Thursday 4 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 22

22. நெகாதம் செடி 

வாசன் பூங்கோதையிடம் உண்மையைச் சொல்வதென முடிவெடுத்தான். பூங்கோதையும் ஆவலுடன் அமர்ந்தாள். பின்னர் என்ன நினைத்தானோ, பூங்கோதையிடம் சில மாதங்கள் பின்னர் சொல்கிறேன் என சொன்னதும் பூங்கோதை பிடிவாதமாக இப்பொழுதே சொல்ல வேண்டும் என சொன்னாள். வாசன் திருமால் வந்த விபரங்கள், பெருமாள் தாத்தாவின் விருப்பம், விஷ்ணுப்பிரியனின் முயற்சி என எல்லாம் சொல்லி முடித்தான். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பூங்கோதை வாசனிடம் ஒரு கேள்வி கேட்டாள்.

''
அண்ணா, இரண்டு குழந்தைகளுமே பையனா பொறந்துட்டா அதுல யாரு பெருமாள் தாத்தானு எப்படி கண்டுபிடிக்கிறது?''

''
டி என் ஏ வைச்சி கண்டுபிடிச்சிரலாம்''

''
ஆனா எனக்கு யாரு பெருமாள் தாத்தானு தெரிய வேணாம்''

''
இரண்டுமே பையனா பொறந்தது போல பேசறீங்க பூங்கோதை''

''
பையனாத்தான் பொறப்பாங்க''

''
அதுதான் சொன்னேன் கொஞ்சநாள் பொறுத்து இருங்க, உங்களுக்கு இரட்டைக்குழந்தையானு தெரிஞ்சிக்கலாம், அவசரப்பட வேண்டாமே''

''
இரட்டைக் குழந்தைதான் அண்ணா''

வாசன் பூங்கோதையின் நம்பிக்கையைக் கண்டு வியந்தான். பூங்கோதையிடம் விஷ்ணுப்பிரியன் முதன்முதலில் பெருமாள் தாத்தாவை வைக்கவில்லை என சொன்னபோது என்ன நினைத்தாள் எனக் கேட்டபோது பூங்கோதை மெல்லியதாய் சிரித்துக்கொண்டே நம்மை அவர் ஏமாத்த முடியுமா அண்ணா என சொன்னபோது வாசன் ஒருநிமிடம் என்ன பூங்கோதை சொன்னாள் என யூகிக்க முடியாமல் திருப்பிச் சொல்லச் சொன்னான். பூங்கோதை திருப்பிச் சொன்னதையே சொன்னாள்.

''
அப்படின்னா உங்களுக்கு முன்னமே தெரியுமா?''

''
தெரியாது அண்ணா''

''
ஏன் அப்படி சொன்னீங்க இப்போ''

''
ஒரு விசயம் நடக்கனும்னா அது நடந்தே தீரும்ண்ணா, அந்த பகவான் நினைச்சிட்டா யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுண்ணா''

''
பகவான் எந்த பகவான்?''

''
நாராயணன்''

''
நாம செஞ்சாத்தானே''

''
நாம செய்ய வேண்டிய சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் தன்னால உருவாகும்ண்ணா''

''
தன்னால எப்படி உருவாகும், நாம உருவாக்குறதுதான்''

''
அப்படினு நீங்க நினைக்கிறீங்கண்ணா, ஆனா எல்லாம் அந்த நாராயணன் தான் நடத்தி வைக்கிறார்''

''
பூங்கோதை நீங்க சொல்றது எல்லாம் நம்பறமாதிரி இல்லை''

''
நம்ப வேண்டாம்ண்ணா, நீங்க நாராயணனை நம்பித்தானே செடி எடுக்க வந்தீங்க''

''
இல்லை, பெரியவரை நம்பி வந்தேன்''

''
அவர் நாராயணனை நம்பி வந்தார், நீங்க நாராயணனை நம்பாம வந்திருக்கீங்க''

''
அதனால''

''
உங்களால மலை அடிவாரத்துக்கு மட்டும் தான் போக முடியுது''

''
யார் சொன்னா?''

''
என் மாமா சொன்னார்''

''
அதுக்கும் நாராயணனுக்கும் சம்பந்தம் இல்லை, நான் பெரியவரால மேல எப்படி ஏறி வரமுடியும்னு ஏதாவது பேசிட்டு வந்துருவேன், நாளைக்கு மலையில ஏறுவேன் அவரை கீழ நிற்கச் சொல்லிட்டு''

''
அவர் கீழ நிற்கமாட்டாருண்ணா, நான் வேணும்னா அங்க வந்து நிற்கவா''

''
வேண்டாம் பூங்கோதை, நீங்க என்ன அர்த்தத்தோட பேசறீங்கனு புரியலை''

''
அண்ணா நம்பிக்கையோட செயல்படுங்கண்ணா, நடக்காத விசயத்தைக் கூட நடக்க வைச்சிரலாம்''

வாசன் அமைதியானான். நாராயணனை நம்புவது என்றால் எப்படி நம்புவது? எங்கே இருக்கிறான் நாராயணன்? உடம்பில் நிறுத்த முடியாத நாராயணனை எப்படி உணர்வது? அகிலத்துக்கெல்லாம் ஒரே நாராயணன்? அவரவரின் தேவைக்கு ஏற்ப மாறிப்போன நாராயணன்? இல்லாமல் கூடப் போன நாராயணன்? வாசனின் யோசனையை பூங்கோதை கலைத்தாள்.

''
நீங்கதான் அண்ணா நாராயணன்''

''
மாதவி சொன்னாளா?''

''
இல்லை அண்ணா, நானே சொன்னேன்''

''
பூங்கோதை, நான் வாசன் மட்டுமே''

''
உங்களுக்குள் இருக்கும் நாராயணனை நீங்கள் உணருங்கள் அண்ணா, காலம் தாழ்த்த வேண்டாம்''

''
எனக்குப் பழக்கமில்லை, தேவையுமில்லை''

''
ம்ம் சரி அண்ணா, நான் நாளை உங்களுடன் மலைக்கு வருவேன்''

பூங்கோதை சொல்லிவிட்டு வீட்டிற்குள் போனாள். வாசன் நோட்டினை எடுத்தான். செடி கண்ணுக்கு நன்றாகவே தெரிந்தது. 

அதிகாலையில் எழுந்ததும் பூங்கோதை மலைக்குச் செல்வதற்குத் தயாரானாள். கேசவனிடம் இரவே தனது விருப்பம் குறித்துச் சொல்லி இருந்தாள். கிழமை ஞாயிறு எனினும் கேசவன் தான் வழக்கம்போல பார்த்தசாரதியுடன் வேலைக்குச் செல்ல ஆயத்தமானான். பார்த்தசாரதிக்கு கேசவனின் ஆர்வமும் உழைப்பும் மனமகிழ்வைத் தந்தது. 

வாசன் பெரியவருடன் இன்றைய திட்டம் குறித்து பேசலானான். ஒரு செடியை பாதுகாக்க, விதையினை பாதுகாக்க என்னவெல்லாம் வேண்டும் என்பதை தான் எடுத்து வைத்திருப்பதாக கூறினான். பெரியவரும் கவனமாகக் கேட்டுக்கொண்டார். வாசன் தனது விருப்பப்படி பெரியவர் மலை அடிவாரத்திலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். பெரியவரும் சிரித்துக்கொண்டே சரியென சம்மதம் சொன்னார். 

காலையிலே சாப்பிட்டுவிட்டு வாசனும் பெரியவரும் கிளம்பினார்கள். பூங்கோதையும் உடன் கிளம்பினாள். பெரியவருக்கு பூங்கோதை வருவதை தடை சொல்ல விருப்பமில்லை. மலைப்பகுதியை அடைந்தார்கள். வாசன் தனது நோட்டினை எடுத்து திசைகள் எல்லாம் மிகவும் கவனத்துடன் குறித்துக்கொண்டான். 

‘’
அய்யா, நான் மலை மேல ஏறிப் போறேன்’’

‘’
ம்ம்’’

‘’
நீங்க நான் வரவரைக்கும் இங்கேயே இருங்க அய்யா, பூங்கோதை நீங்க நேரமாச்சுன்னா வீட்டுக்குப் போங்க’’

‘’
நாங்களும் அங்க இங்க தேடிப் பார்க்கிறோம், நீ எங்களுக்கு முன்னரே வந்துட்டா இங்க வந்து இரு தம்பி’’

‘’
ம்ம் சரி ஐயா’’

தாங்கள் நிற்கும் இடத்தினை மூவரும் குறித்துக்கொண்டார்கள். மீண்டும் அங்கேயே சந்திப்பது என முடிவு செய்து வாசன் தண்ணீர், உணவு, பை எல்லாம் எடுத்துக்கொண்டு மலையின் மேல் ஏறத் தொடங்கினான். மரங்களும் செடிகளும் அடர்ந்து இருந்தது. பாதையென்று எதுவும் மனிதர்களால் போடப்படவில்லை. தனக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டு ஏறத் தொடங்கினான். சில தூரம் வந்ததும் சற்று நேரம் நின்றான். தண்ணீர் குடித்துக் கொண்டான். நோட்டினை எடுத்துப் பார்த்தான். இன்னும் சற்று தொலைவில் சென்றால் செடி தென்படலாம் என ஏறினான். 

சின்ன சின்ன பூச்சிகள், புழுக்கள் எல்லாம் இலையில் தஞ்சம் கொண்டிருந்தன. மழை விழுந்திருந்ததால் தரையெல்லாம் ஈரமாக இருந்தது. வாசன் மலையின் ஓரிடத்தில் திகைத்து நின்றான். நிறைய தொலைவு ஏறிவிட்டதுபோல் உணர்ந்தான். நெகாதம் செடியை தேடினான். சில செடிகள் நெகாதம் செடி போலவே கண்ணுக்குப் பட்டது. ஆனால் அவை நெகாதம் செடிகளில்லை என்பதை உறுதி செய்தான். மரமாக வளரமுடியாமல் செடியாக முடங்கிப்போவதன் அவசியம் என்ன? தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். 

வித்தியாசமான ஓசைகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது. மனிதர்கள் இங்கெல்லாம் வருவதில்லை என்பதுபோல் வெட்டப்படாத மரங்கள்! வாசன் வேறு திசையில் மேலும் ஏறத் தொடங்கினான். நேரம் வெகுவேகமாக கடந்தது. மாலைப் பொழுது வந்து சேர்ந்தது.

சற்று தொலைவு சென்றதும் குளுகுளுவென அடிக்கும் காற்றில், மர இடைவெளியில் மெல்லிய கதிர்களை பாய்ச்சும் சூரிய ஒளியில் சில செடிகளின் மேல் அப்படியே அமர்ந்தான். தனது உடலில் ஒருவித புத்துணர்வை ஏற்படுவதை உணர்ந்த வாசன் எழுந்தான். தான் அமர்ந்து இருந்த செடிகளில் ஒரு செடியை உற்று நோக்கினான். நோட்டினை எடுத்தான். நோட்டில் வரையப்பட்ட செடியையும் தான் நேரில் பார்த்த செடியையும் பார்த்தான். எல்லாம் மிகச்சரியாக இருந்தது. ஒரே ஒரு செடி?! சுற்றியுள்ள செடிகள் எல்லாம் வேறு விதமாக இருந்தது.

வாசன் நெகாதம் செடியை வேருடன் பறித்தான். தான் கொண்டு வந்து இருந்த பையில் செடியை பத்திரப்படுத்தினான். அந்த பகுதியிலே சுற்றி சுற்றிப் பார்த்தான். அதைப்போன்று வேறு எந்த செடியும் கண்ணுக்குப் புலப்படவில்லை. மேலும் மேலே நடந்தான். ஒரு சிறு பகுதியில் நெகாதம் செடிக் கூட்டமாக இருந்தது. அருகிலே சென்று பார்த்தான். 

தான் வைத்து இருந்த செடியுடன் அந்த செடிகளை ஒப்பிட்டுப் பார்த்தான். ஒரேமாதிரியாகவே இருந்தது. செடிகளை எண்ணினான். நாற்பத்தி இரண்டு செடிகள் மட்டுமே இருந்தது. எல்லா செடிகளுமே ஒரே வயதுடையவை போன்றே காணப்பட்டது. எந்த ஒரு செடியிலும் மலர்களோ, காய்களோ இல்லாதது வாசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அனைத்துச் செடிகளையும் வேர்களுடன் பறித்தான். அங்கிருந்த மண்ணை பல பிரிவுகளாகத் தோண்டி சில பைகளில் போட்டுக்கொண்டு குறித்துக்கொண்டான். இருள் சூழத் தொடங்கியது. வாசன் கீழிறங்கத் தொடங்கினான். வெகுவேகமாக இறங்கினான். 

பெரியவர் மட்டும் அதே இடத்தில் கல்லில் அமர்ந்து இருந்தார். பெரியவரின் கையில் ஒரே ஒரு செடி மட்டும் இருந்தது. வாசன் செடிகளுடன் பெரியவரை உற்சாகத்துடன் சந்தித்தான். பூங்கோதை சென்றுவிட்டதை அறிந்தான். பெரியவரிடம் வாசன் தான் சேகரித்த செடிகளையும் மண்ணையும் காட்டினான். பெரியவர் வைத்திருந்த செடியும் வாசன் கொண்டு வந்த செடிகளும் ஒரே மாதிரியாக இருந்தது. வாசன் ஆச்சரியமாகப் பெரியவரைப் பார்த்தான். பூங்கோதையுடன் தான் மலையின் ஒரு பகுதிக்குச் சென்றதாகவும், சிறிது தொலைவு மலையின் மேல் ஏறிச்சென்று பூங்கோதைப் பறித்துக்கொண்டு வந்ததாக பெரியவர் சொன்னதும் வாசன் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என சொன்னான். ஆனால் பெரியவர் இரவாகிவிட்டதால் வேண்டாம் என வாசனுடன் வீடு திரும்பினார். எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் எப்படி பூங்கோதை பறித்துக்கொண்டு வந்தாள் என வாசன் தனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டான். 
(தொடரும்)

5 comments:

vasu balaji said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

Radhakrishnan said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அப்துல்காதர்.

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

இனிய தீபாவளி வாழ்த்துகள் கலாநேசன், நன்றி