Tuesday 28 July 2009

நுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவர்களின் விமர்சனம்

ஆழிப் பதிப்பகத்தின் நிறுவனரும் எனது நண்பர் செல்வமுரளி அவரிகளின் வழிகாட்டிகளில் ஒருவரான திரு. செ. ச. செந்தில்நாதன் அவர்களிடம் எனது நுனிப்புல் புத்தகம் கொடுத்து அவரது கருத்துக்களை கேட்டு இருந்தோம். அவரது வேலைப்பளுவிற்கு இடையில் அவரது கருத்துக்களை என்னிடம் கூறினார். அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மேலும் நூல் வெளியிட விரும்பும் எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் அவரை நீங்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம். அவர் உதவி புரிவார். அவரது மின்னஞ்சல் முகவரி : zsenthil@gmail.com

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நுனிப்புல்லை முழுமையாக படிக்கவில்லை என்றாலும் சில பகுதிகளைப் பார்த்தேன். நான் வாசகராக சில விஷயங்களைக் கூறவிரும்புகிறேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தமிழ் எழுத்துலகம் உலகத் தரம் வாய்ந்த எழுத்துக்களை உருவாக்கிவருகிறது, எதிர்பார்க்கிறது. நாம் சொல்லும் விஷயம் சாதாரணமானதாகவோ அசாதாரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் சொல்லும் விதம் உயரிய இலக்கியத் தரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

வாசகருக்கு புரிகிறதா புரியவில்லையா என்பதல்ல அதன் அர்த்தம். எவ்வளவு ஆழமாக, அழகாக, வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதாக அது இருக்கிறது என்பதுதான் அதற்கு அர்த்தம். நீங்கள் ஜெயகாந்தனைப் போல எழுதலாம். ஜெயமோகனைப் போல எழுதலாம். பிரபஞ்சனைப் போலவோ, சாரு நிவேதிதாவைப் போலவோ எஸ் ராமகிருஷ்ணனைப் போலவோ எழுதலாம் வாஸந்தி, சிவசங்கரி போலவும் எழுதலாம். அவர்கள் எழுத்தில் ஒரு தெளிவும் திட்டமிட்ட கதைப் போக்கும் இருப்பதைப் பார்க்கலாம். அது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது, எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. உங்கள் எழுத்தைப் படிக்கும் போது, அது சட்டென்று உருவாகவில்லை. பல்வேறு பக்கங்களைப் படித்த போது, நீங்கள் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று பட்டது. அதற்கு சரியான வழி பத்திரிகைகளில் எழுதத் தொடங்குவதுதான்.

நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? அது முக்கியம். அது உங்களுக்கு நிறைய விமர்சனங்களைக் கொண்டுவந்து உங்களைச் செழுமைப்படுத்தும். எழுதுங்கள், அதற்கு முன் நிறைய வாசியுங்கள். நீங்கள் பெரும் முயற்சி எடுத்திருக்கிறீர்கள். உங்கள் ஆர்வம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நிறைய படித்து, பத்திரிகைகளில் எழுதி அனுபவத்தோடு நீங்கள் சிறந்த எழுத்தாளராக மாறமுடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மற்றபடி, மருத்துவம் போன்ற விஷயங்களில் எழுதுவீர்களா?

முதலில் non-fiction இல் ஆரம்பியுங்கள். அது மொழியை வளப்படுத்திக்கொள்ள உதவும். நூலெழுதல் குறித்து சில முறைகளை பின்பற்ற வேண்டும். அது குறித்து நான் உங்களுக்கு விவரமாக எழுதுகிறேன். authoring என்பது ஒரு பெரிய கலை. அதைக் கைதேர்வது முக்கியம் அது ஓரிரு நூல்களை எழுதும் போது, அதன் அனுபவத்தில் மட்டுமே முடியும்.

நன்றி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

4 comments:

cheena (சீனா) said...

ஓஒ புத்தகம் எழுதுவதில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறதா -- ம்ம்ம்ம் - சிந்திக்க வேண்டும்

கோவி.கண்ணன் said...

நேர்மையான விமர்சனம், நூலை எழுதியவரின் மனம் கோணுவதைவிட அவரது அடுத்தப் படைப்புகள் நேர்த்தியாக வரவேண்டும் என்று சொல்வதின் அழுத்தம் அந்த விமர்சனத்தில் இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

உங்கள் நூலைப் பற்றி சற்று எதிர்மறையான விமர்சனம் என்றாலும் அதையும் நேர்மையாக வெளி இட்ட உங்களது நேர்மைக்கும் பாராட்டுகள்

Radhakrishnan said...

மிக்க நன்றி சீனா ஐயா மற்றும் கோவியாரே. ஊடகவியலில் பணிபுரியும் இன்னுமொரு நண்பரின் விமர்சனமும் இருக்கிறது. விரைவில் பார்வைக்கு வைக்கிறேன்.

புத்தகம் வெளியிடுவதில் இன்னும் பல பிரச்சினைகள் உண்டு, அதையும் இணைக்கிறேன். அதுவும் வெளிநாட்டில் இருந்துகொண்டு இதையெல்லாம் செய்வது என்பதும், எழுத்துத் துறையில் இல்லாமல் இருப்பதும் பெரும் சிரமத்தைத் தரும். ஆனால் தளர்ச்சியடையாமல், நண்பர்கள் உதவ முன்வந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையும் நிச்சயம் எழுதும் வாய்ப்பு கிட்டும்.

மிக்க நன்றி.