Monday 20 July 2009

சில்வண்டுகள் 4

காலை வேளையில் புனித ஆலயத்திற்கு வந்த பாதிரியார் ஆண்டனி கல்லின் மேல் கிடந்த சுகுமாரனைக் கண்டார். அவனைத் தொட்டு எழுப்பினார். திடுக்கிட்டு விழித்த சுகுமாரன் பாதிரியாரைக் கண்டதும் கதறி அழ ஆரம்பித்துவிட்டான். அதிர்ச்சி அடைந்த பாதிரியார் சுகுமாரனிடம் விசாரித்தார். சுகுமாரன் ஊரில் நடந்த விபரங்களைச் சொன்னதும் பாதிரியார் மேலும் அதிர்ச்சி அடைந்தார். குளித்து உடைமாற்றச் சொன்ன பாதிரியாரிடம் வேண்டாமென மறுத்தான் சுகுமாரன். உணவும் உண்ண மறுத்தான். தான் காவல் நிலையம் செல்ல வேண்டுமெனச் சொன்னான். எனவே பாதிரியார் சுகுமாரனை அழைத்துக் கொண்டு சினமாநல்லூருக்கு அருகில் உள்ள நாகலாபுரம் காவல் நிலையம் அடைந்தார்.


காவல் அதிகாரி தனராஜ் சுகுமாரன் சொன்னதைக் கேட்டு தங்களுக்கும் இதுகுறித்து தகவல் வந்ததாகவும் ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு என்ன செய்வது என அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் விவாதித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். சிங்கநேரிக்கு அருகில் இருந்த காடு எரிந்து போனதும், மதியூர் எரிந்து போனதற்கும் தொடர்பு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக சொன்னபோது சுகுமாரனும் பாதிரியாரும் மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள். சுகுமாரன் மயங்கி கீழே விழுந்தான். சுகுமாரனுக்கு மயக்கம் தெளிவித்து உணவருந்த வைத்தார்கள். சற்று தெளிச்சி அடைந்த சுகுமாரன் காவல் அதிகாரியிடம் ஜகநாதன் பற்றி முதன்முறையாக சொன்னான். இதை இப்பொழுதுதான் பாதிரியாரும் முதன் முறையாகக் கேட்டார்.

ஜகநாதன் இரவெல்லாம் நடந்து காலையில் மலையின் உச்சிக்குச் சென்று அடைந்தார். வானத்தை நோக்கினார். பின்னர் கற்கள் பெயர்த்து வந்தார். சின்னதாக மண்டபம் எழுப்ப ஆரம்பித்தார். உள்ளே சென்று அமர்ந்தார். கண்கள் மூடினார். கண்கள் மூடியவருக்கு மனம் எரிச்சல் ஊட்டியது. மண்டபம்விட்டு வெளியே வந்தார். மலை உச்சியில் நடக்க ஆரம்பித்தார். சிறிது தொலைவுக்குச் சென்றதும் அந்த மலை உச்சியின் கிழே சற்றுத் தள்ளி ஒரு ஊரானது நிர்மாணிக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். கைகளை இருபுறமும் நீட்டிக்கொண்டு கிடுகிடுவென ஒரே இடத்தில் நின்றவாரே சுற்றினார். அவ்வாறு சுற்றியவர் சுற்றிக்கொண்டே இருந்தார். சுற்றியவர் சட்டென நின்று உயரத் தாவினார். பத்து அடிக்கு மேலாகவே உயர்ந்து சென்றார். கீழே உடல் இறங்கி வந்தபோது கால்களை நேராக மலையின் மேல் வைத்திடாமல் உடலை படுக்கை வசமாக்கினார், அப்படியே விழுந்தார். உடலில் செடிகள் ஒத்தடமிட்டு வைக்க, கற்களும் மண் துகள்களும் குத்தியது. உருண்டார். கீழே எந்த வேகத்தில் உருண்டாரோ அதே வேகத்தில் மேலே உருண்டு சென்றார். தான் விழுந்த இடத்தில் வந்து சேர்ந்ததும் எழுந்தார். மீண்டும் மண்டபம் நோக்கி நடந்தார். மண்டபத்திற்கு மேல் செடிகளை பரப்பினார். பின்னர் உள்ளே நுழைந்தார் கண்களை மூடினார்.

நான்கு காவல் அதிகாரிகளுடன் சுகுமாரன் மலையடிவாரம் வந்தடைந்தான். பாதிரியாரும் உடன் இருந்தார். மலையின் மேல் இருந்த ஊரினை வெகுவிரைவாகவே அவர்கள் அடைந்தார்கள். அந்த ஊரில் விசாரித்தார்கள். அங்கிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். செம்மறி ஆடுகள் மேய்க்கும் காருண்யன் மலையின் மேற்பகுதிக்குச் சென்று பார்த்தால் ஏதாவது தெரியும் என சொன்னதும் அவரையும் அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு சென்றார்கள். வட்டம் போட்டு இருப்பதைக் கண்ட காருண்யன் இதோ இங்கேதான் அவர் இருக்க வேண்டும் என சொன்னார்.

அப்பொழுதுதான் காருண்யனுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. அவரை இங்கே நாம் அடையாளம் கண்டுவிட்டால் என்ன செய்வதாய் உத்தேசம் என காவல் அதிகாரிகளிடம் கேட்டார் காருண்யன். அவரைக் கைது செய்து தூக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டும் என்றார் தனராஜ். காருண்யன் பலமாகச் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்ட தனராஜிடம் காட்டையும் ஊரையும் எரித்து இருக்கிறார் எனச் சொல்கிறீர்கள் உங்களை எரிக்க அவருக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது என்றதும் அனைவருக்கும் தைரியம் மறைத்து வைத்த பயம் சற்று வெளிக்காட்டத் தொடங்கியது. நினைவில் இருந்த சுகுமாரன் நடுங்கத் தொடங்கினான். சுட்டுத் தள்ளிவிடுகிறேன், எப்படி என்னை எரிப்பார் என்றார் தனராஜ். நல்ல யோசனைதான், எனக்கே இப்பொழுதுதான் தைரியம் வந்திருக்கு, வாங்க அவரைத் தேடுவோம் என காருண்யன் அவர்களை அழைத்துக்கொண்டு ஜகநாதன் இருக்குமிடத்தை வந்தடைந்தார். எப்படி சரியாக வந்தடைந்தீர்கள் என காருண்யனிடம் கேட்டபோது செம்மறி ஆட்டின் வாசனையிலிருந்து மனிதர்களின் வாசனைவரை எனக்குப் பழக்கம், ஆனால் இந்த வாசனையானது நான் அறியாதது என சொல்லியபடி மண்டபத்தை கைகாட்டினார் காருண்யன்.

மண்டபத்தின் உள்ளே ஒருவர் தியான நிலையில் அமர்ந்து இருப்பதைக் கண்டார் தனராஜ். முகத்தைத் திருப்பி அமர்ந்திருந்த ஜகநாதனை முகம் பார்க்காமலே இவர்தான் என்றான் சுகுமாரன். காருண்யனும், பாதிரியாரும் மற்ற அதிகாரிகளும் அவரைக் கண்டார்கள். துப்பாக்கியை மெதுவாக சத்தமின்றி எடுத்தார் தனராஜ். அமர்ந்த நிலையில் இருந்த ஜகநாதன் உடல் அசைந்தது. சட்டென திரும்பினார் ஜகநாதன். வேகமாக திரும்பிய ஜகநாதனைக் கண்டதும் தனராஜின் கையிலிருந்து துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது. எடுத்துச் சுடுங்க என்றார் காருண்யன். தனராஜ் வேகமாக குனிந்து துப்பாக்கியை எடுக்கப் போனார். பாதிரியார் அவரைச் சுடவேண்டாம் என சத்தமாகச் சொன்னார்.

கைகளை வீசிக்கொண்டு எழுந்தார் ஜகநாதன். கற்கள் சிதறியது. அவர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தார். அவர் வைத்த அடியில் அவர்கள் இங்குமிங்கும் ஆடினார்கள். தனராஜ் முன்னால் கடுங்கோபத்துடன் நின்றார் ஜகநாதன். சுடுங்க என்றார் காருண்யன். சொன்ன மாத்திரத்தில் ஒரு கையால் காருண்யனின் குரல்வளையைப் பிடித்து அழுத்தியவர் மறுகையில் தனராஜின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்தார் ஜகநாதன். வேண்டாம் அவரை விட்டுவிடுங்கள் என ஜகநாதனிடம் சொன்னார் பாதிரியார்.

சுகுமாரன் பயத்தில் உறைந்து போனான். காருண்யனைத் தள்ளிவிட்டுவிட்டு துப்பாக்கியை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு நோக்கி மலையின் கீழே இறங்கலானார் ஜகநாதன். அவர்கள் அனைவரும் பிரமைப் பிடித்தவர்கள் போல் நின்றார்கள். அவரை விரட்டிப் பிடிங்க சார் என சுகுமாரன் நடுங்கிக்கொண்டே தனராஜிடம் சொன்னபோது தனராஜ் கோபத்துடன் மற்ற அதிகாரிகள் நோக்கி நீங்க ஏன் சும்மாவே நின்னுக்கிட்டு இருந்தீங்க என்றார். அவர்கள் எங்க உடம்பை கட்டிப்போட்டமாதிரி இருந்துச்சு என்றார்கள் ஒரு சேர. முனகிக்கொண்டே எழுந்தார் காருண்யன், பேச முயற்சித்தார் பேச முடியவில்லை. வாய் திறந்தும் சத்தமில்லாமல் அவர் அழும் அழுகையை கண்ணீர் காட்டிச் சென்றது. கால்களை தரையில் உதைத்தும் கைகளை வயிற்றிலும் தலையிலும் அவர் அடித்துக்கொண்டபோது மிகவும் பரிதாபமாக இருந்தது. சுகுமாரன் காவல் அதிகாரி தனராஜை நோக்கி கத்த ஆரம்பித்தான். பாதிரியார் சுகுமாரனை சமாதனப்படுத்தினார்.

எங்ககூட ஜகநாதபுரம் நீ வா என சுகுமாரனை அழைத்தார் தனராஜ். சுகுமாரனும் வருகிறேன் என தனராஜிடம் சொன்னான். காருண்யனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பாதிரியாரிடம் சொல்லிவிட்டு தனராஜும் மற்ற அதிகாரிகளும் சுகுமாரனும் அன்று இரவே காவல் நிலையம் அடைந்தார்கள்.

மலையின் அடிவாரம் அடைந்த ஜகநாதன் மேற்கே நோக்கி தொடர்ந்து நடக்கலானார்.

(தொடரும்)

No comments: