Friday 24 July 2009

ஆசைப்பட்டேன் - 4

நான் வீட்டில் கடைசிப் பையன், அதுவும் பதின்மூன்றாவது. சிறுபிள்ளையாய் இருக்கும்போது என்னை ஏன் கடைசியாய் பெற்றீர்கள் என பெற்றோரிடம் கவலையாய் கேட்டதுண்டு. என்னை யார் பார்த்துக்கொள்வார்கள் என ஆசை வந்து அழுகையுடன் கேட்டதுண்டு. அப்பொழுதெல்லாம் ஆண்டவன் அத்தனை எனக்குத் தெரியாது, அட மனைவினு ஒருத்தர் வருவாங்கனு ஒன்னுமே புரியாது!

கல்லூரிப் பருவம்

மருத்துவம் சம்பந்தபட்ட கல்லூரிக்கு மட்டுமே செல்வேன் என ஆசை அடம்பிடித்தது. நுழைவுத் தேர்வு எழுதும்போதே ஊட்டியில் மருந்தாக்கியலுக்கு அழைப்பு வந்தது. கேள்வி எல்லாம் கேட்ட பின்னர் நாற்பதாயிரம் என சொன்னதும் பணம் கொடுத்து படிக்கமாட்டேன் என நான் சொல்ல ஆசை தவித்தது.

நாட்கள் நகர நகர பல் துறையிலிருந்தும் பதிலில்லை, விவசாயம் இருக்கிறது கவலையில்லை என சொல்ல ஆசை அவதிப்பட்டது. இப்படியே போனால் எப்படி என சொல்ல முப்பத்தாயிரம் தந்தே வறட்டு கெளரவம் ஆசையை வெற்றி பெற வைத்தது. எனக்கு இது அவமானமாகத்தான் இருந்தது, மனதில் தீராத வலியையும் தந்தது. மேற்படிப்பு என ஒன்று படித்தால் தேர்வில் தேறி பணம் தராமல் படிக்கச் செல்வது என ஆசை அச்சாரமிட்டது. ஓரிரு மாதங்களில் ஒரு இலட்சம் கேட்டு மருத்துவருக்குப் படிக்க அழைப்பு வந்தது. மருத்துவராகும் ஆசை அதற்குள் மரத்துப் போயிருந்தது.

கவிதை எழுதும் ஆசை பன்னிரண்டாவது தமிழ் ஆசிரியர் வளர்த்தது. பேசும் பேச்செல்லாம் கவிதையாய் போய் கல்லூரியில் கவிஞன் பட்டம் பெற வைத்தது. கல்லூரி நண்பர்களுடன் சண்டை போடாமல் இருக்க வேண்டி ஆசை வந்தது. இருவர் மட்டும் என்னுடன் ஒரே ஒரு முறை முறைத்துக்கொள்ள ஆசை நொறுங்கியது. இரண்டு நிலையுமே எனது தேவையில்லாத பேச்சினால் வந்தது. அடுத்த நாளே கைகள் குலுக்கினால் ஒரு முறை உரசியது வலித்தது. நாக்கில் இராகு என்று சொன்னார் ஜோசியர், எவரையும் கொத்திவிட்டுப் போகும் என்றார், ஆனால் எனக்கல்லவா வலித்தது. பிறரைக் கொத்தும்போதெல்லாம் எனக்கல்லவா வலிக்கிறது. அமைதியாக இருக்க ஆசைப்பட்டேன். அளவுடன் பேசவே ஆசைப்பட்டேன். இருந்தும்...

பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு குரல் முழக்கமிட ஆசை கொண்டது. அந்த ஆசை வென்றது. என்னை ரஜினி என சொல்லிச் சிரித்த நண்பர்கள் கண்டு மனம் மகிழ்ந்தது.

அகில இந்திய தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனும் ஆசைக்கு அடித்தளமிட்டேன். அடிக்கடி படத்துக்கும் செல்லமாட்டேன், நண்பர்களுடன் வீண் அரட்டையிலும் ஈடுபடமாட்டேன். குடிக்கவும் மாட்டேன், புகைக்கவும் மாட்டேன். பெண்கள் கண்டால் ஒதுங்கிச் செல்வேன் ;) சாமியா நீ? என என்னை கேட்டவர்களுக்கு என் குலசாமி கருப்பசாமி என்றே சொன்னேன்.

வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்றார் மாணிக்கவாசகர். கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசுபோதினும் அச்சமில்லை என்றான் பாரதி. தேர்வில் வெற்றி பெற வேண்டுமெனும் ஆசை பெண்களைக் கண்டு அச்சப்பட்டது. காதல் ஆசை வரமாலிருக்க கவிதையை காதல் செய்த தருணம் அது. மோகத்தில் மூழ்கிவிடாதிருக்க மனம் படிப்பில் மூழ்கிய தருணம் அது. இங்கேதான் அன்பை ஆசை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியது எனலாம்.

காதல் வருமா? வராதா? வந்ததா? வரவில்லையா? எவரும் என்னைக் காதலித்தான் இவன் என இதுவரை சொன்னதில்லை. நானும் இவளை காதலித்தேன் என சொல்லும்படி எவரையும் காதலிக்கவும் இல்லை. காதல் ஆசை ஒளிந்து கொண்டது! கல்யாணம் என சொன்னதுமே கல்லூரிப் பருவத்திலே காதல் ஆசை வந்தது. காதல் ஆசை கொண்ட பெண்ணையே கல்யாணம் செய்து அந்த காதல் ஆசை வென்றது.

இந்த காதலும் கல்யாணமும் தாயின் ஆசையால் என்னை ஒட்டிக்கொண்டது. கல்யாண சம்மதம் என் தாய் கேட்க, காதல் ஆசை வந்து சேர்ந்தது. கடவுளின் மேல் தீராத காதலும் வந்து குவிந்தது.

படிக்கும்போது ஜோசியத்தில் ஆசை பிறந்தது. கையை காட்டி கதைகள் கேட்க ஆசை வளர்ந்தது. காட்டிய கையை மூடிக்கொள்ளச் சொன்னதும் தைரியம் வந்தது. காட்டிலே இருந்தாலும் நோட்டினைப் பார்ப்பாய் என்று சொன்னதும் ஆசை பெருமிதம் கொண்டது!

என் ஆசைகள் தொடரும்

2 comments:

சீமாச்சு.. said...

நல்லா எழுதறீங்க. படிக்கச் சுவாரசியமாய் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்..

வாழ்த்துக்கள்

அன்புடன்
சீமாச்சு

Radhakrishnan said...

தங்களின் வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சீமாச்சு அவர்களே.