Tuesday 28 July 2009

எழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்

நிகழ்கால எழுத்தாளர்கள் எவர் எனத் தெரியாது, இறந்தகால எழுத்தாளர்களையும் ஒழுங்காக வாசித்தது கிடையாது. நானும் எதிர்காலத்தில் எழுத்தாளான் ஆனால் எனது எழுத்துக்களை எல்லோரும் வாசிக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? அதனால்தான் நான் ஒரு எழுத்தாளன் ஆகும் தகுதியை எப்பொழுதோ இழந்து விட்டேன், அத்னால்தான் நான் எழுத்தாளான், இனிமேலும் அதற்குரிய தகுதியை வளர்த்துக்கொள்வது என்பது 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என கேட்பது போல் தான் இருந்துவிடும்.

முதலில் தொல்காப்பியரை எடுத்துக் கொள்கிறேன். இவரது தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்துக்கு ஒரு வழியாய் துணையாய் அமைந்தது. ஆனால் தொல்காப்பியம் அனைத்தையும் இதுநாள் வரையிலும் படித்தது இல்லை. எழுதப் படிக்கத் தெரியும் என்று இருந்தாலும் இன்னும் க் த் சேர்ப்பதா வேண்டாமா எனும் அவலநிலைத் தொடர்கிறது. மேலும் இப்பொழுதெல்லாம் எவருக்கும் தமிழ் எப்படி எழுதியிருக்கிறார்கள் என்பதில் இல்லை ஆர்வம், என்ன எழுதப்பட்டு உள்ளது என்பதுதான் முக்கியமாகப்படுகிறது.

நன்னூல் இப்படி ஒரு நூல் இருப்பதே எனக்கு ஒரு வருடம் முன்னர்வரைத் தெரியாது. சரி நூல் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது, வாசித்தேனா என்றால் அதுவும் கிடையாது.

எனக்கு திருவள்ளுவர், பாரதியார் மிகவும் பிடிக்கும், ஆனால் அவர்களின் அத்தனை எழுத்தையும் இதுநாள் வரை வாசித்தது இல்லை. படங்களின் மூலம், பாடல்களின் மூலம் பாரதியார் கவிதைகள் பழக்கமாகிவிட்டது. பாரதியார் கவிதைகள் புத்தகமும், திருக்குறளும் வீட்டில் இருந்தாலும் அவ்வப்போது தேவைக்கேற்றவற்றை மட்டுமேப் படிப்பது வழக்கமாகிப் போனது.

இப்படி பலருடைய எழுத்துக்களை நான் படித்ததே இல்லை. இவர்கள் எல்லாம் பெரும் புகழ் பெற்றவர்கள்தான். இப்படியிருக்க நிகழ்கால எழுத்தாளர்களை நான் படித்ததுண்டா என்றால் அதுவும் இல்லை. அமரர் கல்கியின் நாவல்கள் எல்லாம் அதி அற்புதம் எனச் சொன்னதைக் கேட்டதுண்டு, அமரர் சுஜாதா அவர்களைப் போல் விஞ்ஞான விசயத்தை வைத்து எவரும் எழுத முடியாது எனச் சொன்னதையும் அறிந்தது உண்டு. ஆனால் படித்ததே இல்லை. இப்படியே போனால் ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' என்கிற தலைப்பு மட்டும் எனக்கு பரிச்சியம். ரமணிசந்திரன் கதைகள் அதிகம் படித்ததுண்டு என சிலர் சிலாகித்துச் சொன்னதுண்டு. பாலகுமாரனின் ஓரிரு கதைகள் படித்ததுண்டு.

ஏன் எந்த ஒரு எழுத்தாளரையும் நான் இதுவரை முறையாகப் படித்தது இல்லை என நினைத்துப் பார்க்கும்போது எனக்கு ஆர்வம் இல்லாததும், பிறரது எழுத்துக்களில் ஈடுபாடு இல்லாததும் மட்டுமா எனத் தெரியவில்லை. பொதுவாக எனக்கு வாசிப்பு அனுபவம் இருந்ததில்லை.

'ஜெமோ'வின் கதைகள் படித்திருக்கிறாயா? எனக் கேட்டவரிடம் 'யார் அந்த ஜெமோ?' என்றே நான் கேட்டதும் 'நீயெல்லாம் கதை எழுதுகிறாய்?' என இளக்காரமாகவே அவர் என்னைப் பார்த்தார். இந்த வலைப்பூப் பக்கம் வந்திராவிட்டால் சாரு நிவேதிதா எனும் எழுத்தாளரைப் பற்றியும் அவருக்கென இருக்கும் வாசகர்கள் பற்றியும் கொஞ்சம் கூடத் தெரிந்திருக்காது. எனது பக்கத்து ஊர்க்காரரான எஸ்.ராமகிருஷ்ணன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது கூட எனக்குத் தெரிந்திருக்காது.

வைரமுத்துவின் 'தண்ணீர் தேசம்' மட்டுமேப் படித்திருக்கிறேன். 'கடை ' எனும் ஒரு நாவல் படித்திருக்கிறேன், அதை எழுதியவர் பெயர் மறந்து போய்விட்டது. அகிலனின் சிறுகதைத் தொகுப்பு படித்திருக்கிறேன். இப்படி நான் படித்த புத்தகங்கள் எல்லாம் எளிதாக கணக்கில் சொல்லிவிடலாம்,விசயம் இப்படியிருக்க நான் செய்தது எல்லாம் பாடப்புத்தகங்களைப் படித்ததுதான். ஒரு நல்ல வாசகன் மட்டுமே ஒரு நல்ல எழுத்தாளானாக முடியும். ஆனால் வாசகர்கள் பலர் எழுத்தாளாராக மாற்றம் கொள்ளவில்லை. வாசகர்கள் எல்லாம் எழுத்தாளாராக மாறிவிட்டால் பின்னர் வாசிப்பவர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது மட்டும் என்னவாம்?!

'நாவல் எல்லாம் சரியாகப் போவதில்லை' என என்னிடம் சொன்ன பதிப்பகத்தார் உண்டு. மேலும் எழுத்தாளர்கள் எழுதுவதை மட்டும் படித்துத்தானா ஒருவர் எழுத வர வேண்டும்? தனக்குத் தெரிந்த விசயங்களை சுவாரஸ்யமாக தொடர்ந்து சொல்வதன் மூலமே ஒருவர் எழுத்தாளர் ஆகிவிடுகிறார் என்பதை மறுக்க இயலாது. ஆனால் எழுத்தைப் புறக்கணிக்கும் ஒரு அகங்காரம் உடையவனாக, எழுதத் தொடங்கிய பின்னும் இருந்து கொண்டிருக்கிறேன் என என்னை நான் நினைத்தாலும், தமிழ் ஆர்வத்தால் எழுதிக் கொண்டிருக்கும் பலரின் எழுத்துக்களை தற்போதுப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

சிறந்த தமிழ் படங்களைத் தெரிவு செய்துப் பார்க்கும் வழக்கம் கொண்டிருப்பதைப் போல சிறந்த தமிழ் நாவல்களையும் படித்துவிட நினைக்கிறேன். அகங்கார சொரூபம் மறையுமெனில் அலங்கார சொரூபம் காண்பது எளிதுதான்.


2 comments:

கோவி.கண்ணன் said...

//
தனக்குத் தெரிந்த விசயங்களை சுவாரஸ்யமாக தொடர்ந்து சொல்வதன் மூலமே ஒருவர் எழுத்தாளர் ஆகிவிடுகிறார் என்பதை மறுக்க இயலாது. ஆனால் எழுத்தைப் புறக்கணிக்கும் ஒரு அகங்காரம் உடையவனாக, எழுதத் தொடங்கிய பின்னும் இருந்து கொண்டிருக்கிறேன் என என்னை நான் நினைத்தாலும், தமிழ் ஆர்வத்தால் எழுதிக் கொண்டிருக்கும் பலரின் எழுத்துக்களை தற்போதுப் படித்துக்கொண்டிருக்கிறேன்.//

:) பொழுது போக்குகாக வாசிப்பவர்களும் வாசிப்பிலேயே பொழுது போக்குபவர்களும் உள்ளனர். எழுத்தாளர்கள் வாசித்து எழுதி பொழுதைப் போக்குபவர்கள். நாம அதிகம் படிக்காமல் இருப்பதற்கு நாம முழுநேர எழுத்தாளர்கள் கிடையாது.

வலைப்பதிவு எழுதும் முன் வாசித்த அளவுக்கு புத்தங்களை நானும் படிப்பதில்லை

Radhakrishnan said...

நீங்கள் சொல்வது உண்மைதான், நாம் முழு நேர எழுத்தாளர்கள் இல்லாமலிருப்பதுதான் இதற்குக் காரணம். ஆனால் என்னவொரு பிரச்சினை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதத் தோன்றுகிறது. மிக்க நன்றி கோவியாரே.