Friday 5 December 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 23

பகுதி 22  இங்கே

அன்று இரவும் கோரனைத்  தேடி சென்றேன். அவனும் அவனது அப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

''இனி அவனை ஒன்னும் பண்ண வேண்டாம், ஊரை விட்டே ஓடிட்டான்ல அது போதும்''

''ம்ம்''

''நாளைக்கு காலேஜுக்குப் போ''

''முருகேசு இருக்கான்''

''அவன் கிடக்கான், அவன் கிட்ட எதுவும் சொல்லிக்கிற வேணாம்''

''ம்ம்''

இனி அங்கே நிற்பதில்லை என வீடு நோக்கி நடந்தேன். கோரன் எதுக்கு ஆசிரியரை கொல்ல  முயற்சிக்க வேண்டும், ஆசிரியர் எதற்கு ஊரை விட்டே ஓட வேண்டும் எனும் கேள்விகளுடன் வீடு சேர்ந்தேன்.

''காயூ, வாத்தியாருக்கும் கோரன் குடும்பத்திற்கும் ஏதோ  தகராறு இருக்கு போல''

''அதுக்கு என்ன இப்போ, நீ கோரனை  பத்தி பேசறது நிறுத்து, நான் படிக்கணும்''

''படி, உன்னை யாரு பிடிச்சிட்டு இருக்கா''

''ஏன்  பிடிச்சித்தான் பாரேன்''

''கத்துவ, அதானே''

''பிடிக்கிறதுக்கு எல்லாம் யாரும் கத்தமாட்டாங்க''

''உன் அக்காவைப் பார்க்க போலாமா''

''எதுக்கு இப்ப பேச்சை மாத்துற, உனக்கு அவளைப் பார்க்க ஆசை. அப்படித்தானே''

''அவளை எதுக்குப் பார்க்கணும், எனக்கு உன்னைத்தவிர வேறு யாரையும் பார்க்க விருப்பம் இல்லை''

''சும்மா சொல்லாதே''

''நிசமாவே இல்லை, உன் அக்காவைப் பார்த்துட்டு வரலாம்னு தான் சொன்னேன்''

''சரி போலாம்''

காயத்ரிக்கு கோரன் பற்றிய பேச்சு பிடிக்காமலே இருந்தது. அடுத்த நாள் கல்லூரிக்குப் போனோம். கோரன் வந்து இருந்தான்.

''கோரன் உன்கிட்ட பேசணும்''

''தேவை இல்லை''

விறுவிறுவென கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்குச்  சென்றான். சிறிது நேரம் அங்கிருந்தவன் வெளியில் வந்தான்.

''கோரன் நில்லு''

''உயிரோட நீ இருக்கணுமா  வேணாமா?''

''என்ன ஆச்சு உனக்கு''

''என்னோட விசயத்தில தலையிடாதே''

''நீ எதுக்கு இப்படி நடந்துக்கிற''

கத்தியை எடுத்துக் காட்டினான். நான் மிரண்டு போனேன்.

''ஒரே சொருகு, குலை வெளியே வந்துரும்''

நான் அங்கிருந்து நகன்றேன். அவன் கல்லூரியில் இருந்து வெளியே போனான். நான் கல்லூரி முதல்வர் அலுவலகம் சென்றேன்.

''கோரன் எதுக்கு வந்தான்''

'' வேலையை விட்டுப் போன பொரபுசர் பத்தி விசாரிச்சான், தெரியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன்''

அவரிடம் மேற்கொண்டு கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என சொன்னார்.

எனக்கு வகுப்பில் அவன் அருகில் சில நாட்களாக இல்லாதது ஒரு மாதிரி இன்றும் இருந்தது. அவன் இருந்தால் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பான்.

திடீரென கோரன் வகுப்பில் நுழைந்தான்.

''முருகேசு, வெளியே வாடா''

வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த ஆசிரியர் அவனை நோக்கி நீ உள்ள வர வேண்டியது தானே என்றார். உன் வேலையை மட்டும் பாரு என அவரை நோக்கி கத்தியவன் என்னை நோக்கி வாடா என கத்தினான். நான் பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

வகுப்பில் இருந்த சில மாணவர்கள் எழுந்து வேகமாக அவனை மடக்கிப் பிடித்து அவன் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்தார்கள். அந்த கத்தியை வாங்கிய சோபன் கோரனை  நோக்கி இதுதான் நீ படிக்கிற லட்சணமா எனக் கேட்டான். ஆமாம், ஒரு வாத்தியார் ஒழுங்கா இல்லைன்னா அப்படித்தான் ஆகும், எனக்கு என்ன நடந்தது தெரியுமா?

மொத்த வகுப்பும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது. கோரன் தன கதையை சொல்ல ஆரம்பித்தான்

(தொடரும்)


No comments: