Friday 24 July 2009

சில்வண்டுகள் - 7

தனராஜும் மற்ற அதிகாரிகளும் உடனடியாக ஜகநாதபுரத்தைவிட்டு கிளம்பினார்கள். பத்திரிக்கை நிருபர்களும் தொலைகாட்சி நிறுவனத்தாரும் இதுகுறித்து எந்த செய்தியும் வெளியிடுவதில்லை என முடிவு செய்தார்கள். இராமேஸ்வரம் சென்றதும் தனராஜ் மற்ற அதிகாரிகளிடம் பேசி இனிமேல் இந்த விசயம் குறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என வலியுறுத்தினார். இதைக் கேள்விப்பட்ட மேலதிகாரிகள் தனராஜ் மேல் கடுங்கோபம் கொண்டார்கள். மற்ற அதிகாரிகளும் தனராஜ் சொன்னதை வலியுறுத்தவே முழு சம்மதமில்லாமல் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் எதுவும் செய்யாமலிருப்பது நல்லது என மேலதிகாரிகளும் எண்ணினார்கள். தான் மட்டும் தனியாக நாகலாபுரம் கிளம்பினார் தனராஜ். உள்ளூர மனது கொதித்துக்கொண்டிருந்தது. சுகுமாரனும் அந்த அதிகாரிகளுடன் சேர்ந்து எரிந்து போனதாகவே நினைத்துக்கொண்டிருந்தார் தனராஜ்.

ஜகநாதன் வீட்டிற்குள் நுழைந்த சுகுமாரன் ஆள் அரவமற்று இருப்பதைக்கண்டு சற்று தயங்கினான். நடு அறைக்குள் வந்தவன் அங்கே ஒரு வயதான மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்டான். அந்த மூதாட்டியைக் கண்ட அடுத்த கணம் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டான். ஆனால் மூதாட்டி கவனித்துவிட்டாள். சத்தம் எதுவும் போடாமல் சுகுமாரனிடம் வந்தாள். சுகுமாரன் தைரியமாக மறைந்து நின்றான். அவனருகில் வந்த மூதாட்டி 'சத்தம் போடாதே, வந்து உட்காரு' என அவனை அழைத்து நடு அறையில் அமர வைத்தார். சுகுமாரன் அமைதியாக அமர்ந்து இருந்தான்.

சமையலறைக்குச் சென்ற மூதாட்டி உணவும், தண்ணீரும் கொண்டு வந்து வைத்தார். ''சாப்பிடு'' என சொன்னார் மூதாட்டி. சுகுமாரனுக்கு சாப்பிட மனம் இடம் கொடுக்கவில்லை. உடனே மூதாட்டி சாதத்தை பிசைந்து தான் ஒரு வாய் உண்டார். தண்ணீர் குடித்தார். பொத்தென விழுவது போல் மெதுவாக விழுந்தார். சுகுமாரன் பதட்டம் கொண்டான். மூதாட்டி எழுந்து சுகுமாரனை நோக்கிச் சிரித்தார். ''சாப்பிடு'' என்றார். சுகுமாரன் தனது பெற்றோர்கள் உற்றார்கள் உறவினர்களை நினைத்து கண்ணீருடன் சாப்பிட ஆரம்பித்தான். ''சாப்பாடு காரமா இருக்கா'' என்றார் மூதாட்டி. இல்லையெனத் தலையை ஆட்டியவாறே சாப்பிட்டு முடித்தான்.

''என்ன விசயமா வீட்டுக்குள்ளாற வந்த நீ'' மெதுவாகக் கேட்டார் மூதாட்டி. கேட்டவர் பதிலை எதிர்பார்க்காமல் சமையலறையில் சென்று தேநீர் போட ஆரம்பித்தார். சாப்பிட்ட தட்டிலேயே கைகள் அலம்பிவிட்டு அங்கேயே அமர்ந்து இருந்தான் சுகுமாரன். தேநீருடன் வந்தார் மூதாட்டி. ''இப்ப சொல்லு'' என்றார் மூதாட்டி. சுகுமாரன் ஒன்றுவிடாமல் அனைத்து விசயங்களையும் சொல்லி முடித்தான். தேநீர் சற்று ஆறி இருந்தது. ''ஆறிப்போயிருக்கும் எடுத்துக் குடி'' என்றார் மூதாட்டி. சுகுமாரன் தண்ணீர் குடிப்பதுபோல் வேகமாக குடித்து முடித்தான். ''இப்ப என்ன செய்யப் போற நீ'' என மூதாட்டிக் கேட்டதும் ''எதுக்காக இவங்க இப்படி ஆனாங்க'' என்றான் சுகுமாரன். ''எப்படி ஆனாங்க'' எனத் திருப்பிக் கேட்டார் மூதாட்டி. ''உங்க வீட்டு வாசலில வந்து பாருங்க, சாம்பல் மட்டும்தான் இருக்கு'' எனச் சொன்னான் சுகுமாரன். ''ஏன் இப்படி எரிக்கிறாங்கனு கேட்கிறியா'' என கேட்டார் மூதாட்டி. ''ஆமா, ஏன் கொலைவெறியோட கோபத்தோட திரியறாங்க'' என சுகுமாரன் கேட்டதும் மூதாட்டி கண்களை மூடிக்கொண்டார். சுகுமாரன் அமைதியாகவே அமர்ந்து இருந்தான். முழு பயமும் போய்விட்டது ஆனால் அந்த இளைஞனைக் காண கண்கள் அறைகளில் எல்லாம் சுழன்று கொண்டிருந்தது.

நாகலாபுரம் அடைந்தார் காவல் அதிகாரி தனராஜ். பாலமுருகன் மட்டும் காவல் நிலையத்தில் அமர்ந்து இருந்தார். தனராஜ் வந்ததும் பாலமுருகன் சத்தம் போட்டார். ''நான் அப்பவே சொன்னேன், நீங்க கேட்டு இருந்தா இப்படி அநியாயமா ரொம்ப பேரு செத்து இருப்பாங்களா, நீங்கதான் பெரியவருனு உங்களுக்கு நினைப்பு நீங்க ஜகநாதபுரம் போய் என்ன கிழிச்சீங்க, நான் ஒவ்வொரு இடமா போய் பல தகவல்களை சேகரிச்சிட்டு வந்திருக்கேன்'' இதைக்கேட்ட தனராஜுக்கு கோபம் ஜிவ்வென ஏறியது. ''நீ அங்கே வந்திருந்தா தெரிஞ்சிருக்கும், வித்தை காட்டுறான்ங்கயா அவன்க. சுட்டா சுட்டவன் மேல குண்டு பாயுது, பொடியைத் தூவறான் பட்டுனு தீ பிடிக்குது, அதுக்கு மேல பெத்த தாயையேவே எரிச்சிட்டான் ஒருத்தன், நீ இங்க உட்கார்ந்துட்டு என்னைப் பேசறியா' என அடிக்க கையை ஓங்கினார் தனராஜ்.

''நிறுத்துங்க சார், மதியூர் பூசாரி சொல்லித்தான் கோட்டையூர் போலீஸ்காரங்க பிணமா கிடந்த ஊர்க்காரங்களை மொத்தமா எரிச்சி இருக்காங்கனு கோட்டையூர் போலீஸ் மாரிமுத்து என்கிட்ட சொன்னான். அந்த பூசாரியையும் போலீஸ்தான் கொன்னதாக சொன்னான். ஊர்த்தண்ணிய நான் சோதனைப்பண்ணச் சொன்னேன், அதுல விசம் கலந்துருக்குனு தெரியவந்துருக்கு இதோ ரிப்போர்ட். அதோடு மட்டுமில்லாம சிவாங்குகம் வட்டத்தைச் சேர்ந்த காடு ஒரு பக்கம் எரிய ஆரம்பிச்சதைப் பார்த்த வனத்துறை அதிகாரிங்க பால்ராஜ், நாகராஜ், திப்புக்குமார் மற்ற பக்கங்களுக்கும் தீ வைச்சி இருக்காங்க. திப்புக்குமார் என்கிட்ட ஒப்புக்கிட்டான். பவித்ரபுரியில நடந்தது குடும்பப் பகை. பாறைக்குப் பக்கத்துல ஒரு தீபராஜ் குடும்பத்துக்காரங்க சிலர் ஒவ்வொரு நாளா அடிபட்டு செத்து இருக்காங்க. இது வெள்ளையன் குடும்பம் செய்ற சதினு அந்த குடும்பம் திட்டம் போட்டு இருக்கு. இன்னைக்கு பாறைக்குப் போறோம்னு வெள்ளையன் பேசினதை வைச்சி கன்னிவெடியை பாறைக்கு போற வழியெல்லாம் தீபராஜ் குடும்பம் வைச்சி இருக்காங்க, அந்த வேளைப் பார்த்து அங்கே போன நம்ம அதிகாரிகளும் கிராம மக்கள் சிலரும் பாறைக்குள்ள போனப்ப வெடி வெடிச்சி சின்னபின்னமாகி இருக்காங்க. உள்ளே யாராவது இருந்து உயிர் பிழைச்சி இருந்தா அதிசயம் தான் சார்' என படபடவென சொல்லி முடித்தார் பாலமுருகன்.

''அதிசயம் தான் பாலமுருகன், நீங்க கதை எழுதப் போகலாம்' என மேசையில் இருந்த பாலமுருகனின் துப்பாக்கியை எடுத்து பாலமுருகனை நோக்கிச் சுட்டார் தனராஜ். பாலமுருகன் அந்த இடத்திலேயே உயிர் துறந்தார். பாலமுருகன் இறந்துகிடப்பதாக தகவல் பரப்பினார் தனராஜ். பாலமுருகன் நடவடிக்கையே சில நாளா சரியில்லாமத்தான் இருந்தது எனப் பேசிச் சென்றார்கள்.

கண்கள் மூடிய மூதாட்டி சில மணி நேரங்கள் கழித்தே கண்ணைத் திறந்தார். சுகுமாரன் அருகில் இருப்பதைக் கண்டவர் ''நீ இவ்வளவு பொறுமையானவனா இருந்ததாலதான் உன்னோட சட்டை போடாத ஜெகநாதன் பேசி இருக்கான்'' என மூதாட்டி சொன்னார்.

''சட்டை போடாத ஜெகநாதனா?'' என சுகுமாரன் ஆவலுடன் கேட்டான். மூதாட்டி ஒரு அறையின் கதவினை அடைத்துவிட்டு வந்தார். ''நீ கத்தாம இருந்தா உன் உயிருக்குப் பிரச்சினை இல்லை'' என சொல்லியவர் ''என் பையனுக்கு இரண்டு குழந்தைங்க அதுவும் இரட்டை குழந்தைங்க ஒரே மாதிரியா இருந்ததால ஜெகநாதனு இரண்டு பேருக்கும் பேரு வைச்சாங்க! என் பையன் முருகவேலை கல்யாணம் பண்ணமாட்டேனு அடம்பிடிச்சா மோகனவள்ளி. பிடிக்காம செய்ய வேண்டாம்னு நானும் வேண்டாம்னு சொன்னேன். ஆனால் சில வருசத்தில நடந்த சின்ன சின்ன நிகழ்வினால முருகவேல் மோகனவள்ளியைக் கட்டிக்கிட்டான். மோகனவள்ளியோட தங்கை புனிதவள்ளியை என்னோட இன்னொரு பையன் தங்கவேலுக்கு கட்டி வைச்சேன்''

''காயத்ரியா பொண்ணோட பேரு'' என்றான் சுகுமாரன். ''நீ வெளியூர்க்காரனா, உள்ளூர்க்காரனா' என மூதாட்டி சிரித்துக்கொண்டே கேட்டார். ''அவங்க வீட்டுலதான் ஒளிஞ்சிருந்தேன்'' என சொன்னான் சுகுமாரன். அப்பொழுது மூதாட்டி அடைத்துவிட்டு வந்த அறையின் கதவு திறந்தது. சுகுமாரன் கத்திவிடுவானோ என பயந்து போனார் மூதாட்டி.

(தொடரும்)

No comments: