயணத்தின் நாள் வந்தது. வேலை பார்க்கும் பெண் மிகவும் உற்சாகமாக இருந்தார். இருவரும் விமானத்தில் பயணமானோம். எனது மனைவியின் அச்சத்தை விமான பயணத்தின் போது அவரிடம் சொன்னேன். மனைவியை பிரிந்ததும் என் மீது நீங்கள் கொள்ளும் சபலத்திற்கு உங்கள் மனைவியை காரணம் காட்டுகிறீர்களா என விமானத்தில் அவர் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருக்கையை மாற்றி கொண்டு வேறு இருக்கைக்கு போனார். நான் மனம் உடைந்து அமர்ந்திருந்தேன். 


ஹாங்காங்கில் அருகருகே அறை இருந்தும் என்னுடன் அவர் பேசவே இல்லை. நான் பேச முற்பட்டபோதெல்லாம் விலகி சென்றார். அவரது கண்களில் குற்ற உணர்வு தெரிந்தது. ஆனாலும் எனது மனம் அல்லாடியது. ஒருவாரம் கழிந்ததும் வேலை முடிந்து இரவில் அவரது அறைக்கதவை தட்டினேன். சிறிது நேரம் பின்னர் திறந்தார். ஏனிப்படி நடந்து கொள்கிறாய் என கேட்டேன். அப்பொழுது அவர் உங்கள் மீது நான் ஆசை கொண்டிருந்தேன். உங்களை மணக்கவே நான் நினைத்திருந்தேன், இந்த பயணம் அதற்கு வழிகாட்டும் என இருந்தேன் என்றார். அதை கேட்டபோது என்னால் நம்பவே இயலவில்லை. கதவை சட்டென சாத்திவிட்டு எனது அறையினில் நுழைந்து தாளிட்டு கொண்டேன். மணமான என்னை இவர் ஏன் மணக்க நினைக்க வேண்டும் என காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.

3 comments:

புலவன் புலிகேசி said...

என்ன காரணம்? என்பது அடுத்தப் பதிவா?

கோவி.கண்ணன் said...

ஒரு சீரியலுக்கான கதையை சின்னதாக முடிச்சிட்டிங்க.

:)

Radhakrishnan said...

:) ஆமாம் புலிகேசி நண்பரே. மிக்க நன்றி.

:) தொடர்கதைதான் கோவியாரே. ஆனால் சீரியல் அளவுக்கு எழுதறது கஷ்டம்தான்.