Wednesday 4 February 2009

லெமூரியாவும் அட்லாண்டிஸும் - தொடர்கதை

அத்தியாயம் 1

அழகிய கிராமம் அது. அவ்வளவுதான் அந்த கிராமத்தைப் பற்றி சொல்ல முடியும். இதற்கு மேற்கொண்டு சொல்லனும்னா கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து நிற்காம எழுதும் தாளினை அழிச்சிப் போட்டுரும். போன வருசம் அங்கு போய் இருந்தேன். அப்பொழுது எனக்கு மனதில் ஏற்பட்ட வலியை என்னனு சொல்றது. மெளனமாக இருந்துட்டு மெளன அஞ்சலி செலுத்திட்டு வந்துவிட்டேன்.

இன்னைக்கு இந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகிட்டு சாலையில் செல்லும் வாகனங்களையும், மனிதர்களையும், வானத்தில் பறக்கும் பறவையையும், காற்றினையும், அந்த ஸ்ரீரங்கநாதர் குடிகொண்டிருக்கும் கோபுரத்தையும் பார்த்துக்கிட்டு பொழுதைப் போக்கிக்கிட்டு இருக்கேன். அப்பப்போ மனதில் தோணுறதை எழுதி அதனை பத்திரமாக பாதுகாத்துட்டு வரேன்.

இந்த எழுத்து இப்போ எனது ஐந்தாவது எழுத்து. எனக்கு அறுபத்தி ஐந்து வயதிருக்கும், அப்போ எழுத ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் ஒரு கதை என எழுதி வரேன். அதற்கு முன்னர் எதுவும் எழுதத் தோணலை. எதையாவது படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு மிகவும் மனதிற்கு பிடித்து இருந்திச்சினா அதனை அப்படியே சேகரித்து வைச்சிருவேன்.

என் வீட்டுக்காரி 'இதெல்லாம் எதுக்கு' எனக் கேட்கும்போது 'நம்ம பிள்ளைகளுக்கு உதவும்னு' சொல்லி அவளை சமாதானப்படுத்தி விடுவேன். 'பேப்பர்காரனுக்கு போட்டாக்கா ஏதாவது தேறும்னு சொல்வாள், நீ போட்டுருக்க நகையை வித்தாக்கூட இந்த பேப்பர் எல்லாம் கிடைக்காது' னு நான் சொன்னதும் நகையைப் பாதுகாக்க வேண்டி என்னை இந்த பேப்பர்களை எல்லாம் பாதுகாக்க வைச்சிட்டா. அப்படி பரண்மேல போட்டு வைக்காம என் அறையெல்லாம் அடுக்கி வைச்சிருக்கிற விசயங்களை திரும்ப எடுத்து பார்க்கிறதுல்ல ஒரு தனி அலாதிப் பிரியம் வந்து சேர்ந்துரும்.

நம்ம பிள்ளைகளுனு சொன்னதும்தான் எனக்கு அவங்களைப் பத்தி ஒரு வரியாவது சொல்லனும்னு தோணுது. இரண்டு பையன், இரண்டு பொண்ணு, எல்லோருக்கும் திருமணம் நடத்தி வைச்சிட்டேன். அற்புதமா வாழ்ந்துட்டு இருக்காங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும். அதுக்கு மேல அவங்களைப் பத்தி சொன்னா எனக்கு கை கால் எல்லாம் தழுவறதுக்கு எவரும் இல்லாம, உரிமையா சத்தம் போட்டு பேச முடியாம இருக்கற நிலையை நினைச்சி பேனாவை தூக்கிப் போட்டுட்டு பேசாம உட்கார்ந்துருவேன். அதனால வேண்டாம்.

இதோ காபி கொண்டு வந்து வைச்சிட்டு போறாளே, இவதான் என் வீட்டுக்காரி. இப்போ அவளுக்கு அறுபத்தி எட்டு வயசாயிருச்சி. எப்பவும் குறையாத அன்பு. எங்க வீடு எப்படி இருக்கும்னு சொல்லனும்னா உங்க வீடு எல்லாம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்னு நினைச்சிக்கோங்க, அப்பதான் என்னை நீங்க எல்லாம் ஒரு நாள் பார்க்க வரப்போ உங்க வீட்டுல இருக்கறமாதிரி உணர்வீங்க. வீட்டுக்காரியைப் பத்தி ரொம்ப புகழ்ந்தா, 'வீட்டுல எலி, வெளியில புலி' னு சிரிப்பீங்கதான. ம்... இருக்கட்டும்.

முதன் முதல்ல நான் எழுதின கதை ஒரு நாயைப் பத்தி எழுதினேன். அவ்வளதான் சொல்ல முடியும், வேணும்னா எங்க வீட்டுக்கு நீங்க வந்தா எடுத்து காட்டுறேன். இரண்டாவது கதை ஒரு ஆட்டைப் பத்தி எழுதினேன். அப்புறம் மூணாவது கதை கோழியைப் பத்தி எழுதினேன். நாளாவது கதை மாட்டைப் பத்தி எழுதினேன். ஒவ்வொரு கதையும் பத்துப் பக்கம் மட்டும்தான் எழுதி இருந்தேன். அதுல எல்லாம் முற்றும்னு போட்டு வைச்சதுக்கு அப்புறம் தான் வேறு வேலை செய்யப் போவேன். இப்ப எழுதற கதையில முற்றும்னு போட முடியாது. வேறு வேலை செய்ய போகவும் முடியாது. உங்ககிட்ட அப்பப்போ பேசிட்டே இருக்கப் போறேன். காபி குடிக்கப் போறேன், நீங்களும் குடிக்கிறீங்களா?

(தொடரும்)

1 comment:

Radhakrishnan said...
This comment has been removed by the author.