Wednesday 14 July 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 23

வீட்டிற்குச் சென்றதும் செல்லாயி அமைதியானார். கதிரேசனும் அமைதியாக அமர்ந்து இருந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் பக்கத்து ஊர் சிவன் கோவில் குருக்கள் பச்சிலை சாறுடன் வீட்டிற்கு வந்தார். ''இதை மூணு வேளைக்குப் பையனுக்குக் கொடுங்க'' எனச் சொல்லிவிட்டு பதில் ஏதும் எதிர்பாராமல் கொடுத்துவிட்டுச் சென்றார். கதிரேசனின் நெற்றிப்பகுதியைத் தொட்டுப் பார்த்தார். காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது.

''நாளைக்கே நான் சங்கரன்கோவில் கிளம்புறேன்மா'' என்றான் கதிரேசன். ''உடம்பு சரியானப்பறம் போப்பா'' என்றார் செல்லாயி. ''ரொம்பநாள் கழிச்சிப் போனா, அந்த வேலைய யாருக்காவது தந்திருவாங்கம்மா, வாடகை எடுத்த வீட்டுக்கும் பணம் வேற தரனும், இல்லையின்னா அதுவும் கிடைக்காது '' என்றான் கதிரேசன். ''இந்த மருந்தைக் குடிப்பா, இதையும் கூட எடுத்துட்டுப் போ'' என்றார் செல்லாயி.

கதிரேசன் அன்று இரவு நன்றாகத் தூங்கினான். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு உடலெல்லாம் திருநீரு பூசினான். கிழக்குப் பக்கம் திரும்பி நின்றுகொண்டு ''ஓம் நமசிவாய'' என உரக்கச் சொன்னான். கதிரேசன் சொன்னதைக் கேட்டு எட்டி வந்துப் பார்த்தார் செல்லாயி.

''பெற்றகடன் தீரும் என்றா பிறவி தந்தாய்
மற்றகடனும் தீர்த்து வைக்கும் வழியிதுவா
எக்காரியம் செய்திட இங்கே என்னை அனுப்பினாய்
அக்காரியம் உனதாலாகாதோ சொல்சிவனே''

பாடிமுடித்தவன் ''சிவனே போற்றி போற்றி'' எனச் சொல்லிவிட்டுத் திரும்பினான். கையில் கரண்டியுடன் நின்ற செல்லாயி ''என்னை மறந்துராதப்பா'' என்றார். கதிரேசன் அமைதியாகவே நின்றான். ''என்னை மறந்துருவியாப்பா'' என்றார் செல்லாயி மேலும். அப்பொழுதும் கதிரேசன் அமைதியாகவே நின்றான். ''பேசுப்பா'' என்றார் செல்லாயி.

''இவரால் தான் நானும் இங்கே வந்தேன்
என்முன்னால் இவரும் சென்றிட தகுமோ
பிரியாது இவரும் என்னோடு இருக்கும் வழிதனை
தெரியாது என்பாயோ சொல்சிவனே''

''என்னப்பா சொல்ற'' என்றார் செல்லாயி. ''நீ உயிரோடு இல்லாமப் போனா என்னை மறந்துருவியில்லம்மா'' என்றான் கதிரேசன். ''ஐயோ கதிரேசா, ஏன் இப்படியெல்லாம் பேசறப்பா'' என்றார் செல்லாயி. ''கவலைப்படாதேம்மா, இந்த உயிர் இந்த ஜீவன்ல இருக்கறவரைக்கும் உன்னை மறக்கமாட்டேன்மா'' என்றான் கதிரேசன். செல்லாயியின் கவலை மிகவும் அதிகமானது. கதிரேசன் சங்கரன்கோவிலுக்குக் கிளம்பினான். ''அவரோட ஃபோன் நம்பர் கொடுத்துட்டுப் போப்பா'' என்றார். சிவசங்கரனின் தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தான் கதிரேசன்.

''உன் அப்பா என்னைத் தவிக்க விட்டுட்டுப் போனமாதிரி போயிராதப்பா'' என்று சொன்னார் செல்லாயி. ''ஏன்மா என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையாம்மா'' என்றான் கதிரேசன். ''உன் மேல நம்பிக்கை இருக்குப்பா, ஆனா அந்த சிவன் மேல கொஞ்சமும் எனக்கு நம்பிக்கை இல்லைப்பா'' என்றதும் ''நம்பிக்கை வைச்சிக்கோம்மா'' என செல்லாயியின் கால்களில் விழுந்தான். செல்லாயியின் கண்ணீர் கதிரேசனின் கழுத்துப் பகுதியில் சொட்டென்று விழுந்தது.

(தொடரும்)

No comments: