Friday 9 November 2012

வள்ளலார்

யார் இந்த வள்ளலார்? வள்ளலார் பற்றி இன்றைய சமூகம் மறந்து கொண்டிருக்கலாம், ஆனால் சாதிய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று எனும் சமரச சன்மார்க்க கொள்கையை பரப்பியவர். இறைச்சி உண்பவர்களை அறவே வெறுத்தார் என்பது மட்டும் சமரச சன்மார்க்க கொள்கைக்கு எதிரான ஒன்று.

சிதம்பரத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் ராமலிங்கம். ராமலிங்க அடிகளார் என மாற்றம் கொண்டு வள்ளலார் என பின்னாளில் போற்றப்பட்டவர். இவரின் வாழ்க்கை குறிப்பு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இவரின் தொண்டு மிகவும் போற்றத்தக்கது என்றும் திருவருட்பா இயற்றி தமிழுக்கு பெருமை சேர்த்தார் என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை.

இவரின் ஜீவ காருண்யம், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என இவரது சொல்லாடல்  மிகவும் பிரபலமானவை. உலகில் நன்மையே நிலைக்க வேண்டும் எனும் கனவுலகில் இவர் வாழ்ந்தவர் என்றே சொல்லலாம்.

சிதம்பரத்தில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்தவர். சென்னைக்கு சென்ற தருணத்தில் வேடிக்கையாக சென்னையை தர்மமிகு சென்னை என அழைத்தவர் பின்னாளில் தீட்டிலே திளைத்த சென்னை என மாற்றிக் கொண்டார். உலகில் நீதி, நியாயம், நேர்மை எல்லாம் நிலைக்காமல் போவது கண்டு மனதில் வாட்டம் கொண்டு இருந்து இருக்கிறார். அந்த வாட்டம் எல்லாம் போக்க இறைவன் ஒருவனே கதி என்ற நிலையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இப்படியெல்லாம் இருந்தாலும் ஞானம் என்பது அத்தனை எளிதாக எவருக்கும் கிடைப்பதில்லை. எப்போதும் இறைவன் பற்றியும், சமயங்கள் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவு. விளையாட்டு பருவத்தில் இறைவன் மீதான பற்று என வரும்போது அங்கே மற்ற விசயங்கள் அடிப்பட்டு போய்விடுகின்றன.

ஒரு விசயத்தை பற்றி அறிந்து கொள்ள கல்வி சாலைகள் அவசியமே இல்லை என்பதுதான் முந்தைய கால சூழல். அவரவர் அறிந்து கொண்டிருந்த விபரங்கள் தலைமுறைக்கு கடத்தப்பட்டன. ராமலிங்கம் சிறு வயதில் இருந்தே அவரது மூதாதையர்களின் சமயமான சைவம் குறித்து ஆர்வம் கொண்டிருந்து இருக்கிறார். அதுவும் சென்னையில் தனது அண்ணனுடன் வசித்து வந்தபோது தனது அண்ணனின் சைவ புலமை அவரை மிகவும் கவர்ந்து இழுந்து இருக்கிறது. இதன் பொருட்டு வீட்டிலேயே தமிழ் கற்று கொண்டு இறைவன் மீதான பற்றினை வளர்த்து வந்து இருக்கிறார்.

பொதுவாக சித்தர்கள் சமய சடங்குகளை அறவே வெறுக்க கூடியவர்களாகவே இருந்து வந்து இருக்கிறார்கள். உள்ளுக்குள் இருக்கும் பரமானந்தனை வெளியில் தேடுவது எங்கனம் என்றே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அது போலவே ராமலிங்கம் இந்த கருத்தில் மிகவும் வலுவாக இருந்து இருக்கிறார்.

பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் போதும், அவருக்கு கூட்டம் சேர்ந்துவிடும். அப்படி கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு இவரின் பால் அன்பு பாராட்டியவர் ஏராளம். சில சங்கங்கள் அமைத்து வெற்றியும் கண்டவர்.

சிறு வயதிலேயே இறைவன் மீது அன்பு கொண்டு  இருந்தவருக்கு இவரின் விருப்பத்திற்கு மாறாக இவரது திருமணமும் நடந்தேறியிருக்கிறது. அதெல்லாம் பெரிதாக கருத்தில் கொள்ளாமல் இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சிறப்பு வாய்ந்தது.

இப்படி இருந்த இவர் ஜனவரி மாதம் முப்பதாம்  நாள் தனது தொண்டர்களிடம் இதோ இந்த வீட்டில்  உள்ளே செல்கிறேன், யாரும் கதவை திறக்க வேண்டாம், அப்படி திறந்தாலும் அங்கே நான் இருக்க மாட்டேன் என சொல்லி சென்றதாகவும், கதவு நான்கு மாதமாக திறக்கப்படமால் அரசு உத்தரவின் பேரின் மே மாதம் திறக்கப்பட்டு பார்த்த போது  அங்கே ராமலிங்கம் எனும் வள்ளலார் இல்லாமல் இருந்ததை அரசு பதிவேட்டில் பதிந்து வைத்துவிட்டது.

இது குறித்து தொண்டர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?

வள்ளலார் அருட்பெரும் சோதியுடன் கலந்து விட்டார் என்றே சொல்லித் திரிகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அவரின் மனதின் வலியை கண்டு கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் இருந்து இருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.

தனது உடலானது மிகவும் கேவலமானது என்றே எல்லா சித்தர்களும் வள்ளலார் உட்பட பாடி வைத்து இருக்கிறார்கள். மண வாழ்க்கை கேவலமான ஒன்றே என்பதுதான் இவர்களின் கருத்தாக இருக்கிறது. ஏதோ இவர்கள்,  இறைவன் மீது பற்று வைத்து விட்டால், இறைவனையே சதா பாடித் திரிந்தால் எல்லாமே நன்றாக இருந்துவிடும், உடல் தேஜஸ் நிலை அடைந்து விடும்  என்பது இவர்களின் ஒரு கற்பனை காட்சியாக வலம் வந்து இருக்கிறது.

நெருப்பில் மறைந்த மாணிக்கவாசகர், அப்படியே சமாதியாகிப் போன காரைக்கால் அம்மையார் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவது என்பது அறவே கிடையாது என்பதுதான் பலரின் கூற்றாக இருக்கிறது. ஆனால் இந்த ஆன்மா அழிவது இல்லை, பாதிக்கப்படுவது இல்லை என்று சொல்வதற்கு காரணம் இந்த இயற்கை வாழ்வில் ஒவ்வொருவரும் கண்டு கொண்ட பிரச்சினைகள்.

எவர் எல்லாம் இறைவனை நாடுவார்கள்? இதற்கு மிகவும் எளிமையான காரணம் ஒன்று இருக்கிறது. இதை எத்தனை பேர் மனதைத் தொட்டு மனசாட்சிக்கு உட்பட்டு ஆமாம் என சொல்லப் போகிறார்கள்?

பிரச்சினைகள் உள்ளவர்கள், பிரச்சினை வராமல் இருக்க வேண்டுபவர்கள் இறைவனை நாடுவார்கள். இறைவனை நாடினால் பிரச்சினை தீர்ந்து விடும் எனும் எதிர்பார்ப்புகளே பெரிதும் இந்த இறைவனின் மீதான சடங்குகள் சம்பிராதயங்கள் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன. பெரும்பாலனவர்கள் இதனை அறிந்து வைத்து இருந்தாலும் நம்பிக்கை எனும் பேரில், பயம் கருதி இதனை காலம் தொட்டு தொடர்ந்து வந்து இருக்கிறார்கள். இதனை வள்ளலார் கடுமையாகவே எதிர்த்தார். அதனால் தான் இவரின் தொண்டு இடங்களில் எந்த ஒரு சடங்குகளும் அனுமதிக்கப்படுவது இல்லை.

இத்தனை பாடல்கள் இயற்றியும், எத்தனையோ நல்ல விசயங்கள் எடுத்து சொல்லியும் திருந்தாத மானிடர்கள் கண்டு மனம் வெதும்பிய வள்ளலார் இறுதியாக எடுத்த முடிவு. யாருக்கும் சொல்லாமல் ஓடிப் போவது. இதை சாதாரணமாக செய்தால் ஓடிப் போய்விட்டார் என்றே கேவலமாக பேசக் கூடும் என திட்டமிட்டே இந்த செயலை செய்தார் எனலாம்.

தான் பாடிய திருவருட்பாக்கள் மூலம் திருந்தாத மானிட சமூகம் தான் இறைவனுடன் ஐக்கியமானது என நினைத்தாலாவது திருந்தட்டும் என்றே இந்த ஓடிப்போன மறைதல் செயலை நிறைவேற்றி இருக்கிறார்.

உண்மையை சொல்பவன் சதிகாரன்.
நன்மையை நினைப்பவன் நாசக்காரன்.

ஒரு உயர்ந்த உள்ளத்தை, சமூகம் சமரச வாழ்வில் திளைக்க வேண்டும் என தனது வாழ்நாளில் பாடுபட்ட ஒரு ஜீவனை ஓடிப்போக வைத்த இந்த சமூகம் வெட்கி தலை குனிய வேண்டுமே தவிர அருட்பெரும் சோதியில் கலந்து விட்டார் என பொய் சொல்லித் திரிய கூடாது.

இவரது சமரச சன்மார்க்கத்தை மட்டுமே பெரிதாக பேசித் திரியும் சமூக ஆர்வலர்கள் சமரசத்தை ஒவ்வொரு ஊரில் முதலில் நிலைநாட்டத் தொடங்கட்டும். ஒரு சமூகம் அவரவர்  தலைவரின் பிறந்த நாள், இறந்த நாள் என கொண்டாடி பிற சமூகத்தை களங்கப்படுத்துவது நிற்கட்டும். இராமலிங்க பிள்ளையில் இருக்கும் சாதிய பெயர் வள்ளலாரில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

5 comments:

R.Puratchimani said...

அருமையான பதிவு. தவறானவற்றை மற்றும் சுட்டி காட்டுகிறேன் தவறாக எண்ண வேண்டாம் . //தனது உடலானது மிகவும் கேவலமானது என்றே எல்லா சித்தர்களும் வள்ளலார் உட்பட பாடி வைத்து இருக்கிறார்கள்.//
இது ஒரு தவறான புரிதல். உடல் பற்றி இருவேறு கருத்துக்கள் என்பதே உண்மை.. 'உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் கூறுகிறார். உயிர் வளர்க்க உடல் தேவை. இது இரண்டும் இருந்தால் தான் முக்தி நிலைக்கு செல்ல முடியும்.

//மண வாழ்க்கை கேவலமான ஒன்றே என்பதுதான் இவர்களின் கருத்தாக இருக்கிறது.//
இறைவனை அடைவதில் சிரமத்தை உண்டாக்கும் என்பதால் மட்டுமே அவ்வாறு கூறினார். இது யோகிக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

//ஏதோ இவர்கள், இறைவன் மீது பற்று வைத்து விட்டால், இறைவனையே சதா பாடித் திரிந்தால் எல்லாமே நன்றாக இருந்துவிடும், உடல் தேஜஸ் நிலை அடைந்து விடும் என்பது இவர்களின் ஒரு கற்பனை காட்சியாக வலம் வந்து இருக்கிறது.//
இதுவும் ஒரு தவறான புரிதல். யோகமே சித்தர்களின் முக்கிய செயல். பற்று, பாட்டு எல்லாம் தொடக்கம் முடிவல்ல.
யோகத்தினால் உடல் தேஜஸ் கூடும் என்பது அனுபவ உண்மை.

//எவர் எல்லாம் இறைவனை நாடுவார்கள்? இதற்கு மிகவும் எளிமையான காரணம் ஒன்று இருக்கிறது. இதை எத்தனை பேர் மனதைத் தொட்டு மனசாட்சிக்கு உட்பட்டு ஆமாம் என சொல்லப் போகிறார்கள்? பிரச்சினைகள் உள்ளவர்கள், பிரச்சினை வராமல் இருக்க வேண்டுபவர்கள் இறைவனை நாடுவார்கள்.//

பிரச்சனைகள் பெரும்பாலும் பக்தி மார்க்கத்திற்கு இட்டு செல்லும் சிலருக்கு மட்டும் அடுத்த நிலை. இதானால் தான் பிரச்சினைகள் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்கிறார் ஏசுபிரான்.

நான் யார் என்ற தேடலே யோக,ஞான மார்க்கத்திற்கு இட்டு செல்லும்.

//அருட்பெரும் சோதியில் கலந்து விட்டார் என பொய் சொல்லித் திரிய கூடாது.//
வள்ளலாருக்கு என்ன நேர்ந்தது என்பதை தீர்க்கமாக சொல்லமுடியாவிட்டாலும் சோதியில் கலப்பது சாத்தியம் இல்லை என்பதற்கில்லை.
உடலை விட்டு உயிரை பிரிதல், ஒளி உடல் பெறுதல்...உடலோடு மறைத்தல் என யோகத்தால் பலதும் சாத்தியமே.
நன்றி
தொடர்ந்து தேடுங்கள் அகத்திலே ............

வவ்வால் said...

ரா.கி,

வள்ளலார் பற்றி சரியாக படித்து பாருங்கள் ,இன்னும் கொஞ்சம் தெரிய வரும்.

அவர் வடலூர் அருகேயுள்ள மருதூரில் பிறந்தார். சிறிது காலமே சென்னையில் இருந்தார். பின்னர் வடலூர் அருகேயுள்ள மேட்டுக்குப்பம் எனும் கிராமத்தில் தங்கி ஆன்மீகப்பணியில் ஈடுபட்டார், அவருக்கு கனவில் தோன்றியதன் அடிப்படையில் வடலூரில் சத்ய ஞான சபையினை நிறுவினார்.

மேட்டுகுப்பத்தில் வீட்டில் வீட்டோடு எரிந்து ஜோதியில் புகுந்தார் என்று தான் சொல்கிறார்கள் , ஆனால் அவரர் உருவ வழிப்பாட்டை எதிர்த்த்தால் எரித்து கொள்ளப்பட்டார் என்கிறார்கள்.

வள்ளலாருக்கும், ஆறுமுக நாவலருக்கும் தமிழ் குறித்து வழக்கெல்லாம் சிதம்பரம் கோர்ட்டில் நடந்தது, கடைசியில் ஆறுமுக நாவலர் வள்ளலாரின் தமிழ் இலக்கணம் சரி என ஏற்றுக்கொண்டாராம்.

Radhakrishnan said...

மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி புரட்சிமணி மற்றும் வவ்வால்.

புரட்சிமணி, உண்மைதான், சில நேரங்களில் புரிதல்கள் தவறான பாதைக்கு இட்டு செல்கின்றன. சாத்தியமில்லாதது எதுவும் இல்லை என்பது போன்ற தோற்றமே இறைவன் தான்.

வவ்வால், ஆமாம் நானும் கேள்விபட்டேன் அவர் வீட்டோடு எரிந்து போனதாக. சினிமா படங்களில் லாஜிக் கேட்பவர்கள் நிஜ வாழ்வில் நடக்கும் விசயங்களுக்கு லாஜிக் பார்ப்பது இல்லை.

chennai papers said...

பயபுள்ள நல்லா அவர் வரலாறு படிச்சிட்டு பேசு.. மரணமில்லா பெருவாழ்வு வாழ இந்த உடம்பு அவசியம்ன்னார்.. நீ சரியா படிச்சிப்பாரு! உன்னை மாதிரி 1/2 அதிகம் இந்த உலகத்தில!

Radhakrishnan said...

ம்ம். நன்றி சென்னை பேப்பர்ஸ்.