Tuesday 21 January 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 22

அப்படியே வீட்டுக்கு வந்து வெளியில் பூட்டிய கதவை மெதுவாக திறந்து உள்ளே சென்றேன்.

''எங்க முருகேசு போய்ட்டு வர''

அப்பாவின் குரல் இருளில் வந்தது கண்டு அச்சம் கொண்டேன்.

''சொல்லு முருகேசு''

மின்விளக்கு போட்டுவிட்டு நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னதும் அப்பா திடுக்கிட்டார். அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். எனது அறைக்கு சென்று தூங்க முயற்சித்தேன்.சுபா, கோரன், அவனது அப்பா, ஆசிரியர், ஆசிரியரின் மனைவி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தலை சுற்றியது. நகர் வாழ்க்கையில் எவர் எவர் எப்படி என்பது தெரிந்து கொள்ள இயலாத வாழ்க்கை சூழல். கோரன் இனி நினைவு இழந்தவன் போல நடிப்பான். ஆசிரியரிடம் விபரம் சொல்ல வேண்டும் என தூங்கிப் போனேன்.

''முருகேசு, எழுந்திருப்பா''

வழக்கம் போல அம்மா எழுப்பிவிட்டார்கள்.

''காயத்ரி உனக்கு ராத்திரி கோரன்கிட்ட இருந்து கொலை பத்திய போன் வந்துச்சுன்னு சொன்னப்பா, என்ன ஆச்சு உங்க அப்பாகிட்ட சொன்னா சும்மா பையனுங்க விளையாடி இருப்பாங்கனு சொல்றார். காயத்ரி அப்படி இல்லைன்னு சொல்றா''

''அம்மா, இன்னும் நான் எந்திரிக்கலை''

''கொலைன்னு சொன்னதும் பயந்து வரேன், நீ எந்திரிக்கலைனு சொல்ற, முகம் அலம்பிட்டு வந்து சொல்லிட்டு அப்புறம் கிளம்பு, இல்லை நீ காலேஜுக்கு போக வேணாம்.''

போர்வையை தூக்கிபோட்டு விட்டு எழுந்தேன். கசங்கிய முகம்தனை கைகளால் மேலும் கீழும் அழுத்தி தேய்த்துவிட்டு சோம்பல் முறித்து கொண்டு சென்றேன்.

''நில்லு முருகேஷா''

''என்னம்மா''

''என்னடா ரத்த காயம், அங்க அங்க ரத்தம்உறைஞ்சிருக்கு, என்னங்க இன வாங்க''

''கொசு கடிச்சி தொலைச்சிருக்கும், இதுக்கு எதுக்கும்மா அப்பாவை கூப்பிடற''

வேகமாக பாத்ரூமில் நுழைந்தேன். இந்த காயத்ரியை ஒரு அறைவிட்டால் சரியாகும் என்றே நினைத்தேன். இந்த அம்மாக்கள் இப்படித்தான். எப்படி ரத்த காயம் எல்லாம் கண்ணில் பட்டது. நன்றாக குளித்துவிட்டு வந்தேன். அம்மா, காயத்ரி, அப்பா நின்று இருந்தார்கள்.

''காயத்தை காட்டுடா''

''அம்மா, என்னை துணி மாத்த விடுமா, இதுல இந்த பொண்ணு வேற நிக்கிறா''

காயத்ரியின் முகத்தில் வெட்கம் வெட்டி சென்றது. இந்த பாரு என கையை காட்டிவிட்டு நடந்தேன்.

''கொசு கடி  தான்''

தயாராகி கீழே வந்தபோது காயத்ரி இன்னும் வெட்கத்தில் இருந்தாள். கல்லூரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் எல்லா விசயங்களையும் காயத்ரியிடம் சொன்னதும் மயக்கம் போடாத குறையாக போலிசுக்கு வா போவோம் என்றாள் . நான் ஆசிரியர் வீடு நோக்கி நடந்தேன்.

''என்ன முருகேசு, இங்கிட்டு நடக்கிற''

''சாரை பாத்துட்டு போவோம்'

''போலீசுல சொல்வோம்''

எதுவும் பேசாமல் நடந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தோம்.

''என்ன இந்த பக்கம், காலேஜுக்கு போகலை''

''ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''

''உள்ளே வாங்க''

ஆசிரியரிடம் விபரம் சொல்ல சொல்ல அவரது முகம் மாறியது. வியர்வைத் துளிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. சமையல் அறைக்குள் எழுந்து சென்றார்.தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.

''ரொம்ப வெட்கையா இருக்கு''

''காத்தாடி ஓடுதே''

''அது பழசு''

''உங்க மனைவிக்கும், கோரன் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்''

''அது எல்லாம் உனக்கு எதுக்கு''

''சார், சொல்லுங்க, நாங்க உதவி பண்றோம்''

நிறையவே யோசித்தார்.

''அது வந்து...''

''என்ன சார்''

''நேரமாகுது, கிளம்புங்க''

''முருகேசு, வா கிளம்பலாம்''

வேறு வழியின்றி கிளம்பினோம். அன்று கோரன் கல்லூரிக்கு வரவில்லை. ஆசிரியரும் வரவில்லை. ஆசிரியர் வீடு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.

கோரன் வீட்டிற்கு செல்ல நினைத்த என்னை காயத்ரி தடுத்தாள். அன்று இரவு எட்டு மணிக்கு கோரன் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு நண்பனை பார்த்து வருவதாக கிளம்பினேன்.

''கோரன் வீட்டுக்கா''

''காயூ, நீ பேசாம இரு, அம்மா தாண்டவம் ஆடுவாங்க''

கோரன் வீட்டினை அடைந்தேன். கோரன் வீட்டில் கோரன், அவனது அப்பா, அம்மா  இருந்தார்கள் . கோரன் ஒரு பையை எடுத்து கிளம்பினான். திடுக்கிட்டேன். அவனை பின் தொடர்ந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தான். கதவு பூட்டப்பட்டு இருந்தது கண்டு ஆத்திரம் கொண்டவனாய் கத்தினான். அந்த நேரம் பார்த்து ஒரு காவல் அதிகாரி வந்தார்.

''என்னடா சத்தம் போடுற''

''பூச்சி கடிச்சது சார்''

''போய் டாக்டரை பாரு''

ஆசிரியர் வீட்டினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பினான்.

''கோரன்''

என்னை பார்த்தவன் திடுக்கிட்டான்.

''எதுக்கு இவரை தேடி வந்த''

''உனக்கு தேவை இல்லாத விஷயம்'

''கொல்ல வந்தியா''

''ஆமா''

''ஏன்''

''முருகேசு நீ தலையிடாத''

வேகமாக ஓடி மறைந்தான். அடுத்த நாள் ஆசிரியர் வீட்டிற்கு சென்றேன். வீடு விற்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள். கல்லூரி முதல்வரிடம் சென்று ஆசிரியர் குறித்து கேட்டேன். வேலையை நேற்றே விட்டுவிட்டதாக சொன்னார். கோரன் அன்றும் கல்லூரிக்கு வரவில்லை.

(தொடரும்)

 

No comments: