Tuesday 23 June 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? இன குழுக்கள்

 முந்தைய பகுதி 

மனிதர்கள் இனக்குழுக்களாக அன்றைய நாளில் வசித்து வந்தார்கள். பொதுவாக அரசர் அவருக்கு கீழ் ஒரு கூட்டம் என இருந்த காரணத்தினால் அரசரின் மனப்போக்குப்படியே இந்த இனக்குழுக்கள் செயல்பட்டன. இனக்குழுக்களின் தலைமை அந்த இனத்தின் வளர்ச்சி மற்றும் அழிவுக்கு காரணமாக அமைந்தது. 

இஸ்ரேலிய மக்கள் என அழைக்கப்பட்டதன்  காரணம் இஸ்ரேலின் மகன்கள், இஸ்ரேலின் குழந்தைகள் என்ற அடிப்படை என அறியப்படுகிறது. இந்த இஸ்ரேலிய மக்கள்தான் யூதர்கள், சமாரிட்டன்கள், ஹீப்ரூக்கள் என பிரிந்தார்கள். இங்குதான் இனக்குழு தலையெடுக்கிறது. யூதர்களுக்கு என சில பழக்கவழக்கங்கள் அவர்களது வாழ்க்கை முறை என உண்டாக்கும்போது அதில் ஈடுபாடு கொள்ள இயலாத மக்கள் அதில் இருந்து தனித்து வெளியேறுகிறார்கள். எப்படி நமது நாட்டில் தமிழர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தெலுங்கர்கள் என பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் என சொல்லிக்கொள்வது போல அன்றைய நாளில் இந்த சமரிட்டன்கள் தங்களை யூதர்கள் என ஒருபோதும் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை மாறாக தங்களை இஸ்ரேலிய மக்கள் என சொல்லிக்கொள்ள தயங்கியது இல்லை. 

யூதர்கள் பின்பற்றியதுதான் ஜூடாயிசம். இந்த ஜூடாயிசம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருந்தாலும் மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. யூதர்களின் மதம், தத்துவ வாழ்க்கை, கலாச்சாரம் என அனைத்தையும் விளக்குவதுதான் ஜூடாயிசம். யூதர்களாக பிறந்தால் அவர்கள் ஜூடாயிசம்தனை பின்பற்றி ஆக வேண்டும் எனும் நிர்பந்தம் இருந்து வந்தது. இந்து மதம் தனில் பிறந்தால் இந்துக்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தால் முஸ்லீம்கள், கிறிஸ்துவம் தனில் பிறந்தால் கிறிஸ்துவர்கள் என்றே பார்க்கப்பட்டு வருகிறது. பிறப்பால் இவர் என்ற ஒரு இனம் தொன்று தொட்டு பின்பற்ற படுகிறது. 

ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமற்ற குழந்தைதான். மதம்,  சாதி, இனம், பெயர் என திணிக்கப்பட்டு குழந்தைகள் சுதந்திரமர்றுப் பிறக்கின்றன. இப்படி பிறக்கும் குழந்தைகள் அந்த இனத்தில் இணைக்கப்பட்டு வேறு வழியின்றி அதை பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த ஜூடாயிசம் தான் கிறிஸ்துவம், முஸ்லீம் எல்லாம் உருவாக பெரும் காரணமாக இருந்தது. இதனுடைய கருத்துகளின் தாக்கங்கள் பின்பற்றப்பட்டன. எப்போதும் இந்த இனக்குழுக்களிடம் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். எதையும் உறுதியாக நம்பமாட்டார்கள். 

தங்களுக்கு என்று வரைமுறையை தனி நபரோ சில நபர்களோ  வைத்து எழுதினாலும் அதை பின்பற்றி செல்லாமல் அதை நம்பவும் மாட்டார்கள். இப்படி எல்லா இன குழுக்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒரு உதாரணத்திற்கு விடுதலைப்புலிகள் என்பது தமிழ் இனத்தில் ஒரு இனம். எதற்கு அப்படி குறிப்பிடுகிறோம் எனில் தமிழர்களை தீவிரவாதிகள் என சொல்லாமல் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என அடையாளம் காட்டிய வரலாறு சமீபத்திய ஒன்றுதான். போராளிகள் என்ற ஒரு இனக்குழு இன்றைய காலகட்டத்தில் தீவிரவாத இனக்குழு. 

இன்றைய சூழல் போலவே அன்றைய சூழலில் இந்த யூதர்கள் இனக்குழு இருந்தது. ஒரு இனத்தின் பற்றிய வரலாறு செவிவழி, கல்வெட்டு, புத்தகங்கள் மூலம் வழி வழியாக சொல்லப்பட்டு வரும். அன்றைய சூழலில் நம்ப இயலாத ஒன்றை அழிக்கவே முற்படுவார்கள். நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள் எல்லாம் எத்தனை உண்மை என தெரியாது. ஆனால் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள், இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதின் மூலம் முற்றிலும் கதை என எதையும் ஒதுக்கிவிட இயலாது. இன்றும் 14மில்லியன் யூதர்கள் உலகில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. 

யூதர்களின் வரலாறு குறித்து தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் பைபிளில் குறிப்பிட்டு இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இப்போது இதைப் பற்றி எழுதும்போது யார் பாபிலோனியர்கள், யார் அஷ்ஸ்ரீயர்கள் என எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு வந்து இருப்பது தெரியும். அந்த பகுதியில் வாழ்ந்த பல இனக்குழுக்கள் ஒவ்வொரு பெயர் கொண்டு தங்களை அடையாளப்படுத்தியதோடு தங்களது திறமையை, தங்களது நிலையை நிலைநாட்டிட பெரும் போராட்டங்களை செய்து கொண்டு இருந்தன. இந்த போர் முறைகளால் மனிதம் தோற்றதுதான் உண்மையான வரலாறு. 

இது குறித்து மனம் போன போக்கில் எல்லாம் எழுத முடியாத விசயங்கள் என்பதுதான் இப்போதைக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. 

(தொடரும்) 

No comments: