Friday 2 March 2012

தேடிக் கொண்ட விசயங்கள் - 5

ஆர் என் ஏ பற்றி குறிப்பிடுவது எனில் நமது எண்ணத்திற்கு வருவது புரதம். இந்த புரதம் நமது உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த எண்ணற்ற புரதங்களை உருவாக்க அமினோஅமிலங்கள் உபயோகப்படுகின்றன. மொத்தம் இருபத்தி இரண்டு அமினோஅமிலங்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த இருபத்தி இரண்டு அமினோமிலங்களில் இருபது அமினோஅமிலங்கள் நமது மரபணு குறிப்புகள் மூலம் சேர்ந்து பலவிதமான புரதங்களை உருவாக்குகின்றன.  இதில் ஒன்பது அமினோ அமிலங்கள் நமது உடல் மூலம் உருவாக்க முடியாத காரணத்தால் அவை உணவு வகையில் இருந்து பெறப்படுகிறது. மற்ற அமினோ அமிலங்கள் நமது உடலில் உருவாக்கப்படுகிறது. உணவுகளில் இருந்து மூலமே பெறப்படும் அமினோ அமிலத்தை 'முக்கியத்துவம் வாய்ந்த அமினோ அமிலங்கள்' என அழைக்கிறார்கள்.

நமது உடலில் வினையூக்கிகள், ரிசெப்டார், சில ஹார்மோன்கள் எல்லாம் இந்த புரதத்தினால் ஆனவையே. அதனால் தான் இந்த புரதம் தனை உடலின் அடிப்படை மூலக்கூறுகள் என்று அழைக்கிறார்கள். அதன் காரணமாகவே புரத சத்து அதிகமுள்ள உணவினையும் நம்மை உட்கொள்ள சொல்கிறார்கள். புரத சத்து உணவை நாம் உண்ணும்போது அந்த புரதம்தனை நேரடியாக நமது செல்கள் உறிஞ்சி கொள்ள முடியாததால் அவை எல்லாம் சிறு அமினோ அமிலங்களாக புரோட்டியேஸ் எனப்படும் வினையூக்கியால் மாற்றப்பட்டு பின்னர் நமது உடல் நமக்கு தேவையான புரதத்தை மாற்றி கொள்கிறது.

அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது உடலில் இருந்தாலும் அது ஆபத்துதான். அப்படி அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது கல்லீரலில் சென்று அவை உயிர்வினைக்கு உட்பட்டு யூரியாவாக மாற்றம் கொள்கிறது.



இந்த யூரியா நமது உடலில் இருந்து சிறுநீரகம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றபடுகிறது. அப்படி வெளியேற்றபடாத பட்சத்தில் நமது உடலில் விஷத்தன்மை ஏற வாய்ப்பு உள்ளது. ஆர் என் ஏ பற்றி பேச ஆரம்பித்துவிட்டு புரதம், அமினோ அமிலங்கள் பற்றி கூறுவதற்கு காரணம் இருக்கிறது. இந்த அமினோ அமிலங்களை புரதத்தை உருவாக செய்வது ஆர் என் ஏ தான். என்னதான் டி என் ஏ தன்னிடம் எல்லா விசயங்களையும் சேமித்து வைத்தாலும் இந்த ஆர் என் ஏ க்கள் இல்லை என்றால் எந்த ஒரு வேலையும் நடக்காது. இதற்கு முக்கிய காரணம் டி என் ஏ வால் நமது செல்லின் கருவில் இருந்து வெளியேற முடியாது.

அப்படி கருவில் இருந்து வெளியேற முடியாவிட்டால் எப்படி தனக்குள் இருக்கும் சிந்தனைகளை டி என் ஏ வெளியே சொல்ல இயலும்? அதற்காக உருவானதுதான் ஆர் என் ஏ. இந்த புரதம் எல்லாம் ரிபோசொம்ஸ் எனும் செல்லின் ஒரு பகுதியில் நடைபெறுகிறது. இது கருவுக்கு வெளியே இருக்கிறது. எனவே இந்த ஆர் என் ஏவானது டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெற்று கொண்டு அதை வெளியே கொண்டு வந்து புரதம் தனை உருவாக்க வழி செய்கிறது. ஒரு ஆர் என் ஏ மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை. ஆர் என் ஏக்கள் ஐந்து வகைப்படும்.

மேசன்ஜெர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ தான் டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெரும் ஆர் என் ஏ.

டிரான்ஸ்பர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ அமினோ அமிலத்தை மெசஞ்சர் ஆர் என் ஏ வில் உள்ள மரபு குறிப்புகளுக்கு ஏற்ப கொண்டு வந்து சேர்ப்பவை.

ரிபோசொம் ஆர் என் ஏ. இவை புரதத்தை உருவாக்க உதவுபவை.

மைக்ரோ ஆர் என் ஏ. ஸ்மால் இண்டர்பிரோன் ஆர் என் ஏ எல்லாம் இருக்கின்றன.

ஆர் என் ஏக்கும் டி என் ஏக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. டி என் ஏ இரட்டை சங்கிலி. ஆர் என் ஏ ஒரு சங்கிலி. ஆர் என் ஏவில் தைமின் பதில் யுராசில் எனும் அமைப்பும், ரிபோஸ் எனும் சர்க்கரையும் உண்டு.

டி என் ஏ வில் உள்ள பல விசயங்களை புறந்தள்ளுவது இந்த ஆர் என் ஏ க்கள். இந்த ஆர் என் ஏ க்கள் முதன் முதலில் உருவாகி அதன் பின்னரே டி என் ஏ உருவாகி இருக்கலாம் என்றே கருதுகிறார்கள். ஆர் என் ஏ வைரஸ் உலகின் முதல் உயிரற்ற செல்.

எப்படி உயிரற்ற ஒன்றிலிருந்து உயிருள்ள ஒன்று உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டவே இந்த வைரஸ் இன்னும் உலவி கொண்டிருக்கிறது. உடல் நோய் தருவது வைரஸ் எனும் கிருமி. அதை போலவே கணினி கட்டுப்பாட்டினை செயல் இழக்க செய்வது வைரஸ் என்றே அழைத்தார்கள்.

பாக்டீரியா தரும் நோயிற்கும், வைரஸ் தரும் நோயிற்கும் வித்தியாசம் இருக்கத்தான் இருக்கிறது. வைரஸ் பற்றிய கவிதை என்றோ எழுதியது.

ஒடுக்கப்பட்ட உயிர் 
அடக்கப்பட்ட உயிர் 
தனித்து இருந்தால் மயான நிலை 
ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை 

மண் துகள்களுக்கு 
விமோசனம் தந்து 
உயிரற்ற பொருளுக்கும் 
உயிர் கொண்ட பொருளுக்கும் 
பாலமும் பகையுமாய் 

ஒற்றை கயிறு ஆர் என் ஏ 
கொண்டு 
இரட்டை கயிறு டி என் ஏ 
திரித்து 
உலக உயிர்களின் வழியானாய் 
உலக உயிர்களுக்கு வலியுமானாய் 

உன்னில் தேடுகிறேன் 
எனக்கான இறைவனை!



(தொடரும்)

7 comments:

HajasreeN said...

பயனுள்ள பதிவாக உள்ளது,

அப்பாதுரை said...

கடைசி வரிதான் புரியவில்லை.

அருமையாக எழுதுகிறீர்கள். நிறைய தமிழ் கலைச் சொற்கள் கற்றுக் கொள்ள முடிகிறது.

Yaathoramani.blogspot.com said...

அரிய விஷயங்களை எளிய முறையில் அனைவரும் அறியத்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 1

Radhakrishnan said...

நன்றி ஹாஜா.

நன்றி அப்பாதுரை. இரண்டு வருடங்கள் முன்னர் எழுதியது, தற்போது எதற்கு அப்படி எழுதினேன் என புரியவில்லை. ஒருவேளை இறைவன் எல்லாம் என இருக்கிறார் என எழுதி இருக்கலாம். :)

நன்றி ரமணி ஐயா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நன்றி..வைரஸ் உயிருள்ளதா உயிரற்றதா என்ற சர்ச்சை முடிந்தபாடில்லை என்றே தெரிகிறது.

http://www.freeessays.cc/db/3/alw9.shtml

Radhakrishnan said...

மனிதர்கள் எதிலும் ஒரு தெளிவு நிலைக்கு அத்தனை எளிதாக செல்வதில்லை என்பதையே இதை காட்டுகிறது. நன்றி சகோதரி.