Saturday 10 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 3

அந்த போட்டாவை திருப்பி என்னிடம் தந்துவிட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அடுக்களைக்கு சென்றுவிட்டார் அம்மா. எனக்கு பகீரென இருந்தது. இந்நேரம் சத்தம் போட்டு பெரும் ரகளையே நடந்து இருக்க வேண்டும். ஆனால் அம்மா எதுவுமே சொல்லவில்லை. நான் எனது நோட்டுகளை எல்லாம் வைத்துவிட்டு அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தேன். உள்ளே சென்ற அம்மா வழக்கம் போல காபியும், ரொட்டியும் கொண்டு வந்து வைத்தார்கள். இதை சாப்பிட்டு முடித்ததும் விளையாட சென்றுவிட்டு இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவேன். ஓடி ஆடி விளையாடும் விளையாட்டு எல்லாம் இல்லை. ஆனால் இன்று எங்கும் செல்ல மனம் விருப்பம் கொள்ளவில்லை.

'அம்மா' என்றேன். 'சொல்லுப்பா' என்றார்கள். 'நான் சொன்னதை எல்லாம் கேட்டு நீ ஒண்ணுமே சொல்லலையே அம்மா' என்றேன். என் அம்மாவின் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லை. 'பேசும்மா' என்றேன். 'கொஞ்சம் அடுக்களையில வேலை இருக்கு, பத்திரமா விளையாடிட்டு வா' என அம்மா மீண்டும் அடுக்களைக்கு சென்றுவிட்டார். இப்படியொரு நிகழ்வு என் வாழ்வில் நடந்ததே இல்லை. என் அம்மா கோபமோ, சந்தோசமோ அப்படி அப்படியே போட்டுடைத்துவிடுவார். ஆனால் அவர் இன்று நடந்து கொண்ட விதம் என்னால் ரொட்டியை, காபியை தொடக்கூட மனம் இடம் தரவில்லை. அடுக்களைக்கு போன அம்மா திரும்பி வந்தார். 'காபி ஆறிப்போயிரும் முருகேசு, திரும்ப திரும்ப சூடு பண்ணினா காபி நல்லா இருக்காது' என்று சொல்லிவிட்டு போனார். சில நேரங்களில் எதார்த்தமாக சொல்லப்படும் வார்த்தைகள் ரண வேதனைகள் தந்துவிட்டு போகும். அவர் அப்படி சொன்னது எனக்கு ரண வேதனையாக இருந்தது. நான் சொன்ன விசயங்களால் அம்மாவின் உணர்வுகளை தைத்துவிட்டேனோ, கிழித்துவிட்டேனோ என புரியாமல் வழக்கத்திற்கு மாறாக வீட்டில் சில வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். காபி டம்ளரையும், ரொட்டி தட்டையும் கழுவிக்கொண்டிருந்தேன்.

'அதெல்லாம் இருக்கட்டும், நான் செஞ்சிக்கிறேன். நீ விளையாடிட்டு வா' என அம்மா மீண்டும் வந்து சொல்லிவிட்டு போனார். அவை இரண்டையும் கழுவி தொடைத்து வைத்துவிட்டு அடுக்களைக்கு போன நான் அம்மாவை கட்டிபிடித்தேன். 'என்னை மன்னிச்சிருமா' என்றேன். 'என்ன தப்பு பண்ணின நீ, மன்னிக்க சொல்ற' என்றார். 'என் மேல கோவமே வரலையாம்மா' என்றேன். 'இல்லை முருகேசு, அந்த பொண்ணோட பேரு என்ன' என்றார். 'உன் பேருதான்மா' என்றேன். 'என் பேரா' என்றார். 'ம்' என்றேன். 'சரி நாழியாகுது, விளையாட போ' என்றார். 'இல்லைம்மா நான் விளையாட போகலை, வீட்டு வேலை இருந்தா சொல்லு' என்றேன். அம்மா என்னை பார்த்த பார்வையில் நான் கூனி குறுகிப் போனேன். இத்தனை நாள் இல்லாத அக்கறை இன்று எனக்கு வந்தது என அம்மா நினைத்து இருக்கலாம்.

'தலைவலி என அம்மா அமர்ந்தபோது, மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அழைத்தபோது என அம்மாவினை நிறையவே உதாசீனப்படுத்தி இருக்கிறேன். அந்த எண்ணமெல்லாம் என்னை குற்றுயிராக்கி கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் நினைத்து என்னை நானே மட்டம் தட்டி கொள்ள வேண்டாம் என முடிவுடன் அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டினை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். 'நான் எல்லாம் செஞ்சிக்கிறேன்' என்றார் அம்மா. அவரின் பேச்சை எதுவும் சட்டை செய்யாமல் நிறைய வேலைகள் அன்று செய்தேன். உடம்பு அத்தனை வலி வலித்தது. அம்மாவுக்கு இப்படித்தான் வலித்து இருக்குமோ? என மாடியில் இருந்து கீழி இறங்கி வந்தேன்.

'அம்மா' என அவரை மீண்டும் கட்டிபிடித்து கொண்டேன். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததை கண்டு என்னால் ஒரு கணம் எதுவுமே செய்ய முடியவில்லை. 'என்னம்மா' என்றேன். 'மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு முருகேசு' என்றார். 'காயத்ரிக்கு நான் தேங்க்ஸ் சொன்னேன்னு நாளைக்கு சொல்லு' என்றார். 'உனக்குத்தான்மா நான் நன்றி சொல்லணும்' என்றேன். 'நான் உன் அம்மாடா, எனக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு' என குளிக்க சென்றுவிட்டார். தினமும் காலையிலும், மாலையிலும் குளிக்கும் வழக்கத்தை அம்மா கடைபிடிப்பார். காய்ச்சல் வந்தாலும் குளிக்காமல் இருக்கமாட்டார். புறச்சுத்தமும், அகச்சுத்தமும் அத்தனை அவசியம் இவ்வுலகுக்கு என எங்கோ படித்து இருக்கிறேன்.

அடுத்து நகர்ந்த ஒவ்வொரு நிமிடமும் எனது வாழ்வில் நடந்த விசயங்கள் நிறையவே நினைவுக்கு வந்தது. இந்த அம்மா மட்டும் இல்லாவிட்டால் நான் இந்நேரம் சின்னாபின்னமாகிப் போயிருப்பேன். என்னை இந்த அளவுக்கு வளர்த்து வந்தது அம்மா தான். எந்த நேரமும் என்னை கண்காணித்து எதை எதை சரியாக செய்ய வேண்டும் என சொல்லித்தந்து படிக்க பிடிக்காத என்னை படிக்க வைத்து எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. இது ஒரு அம்மாவின் கடமை என்று என்னால் புறம் தள்ள இயலவில்லை. பன்னிரண்டாவது வரையே படித்த என் அம்மாவின் கல்வி ஞானம் பெரிது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடத்தை எவர் ஒருவர் கற்று கொள்கிறாரோ அவரே வாழ்க்கையில் பெரும் சாதனையாளர் ஆகிறார் என மாலை வகுப்பில் ஒரு ஆசிரியர் சொன்ன வாசகம் எனது அம்மாவுக்கு நிறையவே பொருந்தும். அப்பா எப்போதுமே 'அம்மாதான் எல்லாம், சத்தம் போடுறா, திட்டுறா அப்படினுட்டு அவளை வெறுத்துராதே' என என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அம்மாவின் நச்சரிப்பு எனக்கு அதிக எரிச்சல் தந்து இருந்தாலும் அவர் என் அம்மாதானே. அந்த நச்சரிப்புதான் என்னை நன்றாக படிக்க வைத்தது.

அம்மா தான் எல்லாம் செய்கிறாரே என இறுமாந்து இருந்துவிட்டேன். அம்மா செய்யட்டும் எனும் இளக்காரம்! அக்கா கூட அடிக்கடி சொல்வார், அம்மா பாவம் டா, கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா என. நீ தான் மாடாட்டம் இருக்கியே என்பார். அக்காவின் பேச்சை அத்தனை பெரிதாக காதில் நான் போட்டு கொண்டதில்லை. ஆம்பளை பையனுக்கு அதிகம் செல்லம், பொம்பளை பிள்ளைக்கு கொஞ்சம் செல்லம் என்றெல்லாம் என் அம்மாவோ, அப்பாவோ பார்த்தது இல்லை. எங்கள் இருவரையும் பிரித்து பார்த்ததும் இல்லை. அக்கா நிறையவே சமர்த்து. அம்மா தன்னை சத்தம் போடாமல் பார்த்து கொள்வாள். காதல் என வந்ததும் அதை என் அக்கா அம்மாவிடம் சொல்லி வைக்க, அம்மா தான் அந்த பையன் பற்றி விசாரித்து எல்லாம் தெரிந்த பின்னர் இந்த பையனே வேண்டாம் என பிடிவாதமாக நின்றார். இன்றுவரை எரிச்சல் தந்த இந்த விசயம் இப்போது அம்மாவின் செயல் சரியென்றே நினைக்க வைத்தது.


அம்மா குளித்துவிட்டு சாமி கும்பிட்டு வந்தார். எனது நெற்றியில் திருநீறு வைத்தார். நான் அம்மாவை சாமியாகத்தான் அன்று கும்பிட்டேன்.  அவரது காலில் முதன் முதலில் விழுந்தேன். அம்மா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'முருகேசு, என்னடா இது புது பழக்கம் எல்லாம்' என என்னை தொட்டு தூக்கியபோது எனது கண்கள் குளமாகி இருந்தன. அம்மா பதினெட்டு வருட வாழ்க்கையில் பதின்மூன்று வருடம் உனது உணர்வுகளை சிதைத்தே வாழ்ந்து இருக்கிறேனே என மனதில் நினைக்கையில்  அந்த வேதனை கண்களில் நீராகி இருந்தது. 


'நான் காயத்ரியை பார்க்கணும்' என்றார் அம்மா. 'நாளைக்கு கேட்டு சொல்றேன்மா' என்று சொன்னேன். அப்பா வந்தார். அப்பாவிடம் எல்லா விசயங்களையும் அம்மா சொல்லி இருக்க வேண்டும். என்னை அப்பா உச்சி மோர்ந்தார். போட்டாவை கேட்டார். பார்த்தார். யார் அந்த பொண்ணு என்றார். 

அம்மா போல அப்பா காயத்ரியை கவனிக்கவில்லை போல என நினைத்து கொண்டு படத்தில் இருந்த காயத்ரியை காட்டினேன். அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

எங்கோ எப்போதோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது. தாயில்லா பிஞ்சுக்கெல்லாம்     அழுதபோதாவது அம்மா வருவாளா! அன்றே மனதில் பெரிய திட்டம் தீட்டினேன்.

(தொடரும்)

No comments: