Friday 22 July 2016

கபாலி - ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி

எப்போதாவதுதான் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டும், அதுவும் ரஜினி படம் என்றால் எப்போதாவது வரும் என்பதால் எளிதாக தியேட்டருக்குச் சென்றுப் பார்க்கலாம். கபாலி திரைப்படத்தை பார்க்க இதுவரை சென்று இராத ஒரு தியேட்டரை தேர்வு செய்து முன்பதிவு பண்ணியாகிவிட்டது. அதிக விலை எல்லாம் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட விலை தான்.

அரைமணி நேரம் முன்னதாகவே தியேட்டர் சென்றால் அங்கே கூட்டமே இல்லை. நிம்மதியாக இருந்தது. கூட்டம் என்றாலே ஒருவித அலர்ஜி போலாகிவிட்டது. கூட்டம் என்பது ஒரு ஒழுங்கின்மையைக் குறிக்கிறது. கூட்டம் என வந்துவிட்டால் மக்கள் செயல்பாடுகள் மாறிவிடுகிறது.

உண்பதற்கு அருந்துவதற்கு என வாங்கிக்கொண்டு பதினைந்து நிமிடங்கள் முன்னர் தியேட்டருக்குள் சென்றால் நான்கு நபர்கள் மட்டுமே இருந்தார்கள். மகிழ்ச்சி. பின்னர் ஒவ்வொருவராக வரத்தொடங்கி கணிசமான கூட்டம் சேர்ந்துவிட்டது. நல்லவேளை பெரும் விசில் அடித்து ஆரவாரம் செய்யும் நபர்கள் இல்லாது இருந்தனர். ஒரு புத்தகம் வாசிக்கும் போதோ அல்லது ஒரு சினிமா பார்க்கும் போதோ தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணுவது உண்டு. இருப்பினும் விசில் அடிக்கும் மிகச் சிறிய  கூட்டம் இருந்தது.

ரஜினி. என்னைப் பொருத்தவரை ஒரு மந்திரச்சொல். எவர் என்ன சொன்னாலும் எத்தனை பேசினாலும் அது குறித்து கவலைப்படுவது இல்லை. சில பாடல்கள், விளம்பரங்கள் என முடிந்து படம் தொடங்குகிறது. உள்ளுக்குள் ஒருவித உணர்வு. ரஜினிக்கான உணர்வு அது. வார்த்தைகளில் சொல்ல இயலாது. ரஜினியின் அறிமுக காட்சி என ஆரம்பிக்கும் முன்னர் ஒரு கதைச்சுருக்கம் சொல்லப்படுகிறது. படிப்பறிவு நிறைந்த சமூகம் என முடிவு கட்டிவிட்டார்கள். மலேசியா. மலேய மொழி.

வன்முறை காட்சிகளுடன் தொடங்குகிறது. படத்தோடு நம்மை ஒன்றிவிடும்படியாக அடுத்தடுத்து என காட்சி நகர்கிறது. ஒரு மெல்லிய காதல் இழையோடிக்கொண்டே இருக்கிறது. ஒரு இழப்பினைத் தாங்க இயலாமல் தவிக்கும் இரக்க மனது. ஒரு கட்டத்தில் ரஜினி படமா என நினைக்கும் அளவுக்கு காட்சிகளின் தொகுப்பு. மகிழ்ச்சி. ஒரு படைப்பாளியின் பார்வையில் அந்த படைப்பு வித்தியாசமான ஒன்றாகவே இருக்கும். அப்பா என அழைத்து மனம் உருக வைக்கும் காட்சிகள். எதிர்பாராத திருப்பங்கள் என மிகவும் அருமையாக முதல் பகுதி நகர்கிறது. படைப்பாளி என்ன சொல்ல வருகிறார் என புரிந்துகொள்ளும் போது காட்சிகள் மிகவும் அழகாகின்றன. சலிப்பின்றி படம் நகர்கிறது. துரோகம், அடிமைத்தனத்தில் இருந்து மீளல் என பல விசயங்கள். தமிழ்நேசன் நல்ல பெயர்.

இடைவேளைக்குப் பின்னர் அதே வேகத்தில் நகரும் படம் காதலை மீண்டும் தன்னுள் எடுத்துக்கொள்கிறது. அன்பில் உலக உயிர்கள் வாழும். ஏதேனும் நடக்குமோ என நினைக்கும்படியான காட்சிகள். இசை, ஒளிப்பதிவு, வசனங்கள் இயக்கம் என களைகட்டிவிட்டது படம். பாடல்கள் கதையோட்டத்தோடு இணைகின்றது இடைஞ்சலாகவே இல்லை.

கடைசியாக வழக்கமான தமிழ் சினிமாவாக மாறிவிடுகிறது. எப்போதும் போல ஹீரோ வெற்றி பெறுகிறார். ஆனால் எழுதப்பட்ட வசனங்களை உற்று கவனித்தால் தமிழ்நாட்டின் சாபக்கேடு உலகின் சாபக்கேடு புரியும். கடைசியில் அப்படியே படமும் முடிகிறது ஏதோ ஒரு வெறுமை ஒட்டிக்கொண்டது போல இருந்தது. இனியும் இந்த படம் தொடராதா எனும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியது.

இதுவரை எந்த ஒரு படத்தையும் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என  விரும்பியது இல்லை. ஏனோ கபாலி அப்படியொரு எண்ணத்தை ரஜினிக்காகவே விதைத்துச் செல்கிறது. ஆங்கில மொழி  சரளமாக படத்தில் ஆங்காங்கே வருகிறது. சரி சரி எல்லாம் படித்தவர்கள்தான். ஆனால் முட்டாள்கள் போலவே செயல்படுவார்கள் என முடிகிறது படம். உலகின் சாபக்கேடு அது.

நல்ல நல்ல கதாபாத்திரங்கள், நல்ல படைப்பு. வித்தியாசமான ரஜினி. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

கபாலி ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி. 

Friday 17 June 2016

இது கர்மவினை அல்ல, பரிணாமம்

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - முன்னுரை

பரிணாமம் குறித்துத்தான் எழுத வேண்டும் என நினைத்து இந்த கதையைத் தொடங்கினேன். அப்போது பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் எனும் இந்த வாக்கியம் மிகவும் பிடித்து இருந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டேன். எதற்காக இதைச் சொன்னார்கள் என்பதை விடுத்து இந்த வாக்கியத்திற்கு இரண்டு விதமான பொருள் தரலாம். ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவது பெண்களின் சமயோசித புத்திகளில் ஒன்று. மற்றொன்று இந்த பிரபஞ்சமானது ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து இன்று கடவுள் இவ்வுலகை படைத்தார் என்பதற்கான காரணியாக பெண்கள் விளங்குகிறார்கள் எனவும் கொள்ளலாம்.

இன்றைய மருத்துவ உலகில் தாயின் கர்ப்பப்பை இல்லாமல் ஒரு குழந்தையை முழுமையாக உருவாக இயலாத நிலைதான் இருந்து வருகிறது. அப்படியே வைத்துக் கொண்டால் இந்த உலகின் சந்ததிகள் தாயின் வழித் தோன்றல்களாக இருப்பார்கள். தாய் தனது சந்ததிகளை பேணி காத்து வராது போயிருப்பின் உயிரின பரிணாமத்தின் நிலையை யோசிக்க இயலாது. 

இப்படித்தான் கதையின் பாதையை சிந்தித்து வைக்க கர்மவினை என்ற ஒரு விஷயம் நிறைய இடைஞ்சலாகவே இருந்தது. போன ஜென்மத்தில் நீ அதுவாக பிறந்து இருப்பாய், அடுத்த ஜென்மத்தில் நீ இதுவாக பிறப்பாய் என்றெல்லாம் மனிதர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சரியானது இல்லை என முழுவதும் விலக்கி வைத்தாலும் உலகில் நடக்கும்  ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆச்சரியமும் ஆதங்கமும் கொள்ள வைக்கின்றன.

காதல், கல்யாணம், குடும்பம் என ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டாலும் மனிதனின் எண்ணங்கள் ஒரு வட்டத்தில் நின்றது இல்லை. மேலும் பரிணாமத்தின் 'வலுவுள்ளதே பிழைக்கும்' எனும் கோட்பாட்டின் படி தனக்கு சாதகமான விஷயங்களை செய்து முடித்துக்கொள்ள எந்த ஒரு எல்லைக்கும் ஒரு உயிரினம் போகும் ஆனால் மனிதன் மட்டும் காதல், உறவு, நட்பு என சொல்லிக்கொண்டு தியாகம் என அடைமொழி கொடுத்து மரணித்துப் போகவும் தயங்கமாட்டான்.

நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும் என நம்பி வாழ்ந்து கொண்டு இருப்பதால் இந்த கர்ம வினை மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆனால் மனிதன் சிந்திக்காமல் பரிணாமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து இருந்தால் இப்படிப்பட்ட எண்ணங்கள், சிந்தனைகள் ஒருபோதும் வந்து இருக்காது.

ஒருவனின்  வாழ்வில் என்னவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டோ அல்லது தொடர்பு இன்றியோ நடக்கிறது போலவே இந்த கதையை முடித்து வைத்தேன்.

கர்ம வினை என்பதை விட பரிணாமம் மிகவும் சரியாகவே இருக்கிறது.



Wednesday 15 June 2016

இறந்தது போல இருந்தது இல்லை இறந்தது

மாறா மரபு - முன்னுரை


ஒருவேளை இப்போதே இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என யோசித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு அப்படி ஒரு நினைப்பு வந்து இருக்கத் தேவை இல்லைதான்.

இறப்பு பற்றிய நினைப்பு  ஒன்று வேதனைபடுபவனுக்கும்  மற்றொன்று சந்தோசத்தில் துள்ளிக்குதிப்பவனுக்கும் வந்து சேர்கிறது.

இவ்வுலகில் நிறைய விசித்திரங்கள் நடைபெறுவது உண்டு. பொருள் பணம் என எதுவும் இல்லாதவன் கூட இறப்பது குறித்து யோசிப்பது இல்லை. எப்படியேனும் வாழ்நாளை கழித்து விட வேண்டும் எனும் அக்கறை மட்டுமே இருக்கும். பொருள் பணம் இருந்தும் இறப்பது குறித்த சிந்தனை கொண்டவர்களும்  உண்டு.

இந்த உலகில் மரணத்தை வென்று விடும் ஒரு அரிய  வாய்ப்பு கிட்டிவிடும் எனில் அதைவிட மிகச் சிறந்த ஒரு விஷயம் இருக்கவே இயலாது. ஆனால் எத்தனை பேர் இந்த உலகில் வாழ வேண்டும் என பிரியம் கொள்கிறார்கள்.

இன்னும் அவன் யோசித்துக் கொண்டு தான் இருந்தான். தான் பெற்ற பெயர், படிப்பு, நட்பு, உறவு என என்னவென்னவோ அவனது மனதில் வந்து நிழலாடியது. அவனுக்கு இன்னமும் திருமணம் ஆகி இருக்கவில்லை.

இத்தனையும் விட்டுவிட்டு இறந்து போய்விட்டால் என்ன செய்வது எனும் சிந்தனையுடன் அவனது பொழுது கழிந்து கொண்டு இருந்தது.

அப்பொழுதுதான் அவனது யோசனை மரபணுக்கள் மீது உட்கார்ந்து கொண்டது. இந்த மரபணுக்களில் மாற்றம் செய்துவிட்டால் மரணத்தை வென்றுவிடலாம் எனும் ஒரு யோசனை. அதன்படி அவனது சிந்தனை இன்ட்ரான் மீது சென்று அமர்ந்து கொண்டது.

இன்ட்ரான் எக்சான் எல்லாம் மரபியலில் ஒரு முக்கிய கூறு, அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஆனால் அவனது எண்ணம் இரண்டுமே வெவ்வேறு என்று எண்ணத் தோனியது. அவனைச் சொல்லி ஒரு குற்றமும் இல்லை. இன்ட்ரான்கள் இல்லாது போனால் மனிதன் நோயின்றி வாழ இயலும் என கணித்து வைத்தான்.

பிறவா வரம் வேண்டும் என பாடி வைத்தவர்கள் பலர். இறவா நிலை வேண்டும் என துடிதுடித்தவன் அவன். அவனது சிந்தனையும் செயலும் அதைச் சுற்றியே இருந்தது.

எதுவெல்லாம் சாத்தியம் இல்லையோ அதுவெல்லாம் கற்பனை ஆகிறது. எப்போது கற்பனை சாத்தியம் ஆகிறதோ அப்போது அது சாதனை ஆகிறது. அவனது கற்பனை சாத்தியமா என அவனால் கூட சொல்ல இயலாது. ஆனால் சாதிக்கப்போவதாகவே அவன் எண்ணிக்கொண்டு இருந்தான்.

அவன் இப்படித்தான் பிரபலமாக சொல்லிக் கொண்டான். உலகில் நோயற்ற மனித இனத்தை உண்டு பண்ணுவதே என்  வாழ்வின் இலட்சியம். கேட்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது.

மனிதன் நோயினால் மட்டுமே மரணம் அடைவது இல்லை என அவன் சிந்திக்க மறந்து இருந்தான்.

எத்தனையோ உயிரினங்கள் தோன்றியும், அழிந்தும் போன இந்த பூமியில் இறந்தது போல இருந்தது இல்லை... இறந்தது. 


நன்றி

அன்புடன்
வெ. இராதாகிருஷ்ணன்
இலண்டன்