Tuesday 21 July 2009

சில்வண்டுகள் - 5

நாகலாபுரம் மருத்துவமனைக்கு வெகு அருகாமையில் சென்றபோது காருண்யன் மயக்கம் அடைந்து விழுந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவரின் உயிர் பிரிந்தது. பாதிரியார் பெரும் கலக்கம் அடைந்தார். இந்த தகவலை உடனடியாக நாகலாபுர காவல் நிலையத்திற்குத் தெரிவித்தார். இதை கேள்விபட்ட தனராஜ் விரைந்து அவ்விடம் வந்தார். தனது உதவி அதிகாரிகளிடம் முறைப்படி செய்ய வேண்டியதை செய்ய சொல்லிவிட்டு ஜகநாதபுரம் செல்வதற்கு ஆயத்தமானார். அப்பொழுது உதவி அதிகாரி பாலமுருகன் ஜகநாதன் பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் இதனை இத்துடன் விட்டுவிடலாம் என கூறினார். இதைக்கேட்டதும் தனராஜ் எள் வெடிப்பது போல் வெடித்துக் கொட்டிவிட்டார். சுகுமாரன் இதையெல்லாம் பார்த்து பதறியபடியே நின்றான். பாதிரியார் கர்த்தரிடம் வேண்டிக்கொண்டு இருந்தார்.

காவல் நிலையம் திரும்பிய தனராஜ் கேரள எல்லை காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். ஜகநாதன் பற்றிய விபரங்களைத் தந்தார். மேலதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு மற்றொரு உதவி அதிகாரி தேவராஜுடனும், சுகுமாரனுடன் அன்று இரவே கிளம்பினார். மேலதிகாரிகள் நடந்த விசயங்களைக் கேட்டு கொதித்துப் போனார்கள். தான் தோன்றித்தனமாக ஒரு தனி நபர் நடந்து கொண்டு செல்வதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தனராஜ் கொடுத்த தகவலின்படி சில அதிகாரிகளை உடனே கேரள எல்லைக்கு அனுப்பி வைத்தார்கள். கண்டதும் சுடச் சொல்லி உத்தரவு போட்டார்கள்.

ஜகநாதன் பவித்ரபுரி கிராமத்தை அடைந்தார். அந்த கிராமத்திற்கு உள்ளே செல்லாமல் வெளிப்புறமாகவே நடந்து சென்றார். இவரைக் கண்ட ஒரு சில கிராமத்து நபர்கள் வணங்கிவிட்டுச் சென்றார்கள். வணங்கிய நபர்களைக் கண்டு மறு வணக்கம் செலுத்தியவாரே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் ஜகநாதன். ஊர் எல்லையைக் கடந்ததும் பெரிய கல்பாறை தென்பட்டது. குகைகள் போன்ற அமைப்புடையதாக இருந்தது. அந்த கல்பாறையை அடைந்ததும் சுற்றி சுற்றிப் பார்த்தார். கல்பாறையின் இடைவெளியுள்ளே மெதுவாக உள்ளே நுழைந்தார். பெரும் இருட்டாக உள்ளே இருந்தது. உள்ளே சென்றவர் சம்மணமிட்டு அமர்ந்தார். கைகளால் பாறையைத் தள்ளினார். பாறை அசைய மறுத்தது. பலம் கொண்டு மேலும் தள்ளினார். பாறைகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டன. சிறிது இடைவெளிவிட்டது. அந்த இடைவெளியூடே ஒளிக்கீற்று வந்து கொட்டியது. கண்கள் மூடிக்கொண்டார்.

தனராஜ் கொடுத்த தகவலின்படி அடுத்த நாளே மலையின் அடிவாரத்தின் ஓரத்தில் அமைந்திருந்த கிராமங்களில் அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்படியொரு நபரை யாருமே பார்த்திருக்கவில்லை என கேட்பவர்கள் எல்லாம் சொன்னபோது அதிகாரிகள் சற்று சலிப்பு அடைந்தார்கள். அதற்கடுத்தாற்போல் சற்று தொலைவில் அமைந்திருந்த பவித்ரபுரியை அதிகாரிகள் அடைந்தார்கள். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது ஒரு சிலர் அதுபோன்ற நபரை தாங்கள் கண்டதாக கூறினார்கள். அந்த வார்த்தையைக் கேட்ட அதிகாரிகள் மிகவும் உற்சாகம் அடைந்தார்கள். அவர் சென்ற வழியைக் காட்டினார்கள். கிராமத்தின் வெளிப்புறமாகவே நடந்த அதிகாரிகளும் சில கிராம மக்களும் கல்பாறையை அடைந்தார்கள்.

இராமேஸ்வரத்தை அடைந்த தனராஜ் அவருக்காக காத்துக்கொண்டிருந்த மேலும் சில காவல் அதிகாரிகளுடன் ஜகநாதபுரம் அடைந்தார். ஜகநாதபுரத்தை அடைந்த அவர்கள் ஜகநாதன் பற்றி விசாரித்தார்கள். ஜகநாதன் பற்றி ஊரில் இருந்தவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என ஜகநாதனின் பூர்விக வீட்டினை அடையாளம் காட்டினார்கள் அந்த ஊரைச் சேர்ந்த சிலர். அதிக நேரம் இருக்க வேண்டாம் என எச்சரித்தவர்கள் உடனடியாக கிளம்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதிகாரிகளுடன் சென்று வீட்டின் கதவைத் தட்டினார் தனராஜ். ஜகநாதன் பற்றி விசாரிக்க வந்திருக்கோம் என வீட்டின் வாசலில் வந்து நின்ற ஒரு தாயிடம் சொன்னார் தனராஜ். உடனே கிளம்பி போயிடுங்க என்றார் அந்த தாய். ஜகநாதனால் காடும் கிராமமும் அழிந்து போனது குறித்து தனராஜ் சொல்லிவிட்டு அதனால் ஜகநாதன் பற்றி தெரிய வேண்டும் என்றார் மேலும்.

ஜகநாதா என பெரும் சத்தமிட்டார் அந்த தாய். சத்தமிட்ட அந்த தருணத்தில் பவித்ரபுரி கல்பாறைகள் வெடித்து சிதறியது. கல்பாறையின் உள்ளே சென்ற அதிகாரிகளும் சில கிராம மக்களும் கோரமாக பலியானார்கள். ஜகநாதன் கோபத்தின் உச்சகட்டத்தை அடைந்தவர் சிதறிய கற்களையும் மனிதர்களையும் பார்த்த வண்ணம் பூமியில் காலை அழுத்திக்கொண்டே இருந்தார். பள்ளம் ஏற்பட்டது. சில கற்கள் எரிகற்களானது.

ஏன் இப்படி காட்டுக் கத்து கத்தறேம்மா என தனராஜ் அதட்டினார். ஜகநாதா என மறுபடியும் சத்தமிட்டார் அந்த தாய். வீட்டினுள் இருந்து ஒரு இளைஞன் ஓடி வந்தார். உன்னைப்போய் தேடி வந்திருக்காங்கப்பா இவங்க என்றார் அந்த தாய். நீ காட்டை எரிச்சியாம், ஊரை எரிச்சயாம் என்னமோ உளறுரானுங்க என்னானு கேளு என அந்த தாய் உள்ளே சென்றார். தவறான வீட்டிற்கு வந்துவிட்டோமே என தனராஜ் நினைத்துக்கொண்டிருந்தபோதே அந்த இளைஞன் காவல் அதிகாரி தனராஜை ஓங்கி ஒரு அறைவிட்டான். சற்று தள்ளி விழுந்தார் தனராஜ். சுகுமாரன் அந்த இடத்தை விட்டு மெதுவாக அகன்றான். அதிகாரிகள் அந்த இளைஞனை அடிக்க ஓடி வந்தார்கள். தனராஜ் நிறுத்துங்க என சத்தமிட்டார். சுகுமாரன் மெதுவாக அந்த தெருவினைக் கடந்து ஒரு வீட்டினுள் நுழைந்து கொண்டான்.

உன் பேரு என்னான்னு சொல்ல முடியுமா என இளைஞனை நோக்கிக் கேட்டார் தனராஜ். அந்த இளைஞன் எதுவும் பதில் சொல்லாமல் உள்ளே சென்று கதவைச் சட்டென அடைத்தான். உடன் வந்த அதிகாரிகள் பெரும் கோபம் கொண்டார்கள். தனராஜிடம் என்ன சார் நீங்க இப்படி பொறுமையா இருக்கீங்க அடிச்சு துவைச்சிர வேண்டியதுதான் என சொல்லிக்கொண்டே கதவை இடித்தார்கள். தனராஜ் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஆனால் அவர்களின் கோபம் தனராஜை சற்றும் பொருட்படுத்தவில்லை. கதவினைத் திறந்துகொண்டு பெரும் கோபத்துடன் அனல் கக்கும் பார்வையுடன் ஆவேசமாக நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன். அவன் பின்னால் வந்த தாய் எல்லாம் கிளம்பி போயிருங்க எனச் சத்தமிட்டார். சட்டென குனிந்த இளைஞன் அந்த அதிகாரிகள் மேல் ஒருவித பொடியைத் தூவினான். தூவியவன் தீக்குச்சியை பற்ற வைத்து அவர்கள் மேல் எறிந்தான், அவர்கள் எரியத் தொடங்கினார்கள். இதைக்கண்ட தனராஜ் பிரமைபிடித்தவர் போலானார்.

பவித்ரபுரியில் பலியானவர்களும் எரிய ஆரம்பித்தார்கள். ஜகநாதன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். கடற்கரையை வந்தடைந்தார். கடலினுள் மெதுவாக ஒரு கால் வைத்தார். கடல் நீர் கொந்தளிக்கத் தொடங்கியது. உடல் முழுவதும் நீருக்குள் சென்றது. கொந்தளித்த கடல், அலைகள் கூட எழுப்பாமல் அடங்கிப் போனது. தொடர்ந்து நீருக்குள் சென்று கொண்டே இருந்தார் ஜகநாதன். பவித்ரபுரியும் ஜகநாதபுரமும் பத்திரிக்கை செய்திகளில் இடம்பெற்றது. பொய் செய்தியில் இதுதான் உச்சகட்ட பொய் செய்தி என பத்திரிகைகள் மேல் மக்கள் குற்றம் சாட்ட ஆரம்பித்த வேளையில் பவித்ரபுரியையும் ஜகநாதபுரத்தையும் தொலைக்காட்சி நிறுவனங்கள் முற்றுகையிட்டன.

(தொடரும்)

No comments: