Wednesday 3 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 5

பகுதி - 4

5. வாசனின் விவசாயம் 

வாசன் பெரியவரை சந்திக்கச்  சென்றான். அவரிடம் சாத்திரம்பட்டி பற்றி கேட்டுக்கொள்ள அதிக ஆர்வம் இருந்தது. இருப்பினும் அதை கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். பெரியவரின் வீட்டில் வேறு இருவர் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே செல்வதா, வேண்டாமா என முடிவு செய்வதற்குள் பெரியவர் வாசனை அழைத்தார். 

''வாசா உள்ளே வாப்பா''

அழைத்தபின்னர் செல்லாமல் இருப்பது சரியில்லை என உள்ளே சென்றான் வாசன். அங்கிருந்த அந்த வேறு இரண்டு  நபர்கள் வாசன் அப்படிங்கிறது நீதானா என்பது போல பார்த்தார்கள். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் வாசன் அமர்ந்தான். 

''தம்பி, என்ன வேலை பார்க்கிறீங்க''

நல்ல முறுக்கலான மீசை வைத்து பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் கொண்ட நடுத்தர வயது மிக்க ஒருவர் கேட்டார். 

''விவசாயம் பார்க்கிறேன்''

''விவசாயமா, தம்பிக்கு படிப்பு ஏறலையோ?''

அந்த கேள்வியை வாசன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புன்முறுவல் செய்தான். அதற்குள் பெரியவர் குறுக்கிட்டார். 

''ரொம்ப நல்லா படிக்கிற பையன், பன்னிரண்டாவதுல கூட ஆயிரத்து நூறு மார்க்கு. விவசாயம் மட்டுமே பார்ப்பேன் அப்படின்னு முடிவு பண்ணிட்டார்''

''யாருயா இவனுக்கு பொண்ணு கொடுப்பா''

மெல்லிய தேகம் கொண்ட சற்றே வயதான மற்றொரு நபர் சொன்னதைக் கேட்டு வாசன் மேலும் சிரித்துக் கொண்டான். 

''பொண்ணு எல்லாம் நிச்சயம் பண்ற அளவுல இருக்கு. அதுவும் டாக்டர் படிக்கிற பொண்ணு'' 

பெரியவர் சொன்னதும்தான் தாமதம் இருவரும் கலகலவென சிரித்தார்கள். 

''பொருந்தாத மாட்டைப் பூட்டினா வெள்ளாமை வீடு வந்து சேராது. படிக்காத இவனுக்கு டாக்டர் பொண்ணு, அந்த பொண்ணு கொடுக்கிற இளிச்சவாயன் யாருன்னு பார்க்கணுமே''

சிரிப்பை நிறுத்தி இப்படி உதிர்த்த வார்த்தைகள் அவரைப்போலவே சற்று முரட்டுத்தனமாக இருந்தது. 

''இந்த ஊரில ஒரு டிராக்டர் காணோம், எல்லாம் மாட்டு உழவுதானா, மாட்டுப்பயக  இருக்கிற ஊருல மாடுதான் உழவு போல''

அவர்கள் நிறுத்தாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். வாசனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. 

''ஐயா, நான் கிளம்புறேன், பிறகு பேசலாம்''

வாசன் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன்னர் பெரியவர் அந்த இருவரையும் வீட்டைவிட்டு வெளியேப் போகச் சொன்னார். 

''தராதரம் தெரியாம உங்களை இங்க உட்கார வைச்சிப் பேசினேனே அது என்னோட தப்பு. இந்த வாசன் தான் ஊர்த்தலைவர். நீங்க என்ன வியாபாரம் பார்க்க நினைச்சாலும் இவரோட அனுமதி இல்லாம பண்ணக்கூடாது. உங்க புத்தி எல்லாம் சரியில்லை. கிளம்புங்க''

பெரியவரின் சற்று கோபமான குரல் கண்டு அவர்கள் ஏதும் திடுக்கிடவில்லை. 

''அப்படி யாரு இருக்கானு கேட்கத்தான் கேட்டோம். இவர் இப்படியே விவசாயம் பண்ணினா டாக்டர் பொண்ணு விவசாயம் பார்க்குமா, இல்லை இவரோட பிள்ளைகதான்  விவசாயம் பாக்குமா. டாக்டர் பிள்ளைக மாடு மேய்க்கிறத உங்க ஊருல ஏத்துக்குவாங்கள. ரொம்ப கோபபட்டு பேசுறீரு. ஏன்டா வாசு நீ இத்தனை மார்க்கு வாங்கி ஒரு டாக்டர், எஞ்சின்னீர் படிக்காம இப்படி வேகாத  வெயிலுல விவசாயம் பாக்கற, உனக்கு புத்தி ஏதும் கழண்டு கீழ விழுந்துருச்சா, ஒரு அம்பது ஏக்கர் நிலத்தை இந்த ஊருல வளைச்சி போட்டுரலாம்னு தான் வந்தோம். நீ அனுமதி கொடுக்கலன்னா என்ன ஊருல இருக்கவங்ககிட்ட பேசி வாங்கிக்கிறோம்''

பெரியவர் எழுந்தார். 

''இங்க யாரும் உங்களுக்கு நிலம் தர மாட்டாங்க, நீங்க கிளம்பிப் போகலாம்''

''உங்களைப் பார்க்கச் சொன்னாங்கனு வந்தா, மரியாதை இல்லாமல் நடந்துக்கிறீரு. இதே ஊருக்குள்ள  நாங்க வரத்தான் போறோம். உங்களை என்ன பண்றோம்னு பாரு. வாடா போலாம்''

அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் வெளியேறினார்கள். வாசன் அவர்களை பின்தொடர்ந்து சென்றான். 

''உங்களுக்கு என்னப்  பிரச்சினை''

''ஒரு பிரச்சினையும் இல்லை. உன்னப் போல முட்டாப்பயக எல்லாம் விவசாயம் பாக்கத்தான் லாயக்கு. நீ எல்லாம் எப்படிடா ஊர்த்தலைவர் ஆன. உனக்குப் படிப்பு வரலைதானே. ஆயிரம் இரண்டாயிரம் மார்க்குன்னு பொய் சொல்றியா''

அந்த நேரம் பார்த்து முத்துராசு அங்கே வர அவர்கள் பேசியது அவர் காதில் விழ சரியாக இருந்தது. என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக அடி அடித்தார். வாசன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. என்ன ஏது  என விசாரிக்காமல் அவர்கள் இருவரையும் பலமாகத் தாக்கினார்கள். வாசன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. 

''இவனுங்க ஊர் ஊராப் போய்  ஆளை ஏமாத்துற கூட்டம், திருட்டுப் பயல்க''

''என்ன அண்ணே சொல்றீங்க''

''டேய் அவனுகளை அந்த மரத்தில கட்டிப்போடு, தோலை உரிச்சிருறேன். இவனுக பத்தி உனக்குத் தெரியாது. இவனுக கூட்டம் பெரிசு''

சத்தம் கேட்டு பெரியவர் வெளியே வந்துப் பார்த்தார். 

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, யார் இப்படி இவங்களை அடிச்சது. முத்துராசு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி வைச்சிருக்க''

''ஐயா, இவனுக பொல்லாதவனுக. ஊருக்குள்ள குடியேறி அந்த ஊரையே உலையில் போட்டுருவானுக''

''அப்படி எங்க நடந்திச்சி. உனக்கு எப்படி விபரம் தெரியும்''

''நீங்க சாரங்கன் கிட்ட பேசிப் பாருங்க ஐயா''

''அவன்கிட்டயா?''

''ஆமாயா, சாரங்கனை கூப்பிட்டு பேசுங்க''

முத்துராசு சொன்னது கேட்டு பெரியவர் குழப்பம் கொண்டார். அதற்குள் வாசன் அவர்கள் இருவரிடம் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்தான். 

''எங்களை அடிச்ச இந்த ஊரை கொளுத்தாம விடமாட்டோம்'' என வலியின் ஊடே அவர்கள் பேசியது முத்துராசுவிற்கு பெரும் எரிச்சல் உண்டாக்கியது. அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து முரட்டுத்தோற்றம் கொண்டவரின் வாயில் சரியாக எறிந்தார். வாசன் அதிர்ச்சி அடைந்தான். 

''அண்ணே, போலிஸ் கேஸ் ஆகிரப்போதுண்ணே, விடுண்ணே''

''ராசு, என்ன பழக்கம் இது. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம. நாங்க எல்லாம் இங்க நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா'' பெரியவர் சற்று கோபமாகவே கண்டித்தார். 

''ஐயா, நீங்க இப்படி வரவங்க எல்லாரையும் மன்னிச்சி அனுப்புங்க, அவனுக இப்படியே வந்து வந்து போகட்டும். அன்னைக்கு அப்படித்தான் திருட வந்தவங்களை மன்னிச்சி அனுப்பினீங்க''

''ராசு''

பெரியவர் சப்தம் இட்டதும் முத்துராசு அமைதி ஆனார். 

''இங்க நடந்தது எல்லாம் உங்களை எச்சரிக்கத்தான். மற்றபடி உங்க மேல எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. ராசு, இவங்களை கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ''

அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். வாசன் தான் அவர்களை அழைத்துச் செல்வதாக அவர்களை அழைத்தான். அவர்கள் தாங்களாகவே செல்வதாக தடுமாறிச் சென்றார்கள். கூட்டம் அங்கிருந்து கலைந்தது. 

முத்துராசு தோட்டம் செல்வதாக கூறிக்கொண்டு அவர்களை வேறு வழி சென்று மடக்கினார். 

''பழி வாங்கணும்னு  இந்தப் பக்கம் இனிமே வந்த, நான் என்ன பண்ணுவேன்னு இப்ப காட்டினது விட பலமடங்கு இருக்கும். நீ நாராயணபுரத்தில பண்ணினது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா. சாரங்கன்கிட்ட சொல்லி வை. உன் கூட்டத்து ஆளுக எவனாச்சும் இந்த ஊருல குடி இருக்க வந்து குடி கெடுக்க நினைச்சான், நான் மனுசனா இருக்கமாட்டேன்''

எதுவும் சொல்லாமல் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். 

வாசன் தன்  தோட்ட  வேலைகள் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். வாசனுக்கு விவசாயம் பார்ப்பது அத்தனை தவறான காரியமா என யோசிக்க வேண்டும் போல் இருந்தது. என் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பார்களா? இந்த சுந்தரன் விவசாயம் பார்க்காமல் வெளியூர் போய் விட்டானே. மாதவி எதற்கு மருத்துவம் படிக்கச் செல்ல வேண்டும். 

ஊரில் விவசாயம் பார்த்த கொஞ்சம் சிலரில் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களாகவே  அவனுக்குத் தெரிந்து கொண்டு இருந்தது. கிராமங்கள் விவசாயம் நம்பி இருக்கிறது. விவசாயம் மழையை நம்பி இருக்கிறது. ஆனால் இந்த நிலத்தை எல்லாம் விலைக்கு வாங்கி அதில் தொழிற்சாலை எழுப்ப, வீடுகள் கட்டி விற்க ஒரு கூட்டம் இன்று அடி வாங்கியவர்களைப் போல அலைந்து கொண்டு இருக்கிறது. 

முத்தையா தனது நிலங்களை எல்லாம் விற்றுவிட்டு தனது பிள்ளைகளிடம் சென்று இருக்கப்போவதாக நேற்றுதான் மந்தையில் கூறிக்கொண்டு இருந்தார். இவரிடம் அதிகம் பணம் கொடுத்து அந்த நிலத்தை இவர்கள் கையகப்படுத்திக் கொண்டால் என்ன ஆவது என வாசன் யோசித்தான். அடிபட்டு போனவர்கள் நிச்சயம் திரும்புவார்கள். 

''என்ன யோசனை, மந்தையில் இன்னைக்கு என்ன பெரிய கலாட்டாவா. அந்த முத்துராசு கையை வைச்சிட்டு சும்மா இருக்கமாட்டானா''

தனது அப்பாவின் குரல் கேட்டு எழுந்தான் வாசன். 

''கிராமத்து நிலத்தை வாங்கி, அதில வீடு கட்டுற கூட்டம் பிரச்சினைப்பா''

''நானும் இப்பதான் கேள்விபடறேன். நீ அதை நினைச்சி வருத்தப்படாதே''

அப்பாவின் ஆறுதல் வார்த்தைகள் வாசனுக்கு இதமாக இருந்தன. அப்போது முத்துராசு வாசனை அழைக்க வந்தார். 

''வாசா, வா நாம போய்  அந்த சாரங்கனை என்ன ஏதுனு  விசாரிச்சிட்டு வருவோம்''

''இப்ப வேணாம்ணே, அவர்தானு  நமக்கு எப்படி தெரியும்''

''சொன்னாக் கேளு, பெரியவர்தான் உன்னை கூப்பிட்டு வரச்சொன்னார்''

வாசனுக்கு சாரங்கனை சந்திக்கப் போவதா வேண்டாமா என யோசனையாக இருந்தது. 

(தொடரும்) 
No comments: