Saturday 5 March 2011

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?


பணம் குழந்தையை தரும் என்றேன் மனதில் ஏற்பட்ட பதட்டத்தை நீக்கிவிட்டு. என்ன சொல்கிறாய் என்றே திருப்பி என்னைக் கேட்டாள். ஆமாம், பணம் எல்லாவற்றையும் தரும் என்றேன் சொல்வதின் அர்த்தம் புரியாமல். 

விளையாட்டாக பேசாதே, எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. என் மீது அவர் கொண்டிருந்த பாசம் எல்லாம் விலகி போய்கொண்டிருக்கிறது என அழுதேவிட்டாள். 

நிலைமையை புரிந்து கொண்டவனாய் என்ன பிரச்சினை என கேட்டபோது எல்லா பிரச்சினைகளையும் வரிசையாக சொல்லி வைத்தாள். குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லாத ஒன்றுதான் பெரும் கவலை என்றாள். கவலைப்படாதே என ஆறுதல் மட்டும் சொல்லி வைத்தேன். 

ஆனால் அதற்கடுத்த கேள்வி ஒன்றை அவள் என்னிடம் கேட்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'என்னை திருமணம் செய்து கொள்வாயா?'' என்றாள். எனக்கு ஆத்திரம் அதிகமாகவே வந்தது. இனிமேல் உன்னுடன் எனக்கு எந்த உறவும் வேண்டாம் என உதறி தள்ளிவிட துடித்தேன். அதை சொல்லாமல் செய்துவிடுவது மிகவும் நல்லது என தோன்றியது. 

''எதற்கு உனது மனம் இப்படி அலைபாய்கிறது, திருமண வாழ்க்கையில் நீ இருந்து கொண்டு எதற்கு இப்படி பேசுகிறாய், நிச்சயம் உனது பிரச்சினை சரியாகிவிடும்'' என சொல்லிவிட்டு அவளிடம் பணம் செலவழித்து பிள்ளைபேறு பெற்று கொள்ள வழி தேடுமாறு சொன்னேன். எல்லா மருத்துவமும் பார்த்தாகிவிட்டது என்றே கண்ணீர் வடித்தாள். எனக்கு வேதனையாகி போனது. நீயும் காதலித்து பார் எல்லாம் புரியும் என்றாள் அவள். 

நான் திருமணம் ஆனவன், எனக்கு எப்படி காதல் இனிமேல் வரும் என்று அவளிடம் சொல்லி சென்று வருமாறு அனுப்பிவிட்டேன். எனக்கு காதல் வருமா எனும் யோசனை அதிகம் ஆகிப் போனது. இதை மனைவியிடம் ஒரு நாள் கேட்டு வைத்தேன். 

உங்களுக்கு வரும் எனில் எனக்கும் வரும் என எச்சரித்தார். அவரின் தீராத கோபம் என்னை பயமுறுத்தியது. ஆனாலும் காதல் வருமா எனும் கேள்வி மட்டும் தொலைந்து போகவே இல்லை. 

என்னுடன் வேலை செய்த பெண் எனக்கு ஒருமுறை அழைப்பு விடுத்தாள். என்ன என விசாரித்தேன். அவளது வாழ்க்கையை இனிமேல் வாழ விருப்பமில்லை என சோகமாக சொன்னாள். மேலும் அவளது கணவர் அவளை விவாகரத்து பண்ண வேண்டும் என அதற்கான பணிகளை செய்ய தொடங்கிவிட்டார் என சொன்னதும் கவலை வந்தது. உடனடியாக நான் அவரிடம் பரிந்து பேசினேன். எனக்கு தெரிந்த சில விசயங்களையும் சொன்னேன். சரி என கேட்டு கொண்டார். ஆனால் சில மாதங்களில் விவாகரத்து அவர்களுக்குள் நடைபெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

காதல் வருமா? காதல் எப்படி வரும்? என்பதற்கான காரணத்தை தேடி அலைந்தேன். இந்த தேடலில் இருந்த நேரத்தில் தமிழ் படங்களில் வரும் கதை நாயகிகளை போல ஒரு நாயகியை கண்டேன். அவள் யார், அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா, எனக்கு திருமணம் ஆகிவிட்டதே என்பதையெல்லாம் மறந்து எனக்குள் காதல் துளிர்விட்டது. இதுதான் காதல் என சொல்வதா என்பதை புரிந்து கொள்ள இயலாமல் அந்த நாயகியுடன் பேசுவதில் அலாதி பிரியம் கொண்டேன். அவள் பக்கத்து அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள் என்பதே பெரும் வசதியாகி போனது. 

இது காதல் என்பதா? மனைவியிடம் விபரத்தை சொன்னேன். அன்று வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் நடனம் ஆடின. அமைதி, சப்தத்திடம் புதிய பாடம் கற்று கொண்டிருந்தது. 

என்னுடன் வேலை செய்த பெண் என்னை சில தினம் பின்னர் பார்த்தாள். இன்னும் நீங்கள் என் மனம் விட்டு அகலவில்லை என்றாள். எனக்குள் இருந்த காதல் அவளது காதலை முதல் முதலாக புரிந்து கொண்டது. 

இந்த சமூகத்தில் எல்லா அவலங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. எது அவலம், எது அவலம் இல்லை என்பதை தீர்மானிப்பவர்கள் மட்டும் மாறிக்  கொண்டே இருக்கிறார்கள். 

முற்றும். 

Tuesday 15 February 2011

வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது

பல மாதங்கள் முன்னர் எனது மனைவிக்கு ஒரு புத்தகம் வாங்கி தந்தேன். புத்தகத்தின் தலைப்பு மூன்று தேநீர் கோப்பைகள். இந்த புத்தகம் வாங்க சொல்லி எவரும் பரிந்துரைக்க வில்லை.

தமிழ் எழுதுவது மறந்து கொண்டிருந்தது. வேலை பளு என சொல்வதா, எழுத விருப்பம் இல்லை என சொல்வதா என தெரியவில்லை. ஏனோ தமிழ் பக்கம் வரவே எண்ணம் ஏற்படவில்லை. சில நேரங்களில் இது போன்ற ஒரு இடைவெளி எனக்கு ஏற்படுவது உண்டு.

இந்த புத்தகம் பற்றி சொல்ல நினைத்ததை தலைப்பாகவே வைத்துவிட்டேன். ஆங்கிலம் படிக்க விருப்பம் இருப்பவர்கள் நிச்சயம் இந்த புத்தகம் வாங்கி படியுங்கள்.

உலகில் உதவ வேண்டும் என எண்ணம் இருப்பவர்கள் பல்லாயிரம் இருக்கலாம், ஆனால் வெகு சிலரே உதவி செய்கிறார்கள். அப்படி உதவி செய்யும் மனிதர்களை நாம் உற்சாகபடுத்தி அவர்களது உதவிக்கு உறுதுணையாய் இருந்தாலே அது பெரிய காரியம் தான். ஆனால்...

எனது சட்டை பையில் கொஞ்சம் பணம் அதிகமாகவே இருக்கிறது; அழுத பையன் அழுதபடியே;

புத்தகம் வாங்க, அறிந்து கொள்ள  http://www.threecupsoftea.com

நன்றி. 

Tuesday 4 January 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)

1. 


கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் தமிழில் எழுதிக் கொண்டிருந்தபோது மருத்துவம் சம்பந்தமாக எழுத இயலுமா என என்னை நோக்கிக் கேட்டபோது இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என ஓரிரு வருடம் முன்னர் சொல்லி இருந்தேன். 'கதை விடுவது மிகவும் எளிது' என நினைத்துக் கொண்டு மருத்துவம் சம்பந்தமாக எழுதுவது பற்றி சிறு முயற்சி கூட எடுத்ததில்லை.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக ஆங்கில மொழியிலேயே பயின்று வந்ததின் காரணமாக பல ஆங்கில சொற்களை தமிழ்படுத்துவதில் இருக்கும் சிரமம் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை எனும் தொடரை எழுதும்போது அறிந்தேன். ஒரு விசயத்தை வெளியில் சொல்ல வேண்டுமெனில் இருக்கும் சிரமத்தைப் பொருட்படுத்தாது எழுதுவது மிகவும் அத்தியாவசியமாகும். அதன் பொருட்டே ஆஸ்த்மா பற்றிய ஆராய்ச்சித் தொடரை எழுத முயற்சி எடுத்து இருக்கிறேன்.

தமிழில் எழுதுவதின் மூலம் விசயங்களைத் தவறாகச் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்க முயற்சி செய்கிறேன்.

சுவாசம் நன்றாக இருந்தால்தான் இந்த பூமியில் சுகவாசம் செய்ய இயலும். அந்த சுவாசத்தில், சுவாசக் குழலில், சுவாசப் பைகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அது எதனால் ஏற்படுகிறது, என்னென்ன ஆராய்ச்சிகள் உலகில் செய்து வருகிறார்கள், என்னென்ன மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன என்பது குறித்து விரிவாக, விளக்கமாக விரைவில் தொடர்வோம்.