Thursday 10 October 2013

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 14

பாதை 13

மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி: ஒரு மூலக்கூறின் நிறையினை கண்டு கொள்ள உதவும் இது. நான் இந்த மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி செய்ய சென்ற நாள் இன்னும் நினைவில் இருக்கிறது.

முதன் முதலாக மிளகு தனில் இருந்து ஒரு மூலக்கூறுதனை பிரித்தெடுத்து அதன் நிறை என்ன கண்டுபிடிக்க கொடுத்தாகிவிட்டது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக அந்த மூலக்கூறின் நிறை இருந்தது. எப்படி எல்லாமோ கணக்கு செய்து பார்த்தோம், ஒன்றுமே புரியவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. இத்தனை சிரமப்பட்டு செய்து வேறு ஏதோ மூலக்கூறுதனை அல்லவா கண்டுபிடித்தோம் என.

எனக்கு அப்போது வேதியியல் அத்தனை பரிச்சியம் இல்லை, இப்போது கூட முழு பரிட்சயம் ஆகிவிட்டது என்று சொல்ல இயலாது. கற்றுக்கொண்டே இருக்கிறேன். நிறை கண்டுபிடிக்க என்ன செய்தாய் என்று ஆசிரியர் கேட்டு வைக்க நான் எடுத்து சென்ற குழாய்தனை காட்டினேன். அப்பொழுது அந்த குழாய்தனின் மூடியை பார்த்தார். யோசித்துவிட்டு சரி என ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்.

நான் மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி செய்பவரிடம் சென்று இதுதான் நான் எதிர்பார்த்த நிறை, ஆனால் வந்தது வேறு நிறை என்று சொன்னேன். அப்போது மூடி பற்றிய விபரமும் சொல்லி வைத்தேன். நான் கொஞ்சம் உளறி கொட்டுவேன். தேவையோ தேவை இல்லையோ சில விசயங்கள் அதிகமாகவே பேசி விடுவது உண்டு. பார்த்தார். யோசித்த்தார். இது தாலேட் என்றார். தாலேட்?

தாலேட் நிறையுடன் எனது மூலக்கூறு நிறை இணைத்தால் சரியாக வந்தது. இதை நீக்க முடியாது என்றே சொன்னார். இப்படித்தான் சில வாரங்கள் அந்த மூலக்கூறு படாத பாடு படுத்தியது. எப்படி இந்த நிறை எல்லாம் கண்டுபிடிக்க படுகிறது.

இந்த மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஐந்து நிலைகளை கொண்டது.

௧. மூலக்கூறு ஆவியாதல் ௨ எலக்ட்ரான்கள் மூலக்கூறிணை பகுத்தல் ௩ மூலக்கூறு வேகம் பிடித்தல் ௪ நிறைகேற்ப மூலக்கூறு பிரிதல் ௫ நிறை கண்டுபிடித்தல் கருவி

ஒரு மூலக்கூறின் நிறையை கண்டு பிடிக்க அந்த மூலக்கூறு ஆவியாகும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். மூலக்கூறு வாயு வடிவில் இருத்தல் அவசியம்.

இப்போது அந்த மூலக்கூறு ஆவியாக்கப்பட்டு அடுத்த நிலை சென்று அடையும் போது எலக்ட்ரான்கள் மூலம் தாக்கப்பட்டு அந்த மூலக்கூறு நேர்தன்மை உடையதாக மாறும். அதுவே அந்த அணுவின் நிறை. M+1 சில வேளைகளில் +2 கூட மாறும்.

அதற்கு பின்னர் மேலும் பல பகுப்புகள் நடைபெறும். இவ்வாறு நடைபெறும் போது கிடைக்கப்பெறும் ஒவ்வொரு நிறைகள் கொண்டு மொத்த மூலக்கூறு எப்படி இருக்கும் என கணித்து விடலாம்.

இவ்வாறு பகுக்கப்பட்டு அவை எலக்ட்ரான் புலத்தினால் சிதறி அடிக்கப்படும், அப்படி வேகத்துடன் செல்லும் இவை காந்த புலத்தினால் சிறிய நிறை கொண்டது தள்ளி விலக்கப்பட்டும், பெரிய நிறை கொண்டது அருகில் விலக்கப்பட்டும் கண்டுபிடித்தல் கருவியை அடையும். அங்கே இதன் நிறை எல்லாம் கண்டு கொள்ளப்படும்.

இப்படித்தான் ஒரு மூலக்கூறின் நிறை கண்டு கொள்ளப்படுகிறது. ஒரே நிறை கொண்ட பல மூலக்கூறுகள் இருக்கும், இருப்பினும் இந்த முறைப்படி கிடைக்கும் வெவ்வேறு பகுப்புகளின் நிறைப்படி மூலக்கூறினை கண்டு கொள்ளலாம்.

தாலேட் இருந்த விசயம் தெரியாமல் போயிருந்தால் அன்று நான் செய்தது மிகவும் தவறாகவே முடிந்து இருக்கும்.

(தொடரும்)


No comments: