Friday 10 October 2008

என்னவாகி இருப்பீங்க?

அந்த அழகிய வீட்டின் முன்னால் திங்கட்கிழமையன்று அதிகாலையில் சேவல் 'கொக்கரக்கோ' என கூவியது. திங்கட்கிழமையாய் இருந்தால் என்ன, செவ்வாய்கிழமையாய் இருந்தால் என்ன, சேவல் என்ன குயிலா? 'கொக்கரக்கோ' என்றுதானே கூவும். அதே நேரத்தில் அந்த அழகிய வீட்டின் அருகில் இருந்த தொழுவத்தில் ஒரு பசுமாடு 'மா' என்று சத்தமிட்டது. பசுமாடு என்ன இன்றைய சூழலில் மாறிப்போன மனிதர்களின் வழியா? 'மா' என்றுதானே சத்தமிடும்.

சரியாக நேரம் காலை நான்கு மணி முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. தெய்வசிகாமணியின் பஞ்சாங்கப்படி இன்று சூரிய உதயம் ஆறு மணி இருபத்தி ஒன்பது நிமிடங்களுக்குத்தான். வழக்கம்போல காளியம்மாள் அதிகாலை எழுந்து 'சரக் சரக்' என வீட்டின் முன் வாசலைப் பெருக்க ஆரம்பித்து இருந்தார். மாலையும் பெருக்குவார். நாள்பொழுதெல்லாம் குப்பை விழத்தானே போகிறது என பெருக்காமல் விட்டுவிடமாட்டார். மாலையும் பெருக்குகிறாரே, எவ்வளவு குப்பைகள் வந்து விழுகிறது என கணக்கா எடுக்கிறார்? பெருக்கி இப்போது கூட்டி முடித்துவிட்டார். வீட்டு வாசல் மிக மிக மிக சுத்தமாக இருந்தது.

பசுமாட்டு சாணத்தை எடுத்து தண்ணீரில் கரைத்தார். வாசலில் முன்புறம் தெளித்தார். சாணம் கரைத்த தண்ணீரைத் தெளிக்காது, சாதாரணத் தண்ணீரை அவரைத் தெளிக்கச் சொல்வது சரியில்லைதான். வாசல் தெளித்தவர் கோலம் போட ஆரம்பித்துவிட்டார். குறுக்குவாட்டில் ஆறு புள்ளிகள் வைத்தார். அடுத்த வரிசையும் ஆறு புள்ளிகள் வைத்தார். இப்படியே புள்ளிகள் வைத்து அந்த புள்ளிகளை இணைத்தபோது அழகிய தாமரை உருவாகியிருந்தது. மலர் உருவாகும் இடத்தில் சாணத்தை உருண்டை செய்து வைத்தார், அதன்மேல் ஒரு சின்ன மலரையும் வைத்தார். பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. மணி ஐந்து ஆகியிருந்தது. இந்த அரைமணி நேர வேலையை இப்பொழுது பலர் செய்வதே இல்லை.

தனது ஒரே மகனான கோபாலுவினை காளியம்மாள் எழுப்பினார்.

'கோவாலு, கோவாலு மணி அஞ்சு ஆச்சுப்பா, எழுந்திருப்பா, இன்னைக்காவது ஒனக்கு நல்ல நேரம் பொறக்கட்டும்'

கோபால் அவசர அவசரமாக எழுந்தான். அருகில் படுத்து இருந்த தந்தையை எழுப்பிவிட்டான். அம்மா எழுப்பாமல் இருந்து இருந்தால் மனதில் சொல்லி வைத்தபடி சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடங்களுக்கு எழுந்து இருப்பான். தூங்கும்போது காலையில் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என நமக்குள் சொல்லி்வைத்துக் கொண்டால் நமது விழிகள் சரியாக அத்தனை மணிக்கு விழித்துக் கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் 'பயாலாஜிக்கல் கிளாக்' என சொல்வார்கள். தமிழில் 'உயிரியல் நேரம்' என சொல்லிக்கொள்வோம்.

குளித்த பின்னர் தனது வீட்டில் இருந்த பூஜை அறையில் சாமிக்கு விளக்கு ஏற்றி வழிபட்டான் கோபால். வழிபாட்டினை மனதுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும் என சொல்வார்கள். ஆனால் கோபால் எப்போதும் வாய்விட்டு சொல்வதுதான் வழக்கம்.

'சாமி, இன்னைக்கு போற இண்டர்வியூல எப்படியாவது எனக்கு வேலை கிடைச்சிரனும், உன்கிட்ட நான் வேலை தேடிப் போறப்ப எல்லாம் சொல்லிட்டுதானே போறேன், இந்த தடவையும் என் தேவையை விட இன்னொருத்தர் தேவை அதிகம்னு நினைச்சிராதே எப்படியாவது எனக்கு இந்த வேலை கிடைச்சிர வழி செய்'

வேண்டுதல் முடித்து தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்கினான். 'வேலை கிடைச்சிரும்' என இருவருமே வழக்கம்போல ஒருசேர சொன்னார்கள். அம்மா சுடச்சுட தயார் செய்த இட்லிகளை வைத்தார். கூடவே சட்னியும் சாம்பாரும். அமைதியாக ரசித்து சாப்பிட்டான் கோபால்.

நேர்முகத் தேர்வுக்கு பலர் வந்து இருந்தார்கள். 'நம்பிக்கை' எனும் வார இதழில் நிருபர் பணிக்கான வேலை அது. கோபால் அங்கிருந்தவர்களிடம் எல்லாம் சகஜமாக பேசினான். அனைவரும் வேலை கிடைக்க வேண்டுமே என்ற ஒரு நோக்கத்தில் சந்தோசத்தை சற்று ஒதுக்கி வைத்து இருந்தார்கள். அச்சம் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. நிலைமையை புரிந்து கொண்ட கோபால் தனது மனதில் பல கேள்விகளை கேட்டுக்கொண்டும் பதில் சொல்லிக்கொண்டும் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டான். நேர்முகத் தேர்வும் நடந்து முடிந்தது. ஒரு வாரத்தில் பதில் சொல்கிறோம் என சொல்லி அனுப்பிவிட்டார்கள். வீட்டிற்கு மாலை வந்து சேர்ந்தான். அம்மா வாசலை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். கோபாலைப் பார்த்ததும் அம்மா கேட்டார்.

''கோவாலு, எப்படிப்பா பண்ணினே, என்னப்பா சொன்னாக''

''நல்லா பண்ணியிருக்கேன்மா, ஒரு வாரத்தில சொல்றேனு சொல்லி இருக்காக''

''இதுதான்பா எனக்கு உன்கிட்ட பிடிச்சது, நாம பண்ற விசயத்தை நல்லா பண்ணியிருக்கோம்னு நமக்குத் தோணனும், மத்தவங்க ஒருநாளைக்கு இல்லாட்டி ஒருநாள் நல்லா இருக்குனு சொல்லியிருவாக, கை காலு அலம்பிட்டு வா காபி போட்டுத் தரேன்''

''ஏன்மா தோட்டத்துக்குப் போய்ட்டு வந்துட்டியா''

''வேலை சீக்கிரம் இன்னைக்கு முடிச்சிட்டோம்பா''

மறுநாள் காலையில் வழக்கம்போல அம்மாவுடனும் அப்பாவுடனும் தோட்ட வேலைக்குச் சென்றான் கோபால். அங்கிருந்தவர்கள் காளியம்மாளிடம் 'பையன் காலேசுல பெரிய படிப்பு படிக்குதுனு சொன்ன, இன்னுமா வேலை கிடைக்கல இரண்டு மாசம் ஆகப்போகுதுல்ல, ஆனாலும் உன் பையன் கெட்டிக்கார பையன் காளியம்மா, இம்புட்டு படிச்சிருக்கோம்னு நினைக்காம தோட்டத்துல உடம்பை வளைச்சி வேலை செய்யுது பாரு அதைப் பாராட்டனும்' என சொன்னபோது 'வேலை வேலைனு தேடுறான், படிச்ச படிப்புக்கான வேலை கிடைக்கவரைக்கும் தோட்டத்துல வேலை செய்றேனு சொல்றான், வேணாம்னு சொன்னாலும் கேட்கறதில்ல, சரி செய்யட்டும்னு விட்டுட்டேன். நாம வேலைக்கு ஆளு கூப்பிட்டு வேலை செய்றோம், இதோ நிற்கிறாளே செல்லாயி இவ அம்மாக்கு உடம்பு சரியில்லைனு இவ வந்துருக்கா, பாவம் என்கிட்ட வந்து எது களை, எது செடினு கேட்டா, சொன்னேன் எம்புட்டு வேகமாக வேலையை செஞ்சா அப்படி சொல்லிக்கொடுத்தா வேலையை செஞ்சிட்டு போறான், ம்ம் எந்த மவராசன் வேலை கொடுப்பானோ எம்புள்ளைக்கு' என்றார் காளியம்மாள்.

அதே சேவல். கொக்கரக்கோ. அதே பசுமாடு. மா. அதே சாணம். கோலம். ஒரு வாரம் ஓடியேப் போனது. தோட்ட வேலைகளை முடித்துவிட்டு வீடு வந்த கோபால் தபால் இருப்பதை எடுத்துப் பார்த்தான். அச்சத்துடன் தபாலினைப் பிரித்தான். உள்ளே இருந்த கடிதம்தனை கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளினான். 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சி, அப்பா எனக்கு வேலை கிடைச்சிருச்சி, சாமி எனக்கு வேலை கிடைச்சிருச்சி' என சத்தமிட்டான்.

''கோவாலு நீ செயிச்சிட்டிப்பா எப்போ வரச் சொல்லியிருக்காக''

''அடுத்த வாரம் வரச்சொல்லியிருக்காகம்மா, இன்னும் ஒரு வாரம் நம்ம தோட்டத்துல வேலை செய்யலாம்மா''

''ஒரு வாரம் வீட்டுல இருப்பா அதான் வேலை கிடைச்சிருச்சில்ல''

''இல்லம்மா, உங்களோட எல்லாம் வந்து வேலை செய்யிறது சந்தோசமா இருக்கும்மா ஆனா இந்த வேலைக்குப் போகனும்னுதானே படிச்சேன், இந்த வேலை மூலம் நம்ம வேலையோட முக்கியத்துவத்தை மக்கள் முன்னால கொண்டு போவேன்மா''

காளியம்மாளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வேலை கிடைத்த விசயம் அறிந்தவர்கள் கோபாலினைப் பாராட்டினார்கள். முதல்நாள் வேலை அன்றே அந்த வார இதழ் ஆசிரியரிடம் தான் ஒரு கட்டுரை எழுத இருப்பதாக கூறினான் கோபால். கட்டுரையின் தலைப்பு என்னவாகி இருப்பீங்க? எனவும் எப்படி நடிகர், நடிகையரிடம் என்னவாகி இருப்பீங்க என கேட்கிறார்களோ அதைப்போல கிராமத்து மக்களிடம், சிறந்த மருத்துவர்களிடம், சிறந்த கட்டிடக்கலைஞரிடம் என பலரிடம் கேட்டு எழுத இருப்பதாக சொன்னதும் ஆசிரியர் கோபாலினை பாராட்டி உடனே சம்மதம் சொன்னார்.

முதன்முதலாக தனது ஊருக்கு வந்து தனது தாய் தந்தையரிடம் கேட்டான்.

''நீங்க இரண்டு பேரும் இப்போ விவசாயம் பார்க்காம இருந்தா என்னவாகி இருப்பீங்கனு சொல்ல முடியுமா?''

''நாங்க சொந்த விவசாயம் பார்க்காம இருக்கிற நிலை இருந்து இருந்தா கூலி விவசாயம் பார்த்து இருந்து இருப்போம், எங்களுக்குத் தெரிஞ்ச தொழிலு இதுதான்பா, படிக்கப் பிடிக்காம விவசாயம்னு வாழ்க்கை சந்தோசமா இருக்கு''

அதற்கடுத்தாக அந்த ஊரில் இருந்த செல்வந்தரை ஒருவரைப் பார்க்கச் சென்றான்.

''நீங்க இப்படி விவசாயம் பார்க்காம இருந்து இருந்தா என்னவாகி இருப்பீங்க?''

''தம்பி கோபாலு எப்படி இருக்க, வேலை கிடைச்சதும் அதுவுமா என்கிட்ட கேள்வி கேட்க வந்துட்ட. நான் படிச்சது எலக்ட்ரிகல் என்ஜினியரிங். ஒரு கம்பெனிக்கோ, பஸ் டிப்போக்கோ வேலைக்குப் போகாம நாம ஊர் தோட்டத்துக்கு எல்லாம் உதவியா இருக்கும்னு அப்படியே விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். இந்த விவசாயம் இல்லாம இருந்து இருந்தா படிச்ச படிப்புக்கான வேலையைப் பார்த்து இருந்துருப்பேன்''

இவ்வாறு பலரிடம் பேசியபின்னர் கடைசியாக ஒரு சமூக நல சேவகரிடம் சென்றான் கோபால்.

''நீங்க சமூக நல சேவகராக இல்லாட்டி என்னவாகி இருப்பீங்க?''

''நான் சமூக நல சேவகராகவே இருந்து இருப்பேன்''

''ஓ உங்களுக்குனு வேறு வேலை, ஆசை இருந்தது இல்லையா?''

''தம்பி ஒவ்வொரு வேலையும், ஒவ்வொரு படிப்பும் சமூக நலனில் அக்கறை செலுத்தக்கூடியதாக இருக்கனும். இப்போ நீங்க செய்ற வேலை கூட சமூக நலன் கருதியதுதான். டாக்டரோட வேலை சமூகத்தில் எந்த ஒரு நோயும் இல்லாமல் பாதுகாக்க கூடிய வேலை. இப்படி ஒவ்வொருத்தரை எடுத்துக்கிட்டா அவங்களோட வேலை தங்களோட சுயமான முன்னேற்றத்துக்குனு இல்லாம தாங்க படிச்ச படிப்பு கெளரவத்துக்கு கிடைச்ச வேலைனு பார்க்காம சமூக நலனுக்காக உழைக்கிறோம்னு மனசில படனும். அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் சமூக அக்கறை, சமூக நல அமைப்புகளுக்குத்தான் சமூக அக்கறைனு இருக்கக் கூடாது. வேலையில்லாம இருக்கற பட்டதாரிக்குக் கூட சமூக நலனில் அக்கறை இருக்கனும். அப்படி இருந்தாத்தான் ஒரு உயரிய உண்மையான சமுதாயம் உருவாகும். அதனால நான் எந்த வேலைக்குப் போய் இருந்தாலும் ஒரு சமூக நல சேவகராகவே இருந்து இருப்பேன்''

''என்னுடைய கட்டுரைக்கு அற்புதமான விசயத்தைச் சொல்லி இருக்கீங்க, நீங்க சொல்றதுபோல யாராவது என்னவாகி இருப்பீங்கனு கேட்டா சமூக நல சேவகராகவே இருக்கோம்னு ஒவ்வொருத்தரும் சொல்லனும், எல்லாரும் மாறனும்''

கோபால் நன்றி சொல்லிவிட்டு மிக அருமையான கட்டுரையை தயார் செய்து ஆசிரியரிடம் தந்தான். அதைப்படித்துவிட்டு கோபாலை வெகுவாகப் பாராட்டினார். அந்த கட்டுரை மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்டது. ஒவ்வொருத்தரும் மற்றவர்களை என்னவாகி இருப்பீங்கனு கேட்க ஆரம்பித்தார்கள்.

முற்றும்.

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்