Wednesday 24 June 2015

வெட்டித் தருணங்கள் - 4 (டிவிட்டர் உலகம்)

பகுதி - 3   இனி... கதையில் வருவன எவரையும் குறிப்பிடுவன அல்ல. உங்களை குறிப்பிடுவதாக நீங்களாக நினைத்தால் ஒன்று மாறிக்கொள்ளுங்கள், கதையை மாற்ற இயலாது. 

4. ''நன்மையையும் தீமையும் கலந்த ஓர் நிழல் உலகம்''

ஒரு மாதம் நன்றாக கவனித்தேன். நிறைய படித்த மேதாவிகள் கண்ணுக்குத் தென்பட்டார்கள். அந்த ஒரு மாதத்தில் நான் அமைதியாக கவனித்தபோது ஒவ்வொருவனும் கேவலமாக நடந்து கொண்டதை இங்கே எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அப்போது நான் எதுவுமே எழுதாமல் இருந்தேன். ட்விட்டரில் டைம் லைன். நேரடி தகவல் தொடர்பு என இருவகை இருந்தது. இதில் என்னைப் பின்தொடர்ந்த ஒருத்தி என்னிடம் நேரடி தகவல் மூலம் படு கேவலமாக பேசினாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளின் நோக்கம் ஒரு விலைமகளை விட கேவலமாக இருந்தது. இவள் எல்லாம் படித்ததற்கு செத்துப் போயிருக்கலாம் என்றே எண்ணினேன். எனது ஆசைகளைத்  தூண்டி சபலம் கொள்ளும் கயமைத்தனம் அது. நல்லவேளையாக நான் எதுவும் திரும்பி பேசாமல் இருந்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. அது என்னவெனில் பேக் ஐடி எனும் மடத்தனம்.

அது என்னவென கேட்கிறீர்களா, அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் பெயர் கொண்டு அற்பத்தனமாக நம்மிடம் நடந்து கொள்வான். எனக்கு என் தலைவர் விஜய் பற்றியே பெருமை பேச நினைத்தேன். ஆனால் இப்படி ஒரு கேவலமான எண்ணம் கொண்ட கொடிய மிருகங்கள் நடமாடும் தளம்  ட்விட்டர் என எனக்குத் தெரியவில்லை. டிவிட்டருடன் சேர்த்து பேஸ்புக் திறந்து வைத்தேன். அதில் தானத்தலைவர் தங்கத்தலைவர் இளைய தளபதி விஜய் அவர்களின் படத்தை வைத்து கொண்டேன். ஒவ்வொரு பாடலாக அதில் எழுதுவது அப்போது வழக்கமாக்கி கொண்டேன்.

இந்த ட்விட்டரின் டைம் லைனில் பெண்ணின் கணவன், பிள்ளை, அம்மா அப்பா என கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் கண்டேன். ஹாஷ்  டாக் அதாவது எழுதி உலக அளவில் ட்ரென்டு  ஆக்குவது என இருந்தது தெரிய வந்தது. முதலில் =vijaysuperstar என ட்ரெண்டு பண்ணினேன். என்னைக் கண்டு பல விஜய் ரசிகர்கள் பின் தொடர்ந்தார்கள். அஜீத் ரசிகர்களின் மனம் என்னைக் கண்டு பொங்கியது. சிலர் என்னை அசிங்க அசிங்கமாக பேசினர் . நானும் அசிங்கம் அசிங்கமாக பேசி வைத்தேன். நான் எதற்கும் சளைத்தவன் அல்ல என என்னைக் கண்டு மிரள வேண்டும் என திட்டமிட்டேன். நிறைய தத்துவங்கள் எல்லாம் அதில் வலம்  வந்தன. அதில் சாக்கடை கல் பன்றி யானை கூட்டாஞ்சோறு கறிவேப்பிலை என்றெல்லாம் வெளியில் கேள்விப்பட்ட விஷயத்தை எழுதி  தான் பெரிய சிந்தனை முத்துக்களாக காட்டிக்கொண்டார்கள். தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ளும் கயமைத்தனம் கூட்டம் ஒன்று இருந்தது.

இவர்களில் எவரேனும் நல்லவர் கண்ணுக்குத் தென்பட மாட்டாரா என நினைத்தபோது ஒரு பெண் பழகினாள். ட்விட்டரில் 140  எழுத்துகள் மேல் எழுத இயலாது. நேரடி தகவல் பண்ணாமல் டைம் லைனில் எழுதினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''தாமரைச்செல்வி, நீ எந்த ஊரு?''

''மதுரை, நீ எந்த ஊரு?''

''மதுரை''

''மதுரையில் எங்க?''

''மேலமாசி வீதி''

''நானும் மேலமாசி வீதி''

''மேலமாசி வீதியில் எங்க?''

அவ்வளவுதான். அத்துடன் அவளுடன்  பேசுவது நின்று போனது. அதற்கடுத்து அவளது ஐடி என்பார்கள் அதை காணவில்லை. என்னவென அறிந்து கொண்டபோது டீஆக்டிவேட் அதாவது ட்விட்டர் கணக்கை மூடிவிடுவது. ஆனால் தினமும் தானைத்தலைவர் விஜய் அவர்களை கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் அதிகரித்து வந்தது. எதற்கு எடுத்தாலும் தலைவர் விஜய் அவர்களை பேசிய கூட்டம் மிரளும்படி எனது நடவடிக்கை இருந்தது.

அப்போதுதான் ஒரு பெண் பச்சை பச்சையாக டைம் லைனில் எழுதினாள். அருவருக்க வைக்கும் வார்த்தைகள். அவளது செயல்களைப் போற்றிப் பாட ஒரு கூட்டம் உருவாகியது. ஆண்கள்தான் பச்சையாக எழுத வேண்டுமா என அந்த பெண் எழுதியதை ஆதரிக்கும் கூட்டம். ஆனால் அந்த பெண் பெண்ணல்ல ஆண் என்றே பலர் சொல்லிக்கொண்டார்கள்.

முகம் மறைத்த சுதந்திரம் வக்கிரம் என்ற வார்த்தை ட்விட்டர் கற்றுத் தந்தது. வக்கிரம் நிறைந்த கூட்டம் ஒன்று இருந்தது. இணையம் ஒரு ஆபத்தானது இந்த ட்விட்டர் கொடியது என எனக்குள் எண்ணம் தோன்றியது.

அப்போது திடீரென் வேறொரு பெண் வந்து பேசினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''சுந்தரி, உன் ஊரு என்ன?''

''மதுரை, மேலமாசி வீதி,உனக்கு''

''திருச்சி, சுப்பிரமணியபுரம்''

எனக்கு இவள்தான் தாமரைச்செல்வி என ஒரு சந்தேகம் வந்தது. சரி என அவளது நேரடி தகவல் சென்று நீதானே தாமரைச் செல்வி என்றேன். யார் எது என சமாளித்து பேசியதால் பேசாமல் விட்டுவிட்டேன்.

தினமும் அஜீத் விஜய் சண்டை. அதோடு ராஜா ரகுமான் சண்டை. அதையும் தாண்டி ஆத்திக நாத்திக சண்டை. இந்த எல்லா சண்டைகளிலும் நான் பங்கேற்று கொண்டு இருந்தேன். விஜயபாண்டி என்றாலே வந்துட்டாண்டா என சொல்லும் அளவுக்கு இருந்தது. எனக்கு பெண் ரசிகைகள் ஆதரவு அதிகம் இருந்தது. இதில் பெண்கள் சேர்ந்து சரிக்கு சரியாக எழுதினார்கள். நான்கே மாதத்தில் ஐந்தாயிரம் பேர் பின்தொடர்ந்தனர். நான் இருநூறு மேல் எவரையும் பின்பற்றாமல் இருந்தேன்.

ஆனால் டாக், டைம்லைன் , லிஸ்ட் என பிறரின் எழுதுவதை படித்து கண்டமானிக்கு எழுதினேன். அப்போது ஒழுக்க சிகாமணிகள் இப்படி எழுதினால் க்ரைம் பாயும் க்ரைம் ஆயும் என்றார்கள். என்னை பேசியவனை திருத்தப் பாருங்கடா என சொன்னதும் ஒதுங்கினார்கள். நான் சட்டத்திற்கு புறம்பாக எழுத ஏதும் அங்கு இல்லை.

அங்கொன்று இங்கொன்று பார்க்கையில் பெண்ணியவாதிகள் என சிலர் சொல்லிக்கொண்டு அலைந்தார்கள். இந்த பெண்ணியவாதிகள் எல்லாம் பெண்ணியவியாதிகள் என குற்றம் சொல்லப்பட்டு இருந்தது. அதிலும் என்னை அட்டென்சன் சீக்கர் என ஒரு முத்திரை குத்தினார்கள்.

நான் டிவிட்டரில் பேஸ்புக்கில் இருப்பது எனது கல்லூரியில் தெரிய ஆரம்பித்தது. சிவகுமார் என்னை குறி வைத்து தாக்க ஆரம்பித்து இருந்தான். ஆனால் நாள்பட நாள்பட நான் சுந்தரி மீது காதல் கொள்ள ஆரம்பித்தேன். பத்து நாட்கள் தினமும் அவளுடன்  ஒரு அரை அரை மணி நேரம் நேரடி தகவலில் பேசினேன். ஒருநாள் சுந்தரி என்னிடம் நேரடி தகவலில் பேசியபோது

''நான் அஜீத் ரசிகை''

''செருப்பால அடி, ஒழுங்கா விஜய் ரசிகையா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''போடா நாயே, நீ அஜீத் ரசிகனா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''யாரடி நாய்னு சொன்ன''

''உங்கப்பனையா சொன்னேன், நான் பொண்ணே இல்லை''

எனக்குத் தூக்கிவாரி போட்டது. டிவிட்டரில் ப்ளாக் என்று ஒரு வசதி  உண்டு. பிடிக்கவில்லை எனில் ப்ளாக் பண்ணிவிடலாம். அவள் அதாவது அவன் என்னை ப்ளாக் பண்ணினான். அப்போதுதான் பல அஜீத் ராஜா ரசிகர்கள் என்னை ப்ளாக் பண்ணி இருந்தது என தெரிய வந்தது. எல்லா அஜீத் ரசிகர்களை ராஜா ரசிகர்களை ப்ளாக் பண்ணினேன். அப்போது சண்டை போட முடியாமல் இருந்தது.

ஒரு நல்லவன் ஐடி தொடங்க அப்போதுதான் யோசித்தேன். ஆனால் இந்த நல்லவன் ஐடி எனது விஜய் கொண்டை வெளியே தெரியாமல் எப்படி மறைப்பது என திட்டம் போட்டேன்.

தினமும் எப்படியும் ஒரு நான்கு மணி நேரம் டிவிட்டரில் இருந்து வந்தேன். இனிமேல் நல்லவன் ஐடிக்கு இரண்டு  மணி நேரம் விஜய் ஐடிக்கு இரண்டு மணி நேரம் என முடிவு செய்தேன்.

நல்லவன் ஐடிக்கு சில சுவாரஸ்யமான நபர்கள் சிக்கினார்கள். நான்தான் விஜயபாண்டி என்பது தெரியாமல் இருக்க சுகுமார் என்ற பெயர் வைத்து சுகுமார்@supersukku எனத் தொடங்கினேன்.

(தொடரும்) 

No comments: