Wednesday 12 October 2016

தேடலும் தரிசனமும் - அகநாழிகை பொன். வாசுதேவன்

மக்கள் பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மரபுகள் இயங்குகின்றன. பண்பாட்டை எடுத்துரைக்கும் பல கூறுகளில் மரபும் ஒரு கூறாகும். 

பழக்க வழக்கம் என்பது தனி மனித செயல் மட்டுமன்று. அது மரபணுக்களின் வழியாக நம் முன்னோர்களின் எச்சமாக நமக்குள் வந்து கொண்டிருப்பது. மனித இனம் எத்தனையோ அறிவியல் வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. அடிப்படை மனித கூறுகளான குணங்கள் குறைந்து கொண்டே வந்தாலும் அது முற்றிலுமாக தீர்ந்து போய்விடவில்லை. மனித அடிப்படை நற்குணங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் மரபணுக்களின் பங்கு அதிகம்.

 'மாறா மரபு' எந்த இந்த நாவலில் மரபு என்பதைத் திருத்தியும், மாற்றியும் அமைப்பதன் வாயிலாக வளர்ச்சியை, மாற்றத்தை, முன்னேற்றத்தை எய்தலாம் என்ற நம்பிக்கையோடு மருத்துவத்தின் வாயிலாக அதைச் சாதித்துவிட முடியும் என்று நம்புகிற ஆய்வின் மர்ம முடிச்சுகளையொட்டி கதைக் கரு அமைந்துள்ளது.

 'கத்தி மேல் நடப்பது போன்ற சிக்கலான போக்குடைய இந்தக் கதைக் கருவை மிகவும் லாவகமாகவும், சுவாரசியத்துடன் அளித்துள்ளார் எழுத்தாளர் வெ. இராதாகிருஷ்ணன். அவர் ஒரு அறிவியலாளராகவும், சிந்தனையாளராகவும் இருப்பதால் இந்தத் திறன் அவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. 

பொதுவாகவே, இராதாகிருஷ்ணன் எடுத்துக்கொள்கிற எல்லாக் கதைகளின் கருவும், அறிவியலையும், வாழ்வியலையும் இணைத்து அதிலிருந்து எழுகிற கேள்விகளுக்கு விடை காண முற்படுபவையாக இருந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற அடிப்படை மனித மனக் கேள்விகளுக்கான விடை தேடல்களே இராதாகிருஷ்ணனின் எழுத்துகளின் உள்ளாழ்ந்த பொருள். இந்தத் தத்துவத் தேடல்களினூடாக அவர் கண்டடைகின்ற தரிசனங்களை, உள்ளொளியை நாமும் அவரது படைப்புகளை வாசிப்பதன் வாயிலாக உணர்ந்தறிய முடிகிறது. 

தனித்துவமான கதை சொல்லல் பாணி, எழுத எடுத்துக்கொள்கிற பேசு பொருள், உள்ளடக்கம், எளிமையான நடை என எல்லாவிதத்திலும் நம்மை ஈர்க்கின்றன. வெ.இராதாகிருஷ்ணனின் படைப்புகளைத் தொடர்ந்து பதிப்பிக்கிற வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் எழுத்துலகில் அவர் தொடர்ந்து எழுதித் தடம் பதிக்க எனது நல்வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்

பொன்.வாசுதேவன்
அகநாழிகை பதிப்பகம்
pon.vasudevan@gmail.com

------------------

தங்களின் நல்வாழ்த்துகளுக்கு எனது பணிவான வணக்கங்களும், நன்றிகளும். நிறைய வாசிப்பு அனுபவமும், எழுத்தாளராக, தினமலரில் உதவி ஆசிரியராக, சட்ட வல்லுநராக இருக்கும் தங்களின் மூலம் எனது எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

No comments: