Wednesday 17 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 32


கதிரேசன் அடுத்தநாள் காலையில் அவசரம் அவசரமாக கிளம்பினான். மதியம் வீடு திரும்புவதாக ஈஸ்வரியிடம் கூறிவிட்டு வைஷ்ணவியைச் சந்திக்கச் சென்றான். வைஷ்ணவி கதிரேசனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். 


''என்ன விசயமா பேசனும், சொல்லு'' என்றான் கதிரேசன். 


''நேத்து ஈஸ்வரிகிட்ட பேசினப்ப அவகிட்ட ஒருவித பயம் தெரிஞ்சது. நீ அவளை விட்டுட்டுப் போயிருவனு நினைக்க ஆரம்பிச்சிட்டா. அதனால அவளுக்குனு ஒரு குழந்தைப் பொறந்துட்டா அந்த பிடிமானத்தோட நீயும் கூடவே இருப்பனு நினைக்கிறா. நீ கொஞ்சம் உன்னோட சிவன் பக்தியை தள்ளி வைக்கக் கூடாதா'' என்றாள் வைஷ்ணவி.


''நம்மைப் பத்தி நாம பிறருக்கு விளக்கம் சொல்லிக்கிட்டிருக்கத் தேவையில்லை. நம்மளைப் புரிஞ்சவங்களுக்கு விளக்கம் அவசியமில்லை, நம்மளைப் புரியாதவங்களுக்கு நாம சொல்றது நம்பும்படியா இருக்கப் போறதில்லை, சிவன் பக்தியை தள்ளி வைக்கச் சொல்றதைத்தான் முக்கியமான விசயம்னு ஈஸ்வரிகிட்ட சொன்னியா?'' என்றான் கதிரேசன். 


''இல்லை, மதுசூதனன் பத்தி பேசனும், ஆனா அதுக்கு முன்னால இந்த விசயத்தையும் பேசலாம்னு நினைச்சேன். நீ ஈஸ்வரியை விட்டு பிரியமாட்டியில்ல'' என்றாள் வைஷ்ணவி. ''என்ன பேச்சு இது, பிரிஞ்சிப் போறதுக்கா அவளைக் கல்யாணம் பண்ணினேன், ஏன் இப்படி ஒரு நினைப்பு வருது உங்க இரண்டு பேருக்கும். அவளையும் பிரியமாட்டேன், உன்னையும் பிரியமாட்டேன்'' என்றான் கதிரேசன். 


''பட்டினத்தார், அருணகிரிநாதர், திருநீலகண்டர், திருஞானசம்பந்தர்னு ஏதேதோ பேசுறா ஈஸ்வரி'' என்றாள் வைஷ்ணவி. ''அவ படிச்சது அப்படி, அவ என்னைவிட்டுப் பிரியாம இருந்தாலே போதும்'' என்றான் கதிரேசன். மதுசூதனன் பற்றி கேட்டான்.  தனது செயல்களே ஈஸ்வரியின் இந்த மனநிலைக்கு காரணம் என அறிந்து கொண்டான். அவள் தன்னிடம் சொல்ல இயலாமல் தவிப்பதை நினைக்கும்போது கதிரேசனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. 


மதுசூதனன் திருமணம் சில பிரச்சினைகளால் தடைப்பட்டுப் போனதாகவும், அவனது செய்கையால் அவனது பெற்றோர்கள் பெரும் அவமானத்துக்கு உள்ளானார்கள் என அறிந்து கொண்டதாக கூறியவள், அவனுக்கு ஏதேனும் வகையில் உதவி செய்ய வேண்டும் என கதிரேசனிடம் கூறினாள் வைஷ்ணவி. அதைக் கேட்ட கதிரேசன் ''இதெல்லாம் எப்பொழுது நடந்தது, எப்படி இவ்விசயம் தெரிய வந்தது, இன்னும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா, மிகவும் தெளிவானவளாக அல்லவா நீ இருந்தாய் ஏன் மனம் இப்படி அலைபாய்கிறது'' எனக் கேட்டான் கதிரேசன். 


''நீ மட்டும் ஈஸ்வரியை திருமணம் செய்துகிட்டு  இன்னமும் சிவனையே நினைச்சிட்டு இருக்கலையா? '' என்றாள் வைஷ்ணவி. ''அது வேற   , இது வேற. இந்நேரம் அவன் திருமணம் செஞ்சி இருந்தா என்ன செய்து இருப்ப?'' என்றான் கதிரேசன். ''நினைப்பு இருந்திருக்கும்'' என்றாள் வைஷ்ணவி. ''தெளிவா பேசிய நீயா இப்படி குழம்புறது, உனக்கு தகவல் சொன்னது யார்?'' எனக்கேட்டான் மீண்டும். ''மதுசூதனனின் நண்பன்தான் பேசினான்'' என்றாள் வைஷ்ணவி. ''நீ அவனை மறக்க மாட்டாயா?'' என்றான் கதிரேசன். ''நீ சிவனை மறக்கமாட்டாயா?'' என்றாள் வைஷ்ணவி. ''நீ விசயம் கேள்விபட்டதும் அவன்கிட்ட நேரடியா பேசியிருக்கனும்'' என்றான் கதிரேசன். ''முயற்சி பண்ணினேன், ஆனா அவன் எடுக்கலை'' என்றாள் வைஷ்ணவி. 


''கொஞ்சம் இரு'' என சொல்லிவிட்டு மதுசூதனனுக்கு உடனே அழைப்பு விடுத்தான் கதிரேசன். எதிர்முனையில் ஒரு பெண் குரல் கேட்டது. ''யார் பேசறது'' என்றது குரல். ''கதிரேசன் பேசறேன், மதுசூதனனோட நண்பன், இது மதுசூதனனோட நம்பர் தானே, நீங்க யாரு'' என்றான் கதிரேசன். ''அவர் வெளியேப் போயிருக்கார், இப்ப வந்துருவார், நான் அவரோட மனைவி பேசறேன், வந்ததும் சொல்றேன்'' என இணைப்பைத் துண்டித்தாள். கதிரேசன் மிகவும் கோபமானான். ''வைஷ்ணவி அவன் உன்னோட வாழ்க்கையில விளையாடறான், நீ இப்படி ஏமாளியா இருக்காதே. அவன் கல்யாணம் எல்லாம் நல்லாவே நடந்துருச்சி''. 


சிறிது நேரத்தில் கதிரேசனை அழைத்தான் மதுசூதனன். ''எதுக்குடா போன் பண்ணின, என் கல்யாணம் நின்னுப்போச்சுனு கேள்விப்பட்டு என்னை அவளோட சேர்த்து வைக்க முயற்சி பண்றியா. அவளோட கல்யாணம் தான் இனிமே ஒவ்வொருதடவையும் நிற்கும். நீ அவளை ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் உண்டு. அவளைப் புரிஞ்சிக்கிட்ட சிவனாச்சே நீ'' என சொல்லி பயங்கரமாக சிரித்தான் மதுசூதனன். கதிரேசன் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. ''நீ தானே அவளை வேணாம்னு ஒதுக்கின, இப்போ ஏன் அவளுக்கு தொந்தரவு தர. இப்ப கூட உனக்கு உதவனும்னு நினைக்கிறா, அவகிட்ட பேசு'' என்றான் கதிரேசன். 


''உங்ககிட்ட எனக்கு என்னடாப் பேச்சு, வடிகட்டின முட்டாள்டா நீ'' என சொல்லிவிட்டு வைத்தான் மதுசூதனன். கதிரேசனுக்கு கோபம் அதிகமானது. வைஷ்ணவி கதிரேசன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். கதிரேசன் ஆறுதல் சொன்னான். ''நீ கவலைப்படாதே, நாங்க எல்லாம் இருக்கோம்'' என வைஷ்ணவியை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்தான். கதிரேசன் பூஜை அறைக்குள் நுழைந்தான்.


''காதலில் கேடும் உளதோ கண்டறியேன் பெருமானே
காதலும் காத்தே நிற்கும் உண்மையோ
ஒருமுறை காதல் வயப்பட்டுப் போய்விடின் மறந்தே
மறுமுறை காதல்வருமோ சொல்சிவனே''


(தொடரும்)

No comments: