Wednesday 10 November 2010

நுனிப்புல் பாகம் 2 நிறைவு பகுதி.

27. கனியும் குழந்தையும்

பாரதியின் அழுகைக்கு அர்த்தம் தெரியாமலேதான் இருந்தது. வாசனும் மாதவியும் பாரதியினை சமாதனப்படுத்தினார்கள். நாச்சியார் பாரதியினை அமரச் சொன்னார். மாதவி வாசனிடம் நாம் ஊரைச் சென்று பார்த்து வரலாம் என அழைத்தாள். வாசன் பாரதியை அங்கே தனியாக விட்டுச்செல்ல மனமில்லாமல் பாரதியையும் அழைத்தான். ஆனால் பாரதி தான் இங்கேயே இருப்பதாக கூறி அமர்ந்துவிட்டாள். 

இருவரும் சாத்திரம்பட்டியின் தெருக்களில் நடக்க ஆரம்பித்தார்கள். மிகவும் குறைந்தபட்ச வீடுகளே இருந்தன. தெருக்கள் மிகவும் சுத்தமாக இருந்தது. கிராமத்துக்கென ஒரே ஒரு கோவில் மட்டுமே இருந்தது. அந்த கோவிலுக்கு வைகுண்டநாதர் திருக்கோவில் என பெயரிட்டு இருந்தார்கள். ஊரைச் சுற்றி பெரிய வேலி அமைத்து இருந்தார்கள். வழியில் சென்றவர்கள் இவர்களைப் பார்த்து வெளியூரா எனக் கேட்டுவிட்டு பேசாமல் சென்றுவிட்டார்கள். மந்தையில் இப்போது இவர்களை வரவேற்ற ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. 

அவரிடம் வாசன் 'இந்த ஊருக்குப் பஸ் எல்லாம் வராதா' என்றான். 'பஸ் எல்லாம் எதுக்கு, நீங்க எப்படி வந்தீங்க' என்றார். 'ஊரில ரொம்ப பேரு இல்லையே' என்றான். 'தோட்டம் காடுகளில இருப்பாங்க' என்றார். 'படிக்கிறதுக்கு ஸ்கூல்' எனக் கேட்டபோது 'படிச்சி என்னத்த சாதிச்சிட்டீங்க, சம்பாத்தியத்தைப் பெரிசா நினைச்சி சாத்திரத்தை, கட்டுப்பாட்டை, ஒற்றுமையை, அன்பை தூக்கிப் போட்டுட்டீங்க' என்றார். 

'
வெளியூருக்கு எல்லாம் போய் வேலைப் பார்க்கமாட்டாங்களா?' என்றான் வாசன். 'வெளியூர் போனா இரண்டு மூணு நாளுல திரும்பனும் இல்லைன்னா போனதோட அப்படியே இருக்கனும். திரும்பி வந்தா விரட்டி விட்டுருவோம். இந்த மண்ணு காப்பாத்தாதுனு போனவங்கதானே அப்படியே போகட்டும்!' என்றார். 'கல்யாணம் பண்ணிட்டுப் போறவங்க' என்றான் வாசன். 'அவங்க வரலாம், போகலாம்!' என்றவரிடம் இவ்வளவு கட்டுப்பாடா? என்றான் வாசன். 'நிறையவே கட்டுப்பாடு இருக்கு' என்றார். 'ம்ம் நீங்க இந்த ஊர்த்தலைவரா' என்றான். 'நான் ஊர்க்காவல் காரன். ஊர்த்தலைவரைப் பாருங்க உங்களுக்கு இன்னும் சிலது சொல்வாரு, அதை நான் சொல்லக்கூடாது, அவர் நான் எதுவும் சொன்னேனா எனக் கேட்டா நான் என்ன சொன்னேனோ அதை மட்டும் சொல்லுங்க' என்றார். மாதவி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள் 'யாரும் தட்டிக்கேட்கறது இல்லையா' என்றார். 'தட்டி வைச்சிருவோம்' என்றார் அவர். 

கிராமத்தலைவர் கோதண்டராமன் வீட்டினைக் காட்டிவிட்டு சென்று விட்டார். கோதண்டராமனுக்கு வயது அறுபது இருக்கும். இந்த இருவரையும் பார்த்து 'உங்களை மாதிரி இந்த ஊரில யாராவது சேர்ந்து திரிஞ்சா அடுத்த நிமிசமே ஊரைவிட்டு விரட்டிருவோம்' என்றார். வாசன் அதற்கு 'இவள் என் தாய்மாமன் மகள்' என்றான். 'யாரா இருந்தா என்ன, இந்த ஊருக்குக் கட்டுப்பாடுனு ஒண்ணு இருக்கு. நீங்க இங்க தங்குறமாதிரி இருந்தா இப்பவே சொல்லிருரேன் பொழுது சாயுறதுக்குள்ள ஊரைக் காலி பண்ணுங்க' என்றார். 

பெருமாள் தாத்தாவின் முப்பாட்டன்கள் பற்றி வாசன் சொன்னான். 'அதான் அவர் இங்கே வந்திருந்தாரே, இங்கே தங்கவிடாம விரட்டி அடிச்சிட்டோமே' என்றார். மாதவி குறுக்கிட்டு 'அவராத்தான் போயிருக்கார்' என்றாள். மாதவியை கோதண்டராமன் முறைத்தார். தனக்கு வேலை இருக்கிறது என கிளம்பினார்.

நாச்சியார் வீட்டிற்கு வந்தார்கள். 'வாங்கப்பா சாப்பிட போகலாம்' என நாச்சியார் மூவரையும் அழைத்துக்கொண்டு அச்சுதன் வீட்டிற்குச் சென்றார். அச்சுதன் அமைதியாகவே இருந்தார். மூவரும் சாப்பிட்டுவிட்டு அனந்தன் வீட்டிற்குச் சென்றார்கள். 'திருமால் இனி ஊருக்குள்ளேயே வரமுடியாதா' என்றான் வாசன். 'யார் என்ன சொன்னாங்க' என்றார் அனந்தன். வாசன் சொன்னதைக் கேட்டு அனந்தன் சிரித்தார். 'திருமால் வரலாம் போகலாம்' என்றார். 'இந்த ஊர் ரொம்ப வித்தியாசமா இருக்கு' என்றான் வாசன். 'பழைய விசயங்களிலே ஊறிப்போனவங்க மட்டும்தான் இங்கே இருக்க முடியும். ரொம்ப பேரு ஊரைவிட்டுப் போயிட்டாங்க, கொஞ்ச குடும்பங்கள்தான் இங்கே இருக்கு' என்றார். 'குளத்தூருக்கு வாங்க' என சொன்னான் வாசன். 'காலம் வரட்டும்' என்றார் அனந்தன். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். 

வழியில் செல்லும்போது பாரதி எதுவுமே பேசாமல் வந்தாள். மாதவி, நாச்சியார் எதுவும் சொன்னார்களா என கேட்டபோது ம்ம் சொன்னார்கள் என்றார். இவங்கதான் உங்க சொந்தக்காரங்க என்றாள் மாதவி. எப்படி சொந்தமாகும் மாதவி என்று மட்டும் கூறிவிட்டு மேற்கொண்டு பாரதி பேசவில்லை. வாசன் இதில் தலையிடவில்லை. 

நாராயணபுரத்தில் தேவகியை அழைத்துக்கொண்டு குளத்தூர் வந்தடைந்தார்கள். தேவகி கிருஷ்ணதேவியைப் பார்க்க இயலவில்லை என கூறினாள். குளத்தூர் அடைந்ததும் பாரதி வீட்டில் சென்று பெரியவரிடம் பெரியப்பா என அழத்தொடங்கிவிட்டாள். 

பாரதி, நீ நாச்சியாரைப் பார்த்தியாம்மா? என்றார் பெரியவர். 'ஆமாம் பெரியப்பா, பார்த்தேன், உங்களைப் போலவே அவங்களும் கல்யாணமேப் பண்ணிக்காம வாழறாங்க'. 'ம்ம் கேள்விப்பட்டேன்மா'. 'பெரியப்பா நீங்க அவங்களைப் போய் பாருங்க' என்றாள் பாரதி. 'ம்ம்' என்றார் பெரியவர்.

மறுதினம் காலையில் வாசன் சோலையரசபுரத்தில் சோதிட சாஸ்திரி நம்பெருமாளைக் காணச் சென்றான், ஆனால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக சொன்னார்கள். வாசனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. அடுத்த தினங்களில் பாரதியும் கிருத்திகாவும் சென்னைக்கு கிளம்பினார்கள். பாரதி மரபியலில் கவனம் செலுத்த முடியாது போனாள். அதே வேளையில் ஒவ்வொரு நாளும் பெரியவரின் மனம் தனது கடந்தகாலத்தை அதிகமாகவே நினைக்க ஆரம்பித்தது. ஆனால் சாத்திரம்பட்டிக்குச் செல்ல மனம் இடம்தரவில்லை. பெரியவரை வாசன் ஒருமுறை அழைத்துப் பார்த்தான். ஆனால் முடியாது என கூறிவிட்டார். விடுமுறைக்கு வந்த மாதவியும் தேவகியும் விடுமுறை முடிந்து கிளம்பினார்கள். . பூங்கோதையும் ரோகிணியும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்கள்.

நாட்கள் ஓடின. ஊரில் நல்ல மழை பெய்து இருந்ததால் விவசாயம் மிகவும் செழிப்பாக இருந்தது. வாசன் வழக்கம்போல கதைகள் சொன்னான். சுமதி எப்போதும் போல் பள்ளிக்குச் சென்றாலும் திருவில்லிபுத்தூர் செல்வதையே தனது குறிக்கோளாய் கொண்டிருந்தாள். பூங்கோதைக்கு வளைகாப்பு குளத்தூரிலேதான் நடந்தது, இங்கேயேதான் இருப்பேன் என சொல்லியதன் காரணமாக அவளது பெற்றோர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. 

ஒவ்வொரு நெகாதம் செடியிலும் மூன்றே மூன்று காய்கள் மட்டுமே வந்தது. பல நாட்கள் பின்னர் நெகாதம் செடியில் காய்கள் கனியாக மாறியது. பெரியவரின் மனம் மிகவும் சந்தோசமாக இருந்தது. கனிகளையெல்லாம் ஒருநாள் காலையில் பறித்தார்கள். கனிகள் பறிக்கப்பட்ட அன்று மாலையே அனைத்துச் செடிகளும் வாடிப்போயின. செடிகள் வாடியதைக் கண்டதும் வாசன் பெரும் கலக்கம் அடைந்தான். ஒரு கனியை உடைத்துப் பார்த்தபோது ஐந்து விதைகள் இருந்தது. மற்றொரு கனியை உடைத்துப் பார்த்தபோது எட்டு விதைகள் மட்டுமே இருந்தது. மற்றொரு கனியில் விதைகளே இல்லை. வாசன் அந்த கனிகளை யாரையும் சாப்பிட அனுமதிக்கவில்லை. வாசன் தானே முன்நின்று அனைத்து கனிகளிலிருந்தும் விதைகளை சேகரிப்பதாக பெரியவரிடம் சொன்னான். 

அன்றே மாலையோடு மாலையாக அனைத்துச் செடிகளும் நிலத்திலிருந்து பிடுங்கப்பட்டன. அவைகளை பத்திரமாக பெரியவரின் வீட்டில் சேர்த்தான் வாசன். செடிகள் வாடியது கண்டு ரோகிணி மிகவும் யோசிக்கலானாள். அப்பொழுதே ரோகிணி பெரியவரிடம் சென்று ஆய்வகம் குறித்து மீண்டும் பேசினாள். அந்த நிமிடமே பெரியவர் ஆய்வகத்தையும் ஆஸ்ரமத்தையும் வாசனிடம் கட்டச் சொல்லி உத்தரவு போட்டார். ஆஸ்ரமம் நாளாகட்டும் என்றான் வாசன். ஆனால் பெரியவர் உடனே செய்யுமாறு சொன்னார். 

அன்று இரவே வலியின் காரணமாக பூங்கோதை நாணல்கோட்டையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். வாசன் கேசவனுடன் மருத்துவமனைக்குச் சென்று இருந்தான். உறவினர்களும் சென்று இருந்தார்கள். பூங்கோதையின் பெற்றோர்களுக்கு தகவல் சொல்லி இருந்தார்கள். செடியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த கேசவன் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். மருத்துவர்கள் பூங்கோதையை ஒரு அறைக்குள் அவசர அவசரமாக தள்ளு கட்டிலில் வைத்து அழைத்துச் சென்றார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தை அழும் சப்தம் கேட்டது. ஒரே ஒரு அழுகை சப்தம் மட்டுமே கேட்டது. 

அறையின் வெளியில் இருந்தவர்கள் பதட்டமடைந்தார்கள். மாப்பிள்ளை என் பூங்கோதை என்று கேசவன் வாசனின் தோள்மேல் சாய்ந்தான். வாசன் தைரியம் சொன்னான். மருத்துவர் அறையினில் இருந்து வெளியில் வந்தார். 

இவர்கள் கேட்கும் முன்னரே சுகப்பிரசவம்தான், இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு, தாயும் குழந்தைகளும் நலமாக இருக்காங்க, கொஞ்ச நேரத்துக்குப்பறம் நீங்கப் போய் பாருங்க என்று சொல்லிவிட்டு நடந்தார். கேசவன் மனம் சந்தோசத்தில் துள்ளியது. செடி தந்த பயம் தற்போது அறவே நீங்கியது. அனைவரும் அளவிலா சந்தோசம் அடைந்தார்கள். 

என்ன குழந்தைகளுனு சொல்லாம போய்ட்டாரே என அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு நினைவு வந்தது. அதற்குப்பெண் வந்த நர்ஸ் உள்ளே வாங்க இரட்டைப் பையன்க என சொல்லி அழைத்தார். மொத்தமாக அனைவரும் செல்லாமல் ஒருசிலர் மட்டுமே சென்றனர். 

பூங்கோதை என கேசவன் பூங்கோதையின் நெற்றியைத் தடவினான். சிரித்த முகத்துடன் கேசவனைப் பூங்கோதைப் பார்த்தாள். வயதான பாட்டி ஒருவர் நர்ஸிடம் ஒரே ஒரு அழுகை சத்தம்தான் கேட்டது எனக்கேட்டார். ம்ம் முதல்ல வந்த பையன் சிரிச்சமுகத்தோட வந்தான் அதோ அதுதான் முத பையன். நாங்க தட்டி தட்டி பார்த்தோம் அழலை. இரண்டாவது பையன்தான் அழுதான் அதுதான் இரண்டாவது பையன். அழனுமே எனப் பாட்டி முதல் குழந்தையைப் பார்த்தார். சிரித்த முகத்துடனே இருந்தது. பாட்டி குழந்தையின் கையை கிள்ளினார். ங என சத்தம் எழுப்பிவிட்டு மீண்டும் சிரித்தமுகம் காட்டியது அந்த குழந்தை. பாட்டி கையெடுத்து வணங்கினார். 

வாசன் குழந்தையைப் பார்க்க வந்தான். முதல் குழந்தை கண்கள் விழித்துப் பார்த்தது. தீட்சண்யமான கண்கள். பெருமாள் தாத்தாவோ என மனம் சொல்லியது. குழந்தை கண்கள் மூடி திறந்தது. வாசன் கைகள் தொட்டு வணங்கினான். பக்கத்து குழந்தையைப் பார்த்தான். கண்கள் விழித்துப் பார்த்தது. தீட்சண்யமான கண்கள். வாசன் மனம் நடுங்கியது. இரண்டு குழந்தைகளில் அத்தனை வித்தியாசம் பார்க்க இயலவில்லை. ஒரே மாதிரியாகவே இருந்தது. குழந்தையின் கைகள் தொட்டான், கண்கள் மூடி திறந்தது. அம்மா என சத்தம் போட வேண்டும் போலிருந்தது வாசனுக்கு. 

அந்த அறையைவிட்டு வெளியேறினான் வாசன். உடல் எல்லாம் வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்தான். கேசவனும் மற்றவர்களும் ஊருக்குக் கிளம்பினார்கள். பூங்கோதைக்குத் துணையாய் இருவர் மட்டும் தங்கினார்கள். வாசன் அவர்களுடன் வீடு வந்து சேர்ந்தான். 

விஷ்ணுப்பிரியனின் திட்டம் கேசவனுக்கும் பூங்கோதைக்கும் குழந்தையை உண்டாக்க வைப்பது. மாதவி வரைந்த படத்தை வைத்து சுபா அப்படித்தானே சொன்னார். திருமலையில் திருமால் சிரித்ததன் அர்த்தம், பெருமாள் தாத்தாவின் ஆசை வாசனின் மனதை என்னவோ செய்தது. ஒரே பெருமாள் உருவாக்க முனைந்ததில் இருவர் எப்படி உருவானார்கள் என வாசன் நினைக்கும்போதே மயக்கம் வரும்போல் இருந்தது. 

விஷ்ணுப்பிரியன் தனக்குச் சொல்லித்தந்த மரபியல் தத்துவம் ஞாபகத்துக்கு வந்தது. கருவானது உருவானபின்னர் அந்த கரு சிலவேளையில் இரண்டாக பிரிந்து இரண்டு கருக்களாக உருவாகும், அப்படி உருவாகினால் அது ஒரேமாதிரியான இரட்டைக்குழந்தைகளாக ஒரே மூலக்கருவிலிருந்து உருவாகும் எனவும், சில நேரங்களில் ஒரு விந்து ஒரு அண்ட செல்லுடனும், மற்றொரு விந்து மற்றொரு அண்ட செல்லுடன் இணைந்து இரண்டு வெவ்வேறு கருக்களாக உருவாகும்போது இரட்டைக்குழந்தைகள் வெவ்வேறு மூலக்கருவிலிருந்து பிறக்கும். அப்படியெனில் விஷ்ணுப்பிரியன் வைத்த ஒரே கரு இரண்டாகப் பிரிந்ததா? என எண்ணினான் வாசன். எந்த ஒரு பிரச்சினையில்லாமல் இரண்டு குழந்தைகளும் நன்றாக வளரவேண்டும் என வேண்டிக்கொண்டான். 

மருத்துவமனையில் இருந்து தாயும் சேய்களும் ஊருக்கு வந்தார்கள். திருமலையில் இருந்தும் பலர் வந்திருந்தனர். விஷ்ணுப்பிரியனும் வந்திருந்தார். 

குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா வைத்தனர். குழந்தைகள் பிறந்தபின்னர் பூங்கோதை வாசனிடம் பெயர் கேட்டிருந்தாள். வாசன் முதல் குழந்தைக்கு அஷ்டவதன் எனவும் இரண்டாவது குழந்தைக்கு ஐவரதன் எனவும் பெயரிடச் சொன்னான். அதையே மனதில் வைத்துக்கொண்ட பூங்கோதை கேசவனிடம் சொல்ல கேசவனும் சரியென சொன்னான். அந்த பெயரையே குழந்தைகளுக்கு வைத்தார்கள். 

அந்தவாரமே நெகாதம் விதைகளை நிலத்தில் விதைத்தார்கள். ரோகிணி நெகாதம் செடியினை வெட்டி நடச்சொன்னாள். அந்த பணியும் நடந்தேறியது. ஆய்வகம் கட்ட வேண்டி ஆயத்தங்கள் நடந்தது. ஆஸ்ரம பணியும் தொடங்கியது. மாதங்கள் ஓடின. வாசனால் ஊரைவிட்டு எங்குமே செல்ல இயலவில்லை. திருமால் சென்னைக்கு அழைத்து இருந்ததற்கு கூட செல்ல இயலாமல் இருந்தது. பெரியவர் சாத்திரம்பட்டி செல்லாமல் தட்டி கழித்தார். சாத்திரம்பட்டியிலிருந்து எவருமே வரவில்லை. குழந்தைகள் சாதாரண குழந்தைகளாகவே நன்றாக வளர்ந்தனர். பூங்கோதை பெருமகிழ்ச்சியில் இருந்தாள். 

ஆய்வகமும் ஆஸ்ரமமும் கட்டப்பட்டது. நெகாதம் விதைகள் மீண்டும் செடிகளாகி காய்கள் வரத் தொடங்கி இருந்தது. காய்கள் வர விதை எடுத்தக் காலகட்டமே நட்டுவைக்கப்பட்ட செடிகளும் எடுத்துக்கொண்டது குறித்து ரோகிணி ஆச்சர்யம் கொண்டாள். 

குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. இன்னும் மூன்று மாதத்தில் நெகாதம் செடியில் கனிகள் எல்லாம் வரும். மேலும் விதைகள் அதிகமாகவே கிடைக்கும். இம்முறை விநாயகம் வாங்கிய நிலங்கள் அனைத்திலும் நெகாதம் செடியை வளர்க்கலாம். அதனால் மற்ற விவசாயத்தை ஓரிரு மாதங்களுக்குள் முடித்துக்கொள்வதாக பெரியவர் சொன்னார். வளரும் இந்த செடியில் ஒரு சிறுபகுதியை ஆராய்ச்சிக்காக ரோகிணி எடுத்துக்கொள்ள பெரியவர் அனுமதி தந்து இருந்தார். 

மாதவி மூளை பற்றிய ஆராய்ச்சிக்காக சென்னையில் இருக்கும் திறமை வாய்ந்த மருத்துவர் ஒருவரின் தொடர்பினை பெற்றாள். பாரதி மரபியல் குறித்து மீண்டும் எழுதத் தொடங்கி இருந்தாள். அடுத்த வருடத்தில் இவர்களது மருத்துவபடிப்பு முடிந்துவிடும். இவர்கள் இருவரும் தங்களது விருப்பத்தில் வெற்றி பெறுவார்களா என்பது பின்னரே தெரியும். 

ஆஸ்ரமத்தில் குழந்தைகள் வந்து இணைவார்களா என்பதும், ரோகிணியின் ஆய்வு வெற்றிபெறுமா என்பது பின்னரே தெரியும். குளத்தூர் பெரிய எதிர்பார்ப்பை தனக்குள் மிக ஆழமாகவே விதைக்கத் தொடங்கியது. 

(
வளரும்)

நுனிப்புல் பாகம் - 3 இனி ஆக்ஸ்ட் 2012 ல் தொடரும். 

10 comments:

Praveenkumar said...

நல்லாயிருக்குங்க..!!

Radhakrishnan said...

மிக்க நன்றி பிரவின்குமார்.

Unknown said...

நுனிப்புல்-2 நிறைவுக்கு பாராட்டுக்கள்.
மூன்றாம் பாகத்திற்கு வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

மிக்க நன்றி பாரத் பாரதி.

Chitra said...

அருமைங்க. வாழ்த்துக்கள்!

அன்பரசன் said...

நுனிப்புல்-2 நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா.

Radhakrishnan said...

மிக்க நன்றி அன்பரசன்.

ஹேமா said...

தவறவிட்ட பதிவுகள் வாசிக்கிறேன் டாக்டர்.சுகம்தானே நீங்கள் !

Radhakrishnan said...

நலம் தான் ஹேமா. நீங்களும் நலம் தானே. தங்கள் வீடுதனை புதுப்பித்தமைக்கு வாழ்த்துகள். நேரம் இருக்கும்போது வாசியுங்கள். மிக்க நன்றி.