Thursday 5 February 2009

லெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 3

எனக்கு அந்த லெமூரியா பத்தின புத்தகத்தை படிக்க படிக்க மனசில திகிலடிக்க ஆரம்பிச்சிருச்சி. எழுபது வருச காலமா இந்த லெமூரியாவில வாழ்ந்தவங்களைப் போல நான் வாழனும்னு ஆசைப்பட்டு அதுல எந்தவித குறையும் வைக்காம இதுவரைக்கும் வாழ்ந்து வந்துட்டு இருக்கறதை நினைக்கிறப்போ என்னால என்னையவே நம்ப முடியல. அந்த லெமூரியாவில இருந்து வழித்தோன்றலா வந்தவங்க இன்னும் அங்க அங்க இருக்காங்கனு அந்த புத்தகத்தில எழுதி இருந்ததை பார்க்கறப்போ இதெல்லாம் எப்படி சாத்தியமோனு தோணிச்சி.

லைப்ரரியன்கிட்ட போனேன், எனக்கு லெமூரியா பத்தின புத்தக பட்டியல் வேணும்னு கேட்டேன். இரண்டு புத்தகம்தான் வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்னு லைப்ரரியில சட்டம் இருக்கு, இருந்தாலும் 'லெமூரியா சம்பந்தமான புத்தகம் எல்லாம் எடுத்துக்கோங்கோண்ணா' னு லைப்ரரியன் தன்கிட்ட இருந்த கம்ப்யூட்டரில தட்டி பதினைஞ்சு புத்தகத்துக்கு மேல காட்டினார். அதுல இங்கிலீஸ் புத்தகங்களும் இருந்தது. 'எல்லாம் வேணாம், ஒவ்வொரு புத்தகமா படிச்சிட்டு எடுத்துட்டுப் போறேன்'னு அவர்கிட்ட சொல்லிட்டு வந்து என் வீட்டுக்காரி படிச்சி முடிக்கட்டும்னு அவ பக்கத்துல உட்கார்ந்து இருந்தேன்.

என் வீட்டுக்காரி ஸ்ரீமத் பாகவதம் படிக்க ஆரம்பிச்சா நீர், ஆகாரம் எதுவும் வேணாம், படிச்சிட்டே இருப்பா. நான் கூட பல நாளு அவளுக்காக விரதம் எல்லாம் இருந்துருக்கேன். அன்னைக்கு என்னைக்குமில்லாத சந்தோசம் அதிகமா இருக்கும். இன்னைக்கும் அளவுக்கு அதிகமான சந்தோசம்தான் எனக்குள்ள இருந்தது. திடீரென திரும்பி என்னைப் பார்த்தவ 'ஏண்ணா பசிக்கிறதாண்ணா'னு அமைதியா கேட்டு வைச்சா. 'இல்லை நாயகி, நீ படி'னு அமைதியா சொன்னேன். என்ன நினைச்சாளோ புத்தகத்தை மூடி வைச்சிட்டு 'வாங்கோண்ணா போலாம்'னு கிளம்பச் சொன்னா. நானும் மறுப்பு எதுவும் பேசாம அவளோட கிளம்பிட்டேன்.

லைப்ரரியன் எனக்காக லெமூரியாவைப் பத்தி ஒரு புத்தகம் எடுத்து வைச்சி இருந்தார். 'இந்தாங்காண்ணோ, அந்த புத்தகத்தோட சேர்த்து இந்த புத்தகத்தையும் எடுத்துட்டுப் போங்கோ'னு லைப்ரரி புத்தக அட்டையில பதிவு செஞ்சி கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினோம்.
'ஏண்ணா என்ன புத்தகம் அது'னு வழக்கம்போல அப்போதான் என் வீட்டுக்காரி கேட்டா. 'இது லெமூரியா பத்தின புத்தகம்'னு சொன்னேன். அவளுக்கு லெமூரியா பத்தி தெரிய வாய்ப்பு இல்லை, அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் ஸ்ரீமத் பாகவதம், இராமாயணம், மஹாபாரதம், கந்தபுராணம் அப்புறம் என்னோட நாலு கதைகள் மட்டும்தான். அவளா இதுவரைக்கும் வேறு எந்த கதைப் புத்தகமும் வாசிச்சது இல்லை. எனக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வரைக்கும் லெமூரியா பத்தி அக்கறையில்லாமதான் இருந்தது. எப்பவுமே நான் கதை படிக்கிறப்போ அந்த புத்தகத்தோட பேரு மட்டும் கேட்டுப்பா, அப்புறம் தூங்க போறப்போ கதைச்சுருக்கம் சொல்லச் சொல்வா. கல்கியோட கதையினா அவளுக்குப் பிரியம்.

திருவானைக்கோவிலுல ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோம். சாப்பிட்டுட்டு வெயில் குறைச்சலா அடிச்சதால அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சிட்டோம். பேசிட்டே நடந்தோம். அப்போ லெமூரியாவைப் பத்தி சொல்லிட்டே வந்தேன். 'அப்படியாண்ணா, அப்படியாண்ணா'னு கேட்டுட்டே வந்தவ 'அந்த மனுசாளைப் பத்தி எழுதுங்கோண்ணா'னு சொன்னதும் எனக்கு ஸ்ரீரங்க கோயிலு கோபுரம் கண்ணுல பட்டுச்சு. 'எல்லாமே உண்மைனு தெரியாது எனக்கு'னு சொன்னேன். 'ஏண்ணா நாம வாழற சரித்திரத்தை எழுதி வைச்சி பல வருசம் கழிச்சி இப்படி அந்நியோன்யமா இரண்டு பேரு வாழ்ந்தாங்கனு படிக்கிறப்ப, இது உண்மையா இருக்காதுனு படிக்கிறவா நினைக்க தோது இருக்குண்ணா, ஆனா அந்த உண்மை நமக்கு மட்டும்தா தெரியும்ண்ணா'னு சொன்னதும் 'இல்லை நாயகி அந்த மனுசாள் எப்படி வாழ்ந்தானு நா எப்படி பார்க்காம எழுத முடியும்'னு சொன்னேன். யோசனை பண்ண ஆரம்பிச்சா. இரயில்வே கிராஸ்கிட்ட வந்துட்டோம். ஒரு மரத்துக்கு கீழ நின்னோம். குளு குளுனு காத்து வேமா வீசிட்டு இருந்துச்சு.

எனக்கு ஒரு யோசனை தோணிச்சி. எந்த கதையும் படிக்காத என் வீட்டுக்காரிக்கு இந்த லெமூரியா பத்தி என்னோட கைப்பட எழுதுறதை படிக்கட்டும்னு 'நாயகி நான் அந்த மனுசாளைப் பத்தி எழுதுறேன்'னு சொன்னேன். அவ என் மாருல சாஞ்சிக்கிட்டா. நா அவளோட தலையை வருடிட்டே சொன்னேன் 'மொத்தமா எழுதுனப்பறம் படிக்கிறயா, இல்லாட்டி கொஞ்ச கொஞ்சம் எழுதறப்ப படிக்கிறியா'னு கேட்டதும் 'ஒரு வரி எழுதி காமிச்சது போல ஒரு வார்த்தை எழுதினாலும் காமிங்கோண்ணா'னு மாருல சாஞ்சிட்டே சொன்னா. அப்பத்தான் எனக்கு என்னோட மாருல சட்டை நனைஞ்சது தெரிஞ்சது. துடிச்சிப் போய்ட்டேன். நீங்களும் உங்க வீட்டுக்காரிக்காகத் துடிக்கிறீங்களா?

இரண்டு நாளா நான் ஒரு வார்த்தைக் கூட கதை எழுதலை. என்னால எழுதவும் முடியலை. லைப்ரரியில இருந்து வாங்கிட்டு வந்த புத்தகங்களை எடுத்துக் கூடப் பார்க்கலை. அந்த மரத்து நிழலுல என் வீட்டுக்காரி சொன்னது என் மனசில ஓடிட்டே இருந்துச்சி. 'மனுசாளைப் பத்தி நீங்க எழுதி முடிச்சதும் நாம இவ்வுலக வாழ்க்கையை முடிச்சிக்கிறனும்ண்ணா, அந்த ரங்கநாதருகிட்ட போயிறனும்ண்ணா'னு சொன்னதுதான் என்னை இப்படி யோசனையில உட்கார வைச்சிருச்சி. மனுசாளைப் பத்தி எழுதாம இருந்தா பல காலம் வாழலாமானு நட்பாசையில மனசு கணக்குப் போட ஆரம்பிச்சிருச்சி. அப்படி உசிரைப் பிடிச்சி பல காலம் இன்னும் வாழுறதல என்ன இருக்கப் போறதுனு நினைக்க வேணாம். கஷ்டப்படற நஷ்டபற மனுசாளுக்கு எல்லா எங்களால முடிஞ்ச தொண்டுகாரியம் பண்ணிட்டு வாரோம். மனுசாளுக்குத் தொண்டு பண்றதுதான் பெரிய தொண்டுனு பகவான் சொல்லியிருக்கார். இதே யோசனையில இருந்தாலும் காலையிலயும் சாயந்திரமும் ஸ்ரீரங்கநாதரை தவறாம சேவிச்சிட்டே வந்தோம்.

'ஏண்ணா வந்து சாப்பிடுங்கோண்ணா'னு என்னோட நினைவுகளை கலைச்சா. நா மெல்ல எழுந்து சாப்பிட போனேன். இன்னைக்கு வீட்டுச் சமையல்தான். சமையலை ரொம்ப பக்குவமா என் வீட்டுக்காரி பண்ணுவா. நா காய்கறி நறுக்கிக் கொடுத்துட்டு சமையல்கட்டிலே அவ சமைச்சி முடிக்கிறவரைக்கும் பேசிட்டே நிற்பேன்.

பிள்ளைகளெல்லாம் கூட இருந்த காலத்தில அவங்களுக்கெல்லாம் சாப்பாடு பரிமாறுவா. பிள்ளைக எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சதும், நாங்க இரண்டு பேரும் ஒன்னாதான் சாப்பிடுவோம். இன்னைக்கும் அப்படித்தான் உட்கார்ந்து சாப்பிட்டோம். அவளுக்கு பொறையேறிருச்சி. தலையில தட்டிவிட்டேன். 'தண்ணி குடிக்கச் சொல்லி நானும் குடிச்சேன். 'ரங்கநாதர் நினைக்கிறாருண்ணா'னு சொன்னா. புள்ளைக நினைக்கும்னு கூட அவளுக்குச் சொல்லத் தோணலையேனு நா சாப்பிடறதை நிறுத்திட்டு அவளையேப் பார்த்தேன். அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுப் பார்க்க முடியல. தான் தட்டில இருந்து சாப்பாடு எடுத்து எனக்கு ஊட்ட வந்தா. 'சாப்பிடுங்கோண்ணா'னு சொன்னா. கண்ணுல நீர் கோர்த்தது. அவ ஊட்டிவிட்டதை சாப்பிட்டேன். அவளோட ஒரு குழந்தையாத்தான் வாழ்ந்து வரேன்னு மனசுக்குப் பட்டுச்சு.

வீட்டு வெளியில உட்கார்ந்தோம். இதமா காத்து வீசிச்சு. மதிய வேளையில தூங்கறதில்ல. 'மனுசாளைப் பத்தி ஒரு வார்த்தை கூட நீங்க எழுதலையேண்ணா'னு சொன்னா. இதோட நாற்பது தடவை மேல சொல்லியிருப்பா. சிரிச்சிட்டே எழுதுறேன் நாயகினு ஒவ்வொரு தடவையும் சொன்ன நா இன்னைக்கு 'எழுதத் தோணலை'னு சொன்னேன். 'ரங்கநாதருகிட்ட போக விருப்பமில்லையாண்ணா'னு சொன்னா. அழுகையா வந்துருச்சு. அவளை கட்டிப்பிடிச்சு சின்ன புள்ளை போல அழ ஆரம்பிச்சிட்டேன். பதறிப் போய்ட்டா. அவளும் அழ ஆரம்பிச்சிட்டா. நா அழுதா தாங்கமாட்டா. வீணா அவளை கவலைப்படுத்திட்டோமேனு அவ மரத்து நிழலுல சொன்னதை அழுகையில இருந்து மீண்டு வந்து சொன்னேன். 'நீங்க எழுதலையினாலும் ஒருநாள் போயிருவோம்ண்ணா, ரங்கநாதர் காத்துண்டே இருக்காருண்ணா, எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி இதுக்காக சின்ன குழந்தையாட்டம் அழலாமாண்ணா'னு கன்னத்தில திரண்டு நின்ன கண்ணீரை துடைச்சிவிட்டா.

அப்பதான் எனக்கு உறைச்சது. எழுதாம இருந்தாலும் போயிட்டா என்னோட வீட்டுக்காரியோட ஆசையை நிறைவேத்தாம போயிருமேனு 'இரு நாயகி'னு அந்த நோட்டையும் பேனாவும் எடுத்துட்டு வந்து அவ பக்கத்தில உட்கார்ந்தேன். எழுத ஆரம்பிச்சேன்.

மனிதர்கள் ஆசையும், பாசமும், அன்பும், பண்பும் நிறைந்தவர்கள். சகல உயிர்களிடத்திலும் கருணையுடன் இருப்பவர்கள். வேற்றுமையுணர்வு அன்பினை விரட்டியடித்துவிடும் என்பதை அறிந்து கொண்டவர்கள். அன்பினை அமிழ்த்தி வைக்கும் வேற்றுமை எண்ணத்தை மனதில் எழவிடாமல் பாதுகாப்பாக வாழ்ந்து வருபவர்கள்.

என் வீட்டுக்காரிக்கிட்ட காட்டினேன். வாசிச்சா. வாசிச்சிட்டு மனுசாளைப் பத்தி அருமையா எழுதி இருக்கேள்ண்ணானு சொல்லி என் கையை எடுத்து கண்ணுல தொட்டுக்கிட்டா. 'இதே மாதிரி தொடர்ந்து எழுதி வாங்கோண்ணா'னு கொஞ்ச நேரத்து முன்னால எனக்கிருந்த கவலையெல்லாம் விரட்டிவிட்டா. 'இப்ப இது போதும் நாயகி'னு சொன்னேன். சிரிச்சா.

அப்போ வீட்டு முன்னால காரு வந்து நின்னது. காரில இருந்து என்னோட இரண்டாவது கடைசி பொண்ணு ரங்கநாயகியும் அவளோட வீட்டுக்காரர் ரங்கப்பிரியனும் என் பேரன் கோபிநாதனும் வந்து இறங்கினா. இறங்கினதுதான் தாமசம் தாத்தா பாட்டினு அந்த இரண்டு வயசு பையன் எங்களைப் பார்த்து தள்ளாடி வந்தான். எனக்கும் என் வீட்டுக்காரிக்கும் அத்தனை சந்தோசம்.வந்தவா இரண்டு பேரும் எங்க காலுல விழுந்து ஆசிர்வாதம் பண்ணச் சொன்னா. பேரனும் எங்க காலுல விழுந்தான். என் வீட்டுக்காரி பேரனைத் தூக்கி கொஞ்ச ஆரம்பிச்சிட்டா.

நலம் விசாரிச்சிக்கிட்டோம். சாப்பாடு பரிமாறினோம். போன வருசம் வந்தவங்க. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். என் வீட்டுக்காரிகிட்ட 'இந்தாம்மா'னு கையில பணக்கட்டு தந்தா சின்னவ. வருசம் வருசம் கேட்கறதைப் போல 'டிவி வாங்கித்தரவா'னு என்கிட்ட கேட்டா. நா வேணாம்னு சொல்லிட்டேன். என் வீட்டுக்காரியோட காலை அமுக்கிவிட்டுக்கிட்டேதான் பேசிட்டு இருந்தா. இப்படித்தான் தகவல் எதுவும் தெரிவிக்காம வந்துருவா.

நாங்க ஐஞ்சு பேருமா நின்னு இந்த வருசமும் போட்டோ எடுத்துக்கிட்டோம். நானும் என் மாப்பிள்ளையும் பேரனும் வெளியில உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். என் வீட்டுக்காரியும் பொண்ணும் உள்ளே பேசிட்டு இருந்தா. மாப்பிள்ளை அவரோட தங்கி இருக்க கூப்பிட்டார். லீவு கிடைச்சா இங்க வந்து தங்குங்கனு சொன்னேன். ரங்கநாதரை விட்டு எங்கும் போக விருப்பமில்லைனு திரும்பவும் சொன்னேன். அமைதியா இருந்துட்டார்.
சாயந்திரமா கிளம்பிட்டாங்க. என்னை கவனிக்கச் சொல்லி என் வீட்டுக்காரிகிட்டயும், என் வீட்டுக்காரியை கவனிக்கச் சொல்லி என்கிட்டயும் சொன்னவ கலங்கினா. என் வீட்டுக்காரியை கட்டிப்புடிச்சி கொஞ்ச நேரம் நின்னா. அதுவரைக்கும் அந்த நோட்டு யார் கண்ணுலயும் படாம வெளியில செளக்கியமா இருந்தது.

வெளியில வந்த என் பேரன் அந்த நோட்டை எடுத்து நா எழுதுன பக்கத்தை கிழிச்சிட்டான். சின்னவாவும் மாப்பிள்ளையும் என் பேரனை இப்படிச் செய்யக்கூடாதுனு சொல்லி அன்போட கண்டிச்சா. எனக்கு பெருமிதமா இருந்தது. அவங்களை அனுப்பி வைச்சிட்டு அந்த பக்கத்தை தனியா எடுத்துட்டு மறுபடியும் எழுதி வைச்சேன். ஸ்ரீரங்கநாதர் சந்தோசப்பட்டிருப்பார். கோவிலுக்கு சேவிக்க கிளம்பினோம். நீங்களும் வாரீங்களா?

(தொடரும்)

3 comments:

வடுவூர் குமார் said...

வருகிறோம்....தொடர்ந்து.
புது மாதிரியான எழுத்து படிக்க படிக்க சுவையாக இருக்கு.
இந்த காலத்தில் காலில் விழுந்து ஆசீர்வாதம் எல்லாம் எதிர்பார்க்க கூடாது,வெகு சிலரே வீட்டில் பெரியவர்களிடம் இந்த மாதிரி ஆசீர்வாதம் வாங்கிகிறார்கள்.

வடுவூர் குமார் said...

இந்த மாதிரியா பொட்டியை திறந்து வைத்திருக்கிறீர்கள்,ஜாக்கிரதை!!

Radhakrishnan said...

வணக்கம் குமார் அவர்களே. உங்களை இங்கே சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கருத்துச் சுதந்திரத்தை எழுத்துச் சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்துவார்கள் என்ற ஒரு நம்பிக்கையில்தான் சுதந்திரமாக இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

எழுதத் தெரியும் என்பதற்காக ஏதேதோ எழுதத் தூண்டும் மனதிற்கு ஒரு கட்டுப்பாட்டினை விதித்துக் கொள்ளமாட்டார்களா என்ற ஏக்கமும் இல்லாமல் இல்லை.

மனதில் தோன்றுவதைப் பதியட்டும், பிறிதொரு காலத்தில் தான் எழுதியதைப் படிக்கும்போது அவர்களது மனநிலை என்னவென அவர்களே அப்போது சொல்லட்டும். தனக்குப் பிடிக்காத ஒன்று இருக்குமெனில் அதனை அன்புடன் கண்டிக்கும்போது அதில் அர்த்தம் அதிகமே நிறைந்து இருக்கும்.

என்னை எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி குமார் அவர்களே. மகிழ்கிறேன்.