Monday 14 October 2013

பெண்ணியமும் கன்னியமும்

''என்னடா பண்ணிட்டு இருக்க, கடைக்கு போக சொன்னேன் மறந்துட்டியா?'' அம்மாவின் எச்சரிக்கை வார்த்தையில் புத்தகத்தில் இருந்து மீண்டேன்.

''பரீட்சை வருதுமா, அதான் படிச்சிட்டு இருக்கேன். நீ வாங்கிட்டு வாம்மா'' நான் சொன்னதை அம்மா கேட்கவில்லை

''கடைக்கு போய்ட்டு வந்து படி'' அம்மா சற்று குரலை உயர்த்தி சொன்னார்.

''தங்கச்சிய போக சொல்லுமா, அவ சும்மாதான இருக்கா'' நான் சொன்னதும் அம்மாவுக்கு கோவம் வந்துவிட்டது.

''இப்போதான் பெரிய மனுஷி ஆகி இருக்கா, அவளை எல்லாம் கடைக்கு அனுப்ப முடியாது, நீ போகப் போறியா இல்லையா'' அம்மாவின் அந்த வார்த்தை எனக்கு இடைஞ்சல் தந்தது. புத்தகத்தை தரையில் எறிந்துவிட்டு கிளம்பினேன்.

''என்ன வாங்கனும், சொல்லும்மா'' எனக்கும் கோவம் வந்து இருந்தது. அம்மா வாங்கி வர சொன்ன பொருட்கள் ஐந்துக்கு குறைவாகவே இருந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு விறுவிறுவென கடையை அடைந்தேன்.

''மாப்பிள்ளை, உன் தங்கச்சிய  எனக்கு கட்டி கொடுப்பியாளே'' என்றார் எனக்கு தெரிந்த வயது அதிகமான மாமா.

''கிழட்டு கிறுக்கனுக்கு புத்திய பாரு'' நான் கோவத்துடன் சொல்லி வைத்தேன்.

''என்ன மட்டு மருவாதி இல்லாம பேசற'' அவர் கையை ஓங்கி அடிக்க வந்தார். நானும் நேராக நின்றேன்.

''பொட்ட புள்ளை எல்லாம் படிச்சி என்ன செய்ய போகுது, பேசாம எனக்கு கட்டி கொடு மாப்பிள்ளை'' என்றார் ஓங்கிய கையுடன் கிண்டலாக.

''ஏன் உன் புள்ளைய படிக்க வைக்காம ஒரு தாத்தாவுக்கு கட்டி தர வேண்டிதான. உனக்கு என் தங்கச்சி இளக்காரமோ மூமா, பேசுறான் கிழட்டு கிறுக்கன்'' என கோவத்துடன் நான் சொல்லும்போதே என்னை அவர் சரமாரியாக அடித்தார். அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையை பதம் பார்த்தேன்.

அதற்குள் நாட்டாமை பண்ண சிலர் வந்துவிட்டார்கள். பெண்களை பற்றி கேவலமாக பேசுவதே இந்த கிழட்டு கிறுக்கனுக்கு பொழப்பு என சிலர் அவரை வசைபாடினார்கள். என்னை ஒதுங்கி போயிருக்கலாம்ல என்றார்கள். நானும் கடையில் பொருட்கள் வாங்கியபடி வீடு வந்து சேர்ந்தேன்.

''இவ்வளவு நேரமாடா, எவளோட பேசிட்டு இருந்த'' அம்மாவின் அந்த கூரிய வார்த்தைகள் என்னை மேலும் கோவம் அடைய செய்தன.

''சரசு வந்து இருந்தா, அவளோடதான் பேசிட்டு இருந்தேன். இப்போ என்ன அதுக்கு'' நான் சரசு எனும் பெண்ணை காதலிப்பது குறித்து அம்மாவுக்கு நிறைய கோபம்.

''உனக்கு சூடு வைச்சாதான் சரிப்படும்'' அம்மா சொல்லிவிட்டு போனார்.

''எதுக்கு இப்படி உட்கார்ந்துட்டு இருக்க, போய் விளையாடு, இல்லைனா படி'' நான் தங்கையிடம் சொல்லி வைத்தேன்.

''வெளில விளையாட போனா அம்மா திட்டும்'' பாவமாக சொன்னாள் தங்கை.

அடுத்த நாள் நான் கல்லூரி பேராசிரியர் ஒருவரை சந்திக்க சென்றேன். எனது வீட்டில் கடையில் நடந்ததை கூறி, எதற்கு இப்படி பெண்களை அடிமைபடுத்துகிறார்கள், பெண்களை தவறாகவே பேசுகிறார்கள் என கேட்டேன்.

''உன் அம்மாகிட்ட கேட்காம என்கிட்டே கேட்கிறே. பெண்களுக்கு பெண்களே எதிரி அப்படின்னு பெண்களே சொல்லிகிருவாங்க'' என்றார் பேராசிரியர்.

''இல்லை சார், பெண்கள் முழு வீச்சில் தங்களை அடிமை தனத்தில் இருந்து வெளியே கொண்டு வரனும். எல்லா துறைகளிலும் அவங்க சாதிக்கனும். பாரதி கண்ட புதுமைப் பெண் போல தீரமிக்கவர்களாக வரனும்'' நான் வீராவேசமாக பேசினேன்.

''பேசி முடிச்சிட்டியா?, கல்யாணம் பண்ணி பாரு. அப்புறம் யாரு அடிமைன்னு தெரியும்'' பேராசிரியரின் சொற்றொடர் எனக்கு புரியவில்லை. அவரிடம் சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு கல்லூரி தோழி எழிலரசியிடம் இந்த விசயத்தை பேசிவிட்டு வீடு வந்தேன்.

''எங்கடா போய்ட்டு வர, அந்த சரசு பைத்தியம் பிடிச்சி திரியற''' அம்மாவின் அர்த்தமற்ற கோபம் எனக்குள் கோபத்தை வரவழைத்தது.

''புரபொசர் பாக்கத்தான் போனேன்மா'' என சொல்லிவிட்டு கோபத்தை ஒரு அறையில் உட்கார்ந்து அழுகையாய் வெளிபடுத்தி கொண்டு இருந்தேன்.

''அழாதண்ணா, அம்மா எப்பவும் இப்படிதான். என்னை பூட்டி பூட்டி வைக்கிற மாதிரி உன்னை பூட்டி வைக்க முடியல, அதான் இப்படி பேசுது'' தங்கையின் ஆறுதல் வார்த்தை இதமாகவே இருந்தது.

சில மாதங்கள் பின்னர் சரசுவை பார்க்க சென்றேன். அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிவிட்டார்கள் என்றே சொன்னார்கள்.

''எப்படி உன்னால இப்படி அடங்கி செல்ல முடிகிறது'' என்றே அவளிடம் கேட்டு வைத்தேன். படங்களில் வரும் வசனம் போல் அம்மாவும் அப்பாவும் செத்து போவதாக சொன்னதாக சொன்னாள்.  நான் இனிமேல் கன்னிப் பையன் தான். எனக்கு என்று பேச எவனும் கொடி பிடிக்க மாட்டான். அவன் ஆம்பளைடா என்றே எனது வலியை துடைத்துவிட்டு போய் விடும் இந்த சமூகம். சோகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தேன்.

''சோனைமுத்து தூக்கில தொங்கிட்டான்டா' என சிலர் அலறிக் கொண்டு ஓடினார்கள். நானும் அங்கே ஓடினேன். அவருக்கு கல்யாணமாகி ஆறுமாதம் ஆகிறது. மனைவி இவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போனதாக பேசிக் கொண்டார்கள். அதே சோகத்தில் நான் வீடு வந்து சேர்ந்தேன்.

''எத்தனை தடவை சொல்றது, அந்த சரசு பின்னால போகாதேனு'' அம்மா சத்தம் போட்டு முடிக்கும் முன்னர் நான் சொன்னேன்.

''அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்கமா'' எனது வார்த்தை அவருக்கு அதிக சந்தோசம் தந்து இருக்கும்.

''இப்போதான்டா நிம்மதி'' அம்மா சொல்லிவிட்டு போனார்கள். அப்போது எனது கல்லூரி தோழி எழிலரசி வந்தாள்.

''இந்தா பெண்ணியம் புத்தகம், படி'' என அவள் தந்துவிட்டு போகும் முன்னர்

''எழில், நீயே எடுத்துட்டு போ. ஒரு பெண் தான் என்ன நினைக்கிறாளோ அதை எல்லாம் எவ்வித தடை இன்றி செய்ய வேண்டும், அப்படி செய்ய தடை விதிக்கப்பட்டால் அந்த பெண் அடிமைப்படுத்தபட்டவள். அந்த அடிமைத்தனத்தில் இருந்து அகல அந்த பெண் போராட வேண்டும், அதுதானே பெண்ணியம்'' நான் பேசியதை கேட்டு அவளது முகம் மாறியது.

''பெண்ணியம் அன்பின் வெளிப்பாடு. பெண்களை பற்றிய கண்ணோட்டம் சமூக அளவில் மிகவும் கீழாகவே இருக்கு. இந்த ஆண்கள் எல்லாம் ஒவ்வொரு பெண்ணின் பிண்டங்கள். பெண்களை அடக்கி ஒடுக்கி, கேலி பேசி, கிண்டல் செஞ்சி மூலையில உட்கார வைக்கிற காலம் இருந்தது என்னவோ உண்மை. அப்போ எல்லாம் பெண்ணை பாதுகாக்க வேணும் அப்படிங்கிற அக்கறை மட்டுமே இருந்தது. அந்த அக்கறை அடிமைத்தனத்தில் போய் முடியும்னு யாரும் எதிர்பார்க்கலை. பாலூட்டிகள் எல்லாத்துலயும் பெண் இனம் குழந்தை வளர்ப்புதான் முக்கியம்னு தோணிச்சி. தேனீக்கள் ஆணியம் பத்தி பேசறது இல்லை. அவங்க அவங்க முடிஞ்ச வேலை செஞ்சி வாழரதுல இருக்கு. பெண் சுதந்திரம் அப்படிங்கிறது பெண்ணியம் அப்படிங்கிறது பிறரால் ஒரு பெண்ணின் மனம், உடல் உபாதைக்கு உட்படாமல் வாழனும். பெண்களுக்கு என உரிமைகள்'' அவள் சொல்லி முடித்தாள்.

சில மாதங்கள் பின்னர் ஒரு நாள் கல்லூரியில் பேராசிரியரின் தலையில் பெரிய காயம் இருந்தது.

''என்ன சார்?'' என்றேன்.

''வீட்டில் பெண்ணியம்'' என்றே சிரித்துவிட்டு போனார்.

 நான் இன்னமும் கன்னிப்பையன் தான். சரசு இந்நேரம் உண்டாகி இருப்பாள். 

2 comments:

மகேந்திரன் said...

கண்ணியமான பெண்ணியம்....

Radhakrishnan said...

நன்றி ஐயா.