Tuesday 7 July 2009

சில்வண்டுகள் - 3

தோட்ட வேலைக்குச் சென்றவர்கள், காட்டு வேலைக்குச் சென்றவர்கள் மதியூர் கிராமத்திற்குள் நுழைந்த சற்று நேரத்திலே கீழே விழுந்து இறந்தார்கள். அந்த வேளையில் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய இருபத்தி நான்கு வயதான சுகுமாரன் ஆடு மாடுகள் முதற்கொண்டு அனைவரும் இறந்து கிடப்பதைக் கண்டு அச்சம் அடைந்தான். அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தனது வீட்டில் சென்று பார்த்தபோது தனது குடும்பத்தினரும் இறந்து கிடப்பதைக் கண்டான். எங்குப் பார்த்தாலும் பிணங்கள். மொத்த கிராமமே அழிந்து போயிருந்தது.

இந்த விபரீதம் எப்படி நடந்தது என நினைத்தவன் சற்றும் தாமதிக்காமல் வீட்டிலோ, வெளியிலோ தண்ணீர் கூட அருந்தாமல் முனீஸ்வரர் கோவில் பக்கம் நோக்கி ஓடினான். அங்கே பூசாரி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அப்படியே அமர்ந்து இருந்தார். பூசாரியைக் கண்ட சுகுமாரன் அவரிடம் விசாரித்தான். அவரால் வாய் பேச முடியவில்லை. வடக்கு நோக்கி மட்டுமே கையைக் காட்டினார். பிரமை பிடித்தவர் போல் கண்களில் நீர் சொரிந்து கொண்டு முனீஸ்வரரை நோக்கியவண்ணமே இருந்தார். வடக்கே ஓடினான் சுகுமாரன். தொலைவில் ஒருவர் நடந்து செல்வது தெரிந்தது.

உடலெங்கும் ரோமங்கள் நிறைந்தவரை நெருங்கினான். நில்லுங்கள் என சத்தமிட்டான் சுகுமாரன். சப்தம் கேட்டு திரும்பாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தார் அவர். அவருக்கு முன்னால் சென்று அவரை வழிமறித்தான். சுகுமாரனை விலக்கியபடி நடக்கலானார்.

''மொத்த கிராமமும் அழிஞ்சி போச்சு, நீங்க எதாச்சும் பார்த்தீங்களா'' அழுகையுடன் கத்தினான் சுகுமாரன்.

''...''

''பூசாரிதான் இந்த பக்கம் கையைக் காட்டினார், உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னுதான் கேட்கிறேன் சொல்லுங்க'' என ஆவேசமாக சொன்னான் சுகுமாரன்.

''...''

''என்ன பண்ணினீங்க'' எனக் கத்திக்கொண்டே அவரைப் பிடித்து உலுக்கினான்.

கோபத்தில் கொதித்தார் அவர். உலுக்கிய சுகுமாரனை ஓங்கி தள்ளிவிட்டார். சில அடிகள் தள்ளிவிழுந்தான் சுகுமாரன். விழுந்த அவன் சுதாரித்து எழுந்தான். அழுது கொண்டே அவரை பின் தொடர்ந்து நடக்கலானான். என்ன செய்கிறோம் என்ற நினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியது போலிருந்தது சுகுமாரனுக்கு. மெதுவாக நடந்த அவர் வெகுவேகமாக நடக்க ஆரம்பித்தார். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தொடர்ந்து ஓடினான். இருட்டத் தொடங்கியது.

சில மணி நேரங்கள் கழித்து பூசாரி காவல் நிலையத்துக்குச் சென்று விபரத்தைக் கூறினார். காவல் நிலைய அதிகாரிகள் அனைத்து பிணங்களையும் எரித்துவிட உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். பூசாரியின் ஆலோசனைப்படி இரவோடு இரவாக ஊரையே ஒட்டு மொத்தமாக எரித்தார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க எந்த ஒரு முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை. காவல் அதிகாரிகள் இன்னும் பயத்தில் உறைந்து இருந்தார்கள். இரவெல்லாம் கிராமம் எரிந்து கொண்டிருந்தது. யாரும் இந்த கிராமம் நோக்கி வரவே இல்லை!

நடு இரவில் சினமாநல்லூர் எனும் ஊரினை அவர் அடைந்தார். களைத்துப்போனான் சுகுமாரன். பராமரிக்கப்படாத நிலங்கள் அரசுக்குப் பாத்தியப்பட்டு இருந்தது. மதியூர் சுற்றி நகரங்களே இல்லாமல் ஆங்காங்கே கிராமங்கள் இருந்தன. அவரைப் பின் தொடர்ந்து வந்தவன் அவரிடம் ஏதுமே பேசவில்லை. அவரும் ஏதும் பேசவில்லை. ஊரைத்தாண்டி நடந்தார். ஊரில் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்தார்கள். தெருக்குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு அவர் சென்ற வழியில் ஓடினான். ஊரைத் தாண்டி சற்று தொலைவில் ஒரு மலை தெரிந்தது. சின்ன தோட்டம், காட்டினை கடந்து நிலவின் ஒளியில் மலையின் அடிவாரம் அடைந்தார் அவர். சுகுமாரனும் உடன் சேர்ந்தான்.

''இனிமேல் என்னை பின் தொடர்ந்து வராதே, இத்துடன் நின்று கொள்'' வார்த்தைகள் நெருப்பைவிட சூடாக அவரின் வாயில் இருந்து வந்து விழுந்தது. இந்த வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் நடுநடுங்கிப் போனான் சுகுமாரன்.

''எனக்கு யாருமே இல்லை இப்போ, நீங்கதான் எல்லாம்'' அழுகையின் ஊடே மெலிந்த வார்த்தைகள் சொன்னான் சுகுமாரன்.

''இனி என்னை பின் தொடராதே'' தரையை மிதித்துச் சொன்னார் அவர். நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தான் சுகுமாரன்.

''நீங்க யாரு. எங்க ஊருல என்ன நடந்ததுனு சொல்லுங்க, நான் உங்களை பின் தொடர மாட்டேன்'' தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவசரப்பட்டு சொன்னான் சுகுமாரன்.

''சொன்னால் தொடரமாட்டாய் என்பது சரியெனில் சொல்கிறேன். மேலும் எனக்குப் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை நான் இதற்கு முன்னர் பேசிய வார்த்தைகள் ஆறாயிரத்து ஐந்நூற்றி எழுபத்தி ஐந்து நாட்களுக்கு முன்னால் என்பதை அறிந்து கொள்'' என கோபத்தின் உச்சிக்குச் சென்று உரைத்தார் அவர்.

''தொடரமாட்டேன் இது சத்தியம்'' என கதறியபடியே சொன்னான் சுகுமாரன். அவனது கிராமத்தின் நிலை பெற்றோர்கள், சகோதர சகோதரிகளின் நிலை அவனை உருக்குலையச் செய்தது. இவரை கொல்ல வேண்டும் என ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனால் இவர் தன்னை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என யோசித்த காரணத்தினால் ஏதும் செய்யாது இதுவரை வந்துவிட்டான்.

''நான் ஜனித்த இடம் ஜகநாதபுரம். இராமேஸ்வரத்துக்கு அருகாமையில் வடக்கே உள்ளது. எனக்கிடப்பட்ட பெயர் ஜகநாதன். கருவில் அமர்ந்த நாளிலிருந்து இன்றோடு எனக்கு பூமி சூரியனை சுற்றும் கணக்குப்படி பத்தாயிரத்து இருநூற்றி இருபது நாட்கள் ஆகிறது. எனது செயல்களுக்கு காரணங்கள் சொல்லிப் பழக்கமில்லை'' சொல்லியவர் தெற்கு நோக்கி மலையில் நடக்கலானார்.

சுகுமாரன் நின்ற இடத்திலே நின்று கொண்டிருந்தான். ஒரு அடி கூட அவர் சென்ற பக்கம் எடுத்து வைக்கவில்லை. நீங்க முனிவரா ஏன் இப்படி பண்ணினீங்க எங்க ஊர் மக்கள் உங்களை என்ன செஞ்சாங்க ஏன் அவங்களை கொன்னீங்க, உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன், போலிஸூல சொல்லப் போறேன் என சத்தமிட்டான் அவன்.

இவனது குரலை பொருட்படுத்தாமல் மலைமீது ஏறலானார் ஜகநாதன். இனி இங்கே நிற்பது கூடாது என சினமாநல்லூருக்குள் சென்றான் சுகுமாரன். அவனால் தூக்கத்தைத் துரத்தமுடியவில்லை. அந்த ஊரின் வடப்பகுதியில் அமைந்திருந்த ஒரு புனித ஆலயத்தின் வாயிலில் இருந்த கல்லில் சாய்ந்தான், கண்களின் இமைகள் தானாக மூடிக் கொண்டது. கன்னத்தில் கண்ணீர் போட்ட கோடுகள் காய்ந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

2 comments:

Thekkikattan|தெகா said...

ம்ம்... தொடருங்கள், படிக்கிறோம்.

Radhakrishnan said...

//Thekkikattan|தெகா said...
ம்ம்... தொடருங்கள், படிக்கிறோம்//

இதோ தொடர்கிறேன், மிக்க நன்றி தெகா அவர்களே.