Friday 10 October 2008

பேரின்பத் தழுவல்கள் -2

பற்றிய கரம்தனை விட்டே தவித்து
சுற்றியே இடங்கள் தேடி கொற்றவன்
தன்புகழ் ஏற்றிட மக்கள் காப்பதுபோல்
உன்புகழ் ஏற்றிட ஏதுசெய்தாய்.

பெற்ற தாயை இழந்த போழ்தில்
கற்ற மொழியும் கரைந்து வெற்று
நிலையில் மனம் அற்று போகையில்
தலைமீது உன்கரம் உணர்ந்தேன்.

இழந்த உயிரை மீட்டுத் தாவென
குழந்தை போலுன்னை கேட்டு நீந்துகையில்
பேச கூடாமல் ஊனம் நேர்ந்ததுபோல்
நேச பார்வை காட்டினாய்.

நிலைத்து விடுவாயென நினைவில் இருத்திட
கலைத்து சென்ற மறுகணம் மலைத்து
ஒடுங்கிப் போகின்ற இவ்வுயிர் தொட்டு
நடுங்கிய நிலைதனை அறிவாய்.

எம்பிரானே எனதுயிர் உனதாகியதை உணர்ந்தே
நம்பியிரு வெனகதறி நொடியாவும் தேம்பி
உடைந்து செல்லும் மண்துகளாய் மாறிடினும்
அடைந்து நிற்பது நின்னருகில்.

2 comments:

Anonymous said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்;

அழுக்கறத் தினம் குளித்தும்

அழுக்கறாத மாந்தரே

அழுக்கிருந்தது அவ்விடம் ?

அழுக்கு இல்லாதது எவ்விடம் ?

அழுக்கிருந்த அவ்விடத்தில்

அழுக்கறுக்க வல்லீரேல்

அழுக்கில்லாத சோதியோடு
அணுகி வாழலாகுமே!''---------சிவவாக்கியார்

Radhakrishnan said...

சிவவாக்கியர் பாடலுடன் கூடிய அருமையான வாழ்த்துகளுக்கு நன்றிகள் ஆர்.கே.சதீஷ்குமார்.