Wednesday 22 July 2009

சில்வண்டுகள் 6

காவல் அதிகாரி தனராஜ் அவர்களின் உத்தரவுப்படி தொலைகாட்சி நிருபர்கள் ஜகநாதபுரத்தின் எல்லைக்கு வெளியேயே நின்றுகொண்டார்கள். மேலும் பல காவல் அதிகாரிகளும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். தான் தகவல் தெரிவித்தால் மட்டுமே ஊருக்குள் வரவேண்டும் என அவர்களிடம் எச்சரிக்கைக் கொடுத்தார். நிருபர்களுக்கும் உயிர் மேல் ஆசை இருக்கத்தான் செய்தது. ஒரே ஒரு நிருபரிடம் மட்டும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார் தனராஜ்.

பவித்ரபுரியில் சாம்பலை படம் பிடித்தார்கள் தொலைகாட்சி நிறுவனத்தினர். இந்நிகழ்ச்சியைக் காணாத போதிலும் கண்டதுபோல் கிராமத்து மக்கள் கதைவிட ஆரம்பித்தார்கள். தீ சுவாலை வானைத் தொட்டது என்றார் ஒருவர். இந்நிகழ்வினைக் கண்டவர்கள் எரிந்து சாம்பலான விசயம் சாம்பலாகி இருந்தது. கோரமாக காட்சி அளித்தார் அந்த முனிவர் என்றார் மற்றொருவர். உடலெல்லாம் சாம்பல் பூசி இருந்தார் அந்த முனிவர் என்றார் மற்றொருவர். காணாத தெய்வத்தை கண்டதுபோல் கொண்டாடும் இந்த பூமி, காணாமலே கண்ணுக்குள் இவர்களுக்குத் தெரியுமே சாமி! ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொன்ன விசயத்தை படம்பிடித்துக்கொண்டு வியாபார நோக்கில் மட்டுமே விசயத்தை எடுத்துச் சென்றார்கள்.

சுகுமாரனும் அந்த அதிகாரிகளுடன் இறந்துபோனதாகவே எண்ணிக்கொண்டிருந்தார் தனராஜ். பல மணி நேரங்களாக ஒரு வீட்டினுள் ஒளிந்திருந்த சுகுமாரனை அந்த வீட்டிலிருந்த இளம்பெண் காயத்ரி பார்த்துவிட்டார். 'யார் நீ' என கேட்டவுடன் சுகுமாரன் பயந்து கொண்டே வெகுவேகமாக கதைச் சுருக்கம் சொன்னான், ஜகநாதனைப் பற்றி சொல்லாமல் தவிர்த்தான். சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மிகவும் பரிதாபப்பட்டாள் காயத்ரி. யாரோடு பேசிட்டு இருக்கே என காயத்ரியின் தாயார் புனிதவள்ளி உள்ளிருந்து வந்தார். வீட்டினுள் ஒரு ஆடவன் இருப்பதைக் கண்ட அவர் என்ன பழக்கம் பழகி இருக்கே என காயத்ரியை பளார் என கன்னத்தில் அறைந்தார். ஆ அம்மா இவர் தஞ்சம் புகுந்தவர் என கன்னத்தைப் பிடித்துக்கொண்டே சொன்னார். வெளியே போடா என சுகுமாரனை நோக்கி சத்தம் போட்டார் அவர். ஜகநாதன் என சொன்னான் சுகுமாரன். ஜகநாதனா என்றார் அந்த தாயார் அந்த கோபத்தின் ஊடே.

மதியூரில் நடந்த விசயத்தையும் ஜகநாதனைத் தான் தொடர்ந்து சென்ற விசயத்தையும் சுகுமாரன் சொன்னான். அதைக்கேட்ட அந்த தாயார் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டார். காயத்ரி பதட்டத்துடன் காணப்பட்டாள். ஜகநாதன் பற்றி உனக்குத் தெரியுமா எனக் கேட்டான் சுகுமாரன். ம் தெரியும். அவங்க குடும்பம் ரொம்ப விசித்திரமானது என பதட்டத்துடன் சொன்னாள் காயத்ரி. காயத்ரி அவ்வாறு சொன்னதைக் கேட்ட அந்த தாயார் வேகமாக எழுந்து வந்து காயத்ரியிடம் வாயை மூடு என சத்தமிட்டார். சுகுமாரன் விபரீதம் புரிந்து கொண்டவன் அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என வீட்டின் சன்னல் வெளியே ஜகநாதன் வீட்டுத் தெருவினைப் பார்த்தான் சுகுமாரன். தனராஜ் ஜகநாதன் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தார். சற்றுத் தொலைவில் ஒரே ஒரு நிருபர் மறைந்து கொண்டு அந்த வீட்டினைப் படம் பிடித்துக்கொண்டு இருந்தார்.

வீட்டின் கதவைத் தட்டினார் தனராஜ். கதவைத் திறந்துகொண்டு அந்த தாய் வந்தார்.

''இன்னும் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க சொன்னா கேளுங்க'' என கோபத்துடன் சொன்னார் அந்த தாய்.

''ஏன் உங்க பையன் இப்படி பண்ணினார், ஜகநாதன் பத்தி தெரிஞ்சிக்கத்தான் வந்தோம் ஆனா இப்போ வந்தவங்களை இழந்து நிற்கிறேன்'' என பரிதாபமாகச் சொன்னார் தனராஜ்.

வீட்டின் கதவை அடைத்த அந்த தாய் வெளியே வந்தார். தனராஜினை அழைத்துக்கொண்டு நடந்தார். அந்த தாயுடன் தனராஜ் நடந்தார்.

''ஏன் இப்படி நடந்துக்கிறாங்க'' எனக் கேட்டார் தனராஜ்.

ஊரின் எல்லையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அந்த தாய். எல்லையினை அடைந்ததும் அங்கே பல காவல் அதிகாரிகளும் நிருபர்களும் இருப்பதைக் கண்டார். அவர்கள் அருகே வந்த அந்த தாய் நீங்க எல்லாம் போயிருங்க இதோ இவரையும் அழைச்சிக்கிட்டு' என சொன்னார்.

'என்னம்மா நிறைய பேரு எரிஞ்சி சாம்பலாகி இருக்காங்க ரொம்ப கூலா போங்கனு சொல்றீங்க, உங்களை நாங்க அரெஸ்ட் பண்றோம்' என சொன்னார் ஒரு அதிகாரி.

'ஏன் இப்படி அவசரப்படறீங்க நான் என்ன சொல்லி உங்களை இங்கே வரவைச்சேன்' என வேதனையில் அதிகாரிகள் நோக்கி கத்தினார் தனராஜ்.

'என்னை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போங்க ஆனா இனிமே அந்த வீட்டுக்குப் பக்கத்திலே போகாதீங்க' என்றார் அந்த தாய்.

'உங்க கணவரு எங்கே ஏன் இப்படி அவங்க பண்றாங்க' எனக் கேட்டார் தனராஜ்.

'இனிமே எதுவும் பேச வேண்டாம், என்னை என்ன செய்யனுமோ அதை செய்ங்க, வீட்டுக்குள்ளப் போக வேணாம்' என சற்று அழுத்தமாகவே சொன்னார் அந்த தாய்.

இதைக்கேட்ட மற்ற அதிகாரிகள் பெரும் கோபம் கொண்டார்கள். இவங்களை கொண்டு போய் விசாரிக்க விதத்தில விசாரிச்சா எல்லாம் வெளியே வந்துரும் என ஒரு சேர சத்தம் போட்டார்கள். தனராஜ் தனது தலையை பிடித்துக்கொண்டார். அந்த தாய் அதிகாரிகளை கோபப் பார்வை பார்த்தார். அப்பொழுது நிலம் அதிர்ந்தது. அந்த அதிகாரிகள் திரும்பினார்கள். ஜகநாதன் வெகுவேகமாக அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

'நீயும் தோத்துட்டியாடா' என ஜகநாதனை நோக்கி பெரும் சத்தமிட்டார் அந்த தாய். தனராஜ் ஜகநாதனைக் கண்டு பெரும் கலக்கம் கொண்டார். எதுவும் செஞ்சிராதீங்க என அதிகாரிகள் நோக்கி சத்தமிட்டார். இதனையெல்லாம் படம் பிடித்துக் கொண்டிருந்த நிருபர்கள் ஜகநாதனின் கண்களைக் கண்டு உடலைக் கண்டு நடுங்கினார்கள். படம் பிடிப்பதை நிறுத்தினார்கள். சில அதிகாரிகள் துப்பாக்கிகளை கீழே போட்டார்கள். ஜகநாதன் அந்த தாயின் சப்தம் கேட்டு மேலும் கீழும் ஆவேசமாக குதித்தார். அவரது செயலைக் கண்ட அந்த அதிகாரிகள் பின்னால் நகர்ந்தார்கள். அந்த தாய் ஜகநாதனை நோக்கி போ எங்காவது போ இங்கே ஏன் வந்த என சத்தமிட்டார். கோபமாக அவர் சொன்னவிதம் கண்டு மற்றவர்கள் பயந்தார்கள்.

ஒரு சில அதிகாரிகள் ஜகநாதனை நோக்கி சுட்டார்கள். அவர்கள் சுட்ட தருணத்தில் அவர்கள் மேலே குண்டுபாய்ந்ததும் அந்த அதிகாரிகள் அலறிக்கொண்டே விழுந்தார்கள். விகாரச் சிரிப்புடன் அந்த தாய் ஜகநாதன் நோக்கி சிரிக்க ஆரம்பித்தார். அசைபட கருவியை எறிந்துவிட்டு நிருபர்கள் ஓட்டம் எடுத்தனர். தனராஜ் பயங்கரமாக சத்தம் போட ஆரம்பித்தார். நான் சொல்றதைக் கேட்கறதா இருந்தா இங்கே இருங்க இல்லைன்னா எல்லாம் கிளம்பிப் போங்க என கடுமையாகவே சொன்னார். குண்டு பாய்ந்த அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் வெகுவேகமாக சென்றது.

போ இங்கே நிற்காதே என ஜகநாதன் நோக்கிச் சொன்னார் அந்த தாய். ஜகநாதன் கடுங்கோபத்துடன் வந்த பாதையிலே திரும்பி தெற்கு நோக்கி நடக்கலானார். தனராஜ் அம்மா என்னம்மா நடக்குது சொல்லுங்கம்மா நாங்க உதவி பண்றோம் இப்படி அநாவசியமா பலரோட உயிர் பலியாகிறதை தடுக்க உதவி பண்ணுங்கம்மா என கெஞ்சினார்.

'இந்த உலகத்துல வீட்டுக்குள்ளேயும் சரி, வெளியேயும் சரி அமைதியாகவே இருக்க முடியாதுனு சொன்னா என் இரட்டைபுள்ளைக இரண்டு பேரும் கேட்டாத்தானே' என பயங்கரமாக சிரித்தார் அந்த தாய். இதைக்கேட்ட தனராஜும் மற்ற அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த தாய் சொன்ன அடுத்த விநாடியிலே எரிய ஆரம்பித்தார். ஜகநாதா நிறுத்துடா, வேண்டாம்டா ஜகநாதா! அவன் உங்கப்பாவையே எரிச்சான், நீ என்னை எரிக்கிறியேடா என்னை காப்பாத்துடா என துடிதுடித்துக்கொண்டே சாம்பலானார் அந்த தாய்! கோபம் கொப்பளிக்க தெற்கே தொடர்ந்து நடந்த ஜகநாதன் கடலினுள் தாவினார்.

அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக்கூட்டம் போட்டார்கள்! தன் உயிர் பற்றி எந்தவித கவலையும் இன்றி சுகுமாரன் ஜகநாதன் வீட்டிற்குள் நுழைந்தான்.

(தொடரும்)

No comments: