Monday 10 October 2016

மரணத்தைவிட நோய் கொடியது 1

பேசுவதைக் கேட்க முடியாமல் சொல்பவரைப் பார்க்க முடியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இருந்தாள். நான் சிவராமன் வந்து இருக்கிறேன் என்றேன். கண்அசைப்பாள் எனும் நம்பிக்கை எனக்குள் இருந்தது. அவளது அம்மாவிடம் கேட்டேன்.

''எப்ப இப்படி ஆனா''

''நீ போன மாசம் ஊரைவிட்டுப் போன மறுநாள்''

''நல்லாதானே இருந்தா''

''யாருக்கு எப்ப என்ன வரும்னு யாருக்குத் தெரியும்'' இடைமறித்தார் தாத்தா.

வீட்டில் வெட்கையாக இருந்தது.ஓடுகளில் பதியப்பட்ட கண்ணாடி வழியே சூரிய ஒளி அவளது முகத்தின் அருகில் விழுந்து கொண்டு இருந்தது. முகம் பெரும் சோகத்தில் இருப்பது போல எனக்குத் தென்பட்டது.

செடி தனது மலர்களுடன் வாடி வதங்கி கிடப்பது போல அவளது உடல் தரையில் பாயின்மீது கிடத்தப்பட்டு இருந்தது.

''ஊருக்கு எப்ப வந்த, உட்காரு''

''இப்ப''

அவளது தலைக்கு அருகில் சென்று அமர்ந்தேன். மல்லிகைப்பூ வாசம்தனை அப்போதுதான் கவனித்தேன். மல்லிகைப்பூ தலைக்கு அடியில் நசுங்கிக் கிடந்தது. நெற்றியில் வைக்கப்பட்ட திருநீறு குங்குமம். அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னை நல்லவனாக்கிய முகம் அது எனக்குள் அகமலர்ச்சியும் முகமலர்ச்சியும் கொண்டு சேர்த்த முகம் அது.

''இந்தா மோர் குடி''

அவள் மீது சிந்திவிடாதபடிக்கு சிறிதளவு குடித்துவிட்டு வைத்துவிட்டேன்.

''தினமும் இவளை குளிப்பாட்டி துணி மாத்தி இவ பக்கத்திலேயே என்னை உட்கார வச்சுட்டா''

''சாப்பிட்டாளா?''

''கஞ்சி கரைச்சி கொடுத்தேன்''.

''எப்போ கண் முழிப்பா?''

''ஆறு மணிக்கு''.

''டாக்டர்கிட்ட காமிச்சீங்களா?''

''பணத்துக்கு எங்க போறது''

அவளது கைகளைப்ற்றிக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே நடக்க வேண்டும் போல் இருந்தது.

''நடப்பாளா?''

''ஒரு ஆளுப் பிடிச்சிக்கனும் இது என்ன எழவு நோயுனு தெரியலை''

''பேசுவாளா?''

''அம்மானு சொல்வா''.

''எத்தனை மணி நேரம் முழிச்சிருப்பா?''

''ஒரு நாற்பது நிமிசம் அப்புறம் படுத்துருவா''.

''ஆளுக அடையாளம் தெரியுதா?''

''ம் தெரியும்''

எப்போது ஆறு மணி ஆகும் என்று இருந்தது. அவளது தாத்தா என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். பதினோரு மணி பேருந்துதனை தவறவிட்டு கண்மாய் காடு என கடந்து வீடு வந்து சேர்ந்ததும் அம்மா என்னிடம் சொன்னார்.

''ராமா புனிதா படுத்தபடுக்கையா இருக்கா''

நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.

''என்னம்மா சொல்ற?''

''அதான்டா சுந்தரமூர்த்தி மக புனிதா''

எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகள் இந்த பூமிக்குள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் அதிர்வுகளை விட படுபயங்கரமாக இருந்தது. என்னை நிலைப்படுத்த முடியாமல் தடுமாறினேன்.

''பார்த்துட்டு வரேன்மா''

''சாப்பிட்டு போ''

''இப்ப வேணாம்''

தெருவில் கண்டவர்களின் வரவேற்புக்கு தலையாட்டி அழுகையை அடக்கிக்கொண்டு கேள்விகளுடன் அமர்ந்து இருக்கிறேன்.

''செத்துப் போயிருவாளோனு பயமாருக்கு''

''அப்படி சொல்லாதீங்க''

''எப்பப்பாரு இப்படியே சொல்லிக்கிட்டு என் பேத்தி சாகமாட்டா சாகுற வயசா இது'' தாத்தா இடைமறித்தார்.

அவளை அப்படியே தூக்கிக்கொண்டு என்வீடு நோக்கிச் செல்ல வேண்டும் போலிருந்தது. வீட்டுக்கு வெளியில் வந்து நின்றேன். அந்த தெருவின் கடைசி வீடு இது இருபுறமும் வரிசையாக ஒரே அமைப்பினால் ஆன இருபது இருபது வீடுகளை கொண்ட நீண்ட மிகவும் சுத்தமான தெரு இது. தெருவினைப் பார்த்த போது எத்தனை எத்தனை கற்பனைகளை இந்த தெரு எனக்குத் தந்து இருந்தது என்பதெல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க இயலவில்லை.

''ஆறு மணிக்கு வரேன்''

கனத்த மனதுடன் கண்ணீர் திட்டுகளுடன் வீட்டுக்குப் போனேன்.

''சாப்பிடுப்பா''

அம்மா என கட்டிப்பிடித்து ஓ வென அழ ஆரம்பித்தேன்.

''என்னாச்சு''

''புனிதா எப்போ நல்லா ஆவா''

கதறலில் ஊடே சொன்னேன்.

''அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்''

''நல்லா ஆயிருவாம்மா''

''அழாத கண்ணைத் துடைச்சிக்கோ எத்தனை நாளு லீவுல வந்த''

''ஒரு வாரம்''

''பேய் எல்லாம் ஓட்டிப் பார்த்தாங்க தேறலை''

பேய்! எனது பிரபஞ்சத்தின் தேவதை அவள். அவளது வருகைக்குப் பின்னரே எனது கிராமத்தின் தெருக்கள் எல்லாம் அழகு பெற்றன. அவள் வசிக்கும் தெருவினைக் கடக்காமல் ஒருபோதும் எனது தெருவுக்கு சென்றது இல்லை. அவள் இந்த கிராமத்திற்கு வந்து நான்கு வருடங்கள் இருக்கும். பத்தாவது முடித்து இருந்தாள். நான் +2 முடித்து இருந்தேன். கல்லூரிக்குச் சென்று விடுமுறையில் வரும்போதெல்லாம் அவள் மீதான ஆர்வம் அதிகரித்தபடி இருந்தது. எதேச்சையாக அவளிடம் ஒருமுறை கூடப் பேசியது இல்லை. அவளது முகம் பார்த்ததில் இருந்து நல்லவனாக வாழ வேண்டும் எனும் ஆவல் அதிகரித்தபடி இருந்தது. கோபம் கொள்வது தவறு எனும் எண்ணம் புத்திக்கு ஏறி இருந்தது. எனது உலகம் அவளைச் சுற்றி அமையத் தொடங்கியது. சாப்பிட்ட பின்னரும் பசித்தது என்ன காரணம் என யோசித்தபோது அவள் சாப்பிட்டு இருக்கமாட்டாளோ என எண்ண வைத்தது +2 முடித்த பின்னர் படிப்பதை நிறுத்தி இருந்தாள். பண கஷ்டம் எனும் காரணம் போதுமானதாக இருந்தது.

விவசாயத்தில் கூலி வேலை செய்து பிழைப்பது பெரும் கடினம். பக்கத்து மில்லில் சென்று வேலை பார்க்கத் தொடங்கினார் அவளது அப்பா. யார் என்ன விபரம் இதற்குமுன்னர் எந்த ஊரில் இருந்தார்கள் ராமநாதனின் வீட்டிற்கு எப்படி குடி வந்தார்கள் எனும் கேள்விகள் பலநாட்களாக எனக்குத் தோனவில்லை. ஒருமுறை அம்மாதான் என்னிடம் மாந்தோப்புல இவங்க இருந்து இருக்காங்க. ராமநாதன் அண்ணனோட தூரத்துசொந்தம் அந்த அண்ணன் பிசிண்டிக்கு போறதால இங்க வந்துட்டாங்கன்றபோது இங்க எதுக்கு வரனும் எனும் கேள்வி என்னுள் மகிழ்ச்சியைத் தந்து இருந்தது.

''ராமா சாப்பிடுப்பா''

கொஞ்சமாக சாப்பிட்டேன், விழுங்குவதற்கு கடினமாக இருந்தது. ஆறு மணிக்கு முன்னரே புனிதாவின் வீட்டிற்குச் சென்றேன். மாலை நேரத்து இருள் சூழ்ந்து கொள்ளும் வேளையில் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தது. மனம் துடிதுடித்தது. அவளது அப்பா வேலை முடித்து வீட்டுக்கு வந்து இருந்தார்.

''வா ராமா''

அவளது நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் போலத் தெரிந்தது. உள்ளே சென்று அமர்ந்தேன்.

''எழுந்தாளா?''

''இன்னுமில்ல''.

ஆறு மணி ஆனது. எழவில்லை. என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்வாளா, வீட்டுக்குள் போதிய வெளிச்சமில்லை. நிமிடங்கள் ஓடின. முகம் பிரகாசமாகத் தெரிய மறுத்தது. அம்மா என்றபடி எழ எத்தனித்தாள். மெதுவாக அவளைத் தூக்கி சுவரோரம் அமர வைத்தார்கள். என்னைப் பார்த்துக்கொண்டே அம்மா என அழைக்க கைத்தாங்கலாக வீட்டுக்குப் பின்புறம் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே வந்தார்கள்.

''நான் சிவராமன்''

''ம்''

ஒற்றை வார்த்தை சன்னமாக கேட்டது. எனது பிரபஞ்சத்தின் தேவதை.

''நான் என்னோட கூட்டிட்டுப் போறேன்''

''சிரமம் ராமா''

என்னை அடையாளம் கண்டுகொண்டாளா எனத் தெரியாமல் தவித்தேன். அவள் மீண்டும் உறக்கத்தில் விழும் முன்னர் ஏதேனும் செய்ய வேண்டும் என மனம் பரபரத்தது. நானே அவளுக்கு ஆற்றலும் எல்லாம் என நினைத்தேன்.

''நான் கூட்டிட்டுப் போறேன், குணமாக்கிரலாம்''

'வேண்டாம் ராமா''

''புனிதா என்னோட வரியா''

''ம்''

''நான் கூட்டிட்டுப் போறேன்''

உடலில் எவ்வித தசையும் இல்லையோ எனும் அளவுக்கு ஒடுங்கிப்போயிருந்தவளின் கையைப்பிடித்தேன். இறுகப்பற்றிக் கொண்டாள். கஞ்சி கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினாள். இந்த கன்னங்களைத்தான் எப்படியெல்லாம் என்னுள் வர்ணித்தேன் என நினைத்தேன். அவள் படும்கஷ்டங்களைக் கண்டு எனக்கு கண்ணீர் முட்டிநின்றது இறுகப்பற்றிய கையை விடவில்லை. இறுகப்பற்றிக்கொள்ள எங்கிருந்து வந்தது இந்த ஆற்றல்? போதும் என தலையை மெதுவாக ஆட்டினாள்.

''எல்லா உணர்வுகளும் இருக்கின்றதா''

பேசுவதுப் புரிந்தது போல பார்த்தாள்.

''ம்''

என் மீது அவளை சாய்த்துக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். சிரமம் கொண்டாள். அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு எனது வீடு நோக்கி நடந்தேன்.

''தூங்கிருவா''

விழிகள் என்னிடம் ஏதோ கெஞ்சுவது போல தென்பட்டது.

''கண்ணை மூடாதே''

''ம்''

சிரிக்க மறந்து இருப்பாள் என தோனியது.

வீட்டுக்குள் சென்றதும்தான் தாமதம்.

''என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்க''

''சொன்னா கேட்கலை''

என்னுடன் வந்து நின்றார்கள் அவளது அம்மா அப்பா தாத்தா.

''நான் பார்த்துக்கிறேன்''

அவளை அமர வைத்தேன்.

''நாளைக்கு நான் காலையில ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போறேன்''

வீட்டில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.

''ஏன் இப்படி பண்ற''

''உனக்கு அறிவே இல்லையாண்ணா''

அம்மாவுடன் தங்கையும் சேர்ந்து கொண்டாள். பலர் திட்டத் தொடங்கினார்கள்.

''நான் கட்டிக்கப் போற பொண்ணு பேசாம போயிருங்க''

அவளின் முன் கோபம் அழுகை எல்லாம் எனக்கு வராது. மெல்ல மெல்ல கலைந்து போனார்கள். தூங்கிருவா என்றது போலவே தூங்கத் தொடங்கினாள்.

''எப்போ எந்திரிப்பா?''

''காலையில எட்டு மணி''.

தூங்காத என்றேன் தூங்கிப் போனாள்.

(தொடரும்)


No comments: