Sunday 7 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 23

23. பாரதியின் குறிக்கோள்

பாரதியும் கிருத்திகாவும் மிகவும் சிறப்பாக படித்து வந்தார்கள். வருட இறுதித் தேர்வு சிறப்பாக எழுதினார்கள். இம்முறைத் தேர்வு விடுமுறையில் பாரதி வழக்கம்போல நலகாப்பகம் ஒன்றில் வேலைக்கு இணைந்துவிட்டாள். கிருத்திகா கவிதைகளையும், கதைகளையும் எழுதுவதில் ஈடுபாடு கொண்டாள். பாரதி தனது மரபியல் மருத்துவத்தில் உள்ள ஈடுபாட்டினை முறைப்படி கொண்டு செல்ல அடிப்படையில் இருந்து ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தாள். 

அவள் குறிப்பிலிருந்து ஒரு டி என் ஏ உருவாக எந்த மூலக்கூறுகள் அவசியம் என்பதை வரைந்து வைத்து இருந்தாள். ஆனால் அது குறித்து குறிப்புகளை எழுதாமல் வெறும் மூலக்கூறுகளை மட்டும் வரைந்து இருந்தது புரியாமலிருந்தது. 

அன்று மாலையில் கிருத்திகா பாரதி வரைந்து வைத்து இருந்த மூலக்கூறுகளைப் பார்த்து விட்டவள் காட்டுமாறு கேட்டாள். பாரதி காட்ட மறுத்துவிட்டாள். ஆனால் கிருத்திகா கட்டாயம் காட்ட வேண்டும் என சொன்னதும் மறுக்கமுடியாமல் காட்டினாள். 


படத்தைப் பார்த்த கிருத்திகா விளக்கம் சொல்லுமாறு கேட்டாள். அதற்கு பாரதி நீ படித்ததுதானே, அதுவும் இது விடுமுறை, எனக்கு காலையில் இருந்து வேலை செய்தது சோர்வாக இருக்கிறது, பிறகு சொல்கிறேன் என சமாளித்தாள். ஆனால் கிருத்திகா சொல்லித்தான் தீர வேண்டும் என கட்டாயப்படுத்தினாள். ஆனால் பாரதி ஒரு வாரம் கழித்து நிச்சயம் முழு விபரங்களும் எழுதியபிறகு சொல்வதாக கூறியதும் பாரதி ஓய்வெடுக்கட்டும் என சுந்தரன் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சொல்ல ஆரம்பித்தாள் கிருத்திகா. பாரதி கேட்கும் மனநிலையில் இல்லாதவளாய் வாசனைப் பற்றிய நினைவுகள் வந்து போயின. பெரியவர் செடி கொண்டு வந்த விசயம் முதற்கொண்டு மொட்டு வந்திருப்பதுவரை பாரதியிடம் சொல்லியிருந்தார். சிலநாட்கள் குளத்தூர் சென்று வந்தால் என்ன என பாரதிக்கு மனதில் தோன்றியது. பாரதியின் கவனம் தனது பேச்சில் இல்லை என்பதை உணர்ந்த கிருத்திகா அமைதியானாள். பின்னர் கிருத்திகா மாடியிலிருந்து கீழிறங்கி வந்தவள் பாரதிக்காக ஆரஞ்சு சாறினை எடுத்துச் சென்று தந்தாள். பாரதி புன்முறுவலிட்டாள். 

நீ எல்லாம் எழுதனப்பறம் எனக்கு விளக்கமா சொல்லனும் என சொல்லிவிட்டு கிருத்திகா பாரதியிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டாள். பாரதி குளத்தூர் செல்வதென முடிவெடுத்தாள். அன்று இரவே அம்மாவிடமும் அப்பாவிடமும் அனுமதி கேட்டவள் தான் வேலைப் பார்க்கும் இடத்தில் நான்கு நாட்கள் மட்டும் அனுமதி பெற்றுக்கொள்வது என முடிவுடன் நிம்மதியாக உறங்கினாள். இதமான காற்று மேலும் இதமாக வீசத் தொடங்கியது.

அதிகாலை எழுந்த பாரதி வேலைக்குத் தயாரானாள். அவளது வேலையிடத்துக்குச் சென்றதும் அங்கே மேலாளாரிடம் தனக்கு நான்கு நாட்கள் விடுமுறை வேண்டும் எனக் கேட்டாள். அதற்கு மேலாளர் 

''தாராளமா போய்ட்டு வாம்மா, நீங்க இங்க வந்து வேலைப் பார்க்குறதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, இப்ப எல்லாம் சமூக நல நோக்கத்தோட வாழறவங்க ரொம்பவே குறைஞ்சிப் போய்ட்டாங்க, அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்குறதுக்கே நேரம் போதறதில்லை. அவங்களையும் குறை சொல்ல முடியாது, அவங்க எடுத்துக்கிட்ட வாழ்க்கை அப்படி, நீங்க கிடைக்கிற நேரத்திலும் விடுமுறையிலும் இங்கு வந்து எங்களுக்கு உதவியா இருக்கறது மனசுக்கு நிறைவா இருக்கும்மா''

என சொல்லியதும் பாரதிக்கு சந்தோசமாகவும் அதேவேளையில் கவலையாகவும் இருந்தது. தன்னலம் கருதாத மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அனைவருமே தன்னலம் கருதாமல் இருந்துவிட்டால் பொதுநலத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடத்தான் கூடுமோ என நினைத்துக்கொண்டாள். மதிய வேளையில் அங்கிருந்து கிளம்பினாள். 

வீட்டில் வந்து தனக்குத் தேவையான துணிகளை எடுத்து வைத்துக்கொண்டாள். மரபியல் பாடம் கண்ணுக்கு முன்னால் சுற்றியது. குளத்தூருக்குச் செல்ல எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மரபியல் பற்றி எழுத ஆரம்பித்தாள். 

அடினைன் மற்றும் குவானைன் எனப்படும் மூலக்கூறுகளானது புயூரின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறிலிருந்து இருந்து உருவானதாகும். சைட்டோசின் மற்றும் தைமின் எனப்படும் மூலக்கூறுகளானது பிரிமிடின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறில் இருந்து உருவானதாகும்.

என எழுதி வைத்துவிட்டு புயூரின் மற்றும் பிரிமிடின் படங்களை வரைந்தாள். பின்னர் எழுதத் தொடங்கினாள்.இந்த புயூரின் வகை மூலக்கூறுதான் நாம் அருந்தும் தேநீரிலும் காஃபியிலும் உள்ள கஃபின் எனப்படும் மூலக்கூறாகும். மேலும் சாந்தின், தியோபுரோமின் இந்த புயூரின் வகையில் உள்ளடங்கும். நியூக்ளிக் அமிலங்கள் உருவாக மூலமாக அடினைன், குவானைன், தைமின் சைட்டோசின் மற்றும் யுராசில் மூலக்கூறுகளே பெருமளவு பங்கு வகிக்கின்றன. 

இந்த புயூரின் அல்லது பிரிமிடின் மூலக்கூறுகளுடன் ரிபோஸ் அல்லது டி-ஆக்ஸ்ரிபோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் இனிப்பானது இணையும்போது நியூக்ளியோசைடு உருவாகிறது. புயூரின் அல்லது பிரிமிடினுடன் இணைந்த கார்போஹைட்ரேட்டுடன் ஒரு பாஸ்போரிக் அமிலம் இணையும் போது நியூக்ளியோடைடு உருவாகிறது. இப்படி பல நியூக்ளியோடைடுகள் இணையும்போது டி என் ஏ அல்லது ஆர் என் ஏ உருவாகிறது. டி என் ஏ வில் அடினைன் தைமின் குவானைன் சைட்டோசினும், டி ஆக்ஸ்ரிபோஸும் பாஸ்போரிக் அமிலமும் உள்ளது. ஆர் என் ஏ வில் தைமின் பதில் யுராசிலும், டி ஆக்ஸிரிபோஸ் பதிலாக ரிபோஸும் உள்ளது. டி என் ஏ வில் அடினைன் தைமினுடனும் குவானைன் சைட்டோசினும் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் நைட்ரஜனும் ஹைட்ரஜனும் அமைந்து உள்ளது. 


தன்னுடன் இருந்த புத்தகங்கள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டாள். தான் எழுதிய விபரங்களை தன்னுடன் எடுத்து வைத்துக் கொண்டாள். கிருத்திகாவிடம் சென்று தான் மாலையில் குளத்தூர் செல்வதாக கூறியதாகவும், கிருத்திகாவும் தானும் உடன் வருவதாக சொன்னாள். பாரதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாரதியின் பதிலை எதிர்பார்க்காமல் தனது தாயிடம் சென்று அனுமதி கேட்டாள். தமிழரசி அனுமதி தந்தார். தந்தையும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. பாரதிக்கு மறுக்க இயலாமல் போனது அதே வேளையில் மிகவும் சந்தோசமாக இருந்தது. பாரதியுடன் கிருத்திகா செல்வது குறித்து பாரதி வீட்டில் சந்தோசப்பட்டார்கள். அன்று இரவே பேருந்து ஒன்றில் குளத்தூர் கிளம்பினார்கள். கிருத்திகா மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள். 


வழிநெடுக உறங்காமல் கிருத்திகா பேசிக்கொண்டே வந்தாள். பாரதியும் பதில் சொல்லிக்கொண்டும் பேசிக்கொண்டும் வந்தாள். காலையில் மதுரையை வந்தடைந்தார்கள். மதுரையில் நாணல்கோட்டை செல்லும் பேருந்துக்கு அருகில் வ்ந்தார்கள். அந்த பேருந்தில் சன்னல் ஓரத்தில் மாதவி அமர்ந்து இருப்பதை கண்டாள். முன்புறமாக ஏறாமல் பின்புறமாக ஏறினார்கள். ஆனால் திடீரென திரும்பிப் பார்த்த மாதவி பாரதியைப் பார்த்து 'பாரதி' என கண்கள் மலர்ந்தாள். தேவகியும் திரும்பி பாரதியை பாரதி என்றாள். அவர்களின் அருகில் இருந்த இருக்கையில் இவர்கள் அமர்ந்தார்கள்.


கிருத்திகாவுக்கு மாதவியையும் தேவகியையும் பாரதி அறிமுகம் செய்தாள். பேருந்து கிளம்பியது. மாதவி அனைவருக்கும் பயணச்சீட்டு எடுத்தாள். மதிய வேளை பேருந்தில் குளத்தூர் வந்தடைந்தார்கள். பாரதியின் வருகையை எதிர்பார்த்து அமர்ந்து இருந்தார் பெரியவர். வாசன் பெருமாள் கோவிலில் இருந்து மந்தையை அப்போது வந்தடைந்தான். பேருந்தில் இருந்து இவர்களுடன் பலர் இறங்கினார்கள். 


அவர்தான் பெரியப்பா, அதோ அதுதான் வாசன் என பாரதி கிருத்திகாவிடம் சொன்னாள். வாசன் பெரியவருடன் சேர்ந்து அவர்களை வரவேற்றான். பாரதியும் கிருத்திகாவும் பெரியவர் வீட்டிற்குச் சென்றார்கள். மாதவி தனது வீட்டிற்குச் சென்றாள். தேவகி வாசனுடன் நடந்தாள். 'பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கியா, என்ன இந்த விடுமுறைக்கு ஊருக்கு வந்திட்டீங்க' என்றான் வாசன். 'ம் நல்லா எழுதி இருக்கோம், அடுத்த பேருந்துல கிளம்பிருவோம்ணே' என்றாள் தேவகி. 'பெட்டி கனமா இருக்கே' என்றான் வாசன். 'இந்த விடுமுறைக்கு இங்கதான் இருக்கப்போறோம்ணே' என தேவகி சொன்னதும் வாசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 


(தொடரும்)


3 comments:

Gayathri said...

nalla irukku, science than konjam puriala

ம.தி.சுதா said...

என்னைப் போல் விஞ்ஞான அர்வலருக்க பசி தீர்க்கும் பதிவொன்று நன்றிகள்...

Radhakrishnan said...

மிக்க நன்றி காயத்ரி, விரைவில் புரிந்துவிடும் காயத்ரி. :)

மிக்க நன்றி சுதா. மிகவும் மகிழ்ச்சி.