Tuesday 9 November 2010

கம்யூனிசமும் கருவாடும் - 6

கம்யூனிசமும் கருவாடும் 1

கம்யூனிசமும் கருவாடும் 2

கம்யூனிசமும் கருவாடும் 3

கம்யூனிசமும் கருவாடும் 4

கம்யூனிசமும் கருவாடும் 5

ஜெர்மன் மொழி கற்று கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் உண்டு. ஜெர்மன் மொழியில் பல விசேசங்கள் உண்டு என எனது கற்பனை அவ்வப்போது சொல்லிக்கொள்ளும். இப்படி ஒன்றை குறித்த கற்பனையானது உண்மைதனை ஒழித்துவிடும் அளவுக்கு வீரியம் மிக்கது என்பதை எவர் அறிவர்? ஆனால் கற்பனைகளில் உலகம் சஞ்சாரம் செய்வது உலகம் தோன்றிய முதல் நாளில் இருந்து இருந்து கொண்டே இருக்கிறது. உண்மை என ஒரு விசயம் குறிப்பிடப்பட்டாலும் கற்பனை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கம்யூனிசம் சித்தாந்தம் முதலில் ஜெர்மன் மொழியில் தான் வெளியிடப்பட்டது. மொழி பெயர்ப்பு என வரும்போது மூல நூலின் ஜீவன் தொலைந்து விடுவதாகவே கருதுவேன். இதன் காரணமாக மொழி பெயர்ப்பு நூல்களை படிக்கும் போது அத்தனை சுவாரஸ்யம் என்னிடம் இருப்பதில்லை. மேலும் ஒரு விசயத்தை அப்படியே மொழி பெயர்ப்பதை காட்டிலும் சொல்லப்பட்ட விசயத்தை புரிந்து கொண்டு அவரவர் சிந்தனையின் பொருட்டு எழுதும் விசயங்கள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை இந்த கம்யூனிச சித்தாந்தத்தில் கைகொள்வது சரியாகுமா என தெரியாது எனினும் மொழிபெயர்ப்பு என்கிற அஸ்திரத்தின் மூலம் மார்க்சும், இங்கெல்சும் என்ன சொல்ல வந்தார்கள் என்பதை திரித்து விடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருக்கிறது. ஏதேனும் இந்த கட்டுரையில் தவறு நீங்கள் கண்டால் அது எனது தவறுதானே அன்றி நிச்சயம் மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் அவர்களின் தவறு அல்ல என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறேன்.

முகவுரை

பொதுவாகவே முகவுரை எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் சொல்ல வரும் விசயத்தின் முழு சாராம்சத்தையும் சில வரிகளில் சொல்லி முடித்து விட வேண்டும். இப்படிப்பட்ட கட்டுப்பாடு தேவையில்லை எனினும் முகவுரை ஒரு குறிக்கோளினை தெள்ள தெளிவாக புரியும் வண்ணம் அமைந்துவிடுதல் மிகவும் சிறப்பு. அப்படித்தான் இங்க்கேல்சும், மார்க்சும் தொடங்கி வைத்து இருக்கிறார்கள்.

'ஒரு பூதம் மொத்த ஐரோப்பாவையும் பயமுறுத்தி கொண்டிருக்கிறது. அது கம்யூனிசம் எனும் பூதம். இந்த பூதத்தை முறியடித்து விட பழைய ஐரோப்பா மொத்த சக்திகளை தெய்வீக உடன்பாடு என சேர்ந்துள்ளது. அவை போப், ட்சார் , மேட்டேர்நிச், கிசாட், பிரான்சு பழமைவாதிகள், ஜெர்மன் காவல் மற்றும் உளவாளிகள்.'


பதவியில் இருக்க கூடியவர்கள் அவர்களுக்கு எதிர் அணியில் இருப்பவர்களை கம்யூனிஸ்ட்கள் என குற்றம் சுமத்தாமல் இருப்பது எதற்கு? கம்யூனிஸ்ட்கள் குற்றவாளிகள் என சொல்வதையும், கம்யூனிஸ்ட்களின் எதிரிகளை எதிர்க்கும் நிலை எதிர் அணியில் இல்லாமலிருப்பது எதற்கு?.


இந்த விசயங்களிலிருந்து , இரண்டு விசயங்கள் புலப்படுகிறது


1. கம்யூனிசம் ஒரு சக்தி என்பதை அனைத்து ஐரோப்பிய சக்திகளும் அங்கீகரித்து உள்ளது 


2. கம்யூனிஸ்ட்கள் தங்களது எண்ணங்களை, குறிக்கோளினை, செயல்பாடுகளை உலகின் கவனத்திற்கு கொண்டு வருவது இதுதான் சிறந்த நேரம். சின்னஞ்சிறு கதை கொண்ட கம்யூனிச பூதத்தின் சித்தாந்தம் அந்த அமைப்பு பற்றி சந்திக்கும் தருணம் இது' 


 யார் இந்த ட்சார், மேட்டேர்நிச்,  கிசாட் .

 ட்சார் எனப்படுவர் கிறிஸ்துவம் அல்லாத ஆளுமைவாதிகள். இவர்கள் பல்கேரியா, போலந்து, ரஷ்யா, செர்பியா போன்ற நாடுகளில் அரசு அமைத்து கொண்டு ராஜ பரம்பரையாக வாழ்பவர்கள். இவர்கள் கம்யூனிசத்துக்கு கட்டாயம் எதிரியாகத்தானே இருக்க இயலும்! இந்த வார்த்தை கூட சீசர் எனப்படும் பேரரசர் பெயரிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மேட்டேர்நிச் என்பவர் ஆஸ்திரியாவில் வாழ்ந்த ஒரு அரசர். அவர் ஒரு ராஜதந்திரி என அழைக்கப்பட்டவர். நெப்போலியனுடன் இணக்கம் கொண்டிருந்தவர். இவர் கம்யூனிசத்துக்கு எதிரானவர் என குறிப்பிட காரணம் இவரின் ராஜ தந்திர செயல்கள். ஆனால் இந்த கம்யூனிச சித்தாந்தம் வெளியிடப்பட்ட ஆண்டு ஆஸ்திரிய போராளிகளால் அரசவையினை துறக்க வேண்டி வந்தது.

கிசாட் பிரான்சு நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தவர். மிகவும் திறமை வாயந்தவர் எனினும் இவரது செயல்பாடுகள் மக்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி இருந்தது.

இந்த முகவுரையில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது என்னவெனில் அரச பரம்பரை மற்றும் தனி மனித ஆட்சி என்பது முற்றிலும் ஒழித்திட கம்யூனிசம் வழி செய்யும் என்பதுதான்.

ஆனால் நடந்தது என்ன? கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடத்தினார்கள்  ஸ்டாலின் மற்றும் மாவோ ஜேடாங் போன்ற மாபெரும் தலைவர்கள் என போற்றப்படுபவர்கள். ஸ்டாலின் என்பவரால் கம்யூனிசம் நிச்சயமாக ஒரு பெரும் சக்தி என நினைத்து கொண்டிருந்தோருக்கு அவரது அடக்குமுறை செயல்பாட்டினை அப்படியே செயல்படுத்துவது என்பது குதிரை கொம்பாகத்தான் இருந்தது. ஸ்டாலின் இல்லையென்றால் ரஷ்யா சின்னாபின்னமாகி என்றோ போயிருக்கும் என்போர் உளர்.

உணவுக்கே தட்டழியும் மனிதர்களிடம் உணவுக்கு வழி செய்ய காட்டப்படும் வழிகள் எதுவாக இருப்பினும் ஏற்றுக்கொண்டு செய்வார்கள். அடிமைகளாக வாழ பழகி கொண்ட மக்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் அன்றைய ரஷ்யா இருந்தது. அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்டாலின். மாபெரும் வெற்றி பெற்ற ஸ்டாலினை பார்த்து சூடு போட்ட நாடுகள் பல உண்டு. ஆனால் என்னவொரு துரதிர்ஷ்டம், தழும்புகள் மட்டுமே பிறநாடுகளுக்கு மிச்சம். அந்த தழும்பு இப்போது ரஷ்யாவுக்கும் சொந்தம் எனும்போது வருத்தம் மேலிடத்தான் செய்கிறது.

அடுத்து முதல் அத்தியாயம் தொழிலாளிகளும், முதலாளிகளும்.  மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் எதற்கு அவசியம் என்பதற்கான விசயங்களை அலசி ஆராய்ந்த பின்னர் எழுதியதாக இருக்கும். கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படை விசயமாகவே இந்த அத்தியாயம் பார்க்கப்படுகிறது.

(தொடரும்)

5 comments:

Chitra said...

very interesting!

தமிழ் உதயம் said...

ரஷ்யாவின் அன்றைய சூழலுக்கு கம்யூனிசம் தேவைப்பட்டிருக்கலாம். அதனால் மக்கள் ஆதரித்திருக்கலாம். மக்கள் அந்த இரும்புதிரையை விலக்க எத்தனித்த போது, ஆட்சியாளர்கள் சர்வாதிகாரகளாக மாறி, நோயின் அடிப்படையை உணராமல் முரட்டு வைத்தியம் பார்த்ததால் தழும்பை பார்க்க வேண்டிய சூழல் வந்திருக்கலாம்.

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா.

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா. ஆனால் ரஷ்யாவில் நடந்தது கம்யூனிசம் அல்ல என்பதை தெரிந்து கொள்ள அந்த மக்களுக்கோ, உலகத்துக்கோ வாய்ப்பு இருக்க போவதில்லை. காலங்களினால் ரஷ்யா பெருமளவு மாறிவிட்டது.

suneel krishnan said...

பழைய சுட்டிகளை அளித்தமைக்கு மிக்க நன்றி சார் .ஸ்டாலின் அவர்கள் கம்யுனிசத்தை பயன் படுத்திய ஒரு முதலாளி என்று எண்ணம் தோன்றுகிறது .மேலும் கம்யுனிசத்தின் நடைமுறை சாத்தியங்களை சிரமங்களை பற்றி சிந்திக்க வைத்தவர் ஸ்டாலின் அவ்வகையில் அவர் மிக முக்கியமானவர்

Radhakrishnan said...

ஸ்டாலின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் தான். மிக்க நன்றி டாக்டர் சுனில் கிருஷ்ணன்.