Sunday 4 March 2012

இறைவனும் இறை உணர்வும் - 4

பகுதி - 3 

'என்ன திடீரென அமைதியாக இருக்கிறாய், உன்னை நினைத்து நாங்கள் வருத்தப்பட்டு கொண்டிருந்தோம்' என்றார் சக தொழிலாளி. 

'இறைவனிடம் மனம் லயிக்கும் போதெல்லாம் இவ்வாறு ஆகிவிடுவேன், எதற்கு இந்த வாழ்க்கை, எதற்கு இந்த போராட்டம், எதற்கு மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள், இந்த உலக வாழ்க்கையில் இருந்து எப்படி தனித்து கொள்தல், வாழ்வின் ஆதாரம், வாழ்க்கையின் இயல்பு, இருப்பு என்பதெல்லாம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவேன், அதுதான் காரணம்' என்று நான் சொன்னதும் என்னை சக தொழிலாளி வித்தியாசமான பார்வையில் பார்த்தார். 

நான் சொன்னதில் அதுதான் உண்மையா? இந்த உண்மை குறித்தும், உண்மை வேறு, நம்பிக்கை வேறு என்பது குறித்தும் முன்னரே எழுதிவிட்டேன். மீண்டும் அதே இடத்துக்கு செல்ல விருப்பம் இல்லையெனினும் நான் மேற்சொன்ன வாக்கியங்களை திரும்பவும் யோசிக்கிறேன். நான் உண்மையிலே அதற்காகத்தான் அப்படி அமைதியாக இருந்தேனா? இல்லை என்று மட்டுமே தோன்றுகிறது. நான் எதற்காக அமைதியாக இருந்தேன் என்பது குறித்து என்ன சிந்திப்பது, ஆனால் அந்த நேரத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன. சமயோசித வார்த்தைகள், எதற்கு பேசுகிறோம், பிறரிடம் பேசி அதன் மூலம் என்ன ஆதாயம் தேட நினைக்கிறோம் என்பதெல்லாம் நினைத்து கொண்டிருக்க சமீபத்தில் நண்பர் ஒருவர் மனப்புழுக்கத்தை இங்கே கொட்டி தீருங்கள் என ஒரு பொது மன்றத்தில் எழுதி வைக்க அதைப் படித்ததும் எனக்கு மூன்றே வாக்கியங்கள் எந்த ஒரு சிந்தனையும் இன்றி வந்து விழுந்தது. 

அற்றதெனினும் உற்றதாய் கேட்டு உவகை கொள்ளச் செய்வான் எம்பெருமான் 
சொற்றொடர் கொண்டு வருவோர் போவோரிடம் சொல்லித்திரிமின்
கற்றதனால் என்ன பயன், நன்று இல்லையெனின் அன்றே மற.

இந்த வாக்கியம் எழுதிய பின்னர் சில நாட்களாக யோசனை. எதற்கு இந்த வாக்கியம் வந்து விழுந்தது. மனிதர்கள் தங்கள் கவலைகளை, தங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை, துரோகங்களை  பிறரிடம் பரிமாறிக்கொள்ளும் போது ஆறுதலான வார்த்தைகளும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும் கிடைக்கும் பட்சத்தில் மனிதர்கள் தங்கள் கவலைகளை தூக்கி எறிந்து விட்டு வாழ இயலும் என்கிற தொனியில் தானே நண்பர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம், எம்பெருமானிடம் சொல்லுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என சொல்வதன் அர்த்தம் என்ன எனும் சிந்தனை வலுப்பெற்றது. 

நமது மனது நமது கட்டுபாட்டில் இருக்க வேண்டும். நாம் ஒருவரே நம்மை ஆறுதல் படுத்த முடியும், பிறரது வார்த்தைகள் நமக்கு முள்ளாகவோ, மெத்தையாகவோ இருக்க நம்மால், நமது எண்ணத்தால்  மட்டுமே இயலும். நண்பர்கள் நமக்கு முக்கியம், உறவுகள் முக்கியம். ஆனால், தவறாக எடுத்து கொள்ளாதீர்கள், பெரும்பாலனவர்கள் ஏதாவது ஒரு சூழலில் பிறரை எள்ளி நகையாடும் மனப்போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். நகைச்சுவைக்காகவேனும் நாம் பிறரின் செயல்களை நம்மிடம் மதிப்பு கொடுத்து பேசியதை குறிப்பிட்டு கேலி பேசிவிடுவோம். இதனால் தான் இறைவன் என்பவர் இங்கே வருகிறார். 

அற்றதெனினும் உற்றதாய் கேட்டு! இங்கே எனக்கு இந்த இரண்டு வார்த்தைகளில் அற்றது என்பது என்ன பொருள் என தெரியாது. ஆனால் உற்றது என்பதற்கு அற்றது எதிர்பதமாக இருக்கலாம் எனும் ஒரு நினைவில் வந்து விழுந்த வார்த்தைகள் அது. அப்படி இறைவனிடம் நமது குறை நிறைகளை சொல்லும்போது நம்மை உவகை கொள்ள செய்வான். நாம் நம்மை தேற்றி கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இதன் மூலம் வரும், வர வேண்டும். 'கடவுள் மீது பாரத்தை போட்டுவிடு' என எதற்கு சொன்னார்கள். அவன் நமது பாரத்தை எல்லாம் சுமப்பான் என்றா? இல்லவே இல்லை, நமது பாரம் நம்மில் இருந்து இறங்கி நாம் சுகமாகிவிடுவோம் என்பதை அறிந்தே அப்படி சொன்னார்கள். இது எத்தனை பேருக்கு உண்மையாக நடக்கிறதோ எனக்கு தெரியாது, ஆனால் இறைவனே கதி என நமது பணியை நாம் செய்து கொண்டிருப்பது ஆனந்தத்திலும் ஆனந்தம். 

முதன் முதலில் பேரின்பத் தழுவல்கள் கவிதையை எழுத நினைத்தபோது இப்படித்தான் முதல் கவிதை வரிகள் வந்து விழுந்தது. இப்போதும் யோசித்து பார்க்கிறேன், அந்த கவிதைகள் எல்லாம் எழுதிய தருணத்தில் எனது உணர்வுகள் எல்லாம் எப்படி இருந்தன. அதுதான் இறை உணர்வா என்றெலாம் யோசிக்க இயலவில்லை. 

பொய் சொல்ல நினைத்தபின் இதில்
உண்மை உரைந்திருக்கும் என ஒருவரேனும்
நினைத்து ரசிப்போர் இப்பாரினில் உளரேனெனில் 
உன்னையன்றி வேறு எவர் இறைவா? 

அடுத்து எழுதிய ஐந்தாம் கவிதையில் 

உன்புகழ் பாடிட எண்ண வரம்வேண்டுமென 
கேட்டிட வெகுளியாய் ஒதுங்கி 
படிதாண்டி வந்துன் அருட்கரம் பற்றியதும்
வேண்டுதல் ஏதுமில்லை இறை வா. 

இப்போது நினைத்தால் கூட கண்கள் கலங்குகிறது. எவர் என்னை இப்படியெல்லாம் எழுதச் சொன்னது. எனக்கு என்ன அப்போதைய இந்த எண்ணத் தேவை இருந்தது. மிகவும் மதிப்பிற்குரிய நண்பர் அப்போதே கேட்டார். என்னவா? எண்ணவா? இறை வா!  

இதெல்லாம் நடந்த காலம் என பார்த்தால் இரண்டு மூன்று வருடங்கள் முன்னர் என்றே நினைக்கிறேன். அதற்கு பின்னர் இந்த இறைவன் எனும் பற்றுதல் விட்டு சற்று விலகியது போன்றே ஒரு உணர்வு. உண்மையிலேயே ஒதுங்கியா இருந்தேன்? அல்லது அப்போதும் இதே மன நிலைதானா? அடுத்து சில நாட்கள் பின்னர் எழுதிய கவிதை இப்படித்தான் வந்து இருந்தது. 

பற்றிய கரம்தனை விட்டே தவித்து
சுற்றியே இடங்கள் தேடி கொற்றவன்
தன்புகழ் ஏற்றிட மக்கள் காப்பதுபோல் 
உன்புகழ் ஏற்றிட  ஏதுசெய்தாய்.  

இப்படியெல்லாம் இருந்து கொண்டிருக்க சக தொழிலாளியிடம் பேசிய தினத்தன்று இரவில் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பிற மதத்தினரில் இருந்து ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்க எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதுதான். அதில் சில முஸ்லீம்கள், சில கிருத்துவர்கள் என இருந்தார்கள். இதில் ஒரு முஸ்லீம்  தினமும் மசூதிக்கு சென்று ஐந்துமுறை தொழுகை செய்யக் கூடியவர். மற்றொரு முஸ்லீம்  இந்த தொழுகை எல்லாம் அத்தியாவசியம் இல்லை என கருதக்கூடியவர். இப்படி இருக்க அந்த தொழுகை செய்யக்கூடிய முஸ்லீம்தனை தங்களுடன் வெளியே செல்ல அழைக்கிறார்கள். அவர் செல்லும் இடத்தில் மசூதி எல்லாம் இல்லை. முதலில் மறுக்கிறார், எல்லாரும் வற்புறுத்துகிறார்கள். மற்றொரு முஸ்லீம் கூட 'நீ செய்வது சரியில்லை' என்கிறார். சரி என இறுதியாக தொழுகை செய்யும் முஸ்லீம் வெளியில் செல்ல சம்மதம் சொல்கிறார். ஒரு இடத்துக்கு செல்கிறார்கள். 

அங்கே ஒரு நிகழ்வு நடக்கிறது. அனைவரும் ஆங்காங்கே பேசி கொண்டிருக்க 'தொழுகை நடத்தும் முஸ்லீம்' ஒரு பாயை விரித்து அதன் மீது அமர்ந்து ஒரு திசையை நோக்கி தொழுகை செய்கிறார். இதைக் கண்ட ஒருவர் கண்கள் கலங்குகிறது. இறைவன் மீது எத்தனை அலாதிப் பிரியம் இருந்தால் தன்னுடன் இருப்பவர்களின் மீது மனம் நோகாமல், பயணத்திற்கும் வந்து அதே வேளையில் இறைவனை விடாமல் தொழும் அந்த மனிதரை கண்டு பலரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒரு நண்பர் எழுதியது நினைவுக்கு வருகிறது. 'மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார்'. தொழுகை செய்யும் முஸ்லீமிடம் சொல்கிறார்கள். வாழ்க்கையில் பலர் தங்களது கொள்கையில் வறட்டு பிடிவாதம் கொண்டிருப்பதால் பிணக்கங்கள் ஏற்படுகிறது என. 'விட்டு கொடுப்பவர் கெட்டுப் போனதில்லை' என்கிறார்கள். இதே தொழுகை செய்யும் முஸ்லீமை எதற்கு அவர்கள் விட்டு கொடுத்திருக்க கூடாது எனும் எண்ணம் எழலாம். இருப்பினும் இதெல்லாம் தாண்டி அவர் கொண்டிருந்த இறைவன் மீதான பற்று என்னை நிறையவே சிந்திக்க வைத்துவிட்டது. மேலும் ஒரு நிகழ்வில் அந்த மனிதர் சொன்ன எல்லாதரப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் நாம் தவறுகள் செய்வது வாடிக்கை, ஆனால் மன்னித்து நடந்து கொள்ளும் மனப்பான்மை நமக்கு வேண்டும், அதைத்தான் இறைவன் சொல்கிறார் என நினைவு கூர்ந்தது கண்டு இப்படி எல்லாரும் எல்லா நேரங்களிலும் நடந்து கொண்டால் எத்தனை சுகமாக இருக்கும் என்றே நினைக்க தோணியது. மேலும் நிறைய நிகழ்வுகள் மனதில் நிழலாடியது. மீண்டும் இறைவனிடம் நெருங்கி செல்ல இயலுமா என நினைத்து கொண்டிருக்கும்போதே உன்னுள்ளே தான் நான் எப்போதும் இருக்கிறேன் என மனம் கட்டி கொண்ட இறைவனை பற்றி என்ன என்னால் சொல்லிவிட முடியும். 

'தெளிவின் நிலைக்கு சென்றவன் தெளிதல் எளிதில்லை என திரும்பி விடுவானோ' எனும் அச்சம் இனி எனக்குத் தேவையில்லை என்றே கருதுகிறேன். 

(தொடரும்)
No comments: