Monday 31 October 2011

கைரேகை காவியம் - 1

இது ஏமாற்று கலை அல்ல. இது ஒரு அற்புதமான விசயம். அறிவியல் சார்ந்ததாக இருக்கலாம்.  இந்த கை ரேகை எப்படி அமைகிறது, எப்படி மாறுகிறது போன்ற விசயங்களை அலசப் போகும் ஒரு தேடல். சிறு வயதில் இருந்தே சோதிடம், கை ரேகை போன்றவை மனதில் பெரிய கேள்விக்குறியை எழுப்பின. ஆவலுடன் பல புத்தகங்கள் படித்தேன். ஆனால் இவையெல்லாம் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த இந்த சோதிடம், கை ரேகை எல்லாம் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்தேன். அவ்வப்போது படித்து பார்க்க ஆர்வம் ஏற்படும்.  எத்தனையோ விசயங்கள் இருக்க இந்த கை ரேகை குறித்த சிந்தனை எழுந்த காரணம் எனது கல்லூரியில் பயிலும் ஒரு வெள்ளைக்கார பெண் தான். 

சமீபத்தில் வாழ்க்கையில் காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை. நல்லவனா, நமக்கு சரிபட்டு வருவானா என பழகி பின்னர் கல்யாணம் பண்ணுவது எல்லாம் அவசியமில்லாத ஒன்று. பழகும் வரை சரியாக இருந்துவிட்டு கல்யாணம் பண்ணிய பின்னர் அவனது நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் என்ன செய்வாய்? எனவே திருமணம் பண்ணிய பின்னர் எப்படி இருக்கிறார்களோ அதுபோல வாழ்க்கை மாற்றி அமைத்து கொண்டாலே போதுமானது என பேசிய விசயத்தை அப்படியே அவளது காதலனிடம் அவள் போய் சொல்ல அவனோ இவளிடம் இனிமேல் நமக்கு சரிபட்டு வராது, பிரிந்து விடுவோம் என கூறி இருக்கிறான். இவளோ விளையாட்டுக்கு சொல்கிறான் என நினைக்க அவன் உண்மையிலேயே பிரிந்து விடுவதாகவே கூறி இருக்கிறான். இந்த விசயத்தை என்னிடம் சொன்னபோது எனக்கோ பக் என்று இருந்தது. என்ன மனிதர்கள்? 

நல்லவேளை இப்பொழுதாவது சொன்னானே என மனதை தேற்றி கொண்டாள். வேறு சில காரணம் இருக்கும் என்றேன். இல்லை இல்லை ஒரு வருடம் எந்தவித பிரச்சினையும் இல்லை. நாளை மறுநாள் கூட ஒரு இடத்தில் சந்திப்பதாக இருந்தோம், ஆனால் இந்த விசயத்தை சொன்னதும் அவன் இவ்வாறு செய்துவிட்டான் என்றாள். ஆம் நான் பேசியது காதலை கொச்சைபடுத்தும் விசயம் தான். காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை என காதலர்களிடம் சொன்னால் அவர்களுக்கு எரிச்சல் வர வாய்ப்பு இருக்கிறது. நேசம் என்பது, காதல் என்பது புரிந்து கொள்ளும் என்றுதான் எனக்குள் ஒரு வரையறை வைத்து இருந்தேன். ஆனால் உலகில் வித்தியாசமான மனிதர்கள் இருப்பது ஆச்சர்யமான விசயம் இல்லை. அவளது கையை காட்ட சொன்னேன். காட்டினாள். அவளது கைகளில் காதல் ரேகை எனக்கு தெரியவில்லை. 

எனக்கு ஒரு மனைவி, ஒரு காதலி, அப்புறம் ஒரு காதலி என எனது கைகளில் இருந்த ரேகைகளை காட்டினேன். சிரித்தாள். இந்த கை ரேகை ஒரு சுவாரஸ்யமான விசயம். இப்படி அவளது கை ரேகையை பார்த்து கொண்டிருந்தபோது பலரும் வந்து கைகளை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். எனக்கோ ஒரு மாதிரியாகிப் போய்விட்டது. எனக்கு கை ரேகை எல்லாம் பார்க்க தெரியாது. எல்லாம் மறந்து போய்விட்டது. சில காலம் தாருங்கள், படித்துவிட்டு வருகிறேன். இதையெல்லாம் நம்ப கூடாது, ஆனால் சுவராஸ்யமாக இருக்கும் என சொல்லிவிட்டு இந்த கை ரேகை குறித்த ஆய்வில் இறங்கி விட்டேன். இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்ததும் அருகில் இருந்த எனது மனைவி அவளது கையை என்னிடம் காட்டினாள். கொஞ்சம் பொறுத்து கொள், சொல்கிறேன் என சமாளித்து இதோ எழுதி கொண்டிருக்கிறேன். 

இந்த கைரேகை குறித்து நான் ஒரு சிறுகதை எழுதினேன். அந்த சிறுகதை கைரேகை பற்றியது. எந்த காரணத்திற்கு அந்த கதையை எழுதினேன் என அந்த கதையிலேயே குறிப்பிட்டு இருந்து இருப்பேன். இந்த ஜோதிடம், கைரேகை, நாடி சோதிடம் எல்லாம் மக்களை ஒரு மயக்க நிலையில் வைத்திருப்பவை என்றாலும் இதன் மேல் அனைவருக்கும் ஒருவித நாட்டம் இருப்பது ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சில மனிதர்கள் முகத்தின் குறிப்பை அறிந்து அகத்தில் இருப்பதை சொல்லிவிடுவார்கள். அதுபோல மருத்துவர்களிடம் சென்றால் மருத்துவர் நமது கண்களில் ரத்தம் இருக்கிறதா, இல்லையா என்பதை வைத்து நமது நோயினை தீர்மானிப்பார். இந்த கையும் ரேகையும் அப்படித்தான். ஒரு கையானது எப்படி மடக்கப்படுகிறது, எப்படி உபயோகப்படுத்த படுகிறது என்பது பொறுத்து கையில் ரேகைகள் அமைந்துவிடும். 

இது மிகவும் உன்னதமான கலை. இந்த அற்புதமான கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் தாரளாமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் எனக்கு இப்படி இருக்கிறதே, அப்படி இருக்கிறதே என நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படுபவர்களாக இருந்தால் தயவு செய்து கைரேகையை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். 

இந்த கைரேகை குறித்து பல விசயங்கள் என்னை ஆச்சர்யம் அடைய செய்து இருக்கின்றன. பல வருடங்கள் முன்னர் மதுரை மீனாக்ஷி கோவில் ஒன்றில் அமர்ந்து இருந்த ஒருவர் எனது கைரேகையை பார்த்து நீ மீனம் ராசி என்றார். தவறாக சொல்கிறீர்கள், நான் மீன ராசி இல்லை என்றேன். அவர் கொஞ்சமும் சலனம் இல்லாமல் தம்பிக்கு கைரேகையில் நம்பிக்கை இல்லையோ என்றார். தவறுதனை தவறு என்றுதானே சொல்ல முடியும் என்றேன். ஆனால் அவர் நீங்கள் மீன ராசி தான், இந்த அம்மனுக்கு தெரியும் என்றார். ஆச்சர்யமாக போய்விட்டது. எங்கேனும் நான் ராசி சொல்லி அதை ஒட்டு கேட்டாரா என எனக்கு தெரியாது. ஆனால் கை ரேகை மூலம் எனது ராசியை மிக சரியாக கணித்த அந்த மனிதரை நான் தவறவிட்டு விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சில மனிதர்கள் அதிசயமானவர்கள். 

பார்மசி கல்லூரியின் விடுதியில் மாலை ஒன்றில் வெளியில் நண்பர்களோடு அமர்ந்து இருக்க எனது கையை பார்த்துவிட்டு கையை மூடிக்கொள் எவரிடமும் காட்டாதே என சாலமன் ரேகையை சொல்லி சென்ற ஒரு மனிதரை மனது இன்னமும் நினைத்து கொண்டுதானிருக்கிறது. இரண்டு கைகளையும் இணைத்து பார்த்துவிட்டு அழகான மனைவி அமைவாள் என்று ஒருவர் சொன்னது குறித்து இன்னமும் இரண்டு கைகளை அவ்வப்போது இணைத்து பார்த்து அழகு பார்ப்பேன். சில பல  ரேகை வளர்கிறதா, தேய்கிறதா என சோதனை செய்வேன். சனி மேடு, குறு மேடு என ஆயுள் ரேகை, புத்தி ரேகை என பல விசயங்கள் ஆச்சர்யம் பட செய்கின்றன. இவையெல்லாம் உழைக்கும் மனிதருக்கு பெரிய விசயமாக படுவதில்லை, நேரமும் இருப்பதில்லை. 

பெருவிரலில் இரண்டு ரேகைகள் இணைந்து ஒரு வளையம் போலிருந்தால் பணம் அதிகமிருக்கும் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் வந்த பணம் கரைந்தோடும் என சொல்வதும் சிரிப்பாக இருக்கும். அத்தனை ரகசியங்களை நமது உடலைமைப்பு வைத்திருப்பதை சாமுத்ரிகா லட்சணம் என பிரித்து வைத்தார்கள். பிறப்புறுப்புகள் கூட எப்படி எப்படி இருக்கும் எனவும் எப்படி பட்ட கனவானுக்கு எப்படிபட்ட மனைவி பொருத்தம் என்றெல்லாம் எப்படி சிந்தனை செய்தார்கள். ஆராய்ச்சி செய்து சொன்னார்களா? எத்தனை பேர் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டார்கள் என்பதெல்லாம் தேடலில் கிடைக்குமோ தெரியாது. 

ஆட்காட்டி விரலில் அமைந்திருக்கும் ரேகை அமைப்பானது ஒரு பெரிய விசயத்தை சொல்லும் என்கிறார்கள். அதைப்போல இந்த ரேகை அமைப்பு எவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்கிறார்கள். இதனால்தான் படிக்காத காலத்தில் கை ரேகையை நகல் எடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த கை ரேகைக்கும் மரபணுக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க கூடும் என்றால் இரட்டை குழந்தைகளின் ரேகைகளும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள். இது குறித்த ஆராய்ச்சி இன்னும் தேவை. 

ஆனால் இதை மட்டும் நம்பி அவரவர் வாழ்க்கையை தொலைத்தல் என்பது மிகவும் தவறு. எனவே இந்த கைரேகை, சோதிடம் எல்லாம் ஒரு குறியீடாக மட்டுமே வைத்துக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் சிறந்தது. 

(தொடரும்) 

2 comments:

G.M Balasubramaniam said...

அனுமானங்கள் என்ற என் பதிவைப் படித்துப் பாருங்களேன். YOU MAY LIKE IT.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. நிச்சயம் படித்து கருத்திடுகிறேன்.