Thursday 12 February 2009

தலைவிதி தலைமதி - 4 பிரார்த்தனை நோய் தீர்க்குமா?

பிரார்த்தனையினால் நோயினால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என கண்டறிய ரேண்டோல்ப் பைர்ட் எனும் இருதயப்பிரிவு மருத்துவர் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார். 393 இருதய நோயாளிகளை அவர்களின் அனுமதியுடன் சான்பிரான்ஸிஸ்கோ மருத்துவமனையில் உள்ள இருதயப்பிரிவில் ஆகஸ்ட் 1982லிருந்து மே 1983 வரை அனுமதித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

ஆராய்ச்சியில் பல விதம் உண்டு. தரப்படும் மருந்து,

அ) கொடுப்பவருக்கும், சாப்பிடுபவருக்கும் தெரியும்.

ஆ) இருவரில் ஒருவருக்கு மட்டுமே தெரியும்

இ) எவருக்குமே தெரியாது (இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத ஒருவருக்கு மட்டுமேத் தெரியும்)

மேலும் தோராயமாக நோயாளிகளைப் பிரிப்பது. அதாவது நோயின் சீற்றம் அறிந்து பிரிக்காமல் தோராயமாக பிரித்து ஆராய்ச்சி மேற்கொள்வது.

பைர்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தோராயாக நோயாளிகளைப் பிரித்து, பிரார்த்தனைக்கு உட்படுத்தப்பட்ட பிரிவு (192 நோயாளிகள்), பிரார்த்தனைக்கு உட்படுத்தாத பிரிவு (201 நோயாளிகள்) என பிரிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் இருக்கும் எவருக்கும். பைர்ட்டுக்கும் கூட யார் யார் எந்த பிரிவென தெரியாது. பிரார்த்தனைக்கு உட்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள நோயாளி ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவத்தில் தன்னை அர்பணித்துக்கொண்ட மூன்றிலிருந்து ஏழு நபர்கள் மருத்துவமனை வெளியில் தினமும் கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்வது என நியமிக்கப்பட்டார்கள். பைர்ட் தனது ஆராய்ச்சி முடிவினை ஐந்து ஆண்டுகள் பின்னர் 1988-ல் வெளியிட்டார். அந்த ஆராய்ச்சி முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அப்படி பைர்ட் என்னதான் முடிவினை வெளியிட்டார் என்றால் பிரார்த்தனைகளினால் நோய் தீர்வதில் முன்னேற்றம் இருக்கிறது என்று கூறினார். உடனே இது குறித்து விமர்சனம் எழுதினார் போஸ்னர் எனும் ஆராய்ச்சியாளர். கடவுள் இருதயப்பிரிவு பகுதியில் இருக்கிறாரா? எனும் தலைப்பிட்டார். பைர்ட் செய்த ஆராய்ச்சியில் பிழை இருக்கிறது என்றார். மேலும் பைர்ட் குறிப்பிட்டதையே ஆதாரமாக காட்டினார்.

பைர்ட் சொன்னது இது

'இரு பிரிவிலும் உள்ள நோயாளிகளுக்கும் பலர் பிரார்த்தனை செய்து இருப்பார்கள், அதனை கட்டுபடுத்த இயலாது மேலும் அவர்கள் இந்த ஆராய்ச்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் எனவே இந்த இரு பிரிவையும் சுத்தமான பிரிவுகளாக கணக்கில் கொள்ள முடியாது'

இதை எடுத்துக்காட்டினார் போஸ்னர். மேலும் பைர்ட் இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட எடுத்துக்கொண்ட காலகட்டம் ஆராய்ச்சிக்குப் பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள். பல மருத்துவ இதழ்கள் வெளியிட மறுத்து இருக்கக்கூடும், அதன் பின்னரே பைபிள் கூட்டம் அதிகமுள்ள பகுதிக்கு சொந்தமான இதழ் வெளியிட சம்மதித்துள்ளது என்பதை பைர்ட் மூலமாகவே நிரூபித்தார். இது போன்ற ஆராய்ச்சி வெளியீடு வருவதில் தவறில்லை, ஆனால் தவறான நோக்கம் கற்பிக்கப்படுகிறது என மிகவும் வன்மையாகவே கண்டித்தார். பைர்ட் முடிவுகளை விமர்சித்து பைர்ட் ஆராய்ச்சி அடிப்படையற்றது என்றும் கூறினார். பைர்ட் ஆராய்ச்சி முடிவுகளை பார்த்தபோது அப்படித்தான் இருந்தது. பைர்ட் தான் வெளியிட்ட கட்டுரைக்கு குறிப்பிட்ட தகவல் ஆராய்ச்சிகள் எல்லாம் பிழை என்றும் போஸ்னர் நிரூபித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபென் பேரட் என்பவர் சற்று ஒருபடி மேலே போய் 'நம்பிக்கை அடிப்படையில் நோய் தீர்வு பற்றி சில எண்ணங்கள்' என ஒரு கட்டுரை எழுதினார். அதில் பிரார்த்தனைகள் பற்றியும் சற்று குறிப்பிட்டுள்ளார், அதில் பைர்ட் ஆராய்ச்சியும் அடக்கம்!

2 comments:

கோவி.கண்ணன் said...

நம்பிக்கைகள் எண்ணங்களை உறுதிபடுத்தும், மனமும் உடலும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது அல்லவா ?

மனசு சரி இல்லை என்றால் சாப்பாடு இறங்காது.

அதேபோல் உடல் நலமில்லை என்றாலும் சாப்பாடு இறங்காது.

'ஒண்ணும் இல்லை...கண்டிப்பாக சரியாகிவிடும்...' என்று உறுதியாக நம்பும் மனதின் எண்ணங்களினால் உடலில் ஒரு தெம்பு கிடைக்கும்.

இதுதான் உண்மையே அன்றி, பிரார்த்தனை செய்பவர்கள் தேறுவார்கள், பண்ணாதவர்கள் தேறமாட்டார்கள் என்பதெல்லாம் கற்பனையே.

மற்றபடி தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கையை (செயற்கையாக) ஏற்படுத்திக் கொள்ள பிரார்தனை பயனளிக்கிறது எனலாம்.

Radhakrishnan said...

தங்களது அருமையான பார்வைக்கு எனது பணிவான வணக்கங்கள். மிக்க நன்றி.