Thursday 14 November 2013

இன்னுமொரு கிரகத்தில் மனிதர்கள்

எத்தனை கதைகள் வந்து இருக்கும், எப்படி எல்லாம் மனிதர்கள் கற்பனையில் வேற்று கிரகவாசிகள் வந்து போய் இருப்பார்கள். உயிரினங்கள் பூமியில் இருந்து தோன்றி இருக்காது எனவும்,வேறு ஒரு கிரகத்தில் இருந்தே வந்து இருக்க கூடும் என்றே ஒரு கோட்பாடு உண்டு.

இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் கிட்டத்தட்ட பத்து பில்லியன்கள் வருடங்கள் முன்னர் தோன்றி இருக்க கூடும் என்பது ஒரு தோராயனமான கணிப்பு, இது கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பம் தோன்றியதற்கு முன்னர் உள்ள கணிப்பு. இன்றுவரை பலரும் வேறு கிரக உயிர்கள் சாத்தியம் என்றே நம்புகிறார்கள். ஆனால் இதுவரை அப்படி கிரக உயிர்கள் இருப்பதாக எந்த ஒரு அடையாளமும், குறிப்புகளும் கிடைக்கவில்லை.

தேவலோகம், இந்திரலோகம் என்றெல்லாம் எதை வைத்து கற்பனை செய்தார்கள் என புரியாத புதிராக இருக்கிறது. ஒருவேளை அப்படி இருந்து அவை எல்லாம் பிற்காலத்தில் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டதா என எந்தவொரு அடையாளம் இல்லை. வைகுண்டம் எல்லாம் எங்கே இருக்கும் என்றே மிகவும் யோசனையாக இருக்கிறது. இவை எல்லாம் கற்பனை என்றே புறந்தள்ளிவிட முடியாது. புராணங்கள் கணக்குப்படி அன்றைய கால கட்ட மனிதர்களின் வயது காலம் பன்மடங்கு இருந்தது என்றே குறிக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் பூமிக்கு என்று மட்டுமே ஒரு சிறப்பு தன்மை இல்லை, இதைப்போல பல கிரகங்கள் பிரபஞ்சத்தில் உண்டு என சொல்வது புராணங்கள் அல்ல, மாபெரும் அறிவியலாளர்கள். வியாழனின் கிரகத்தில் ஈரோப்பா நிலா, சனி கிரகத்தின் என்செலாடஸ் எனும் நிலா போன்ற இடங்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

நவம்பர் நான்காம் தேதி 40 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் இருப்பதாகவும், அதில் 11 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் சூரியன் போன்ற நட்சத்திரங்களை சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்கள் முன்னர் வேற்றுகிரகவாசிகள் எவரேனும் தொடர்பில் உள்ளனரா என அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மனு தரும் அளவிற்கு மனிதர்கள் சிலர் வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவே நம்புகிறார்கள்.

இந்த பூமி எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்தவர்களுக்கு அமெரிக்காவில் இருந்தவர்களை தெரியாது. ஆனால் மனிதர்கள் இங்கும் அங்கும் இருக்கவே செய்தார்கள். இவர்களுக்கான தகவல் தொடர்பு, வழித் தொடர்பு என எதுவும் இல்லை. ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனித சமூகம் உலகமெலாம் பரவியது என இருப்பினும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட முப்பது நாற்பது வருடங்கள் முன்னர் வெளிநாடு என்றாலே பெரிய விசயமாக கருதப்பட்டது. ஆனால் இன்று மூலை முடுக்கெல்லாம் எல்லா நாடுகளும் தெரிகிறது

இதே போலவே வேறு கிரகத்தில் நம்மை போலவே மனிதர்கள் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் தொலைவில் நாம் இல்லை. ஏனெனில் பன்னிரண்டு ஒளிவருடங்கள் தொலைவில் ஒரு பூமி போன்ற கிரகம் உள்ளது. ஒரு ஒளிவருடம் என்பது ஒரு வினாடிக்கு 300000000 மீட்டர்  என கணக்கில் சொல்லப்படுகிறது. இதை ஒருநாள், ஒருவாரம், ஒரு மாதம் ஒரு வருடம் என கணக்கில் கொண்டு பார்த்தால் மிக அதிக தொலைவு என்பது புலப்படும். மனித வாழ்நாள் குறைந்து போனதால்.பல விசயங்கள் சாத்தியம் அற்றதுதான்.

ஒரு உயிரினம் தோன்ற மிக முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், நைட்ரஜன், என்பதோடு பாஸ்பரஸ்,கந்தகம் தேவைப்படுகிறது. முக்கியமான வேதி வினைகள் நடைபெற தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை எல்லாம் இருந்துவிட்டால் உயிரினம் சாத்தியம் என்றே கருதப்படுகிறது.

நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்து இருக்கலாம் என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கை.இந்த அறிவியல் எப்படி வேண்டுமெனில் தேடட்டும்,

இன்னுமொரு கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ள, நாம் அவர்களை தொடர்பு கொள்ள இன்னுமொரு யுகம் ஆகலாம்.

 

No comments: