Sunday 14 June 2015

நமது திண்ணை ஜூன் மாத இணைய சிற்றிதழ்

விளம்பரம் இல்லை என்றால் ஒரு பொருளைப் பற்றிய விசயம் அறிந்து கொள்ள இயலாது என்பதுதான் இந்த உலகம் அறிந்த உண்மை. விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் பல விசயங்கள் மக்களைச்  சென்று அடையவில்லை. அதே விளம்பரங்கள் மக்களை வெறுப்பேற்று விடுகின்றன.

நமது திண்ணை இந்த ஜூன் மாத சிற்றிதழ் விளம்பரமே இல்லாமல் வெளிவந்தது. இன்றைய காலத்தில் போராட்டங்கள் விளம்பர யுக்தியாக மாறி வருகிறது. வளர்ந்து வரும் இணைய இதழுக்கு போதிய ஆதரவு மிகவும் அவசியம், அப்படி இல்லாதபட்சத்தில் ஒருவித வெறுமை தோன்றும்.

சுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் மிகவும் அருமையாக இருக்கிறது. ஒரு பிராமணன் சாதி இல்லை என்று சொன்னால் சாதிக்கு எதிராகப் போராடினால் அவரை சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடாது என்பதுதான் இந்த தொடர் மூலம் நான் உணர்ந்து கொண்டது. நிறைய விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த தொடர் அமைவது மிகவும் சிறப்பு.

ஒரு சிறிய பறவை குறித்த பாடல் பரவசம் உமாகிரிஷ் அவர்களின் பார்வையில் மிகவும் பரவசமாக இருக்கிறது இந்த பாடல் எனது விருப்பப்பாடலும் கூட. பொதுவாக கவிஞர்கள்  என்ன மனநிலையில் எதை கற்பனை பண்ணி எழுதுவார்கள் என தெரியாதபோது இதுபோன்று விளக்கம் சொல்லும் பார்வை வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது, இதை இசைக்கும் சேர்த்துக் குறிப்பிடலாம்.

நிஷா அவர்களின் வெட்கம் மற்றும் மரணம் கவிதை ஒரு பெண்ணின் மனநிலையை வெகு சிறப்பாக விவரிக்கிறது. வார்த்தைகள் மிகவும் சரளமாக வந்து இருப்பதே நமக்கு பயணம் செய்ய ஏதுவாக  இருக்கிறது.

நச்சுனு சிரிங்க என்பதை நச்சுனு சிந்திக்க எனும் வகையில் அமைந்து இருக்கிறது. அதுவும் சதுரம் வட்டம் குறித்து திட்டுவது வெகு சிறப்பு. ஒவ்வொரு போட்டோக்களும் ஒரு கதை சொல்லும் வண்ணம் அமைந்து இருக்கிறது. எனது போட்டோ வரவில்லையே என ஆதங்கப்படும் அளவுக்கு இந்த பகுதி அமைந்து இருப்பது வெகு சிறப்பு.

கனல் கத்தியின் பச்சை உலகம் அருமை. ட்விட்டரில் எழுதப்படும் ஒவ்வொருவரின் எழுத்தை சிறப்பிக்கும் வண்ணம் இங்கு சேர்க்கப்பட்டு அழகுப் பார்க்கப்படுகிறது. ஓவியம் இன்னும் சிறப்பாக இந்த இதழில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை நல்லதொரு நாவல் என நம்பிக்கை கொண்டு வாங்கலாம். கார்த்திக் அவர்களின் இந்த நூல் குறித்த விமர்சனம் சிறப்பு. குருடன் பார்த்த யானை. நல்ல உவமை.

ஸ்ரீ அவர்களின் கோடைகால வெயிலும் ஆரோக்கியமும் கட்டுரை மிகவும் அவசியமான ஒன்று. மிகவும் பயனுள்ள கட்டுரை. இவர் ஒரு மருத்துவர் என்பதால் இந்த நமது திண்ணை சிற்றிதழில் மருத்துவ குறிப்புகள் நோய் குறிப்புகள் குறித்து தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். நமது இணைய இதழின் ஆசிரியர் இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

திண்ணைப் பாடகர் இன்னும் கேட்கவில்லை. மழலைப் பட்டாளங்கள் வெகு சிறப்பு. வழக்கம் போல நண்பர் ரவி அவர்களின் கொத்தவரைக்காய் புதுவிதம். சமைத்தால்தானே இது எல்லாம் தெரியும். டெல்லி கணேஷ் பற்றிய பல விபரங்கள் சிறப்பாகவே இருந்தது. ஆன்டீராய்ட் பற்றிய நாகராஜ் அவர்களின் குறிப்புகள் பலருக்கு உதவும். இறுதியில் ஆசிரியரின் சுருளிராஜன் பற்றிய தகவல்கள்.

இம்முறை சில பிரச்சினைகளைத் தாண்டி வெளிவந்து இருக்கிறது. இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு இன்னும் பல அரிய  விசயங்களுடன் இந்த நமது திண்ணை இதழ் சிறப்பாகத் தொடர வேண்டும்.

நன்றி.

No comments: