Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Friday, 26 March 2010

புத்தகங்கள்











தமிழ் அலை பதிப்பகம், 1, காவலர் குறுந்தெரு, ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 15, தொடர்புக்கு: இஷாக் 978 621 8777



நயினார் பதிப்பகம்,  அகநாழிகை பொன். வாசுதேவன் 999 454 1010

Thursday, 31 December 2009

சென்னை புத்தக கண்காட்சி கடை எண் 402




தமிழ் அலை வடிவமைப்பில் வலைமொழி பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்ட 'வெறும் வார்த்தைகள்' எனும் எனது கவிதைத் தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர் அறிவுமதியின் 'வெள்ளைத்தீ எனும் நூலுடன் கிடைக்கப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நல்லதொரு வாய்ப்பை வழங்கிய தமிழ் அலை நிறுவனத்தாருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

மிகவும் நன்றி இஷாக்.

Wednesday, 14 October 2009

ஒரு நூல் அச்சாகிறது - வெறும் வார்த்தைகள்.



இந்த கவிதை நூல் விரைவில் வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நூல் அழகு: தமிழ் அலை ஊடக உலகம். சென்னை - 15
அச்சு : ஜெம் கிராபிக்ஸ், சென்னை-14

Wednesday, 5 August 2009

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்

நான் முதன்முதலில் எழுதிய நாவல் நுனிப்புல் ( பாகம் 1) ஈரோடு பல்லவி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாரினால் ஈரோடு புத்தகத் திருவிழாவில் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, 29 July 2009

புத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் பொருள் அல்ல!

ஒரு நாவல் எழுதி வெளியிடுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பதை உணர வைக்கும் சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். அன்புக்குரிய நண்பர் கிரி அவர்கள் என்னிடம் புத்தகம் அச்சடித்துத் தரும்போது சொன்னது இதுதான் 'வரவரைக்கும் லாபம்னு நினைக்க வேண்டியதுதான்'. அவரிடம் ஏன் நீங்கள் உங்கள் படைப்புகளை அச்சடித்து வெளியிடக்கூடாது என சொல்லும்போதெல்லாம் சிரித்துக்கொண்டே 'நம்மதை யார் படிப்பா, நாமளே படிச்சிக்கிற வேண்டியதுதான்' என்பார். இவரின் தன்னடக்கம் கண்டு வியந்து இருக்கிறேன். அவரது படைப்புகள் அனைத்தும் தரமிக்கவை என்பதில் எனக்கு எந்தவித ஐயமுமில்லை. ஆனால் 'தரம் வேண்டும் அல்லவா' என்பார். அவர் அன்று சொன்னது எனது நுனிப்புல் நாவலுக்கு எத்தனையோ பொருந்திப் போய்விட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது.

நுனிப்புல் தரம் உடையதா இல்லையா என்பதை வாசகர்களும் விற்பனையாளர்களுமே தீர்மானிக்கக்கூடும். அப்படிப்பட்ட தீர்மானம் என்னவென்பதை விமர்சனங்கள் மூலம் என்னால் யூகித்துக்கொள்ள முடியாமல் போனாலும் பலர் விமர்சனம் பண்ணாமலிருப்பது குறித்து ஒரு நண்பரிடம் நான் கேட்டபோது அவர் குறிப்பிட்டது இதுதான் 'உங்களை மனம் வருத்தம் அடையச் செய்ய வேண்டாம்னு நினைக்கிறாங்க'. நானும் மனதில் நினைத்துக்கொண்டேன் இதில் என்ன மனவருத்தம் அடைய வேண்டியிருக்கிறது என. விமர்சனங்கள் குறித்தோ விற்பனை குறித்தோ அத்தனை பெரிதாக கவலை கொள்ளவில்லை. ஆனால் பிறருக்கு சிரமம் தருவதே எனக்குப் பெரிய கவலையாக இருந்து வந்துள்ளது என்பதை அடிக்கடி குறிப்பிட்டு இருக்கிறேன்.

நண்பர் கிரி அவர்களை மிகவும் தொந்தரவு செய்துவிட்டேன் என்றே இன்றும் கருதுகின்றேன். முத்தமிழ்மன்ற பதிப்பகம் என அச்சிட்டது முதல் அவருக்கு நான் தந்த சிரமம் சற்று அதிகமே. ஆனால் அவர் பெருந்தன்மையுடன் இதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லும்போதெல்லாம் இப்படியும் சகிப்புதன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்களா என வியந்து போனதுண்டு. எனது உறவினர் ஒருவரிடம் புத்தக விற்பனை குறித்து பேசி இருந்தேன், ஆனால் அவர் பல காரணங்களால் சில மாதங்கள் கழித்து முடியாது என கூற அனைத்து புத்தகங்களும் கிரி அவர்களிடமே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. அவருக்கு மேலும் சிரமம்தான். சிரமமாக கருத வேண்டாம் என கூறிவிட்டார்.

புத்தகம் விற்றால் நல்லதுதான், விற்பனையாகாவிட்டாலும் பரவாயில்லை இதுகுறித்து பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். இலண்டனில் சில கடைகளிடம் கொடுத்து இருந்தேன், ஆனால் அதுகுறித்து எந்த ஒரு விளம்பரமும் பண்ணவில்லை. ஒரு நண்பர் 15 புத்தகங்கள் வேண்டுமென வாங்கிச் சென்றார். கடைகளில் அனைத்து புத்தகங்களும் விற்பனையாகி உள்ளது. அப்படி விற்பனைக்கு வந்த புத்தகம் வாங்கி படித்த ஒருவர் நூலைப் பற்றி வெகுவாக பாராட்டியது இன்னும் மனதில் உள்ளது. ஒவ்வொரு பகுதியாக என்னிடம் பேசினார். ஏனோ எழுதித்தாருங்கள் என கேட்கத் தோன்றவில்லை. காரணம் நான் கேட்டவர்கள் அவர்களது சொந்த அலுவல்கள் காரணமாக எழுதித் தர தாமதம் ஆனதே காரணம். எதற்காக வீண் சிரமம் தருவானேன் என இருந்துவிட்டேன். தமிழ் ஆசிரியை ஒருவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் 'ஒரு பேப்பர்' பத்திரிக்கைக்கு விமர்சனம் எழுதி இருக்கிறேன், பல விசயங்கள் குறித்து வைத்திருக்கிறேன், தருகிறேன் என்பார். குளோனிங் பற்றி எழுதியது தேவையில்லை என்றே இப்போதும் சொல்வார். இப்படி நுனிப்புல் தந்த மகிழ்ச்சி அதிகமே.

நுனிப்புல் பற்றிய விற்பனை குறித்து நான் முத்தமிழ்மன்றத்தில் எழுதியபோது அதைப்பார்த்த தம்பி செல்வமுரளி என்னிடம் உதவி புரிவதாக சொன்னார். முத்தமிழ்மன்றத்தில் அது குறித்து சில பதிவுகளும் இட்டார். அவரது உதவும் மனப்பான்மை குறித்து வியந்து போனதுண்டு. நுனிப்புல் வடிவமைப்பு செய்து நமது மன்ற நண்பர்களின் வலைப்பூவில் இடம்பெற யோசனை சொன்னார். அவரது யோசனைப்படி நான் கேட்டக்கொண்டதற்கிணங்க நண்பர்கள் அற்புதகவிஞர், காகிதர், விமல், சுதா அண்ணா, வடுவூர் குமார், சகோதரி பத்மஜா என பலர் அவர்களது வலைப்பூவில் நுனிப்புல் விளம்பரம்தனை வைத்தனர். அவர்களுக்கெல்லாம் சாதாரணமாக நன்றி என சொல்லி செல்ல முடியாதுதான். இப்படி நுனிப்புல் விற்பனையே தனது பணி என எடுத்துக்கொண்டார் தம்பி முரளி.

பலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அறிவியல் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப சொன்னார். சுஜாதா அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய சில தினத்தில் சுஜாதா அவர்கள் மரணமடைந்தது என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ஆனால் தளர்ச்சியடையச் செய்யவில்லை. ஆழி பதிப்பகம் செந்தில் அவர்களின், கனியன் அவர்கள் குறிப்பிடுவது போல, 'நறுக்' விமர்சனம் குறித்தும் எந்தவித சலனமுமில்லை. சிரித்துக்கொண்டே கதையின் தலைப்பே நுனிப்புல் என கிரி அவர்களிடம் சொன்னதுண்டு.

இப்படி தம்பி முரளி சில மாதங்களாகவே நுனிப்புல் விற்பனைக்காக மிகவும் முயற்சித்தார். இதில் விவேக் தம்பியையும் குறிப்பிட்டாக வேண்டும். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நுனிப்புல் புத்தகங்களை நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஆனால் நன்றி என மட்டும் சொல்வது சரிதானா எனத் தெரியவில்லை. முத்தமிழ்மன்றம் என்ற ஒரு நிழலில் அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் எத்தனை அன்புடன் உதவி புரிகிறார்கள் என எண்ணும்போதே வியந்து போகின்றேன்.

நுனிப்புல் விற்பனை குறித்து ஒரு புத்தக வெளியீட்டாளரிடம் தம்பி முரளி பேசி இருக்கிறார். அவர்களும் வாருங்கள் என சொல்லி இருக்கிறார்கள். சேலத்தில் ஒரு விளம்பர அட்டையை பேருந்து நிலைய கடைக்காக செய்து தந்து இருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். தம்பி முரளியும் சென்று இருக்கிறார். இவ்வாறு பல முறை சென்று இருக்கிறார். அங்கே அவர்கள் தம்பி முரளியை சற்று அவமரியாதையாகவே நடத்தி இருக்கிறார்கள். வா என சொல்வது, பின்னர் எதுவும் சொல்லாமல் அனுப்புவது. இப்படியே நடந்து இருக்கிறது. அதே வேளையில் கோவையிலும் ஒரு நண்பரிடம் புத்தகம் விற்பனை குறித்து பேசியிருக்கிறார்.

இப்படி நடந்து கொண்டிருக்க புத்தக வெளியீட்டாளர் இம்முறை அழைத்து இருக்கிறார்கள். தம்பி முரளியும் ஆவலுடன் சென்று இருக்கிறார். ஆனால் இம்முறை சற்று கூடுதலாகவே அவமானப்படுத்தியிருக்கிறார்கள், ஏளனப்பார்வையுடன். நுனிப்புல்லினால் அவருக்கு இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது, என்ன காரணம் என யோசிக்கையில் நம்மிடம் இருக்கும் பொருள் தரமிக்கதாக இல்லை என்பதால் தான் என்பதை உணர்ந்திருக்கிறார். எனக்கு இந்த விசயம் தெரியவந்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ஏன் நீங்கள் புத்தகம் வெளியிட்டு பிறரை சிரமப்படுத்துகிறீர்கள் என. ஒரு தரமான எழுத்தை எழுதி வெளியிட வேண்டாமா என உரிமையுடன் கேட்டுக்கொண்டார். நுனிப்புல் புத்தக விற்பனை பற்றி கவலை வேண்டாம், ஆனால் பாகம் இரண்டு மிகவும் நேர்த்தியாக அனைவரையும் கவரும் வண்ணம் வரவேண்டும் அதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இப்படி எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி நுனிப்புல் விற்பனைக்கு பாடுபட்டு வரும் தம்பி முரளிக்கு நுனிப்புல்லினால் ஏற்பட்ட அவமானம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனிமேல் புத்தகங்கள் வெளியிட மாட்டீர்கள்தானே என யாராவது கேட்டால் எனது பதில் புத்தக வெளியீடு தொடரும். எனது குழந்தைகால கனவை பணத்திற்காகவோ புகழுக்காகவோ தூக்கி எறியத் தயாராக இல்லை. கருவிலே தரிக்கும் குழந்தையை நோய் உடைய குழந்தையா, நோய் அற்ற குழந்தையா என கருவை வெளியே உருவாக்கி வைத்து அலசி ஆராய்ந்து பின்னர் கரு தரித்து சந்தோசிக்கும் வாழ்க்கை எனக்கு வேண்டாம். பிறக்கும் குழந்தை பிறர் பார்வைக்கு ஊனமாக தெரிந்தாலும் எனது பார்வைக்கு அது அற்புத குழந்தைதான். முடிந்தவரை குழந்தையை நலமுடன் வாழ வழி செய்வேன். அதுபோன்றே எனது படைப்புகளும், என்னால் முடிந்தவரை சிறந்த முறையில் கொண்டுவர முயற்சி செய்வேன்.

கறைபட்டு விட்டதாய் கலங்குவாயோ நுனிப்புல்லே
முளைவிட்ட மகிழ்ச்சியில் முடங்குவாயோ நுனிப்புல்லே
கன்றுதன் தாயோடு தந்தையோடு உண்ணுகையில் நுனிப்புல்லே
அன்றுதான் நீ பிறந்ததன் அர்த்தமடி நுனிப்புல்லே!

எழுதிய நாள் மே 31, 2008