Sunday 5 July 2009

கேள்வியும் பதிலும் - 13

13. உங்கள் வாழ்வில் நீங்கள் தமிழை நேசிப்பது பெருமையாக இருக்கின்றது இங்கிலாந்தில் இருந்தாலும் தமிழ் நேசித்து தமிழுக்காய் சேவை செய்து வருகின்றீர்கள் உங்கள் நுனிப்புல் காண ஆவலோடு இருக்கின்றோம் அந்த வகையில் நீங்கள் தமிழை நேசிக்க மூலகாரணம் என்ன அண்ணா?

இந்த கேள்விக்குப் பதில் தொடங்கும் முன்னர் ஏ ஆர் ஆர் அண்ணன் அவர்களுக்கும் தங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழை நேசிக்க மூலகாரணம் என எடுத்துக்கொண்டால் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தது எனச் சொல்லலாம்.

வீட்டில் நாங்கள் பேசும் மொழி தெலுங்கு. அதனை தெலுங்கு என்று சொல்வதைவிட தமிழ்-தெலுங்கு என சொல்லலாம், நாங்கள் பேசுவது இரண்டு மொழிகளின் கலவையாக இருக்கும். வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டாலும் எனது சிறுவயதில் எனது மனதுக்கு எனது தாய்மொழி தமிழ்தான் என தோன்றியது, இப்பொழுதும் சரி எப்பொழுதும் சரி தமிழ்தான் எனக்கு ஓரளவுக்கு தெரிந்த மொழி. எனது பள்ளிச் சான்றிதழிலும் தாய்மொழி தமிழ் என்றே இருக்கும். தெலுங்கு பேசும் மொழியாகிப் போனது வீட்டுடன், உறவுகளுடன். தமிழ் பேசிக் கற்கும் மொழியாகிப் போனது. பள்ளிகளில் தமிழ் மொழி மூலமாக கற்றதன் விளைவு தமிழ் மேல் ஒரு பற்றினை ஏற்படுத்தியது எனலாம். அறிவியல், வரலாறு, புவியியல் தமிழில் இருந்தாலும் கூட தமிழை தமிழாக கற்றது மனதிற்கு ஆனந்தமாக இருந்தது. இந்த வகையில் தமிழை மிகவும் நேசிக்க காரணமானவர் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியை திருமதி சாந்தா. பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அக்கறை தமிழை அக்கறையுடன் கற்றுக்கொள்ளத் தூண்டியது. இந்த ஆர்வமானது மேலும் பெருகிட உதவியவர் பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பில் கற்றுத்தந்த தமிழ் ஆசிரியர் திரு. இரத்தினசபாபதி. அதற்குப் பின்னர் தமிழுடன் கற்றுக்கொள்ளும் உறவு குறைந்து போனது, ஆனால் பற்று மட்டும் விட்டுப்போகவில்லை.

கவிதைகள் கதைகள் என எண்ணங்களை எழுத்தில் வைத்திட இந்த தமிழ் மிகவும் உதவியாக இருந்தது. சிறு வயது முதல் தமிழில் பேசுவது வசதியாக இருந்தது. மேலும் கவிதைகளும் கதைகளும் பேச்சும் தமிழ் மேல் இருந்த நேசத்தை நிலைநிறுத்திக்கொள்ள உதவின. திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். தமிழ் நேசிக்க உதவிய மூலகாரணத்தினை முழுவதுமாய் உண்மையாக்கிட உதவிய உபகாரணங்கள் நினைவு கூறத்தக்கவை.

தமிழ் அறிவு எனக்கு குறைவுதான். 1996ல் என்னுடன் கல்கத்தாவில் ஆந்திர மாநிலத்தினை சேர்ந்த ஒருவர் பயின்று வந்தார். அவர் தமிழகத்துக்குச் சென்றதில்லை, ஆகவே என்னிடம் தமிழ்நாட்டிற்குச் செல்கிறேன் அங்கு உள்ள பேருந்து எண்கள் தமிழில் எழுதி இருக்குமே அதனால் எனக்கு தமிழ் எண்கள் எழுதித் தா என்றான். நானும் உதவி செய்கிறேன் என வேகமாக 1 , 2 , 3 என எழுதி 10 வந்த பின்னர் அதற்கடுத்த எண்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து 11 , 21 என வரும் என எழுதிக் கொடுத்தேன். அதை அவன் பார்த்துவிட்டு 'இதுதான் எல்லா ஊர்களிலும் இருக்கிறதே' என்றான். இதுதான் தமிழ் எண்கள் என்றேன், ஒரு சில விநாடிகளில் எனக்கு உண்மை உரைத்தது, அட தமிழ் எண்கள் க என்றல்லவா ஆரம்பிக்கும், அவனிடம் தமிழ் எண்கள் எல்லாம் பேருந்தில் இருக்காது என சொல்லி வைத்தேன் அன்றைய வருடத்தின் பெரும் நகைச்சுவையாகிப் போனது அது. இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. தமிழுக்காக சேவை என்றெல்லாம் எதுவுமில்லை, தமிழ் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. நன்றி.

2 comments:

Thekkikattan|தெகா said...

:-) நெஜம் குறையாமல் இருக்கிறது.

Radhakrishnan said...

//Thekkikattan|தெகா said...
:-) நெஜம் குறையாமல் இருக்கிறது//

மிக்க நன்றி தெகா அவர்களே.

'நீ தமிழன் தானா?' எனக் கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.தமிழ் மொழி தெரிந்த காரணத்தால் நான் தமிழனா? தமிழ்நாட்டில் பிறந்ததால் நான் தமிழனா? தமிழ் மக்களுக்கு உதவினால் நான் தமிழனா? ஏனோ அடையாளங்கள் எனக்குப் பொருத்தமாக இருப்பதில்லை!