Tuesday 19 November 2013

அடியார்க்கெல்லாம் அடியார் 36

'யார் சொல்லி நீவீர் இங்கு வந்தீர், உம்மை விட்டு பிரிந்தே யாம் இந்த நிலை எடுத்துக் கொண்டோம், எதற்கு எம்மை தேடுகிறீர்''

''ஒழுங்கா பேசுங்கோ, நீங்க எதுக்கு அந்த வைஷ்ணவியை ஏமாத்தினேள், இப்போ அந்த பொண்ணு வேற கல்யாணம் பண்ணிக்கப் போறா, அதான் உங்களோட நான் வாழ முடிவு பண்ணி இருக்கேன், இந்த சிவன் வேசம் கலைச்சிருங்கோ'' 

''யான் இதில் இருந்து பௌத்த வேடம் தரிக்க இருக்கிறேன், நீயும் பௌத்த வேடம் தரித்து கொள். எனது அடியாராக இருக்க சம்மதம் எனில் தொடர்ந்து ஏதும் பேசாமல் என்னுடன் வந்து கொண்டிரு, இல்லையெனில் என்னைப் பெற்றெடுத்தவர்களுடன் நீயும் சென்று விடு''

கண்களில் கண்ணீர் பொங்கிட ருக்மணி மதுசூதனனைப் பார்த்தாள். 

''ஏனிப்படி ஒவ்வொரு வேடம் தரித்து கொண்டு ஊர் ஊராக அழையனும், நாம ஊரில போய் சேர்ந்து வாழலாம்''

மதுசூதனன் ருக்மணியை பரிதாபமாக பார்த்தான். 

''எமது அடியாராக வருவீர் என்றே எம்மை எம்முடன் அழைத்தோம், விருப்பம் இல்லையெனில் திரும்பவும்'' என மதுசூதனன் சொன்னதும் கோபம் கொண்ட ருக்மணி விறுவிறுவென வைஷ்ணவி வீடு நோக்கி போனாள். மதுசூதனன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். 

''எங்கே அவன்'' என மதுசூதனின் பெற்றோர்கள் கேட்டார்கள். அவா என்னோட வாழ மாட்டேன்னு சொல்லிட்டு போறார் என அழுதாள் ருக்மணி. வைஷ்ணவிக்கு என்ன செய்வது என புரியவில்லை. திடீரென் யோசித்தவளாய் வேகமாக வீட்டிலிருந்து வெளியில் ஓடினாள். மதுசூதனனை கண்டு இடைமறித்தாள். கதிரேசனும், ருக்மணி, பெற்றோர் என  உடன் ஓடி வந்து சேர்ந்தனர். 

''உனக்கு என்ன வேணும், இப்போ என்னை பொண்ணு பார்க்க வந்தது இவங்கதான், இப்ப சொல்லு'' என்றாள் வைஷ்ணவி. 

''புத்தி பேதலித்து வந்து இருப்பார்கள், யாம் இனி திருமணம் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. உம்மை இனிமேல் எம்மால் காதல் புரியவும் முடியாது, வேணுமெனில் நீவிரும் அடியாராக எமக்கு வரலாம்'' என நடந்தான் மதுசூதனன். 

''நில்லுடா மதுசூதனா'' என்றான் கதிரேசன். அவன் போட்ட சப்தத்தில் அங்கே நடந்து கொண்டு இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். உன்னை போலீசில் புகார் கொடுத்து ஜெயிலுல அடைச்சிருவோம், ஜாக்கிரதை.

''தாராளாமாக செய்யலாம் எமது அடியாரே, நீவிர் முதலில் திருமண பந்தம் விட்டு எம்மோடு வாரும், யாம் நாளையில் இருந்து புத்த பிட்சுவாக மாற்றம் கொள்ள இருக்கிறோம். இந்த இந்தியாவில் பௌத்தம் மீண்டும் தழைக்க யாமே அவதாரம் எடுத்து உள்ளோம். இனி எமது பெயரை திரிகோடன் என்றே மாற்றம் செய்வோம்'' என்றான் மதுசூதனன். 

''உனக்கு பைத்தியமாடா பிடிச்சி இருக்கு, இதோ இந்த ரெண்டு பொண்ணுகளோட வாழ்க்கையை பத்தி யோசிச்சியா, உன்னை காதலிச்ச ஒரே காரணத்திற்கு உன்னை மறக்க முடியாம அதோ அவ தள்ளாடிட்டு இருக்கா, இதோ இவங்க உன்னை கல்யாணம் பண்ணின பாவத்திற்கு உன்னை தேடி வந்து நிக்கிறாங்க, புரிஞ்சிக்கோடா'' 

''யாம் சொன்னது சொன்னதுதான், அனைவரும் எமது அடியாராக மாறிவிடுங்கள், இன்று இரவு சிவன் கோவிலில் ஒரு சொற்பொழிவு இருக்கிறது அங்கு வந்து எம்மை சந்தியுங்கள், அங்கே உங்கள் அனைவரையும் சிந்திக்க வைப்பேன். 

அவன் போகட்டும் விடுப்பா, என்றே மதுசூதனின் தந்தை சொன்னார். யாரும் எதிர்பாராத விதமாக மதுசூதனின் தாய் அவனது கால்களை பற்றி கதறினார். எங்க கூட வந்துருப்பா எனும் குரல் கதிரேசனை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. 

மதுசூதனன் குனிந்து அன்னையின் கரம் பற்றி தூக்கினான். ''யாம் இனி திரிகோடன், எம்முடன் நீவிர் வந்தால் சிவன் ஆலயத்தில் ஓரிடம் உங்களுக்கு தர செய்து அங்கே எமது அடியாராக தொடரலாம், இதை மீண்டும் மீண்டும் எம்மால் சொல்ல இயலாது. வருவது எனின் வாருங்கள், இல்லையேல் கோவிலில் சந்திப்போம். மதுசூதனன் விறுவிறுவென நடந்தான். கதிரேசன் அவனை விரட்டி கொண்டு போனான். 

(தொடரும்) 




No comments: