Wednesday 3 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 31


ஈஸ்வரி வேகமாக வந்தாள். 'என்ன விசயம்?' எனக் கேட்டாள். கதிரேசன் சுருக்கமாக சில வரிகளில் சொன்னான். 'சரி நான் பார்த்துக்கிறேன்' என சொன்னாள் ஈஸ்வரி. பெண்ணின் மனதை ஒரு பெண்ணே அறிவாள் என நினைத்தான் போலும் கதிரேசன்.

ஈஸ்வரி வைஷ்ணவிக்கு ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது வைஷ்ணவி ''நான் ரொம்பத் தெளிவாத்தான் இருந்தேன், ஆனா இழப்புனு வரப்போ தாங்கிக்க முடியலை, இன்ன காரணத்துக்குனு ஒருத்தரை ஒதுக்க முடியாதில்லையா?'' என வைஷ்ணவி கூறினாள். ''ம், சட்டுனு எதையும் செஞ்சிரமுடியாது, ஆனா இப்போ நிலமை கைக்கு மீறிப் போயிருச்சி அதனால அவனை இனிமே நினைச்சிட்டு இருக்கிறதுல்ல அர்த்தமில்லை'' என்றாள் ஈஸ்வரி. ''ம்'' எனக் கேட்டுக் கொண்டாள் வைஷ்ணவி. ஈஸ்வரியே தொடர்ந்தாள்.

''எப்பவுமே நமக்கு இருக்கிறது மேல அக்கறையே இருக்காது, இல்லாதது மேலதான் அக்கறையே இருக்கும், இருக்கிறதை நல்லா வைச்சிக்கத் தெரியாது, இல்லாததை பத்தியே யோசிச்சி காலம் போகும், அப்புறம் நாள் போனப்பறம் தான் தெரியும் இருக்கிறதை ஒழுங்காப் பாதுகாக்காம விட்டதால இருக்கிறதும் இல்லாமப் போயிரும்'' என மெதுவாக நிறுத்திச் சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசனின் காதிலும் அது விழுந்தது.

''எனக்கு அவனுக்கு கல்யாணம் நிச்சயம்னு சொன்னதும் மனசு கொஞ்சம் தளர்ந்திருச்சி, என்னை வெறுப்பேத்தத்தான் இந்த தகவலையே ஃபோன் பண்ணிச் சொல்றேன், கல்யாணத்துக்கெல்லாம் வந்துராதேனு சொல்லிட்டு ஃபோனை வைச்சிட்டான், அதுதான் கதிரேசன் கிட்ட சொல்லலாம்னு நேரில வந்தேன்'' என்றாள் வைஷ்ணவி. ''நீயும் ஃபோன் பண்ணி ஒருத்தனை காதலிக்கிறேனு சொல்லு, அதுவும் இப்பவே. உன்னால முடியலைன்னா என்கிட்ட கொடு நான் சொல்றேன் அவனுக்கு'' என்றாள் ஈஸ்வரி.

''சே சே வேண்டாம்'' என்றாள் வைஷ்ணவி. ''உயிருக்குயிரா காதலிச்ச ஒருத்தரை எப்படி லேசா தூக்கிப் போட முடியும்?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''நம்ம காதலே, காதல்னு இல்லைனு சொல்லிட்டுப் போறவனுக்கு, நம்ம காதல் இருக்குனு வாழறது கோழைத்தனம்'' என சொன்ன வைஷ்ணவியின் கண்கள் தெளிவாக பிரகாசித்தது.

''வழி தேடிக்கிற சக்தி உள்ளவங்களுக்கு வலி எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, ரொம்பப் பிடிச்சிருக்கு உங்களை, நான் கூட நீங்க மனசு வெறுத்துட்டீங்களோனு நினைச்சேன், சீக்கிரம் ஒரு பையனைப் பார்த்துருவோம்'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்கும் தான் உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு, ம் பையனா? சரி'' என்றாள் வைஷ்ணவி.

கதிரேசன் அங்கே காபியுடன் வந்தான். ''என்ன வைஷ்ணவி, என்ன முடிவு பண்ணியிருக்க?'' எனக் கேட்டான் கதிரேசன். ''உங்களை மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம்'' என்றாள் ஈஸ்வரி. ''நல்ல முடிவு தான'' என்றான் கதிரேசன். ''பையன் கிடைக்கனுமே'' என்றாள் ஈஸ்வரி. ''ஏன் உன் அண்ணன் சங்கரன் இல்லையா?'' என்றான் கதிரேசன். வைஷ்ணவி புன்னகைத்தாள். ''கொஞ்சம் நாள் ஆகட்டும், இப்ப எல்லாம் எதுவும் வேண்டாம்'' என சொன்னாள் வைஷ்ணவி.

இத்தனை நாட்களில் ஈஸ்வரிக்கு மிகவும் நெருங்கிய தோழியாகிப் போனாள் வைஷ்ணவி. தினமும் மாலையில், வார விடுமுறையில் கதிரேசனின் வீட்டுக்குத் தவறாமல் வந்துவிடுவாள் வைஷ்ணவி. ஈஸ்வரியுடன் சில மணி நேரங்கள் பேசிவிட்டுச் செல்வாள். மாதங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ''எப்போ குழந்தை?'' எனக் கேட்டாள் வைஷ்ணவி. ''சிவன் மனசு வைக்கனுமே'' எனச் சிரித்தாள் ஈஸ்வரி. ''சிவன்?'' என வினாவுடன் பார்த்தாள் வைஷ்ணவி.  ''கொஞ்ச நாள் ஆகட்டும்'' என்றாள் ஈஸ்வரி. ''கதிரேசன் இன்னும் அப்படித்தான் இருக்கானா?'' எனக் கேட்டாள் வைஷ்ணவி.

வைஷ்ணவியின் கேள்வியை ஈஸ்வரி எதிர்பார்க்கவில்லை. ''என்ன அர்த்தம்?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''உடல் தொடுறது கள்ளம்னு நினைச்சான், காதல் இல்லைனு சொன்னான்'' என ஈஸ்வரியினைப் பார்த்தாள் வைஷ்ணவி. ''நீயும் அவரும் நெருக்கமா?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''ம் எனக்கு கதிரேசன்கிட்ட பேசறது ரொம்பப் பிடிக்கும், என்கிட்ட எல்லா விசயமும் பேசுவான் அப்போதான் உன்னைப் பத்தியும் சொன்னான், நான் கூட அறிவுரை சொன்னேன், கல்யாணத்துக்கப்பறம் என்கிட்ட முன்னைப் போல பேசறதில்லை, எப்பவும் ரொம்ப பிஸியாவே இருக்கான்'' என்றாள் வைஷ்ணவி. ''ம்ம் கதிரேசன் மாதிரி ஒருத்தர் உனக்கு கணவனா வாய்ச்சா என்ன பண்ணி இருப்ப?'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. ''தெரியலை, அந்த சூழ்நிலையில எப்படி இருந்திருப்பேனோ, ஒருவேளை உன்னை மாதிரியே சந்தோசமாவே இருந்திருப்பேனோ என்னவோ?'' என பதில் சொன்னாள் வைஷ்ணவி.

''ஆமாம் எனக்கு முதல் ஒரு வாரம் என்ன இது அப்படினு இருந்திச்சி, ஆனா அதுக்கப்புறம் எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லாமப் போக ஆரம்பிச்சிருச்சி. ரொம்பவே சந்தோசமா இருக்கேன். வீட்டுல கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! கல்யாணம் பண்ணினா உடனே குழந்தை அப்படிங்கிற மனசுதான் எல்லோருக்கும், இல்லைன்னா புழுப் பூச்சி இல்லைன்னு பேசிருவாங்க'' என்றாள் ஈஸ்வரி. ''ஆச்சரியமா இருக்கு?'' என்றாள் வைஷ்ணவி. ''எதையும் ஏத்துக்கிறப் பக்குவம் வேணும், கிடைச்சா சரினும், கிடைக்கலைன்னா சரின்னும் இருந்தா இருக்கிறது எப்பவுமே இல்லாமப் போகாது'' என ஈஸ்வரி சொன்ன வேளையில் கதிரேசன் வீட்டினுள் நுழைந்தான். வைஷ்ணவி சில நிமிடங்களில் விடைபெற்றுச் சென்றாள்.

நாட்கள் நகரத் தொடங்கியது. வைஷ்ணவியின் வருகையும், அவளது பேச்சும் ஈஸ்வரியை வெகுவாகவே கவர்ந்தது.

கதிரேசன் அலுவலகத்தில் வீட்டிற்கு கிளம்பும் முன்னர் வழக்கம் போல ஒரு அறையில் தியானத்தில் அமர்ந்தான். சிவன் வழக்கம்போல மனதில் வட்டமிட்டார்.

வீட்டிற்கு வந்தான். ''வைஷ்ணவி வந்திருந்தா, உன்கிட்ட முக்கியமாப் பேசனுமாம்'' என்றாள் ஈஸ்வரி. ''ம்'' என சொல்லிவிட்டு வைஷ்ணவியைத் தொடர்பு கொண்டான் கதிரேசன். ''எப்போ ஃபிரீயா இருப்ப, உன்கிட்ட நேரில பேசனும்'' என்றாள் வைஷ்ணவி. ''நாளைக்கு வா'' என்றான் கதிரேசன்.

(தொடரும்)

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Radhakrishnan said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி சங்கவி.