Thursday 16 October 2008

வேர்களை மறந்த விழுதுகள்

முன்னுரை:-
மனித இனத்திற்கென்று தனித்தனி அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டு குடும்பம், ஊர், நகரம், நாடு, உலகம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், சமயக் கொள்கைகள் என பிரிந்து வாழும் முறையானது சரியில்லை என்றாலும் தனக்கென இருக்கும் அடையாளங்களை தொலைத்து வாழ்வது என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். எந்த ஒரு பிரிவினையும் ஏற்படுத்தாது தமக்குரிய அடையாளங்களை பாதுகாப்பது மட்டுமின்றி, மற்றவர்களுடைய அடையாளங்களுக்கு மதிப்பளித்து வாழ்வது இன்றைய உலகில் இன்றியமையாததாகும்.

உலகம் யாவும் தமிழர்:

உலக நாடுகளில் தமிழர்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். கல்வித்துறை, கணினித்துறை, மருத்துவத் துறை, கட்டிடத் துறை, விஞ்ஞானம் என அனைத்து துறையிலும் சிறப்புடன் செயலாற்றி வருகிறார்கள். அப்படி சிறப்புடன் வாழும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கு உரிய கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை இழந்து வருவதும், வேண்டுமென்றே தொலைத்து வருவதும் வேதனைக்குரிய விசயம்.

'எலி வளையானாலும் தனிவளை வேண்டும்' இது ஒரு அழகிய பழமொழி. ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தனிவளையை கொய்துவிட்டு எப்படி தனிவளை ஏற்படுத்திக் கொள்வது எனப் புரியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் கலாச்சாரம், பண்பாட்டினை கட்டிக் காத்திட வெளிநாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை, அங்கேயே இருந்து காப்பாற்ற முடியும். அதுமட்டுமின்றி, இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருப்பது நமது பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அவலத்தை ஏற்படுத்திக்கொண்டே வருவது நமது எண்ணத்தின் ஓட்டத்தை தடுமாறச் செய்வது தவிர்க்க முடியாதது.

'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்றார் மகாகவி பாரதியார். 'தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்ற சொன்ன மகாகவியே இதுபோன்று சொல்ல அன்றே விதை விதைக்கப்பட்டு இருக்கிறது, ஆங்கில தாகம் ஆட்டிப்படைத்திருக்கிறது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னர் அதே நிலை கட்டுக்கடங்காமல் செல்வது கவலைக்குரிய விசயம் அல்லவா!

பிறமொழிகளை கற்றுக் கொள்வதிலும், புலமை பெற்றுக் கொள்வதிலும் எவ்வித இரண்டாம் உணர்வு தேவையில்லை, எனினும் நமது தாய் மொழியை மறந்து வாழ்வது, சந்ததியினருக்கு கற்பிக்காமல் விடுவது நமது தாயை அவமதித்து வாழ்வதற்கு சமம். நாம் தமிழர் என்ற அடையாளம் அழிந்து போகும் நிலை வருத்தத்திற்கு உரியது.

கலாச்சார சீரழிவு, பண்பாடு முறைகேடு:

தமிழனுக்கு என என்ன இருக்கிறது என ஆதங்கப்படும் நிலை இன்று வருவதற்கான காரணமே நல்ல பண்பை, நல்ல செயலை நமது சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லாததுதான். 'அம்மா எங்கே?' என இன்றைய நவநாகரீக தமிழர் குழந்தையிடம் கேட்டால், அக்குழந்தை அம்மாவிடம் சென்று 'அந்த மாமா என்னைத் திட்டுகிறார்' என ஆங்கிலத்தில் சொல்லும் அளவிற்கு நமது நிலை நகைப்புக்குரிய விசயமாகிவிட்டது.

தமிழர் ஒருவரிடம் தமிழ் கலாச்சார பண்பாடு பற்றி விளக்கமாக சொல்லுங்கள் எனக் கேட்டபோது அவர் அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என சொன்ன பதில் எந்த அளவிற்கு கலாச்சார சீரழிவும், பண்பாடு முறைகேடும் நடந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அறியலாம். 'புலியை முறம் கொண்டு விரட்டிய வீரப் பெண்மணி' என தமிழரின் வீரம் பேசிய நாம் இன்று ஒரு வட்டத்தில் சிக்க வைத்து வழி தெரியாது தவிக்கின்றோம்.

'உடுத்தும் உடையிலும்
உண்ணும் உணவிலும்
பேசும் பேச்சிலும்
பார்க்கும் பார்வையிலும்
பணிவின் பாங்கிலும்
அடக்கத்தின் அறிவிலும்
அறிந்துகொள் மனிதனென்று
அதனினும் அவன் தமிழனென்று' என்பான் ஒரு கவிஞன்.

இன்று உடை பற்றிய சர்ச்சை பெரும் சர்ச்சையாகி வருகிறது. 'ஆடை இல்லாத மேனிஅவன் பெயர் அந்நாளில் ஞானி இன்றோ அது ஒரு பொழுது போக்கு'என்னும் நிலை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. உணவு விசயத்திலும் அதே நிலை தொடர்கிறது. அப்படியெனில் மாற்றங்கள் அவசியமில்லையா என கேட்கலாம். மாற்றங்கள் நிச்சயம் வேண்டும், ஆனால் அந்த மாற்றங்கள் நமது அடையாளங்களை அழிப்பதை சம்மதிக்க நாம் நம்மை மாற்றிக் கொள்வது என்பது நம்மை நாமே அவமானப்படுத்துவதாகும்.

வழிமுறை:

'பழமை பழமையென்றுபாவனை பேசலன்றிபழமை இருந்தநிலை கிளியேபாமரர் ஏதறிவார்'என்பார் பாரதி. நமது கலாச்சாரம், பண்பாட்டினை நாம் முறையாக கற்றுக் கொண்டு பின்பற்றுவதோடு மட்டுமின்றி, நமது சந்ததியினருக்கு முறையாக கற்பிக்க வேண்டும். அச்சத்தில் உழன்று நாம் பின்தங்கி விடுவோமோ என்ற எண்ணம் அகற்றி திறம்பட செயல்புரிய வேண்டும்.

லெமூரியா என்றொரு கண்டம் இருந்ததாகவும், அங்கே தமிழர்கள் கலாச்சாரம் பண்பாட்டில் சிறப்புடன் விளங்கியதாகவும் அதில் இருந்த ஒரு பகுதியினர்தான் நாம் எனவும் கூறுவர். அக்கண்டம்தான் அழிந்துவிட்டது, ஆனால் நாம் இருக்கிறோம், நமது கலாச்சாரம் பண்பாடு அழியவிடாமல் காப்பது நமது கடமையல்லவா.

முடிவுரை:

'நல்லதோர் வீணை செய்தே அதைநலங்கெட புழுதியில் எறிவதுண்டோ'எறிந்துவிட்டோம். நமது வேரினை மறந்து விட்டோம். இனியும் அடையாளம் தெரியாத அளவிற்கு அது சிதைந்து போகும் முன்னர் எடுத்து சுத்தப்படுத்துவோம், பாதுகாத்து பின்வரும் நாளில் போற்றி காத்திடுவோம், தமிழர்களாகிய நாம் இதனை சூளுரையாக எடுத்து தொடர்ந்து செயலாற்றி வெற்றி பெறுவோம்.

No comments: