Thursday 19 July 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 5

தியரி அதாவது கோட்பாடு, தேற்றம். நமது சிந்தனைகள் இந்த தியரி எனப்படுவதை சுற்றியே நிகழ்கிறது. சோதனைகள் செய்யும் முன்னர் இந்த தியரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தியரிக்கான சிந்தனையின் மூலம் என்ன என்பது குறித்து அவரவருக்கு அந்த வேளையில் ஏற்படும் சிந்தனை குறித்தே சொல்ல முடியும்.

ஒரு உதாரணத்திற்கு புத்தர். இப்போது புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஒரு தியரி. ஆசை என்பதன் அளவு எது? துன்பத்தின் அளவு எது? என்பதெல்லாம் இங்கே விவரிக்கப்படவில்லை. மிகவும் எளிமையாக சொல்லப்பட்ட கோட்பாடு இது. ஆசையே துன்பத்திற்கு காரணம். இப்போது இந்த சிந்தனை எப்படி புத்தருக்கு எழுந்தது. இப்போது நாம் சொல்லப்போவது கூட ஒரு தியரி தான். ஆனால் உண்மை என்ன என்பது புத்தருக்கு மட்டுமே வெளிச்சம். அரண்மனையில் சுகவாசம் அனுபவித்த புத்தர் வெளியில் சென்று பார்க்கும்போது மக்கள் இன்னல்படுவதை காண்கிறார். அங்கே அவருக்கு எதற்கு மக்கள் இன்னல் படுகிறார்கள் எனும் சிந்தனை எழுகிறது. அதற்கான காரணம் என்னவென பார்க்கும்போது அவருக்கு ஆசை என்ற ஒன்று பிடிபடுகிறது. அப்படியே ஒரு மரத்தடியில் அமர்கிறார். கண்களை மூடி அமர்கிறார். மக்கள் துன்பபடுவது ஆசையின் காரணம் தான் என நினைவில் கொள்கிறார். அதை பின்னர் உலகுக்கு அறிவிக்கிறார். இப்போது இந்த கோட்பாடுதனை சோதனைக்கு உட்படுத்தலாம்.

இரு நபர்கள் எடுத்துக் கொள்வோம். ஒருவர் ஆசையே படாதவர். இருப்பதே போதும் என இருப்பவர். மற்றொருவர் அளவுகடந்த ஆசை கொண்டவர். அது வேண்டும், இது வேண்டும் என அலை பாய்பவர். பொதுவாக எல்லோர் வீட்டில் கணவன், மனைவி இப்படித்தான் இரண்டு துருவங்களாக இருப்பார்கள் என்பது வேறு விசயம். ஆசையே இல்லாதவர் துன்பத்துடன் வாழ்கிறாரா, ஆசை கொண்டவர் துன்பமின்றி வாழ்கிறாரா என அவர்களது வாழ்க்கையை இருபது ஆண்டு காலம் கவனித்து வருவோம். பொதுவாக போதும் என இருப்பவர் துன்பம் கொள்வது இல்லை என்பது ஒருவித தியரி. அதன்படியே போதும் என இருப்பவர் இருபது வருடம் முன்னர் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்பவும் இருப்பார். அதாவது எந்த வித முன்னேற்றமோ, வசதிகளோ, வாய்ப்புகளோ பெருக்காமல், ஏனெனில் அவருக்கு எவ்வித ஆசையும் இல்லை. இருப்பினும் சில தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இவர்  துன்பம் அடைகிறார். இப்போது அவரைப் பொறுத்தவரை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு துர்பாக்கியம் கொண்டவர். ஆனால் அவருக்கோ அப்படி இருப்பதே ஆனந்தம். மற்றவர் அப்படி இல்லை. ஆசையின் காரணமாக போராடி நல்ல வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்கிறார். இதன் காரணமாக அவர் கொண்ட துன்பம் அதிகம். இல்லாது இருப்பவர் போதிய வசதி இல்லாமல் துன்பம் அடைகிறார். இருப்பவர் மேலும் மேலும் வசதிகள் வேண்டுமென துன்பம் அடைகிறார். இப்போது ஆசை கொண்டவரும் துன்பம் அடைகிறார். ஆசை இல்லாதவரும் துன்பம் அடைகிறார். இதன் காரணமாக ஆசை ஒரு காரணி. ஆனால் ஆசை மட்டுமே துன்பத்திற்கு காரணம் இல்லை என இந்த சோதனையின் முடிவில் தீர்ப்பு எழுதப்படும்.

இப்படி கோட்பாடுகளை கொண்டு எழுதப்பட்டுத்தான் முக்காலமும். அந்த கோட்பாடுகளை சொன்னவர்கள் தங்களுக்குள் உணர்ந்து கொண்ட விச யத்தை சொன்னவர்கள் உண்டு. அதே வேளையில் கணிதம், பௌதிகம், பூகோளம் என கணக்கீடு முறையால் இப்படித்தான் இருக்கும் என சொன்னவர்கள் உண்டு. தங்களுக்குள் உணர்ந்து கொண்டு சொன்ன விச யத்தை நிரூபிக்க கதைகள் எழுதலாம். ஆனால் அதை ஒரு சோதனை மூலம் நிரூபிப்பது சற்று இயலாத காரியம். கணக்கீடு முறையால் சொன்ன விசயங்களை சோதனைகள் மூலம் நிரூபிக்கலாம். அப்படி நிரூபிக்க முடியாது போனால் அந்த கோட்பாடு தவறு என்றே முடிவுக்கு கொண்டு வரப்படும்.

இப்படி பல சிந்தனைகளை உருவாக்கும் நரம்பு மண்டலத்தில் எவர் இதற்கான விதைகள் விதைத்தது. உங்கள் வீடு ஒன்று. உங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் பல. இப்போது ஒரே விசயம். அந்த ஒரே ஒரு விசயத்தை வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என பாருங்கள். இந்த சோதனையை வீட்டில் செய்து பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு தாளில் எழுதி கொள்ள வேண்டும். பின்னர் அனைவருக்கும் வாசித்து காண்பியுங்கள். சிந்தனைகளுக்கான காரணம் என்னவாக இருக்கும்?

ஒன்று கண்ட, கேட்ட விசயங்களின் நேரடி, மறைமுக பாதிப்பு.  மற்றொன்று எதற்கும் தொடர்பே இல்லாத ஒரு சிந்தனை. இப்படி எதற்குமே தொடர்பே இல்லாத சிந்தனை ஒன்று உண்டா?

மாணிக்கவாசகர் பாடுகிறார்.

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஒளியும், இருளும் நீயன்றி எதுவும் இல்லை. தோன்றியவைகளும், தற்போது தோற்றத்தில் இல்லாதவைகளும் நீயன்றி எதுவும் இல்லை. முதலுமாய், முடிவுமாய் என முதலும் முடிவும் இல்லாதவன் நீயன்றி எதுவும் இல்லை.

முக்காலமும் எப்படி மாணிக்கவாசகர் அறிந்தார்?

(தொடரும்) 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு... வாழ்த்துக்கள்...
தொடருங்கள்... (த.ம. 1)

Anonymous said...

உணர முடியாது என்ற நிலைப்பாடு உடையவரா நீங்கள். சீனர்களின் iching குறித்துக் கொஞ்சம் பாருங்கள்.
எந்த ஒரு மனிதனுக்கும் முக்காலமும் அறியும் திறன்
இருக்கிறது என்ற அடிப்படையில் எழுதப்பட்டது.
மனித நரம்பு மண்டலம் இயக்க அறிவுடன் தொடர்பு கொள்ளும் திறனுடையது.

Radhakrishnan said...

நன்றி தனபாலன்.

நன்றி. அப்படியெல்லாம் நான் நினைக்கவில்லை ஐயா. உணரும் திறன் அற்றுப் போனவனாகவே கருதுகிறேன். நிச்சயம் படித்து பார்கிறேன். தியரிக்கும் ப்ராக்டிகளுக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.