Wednesday 9 October 2013

நடிகைகளும் இயக்குனர் சிகாமணிகளும்

''நாய் வேசம் போட்டா குரைக்கத்தான் வேணும்'' என எனது ஆசிரியர் ஒருவர் சொன்னார்.

''என்னதான் நான் குரைத்தாலும் நாய் போல் என்னால் குரைப்பது என்பது கடினமே, வேசம் போட்டாலும் என்னால் நாயாக ஆக முடியாது, அதனால் இந்த நாய் வேசம் எல்லாம் போட முடியாது'' என அவர் முகத்தில் அறைந்தது போன்றே சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

''இங்க வாடா'' என என்னை அழைத்து ஒரு அறை விட்டார்.

''எதுக்கு சார் இப்ப அடிக்கிறீங்க?'' என சுற்றி நிற்கும் மாணவர்கள் பார்க்கும் அவமானம் தாங்காமல் கேட்டேன்.

''நாய் வேசம் போடுன்னு சொல்றேன், ராஸ்கல் என் பேச்சை கேட்காம என்னையவா எதிர்த்து பேசற''

''என்னால முடியாது சார், அதுக்கு வேற ஆளு பாருங்க'' என திரும்பவும் சொன்னேன்.

''என்ன திமிருடா உனக்கு, நாயே'' என காலால் எட்டி உதைத்தார். அவர் சொன்னதை செய்யாமல் அடம் பிடிக்கும் என்னால் அவருக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது போன்றே அவ்வாறு நடந்து கொண்டார் என நினைத்தேன். ஆனால் எனக்கு நாய் வேசம் போடவே விருப்பம் இல்லை.

இனிமேலும் என்னால் பொறுத்து கொள்ள இயலாது என ஆசிரியர் என்று கூட பார்க்காமல் அவரை ஓங்கி காலால் எட்டி உதைத்தேன். எனக்கு எப்படி அத்தனை தைரியம் வந்தது என எனக்குத் தெரியவில்லை. பதவி, நிலை என காரணம் காட்டி பிறரை கொத்தடிமைகளாக வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சமூகம் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்தது. மாணவர்கள் அனைவரும் டேய் வாத்தியாரை அடிச்சிட்டாண்டா என்றே பேசிக் கொண்டார்கள். வாத்தியாருக்கு அடிக்கும் உரிமையை எவர் கொடுத்தது? என்னை கட்டாயப்படுத்தி ஒரு வேலையை செய்ய சொல்லும் உரிமை அவருக்கு எவர் தந்தது.

ஆசிரியர் என்னை பாய்ந்து கொண்டு அடிக்க வந்தார். நானும் விடுவதாக இல்லை. மாணவர்கள் சிலர் இடையில் புகுந்தார்கள். கல்லூரி முதல்வரிடம் அழைத்து செல்லப்பட்டேன்.

''நீ என்ன காரியம் பண்ணியிருக்க, ஒரு ஒழுக்கம் வேண்டாம்'' என முதல்வர் என்னைத் தான் திட்டினார்.

''இதோ நிற்கிறாரே அவருக்கு ஒழுக்கம் இருக்கானு கேளுங்க சார்'' என்றேன்.

''என்ன அடவாடியா என்கிட்டே பேசறே, ஒரு ஆசிரியரை நீ அடிச்சது குத்தம், நீ உன் பேரன்ட்ஸ் கூப்பிட்டு வந்து டிசி வாங்கிட்டு போ, உனக்கு இனிமே நல்ல கண்டக்ட் சர்டிபிகேட் தரமுடியாது'' என எனது பக்கம் நியாயம் எதுவும் கேட்காமல் முடிவை சொன்னார்.

''மாணவர் போராட்டம் வெடிக்கும், எப்படி காலேஜு நடத்துரனு பாக்கிறேன்'' என்றே சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

''இருப்பா'' என்றார் கல்லூரி முதல்வர். நான் நிற்காமல் வெளியில் வந்து விட்டேன். மாணவர்கள் என்ன ஆச்சு என்றே கேட்டார்கள். நடந்ததை சொன்னேன். எவரும் என் பேச்சு கேட்பதாய் தெரியவில்லை. நான் ஆசிரியரை அடித்தது தவறு என்றே சொன்னார்கள்.

கல்லூரியில் நடந்த விசயம்தனை வீட்டில் சொன்னேன். ''நாய் வேசம் போட்டு குரைச்சிட்டு போக வேண்டியதுதானே, எங்க தலைவிதி வந்து தொலையறோம், கையில காலுல விழுந்து உன்னை அங்கே படிக்க வைக்கிறோம்'' என்றே அம்மாவும் அப்பாவும் திட்டினார்கள். அன்று  மாலை எனக்கு சிறு வயதில் இருந்து தெரிந்த ஒரு அக்காவை பார்க்க சென்றேன். அவர் சினிமாவில் இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். எதற்கு நடிக்க போனார் என்றெல்லாம் நான் கேட்டதில்லை. இருப்பினும் இந்த நடிப்பு குறித்து கேட்க வேண்டும் என சென்றேன். என்னை பார்த்ததும் வா என முகம் ம்லர வரவேற்றார்.

''என்னடா நடிக்க சான்ஸ் கேட்டு வந்துட்டியா'' என சிரித்தார்.

''என்னால நடிக்க முடியாதுக்கா, நடிப்பு எல்லாம் எனக்கு வராதுக்கா'' என்றேன்.

''என்னடா சோகமா இருக்க'' என அக்கறையுடன் கேட்டார்.

கல்லூரியில் நடந்ததை சொன்னேன். அந்த அக்கா என் மேல் அதிக கோபம் கொண்டார்கள.

''ஏண்டா, இதுக்கா இப்படி ரகளை பண்ணுவ. நாய் வேசம் போட்டு குரைச்சிட்டு போகலாமேடா'' என அந்த அக்காவும் சொன்னதும் எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

''ஏன்க்கா, படத்தில உங்களுக்கு பிடிக்காத மாதிரி நடிக்க சொன்னா என்னக்கா பண்ணுவீங்க'' என்றே கேட்டு வைத்தேன்.

''முடியாதுன்னு சொல்வேன், நடிச்சித்தான் ஆகனும்னு சொன்னா நடிச்சி தான் கொடுக்கனும். இது தொழில், இதுல முரண்டு பிடிச்சா நிலைக்க முடியாதுடா. நீ எந்த வேலைக்கும் போய்ப்பாரு, சொல்ற வேலையை நீ செய்யலைன்னா உன்னைய தூக்கிருவாங்கடா'' என அந்த அக்கா சொன்னதும் இந்த சமூகம் பற்றிய கோபம் கொந்தளித்தது.

''சுதந்திரமா நாம நினைச்சத செய்ய முடியாதாக்கா'' என்றே சோகமாக கேட்டு வைத்தேன்.

''எனக்கு நடிக்கிறது பிடிச்சி இருக்கு, அதான் வாய்ப்பு தேடி ஒரு படத்தில வாய்ப்பு கிடைச்சி இருக்கு. டைரக்டர் என்ன சொல்றாங்களோ அதை நான் அப்படியே செய்யலைன்னா இந்த பொண்ணு திமிரு பிடிச்சவனு முத்திரை குத்திருவாங்க, அப்புறம் என் கேரியர் என்ன ஆகுறதுடா. எல்லாம் டைரக்டர் கையில இருக்குடா. நான் எல்லாம் ஒரு பொம்மை மாதிரி'' என சொல்லும்போது ஏதோ ஒரு வலி இருப்பதை போன்று நான் உணர்ந்தேன்.

''அக்கா, நான் டைரக்டர் ஆகனும்க்கா'' என்றேன்.

''டே நிசமாவ சொல்ற, நடிக்க பிடிக்காதுன்னு சொன்ன, டைரக்டர்னா நடிச்சி காமிக்கனும்டா. அப்போதான் எப்படி நடிக்கனும்னு தெரியும். சில காட்சிகள் நமக்கே இயல்பா வரனும்டா, நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாடா. நான் நல்லா நடிக்கிறேன்னு யூனிட்ல எல்லாரும் சொல்றப்ப சந்தோசமா இருக்கும்டா'' என அவர் சொன்னபோது டைரக்டர் கூடவா நடிக்க வேண்டும் என்றே தோணியது. நான் அமைதியானேன். இந்த இயக்குனர்கள் மனம் வைத்தால் எல்லா நடிகைகளும் ஒரு கவர்ச்சி பொருளாக சினிமாவில் வர வாய்ப்பில்லை என்றே நினைக்க தோணியது.

''கவர்ச்சியா எதுக்குக்கா நடிக்கனும்'' என நான் கேட்டது எனக்கே தப்பாக தோணியது. ஒவ்வொரு சராசரி மனிதனும் பிற பெண்களை கவர்ச்சியாக பார்க்கும் எண்ணம் பெருகி விட்ட காலத்தில் எனது கேள்வி தவறுதான்.

''இதை ஒரு கலை நோக்கில, தொலைநோக்கு பார்வையில நீ பார்க்கனும்டா, யாரும் விருப்பபட்டு இப்படி நடிக்கிறதில, ஒரு கான்செப்ட் அதுக்கு ஒரு டான்ஸ் இப்படிதான் போகும்'' என அவர் சொன்னது அவரது பக்க நியாயம் தெரிந்து கொள்ள முடிந்தது.

''எனக்கு இன்னும் அந்த பக்குவம் வரலைக்கா, வரனும்'' என மனமாற்றத்திற்கு தயாரானேன்

''இங்க பாருடா, நீ கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து வாழ பழகிக்கோ, எத்தனை தடவை நான் சொல்றது. எப்ப பார்த்தாலும் யாருகிட்டயாவது சண்டை போட்டு வந்து நிக்கிற, உன்னால உன் குடும்பத்துக்கு எத்தனை அவமானம். உன்னை யாருக்குடா பிடிக்கும் சொல்லுடா'' அந்த அக்காவின் வார்த்தை என்னுள் வலியை ஏற்படுத்தியது. ''டைரக்டர் ஆகனும்னா சொல்லு, இந்த படத்து டைரக்டர்கிட்ட சொல்லி அசிஸ்டெண்டா ஒர்க் பண்ண சான்ஸ் கேட்கறேன்''.

''வேணாம்க்கா, காலம் பூரா நடிக்க எனக்கு முடியாதுக்கா'' என சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து கிளம்பினேன்.

''சார், சார்' என கதவை தட்டினேன்.

''என்னடா, வீட்டுக்கே வந்துட்டியா, உன் கேரியர் பாதிக்குமேனு உன் மேல போலிஸ் கேசு போடாம விட்டது என் தப்பு'' என்றார் அந்த ஆசிரியர்

''சார், என்னை மன்னிச்சிருங்க சார், நான் நாளைக்கு நாய் வேசம் போட்டு குரைக்கிறேன்'' என்றேன்

''இப்போ மட்டும் எப்படி அறிவு வந்துச்சி, அதை முன்னமே செய்றேன்னு சொல்லி இருக்கலாமே''

''என் தப்பு தான் சார்''

''சரி போ, நான் பேசிக்கிறேன். காலேஜுக்கு நாளைக்கு வா''

நாய் போல எப்படி குரைப்பது என ஒத்திகை பார்க்க துவங்கினேன். மனிதனாய் எதற்கு பிறந்தோம், விலங்காகவே பிறந்து இருக்கலாமோ  எனும் கேள்வி என்னை துளைத்துக்கொண்டு இருந்தது!

4 comments:

வவ்வால் said...

ரா.கி,

ரொம்ப நாளாச்சேனு பார்க்க வதால்,சாமியார் கதையை விட்டுப்புட்டு ,நடிகைக்கதைக்கு மாறிட்டிங்களே,நாபிக்கமலம் மேட்டர் உங்களையும் பாதிச்சுடிச்சா அவ்வ்!

//, விலங்காகவே பிறந்து இருக்கலாமோ எனும் கேள்வி என்னை துளைத்துக்கொண்டு இருந்தது!//

மனுசனும் விலங்கு தானே என்ன ஆடை கட்ட தெரிஞ்ச விலங்கு அம்புட்டுத்தான் :-))

டாக்சானமில ,கிங்டம் அனிமேலியானு போட்டு அதுக்குள்ள தான் ஹோமோசேப்பியன்ஸ்னு வாரோம்,அப்போ நாமலும் அனிமல் பிளானெட் தானே :-))

Radhakrishnan said...

'கொப்பூழ்' அப்படின்னு ஒரு தலைப்புல கட்டுரை தயார் செஞ்சிட்டு இருந்தேன். எப்படி பனிக்குடம், கொப்பூழ், ஸ்டெம் செல்கள்னு. ஆராய்ச்சி பண்ணி பாத்தா அதிசயமான விசயங்கள் தெரிய வந்தது. அப்போ திடீர்னு இந்த சினிமா பிரச்சினை. அப்போதான் தோணிச்சி, எல்லா வேலையிலயும் இதே கண்றாவி தானேனு.

நீங்க சொல்றது சரிதான். அந்த விலங்காகவே அப்படின்னு 'அந்த' சேர்த்து இருந்து இருக்கனும். தப்புதான்.

இருந்தாலும் இனி வரும் காலங்களில் டாக்சானமிய மாத்தி அமைக்கனும். ஹ்யூமன்ஸ், அனிமல்ஸ் அப்படின்னு பிரிச்சிரனும். நாம ரொம்ப சொபிஷ்டிகேடேடு.

சாமியார் எல்லாம் விட முடியாது, இது ஒரு கண் திருஷ்டிக்காக.

நீங்க பதிவுகள் எழுதுறது உண்டா? அப்படின்னு பாக்கனும்.

கிரி said...

செம :-)

Radhakrishnan said...

நன்றி கிரி